Published : 26 Nov 2017 10:14 AM
Last Updated : 26 Nov 2017 10:14 AM

காலத்தின் வாசனை: காலண்டர் பசி!

பு

து வருஷக் காலண்டருக்கும் டயரிக்கும் ஆசைப்படாதவர்கள் உண்டா? யார் என்ன காலண்டர் கொடுத்தாலும் வாங்கி பையில் போட்டுக்கொள்ளத்தான் தோன்றுகிறது. இதை என் நண்பர் ஒருவர் ‘காலண்டர் பசி’ என்று கிண்டல் செய்வார்.

அந்தக் கால வீடுகளில் தெய்வீக மணம் வீசும் கடவுள் படங்கள் சுவர்களை அலங்கரிக்கும். மயிலாடுதுறை நடராஜன், கோவில்பட்டி கொண்டைய ராஜு போன்ற சித்திரக்காரர்களின் கடவுள் படங்களைக் கையெடுத்து வணங்கத் தோன்றும். புராண இதிகாசப் பாத்திரங்களை வரைவதில் புகழ்பெற்று விளங்கினார் ராஜா ரவிவர்மா. சிவகாசி என்றாலே பட்டாசுத் தயாரிப்புதான் நினைவுக்குவரும். ஆனால், அங்கே அச்சு இயந்திரங்கள் செயல்படத் தொடங்கியபோது முதன்முதலாக காலண்டர்கள்தான் அச்சடித்தார்கள். சொக்கலால் பீடி கம்பெனி, ஹரிராம் சேட் பீடி கம்பெனி போன்ற நிறுவனங்கள் அச்சடித்த ராமர் சீதை லட்சுமணன் காட்சி தரும் காலண்டர்கள் அமோகமாக விற்பனை ஆயின. சிவபுரி புகையிலை கம்பெனி வெளியிட்ட சிவபுரிமுருகன் காலண்டர்களைப் பார்த்தவர்கள் கன்னத்தில் போட்டுக்கொண்டார்கள்.

சிறு வயதில் பாட்டியின் வீட்டில் சுவர் முழுவதும் காலண்டர்களைப் பார்த்திருக்கிறேன். பல வருஷங்களாக அவை அங்கே பிடிவாதமாகத் தொங்கிக் கொண்டிருந்தன. புதிதாக காலண்டர் வாங்கிவந்து மாட்டினால் பாட்டி சண்டைக்கு வந்துவிடுவார். சிறு வயதில் இறந்துவிட்ட அவரது வீட்டுக்காரர் வாங்கிய காலண்டர்களாக்கும் அவை.

இஸ்லாமியர் வீடுகளில் சுவர்களை அலங்கரிக்கும் மெக்கா, மதீனா காலண்டர் படங்களை அரபிக் காலண்டர்கள் என்பார்கள். கிறிஸ்தவ நண்பர் ஒருவரின் வீட்டில் அன்னை மரியாளின் மடியில் உறங்கும் குழந்தை இயேசுவின் படம் தத்ரூபமாக தீட்டப்பட்ட காலண்டரைப் பார்த்து அப்படியே நின்றுவிட்டேன். நண்பர் புன்னகைத்தார். “அந்தக் குழந்தை மூச்சுவிடுவதுகூடக் கேட்பதுபோல் தோன்றுகிறது இல்லையா?”

சிறு வயதில் நானும் என் நண்பனும் சேர்ந்துகொண்டு அவர்கள் வீட்டிலிருந்த ராமர் பட்டாபிஷேகப் படத்தில் ராமருக்குப் பெரிதாக மீசை போட்டுவிட்டோம். என் நண்பரின் தாயார் விசிறியால் மகனை விளாசித் தள்ளிவிட்டார். அவனுடைய தந்தை பரமநாத்திகர். அவர்தான் குறுக்கேவந்து “இப்ப என்ன ஆயிட்டுது? ராமபிரான் இப்போதுதான் அழகாக புருஷ லட்சணத்தோடு இருக்கிறார்” என்று சொன்னார் தன் மீசையை நீவிக்கொண்டு.

தஞ்சையில் 1962-ல் சட்ட மன்றத் தேர்தலில் கலைஞர் போட்டியிட்டபோது ‘நான் உங்கள் வீட்டுப் பிள்ளை’ என்று கருணாநிதி படத்துடன் ஓட்டு கேட்கும் காலண்டர் எல்லோருக்கும் இலவசமாக வழங்கப்பட்டது. கருணாநிதிதான் வென்றார். அந்த காலண்டர் தஞ்சை தி.மு.க. தொண்டர்கள் சிலரது வீட்டில் இன்னும் இருக்கிறது.

தமிழ்ப் பல்கலைக்கழக முதல் துணைவேந்தர் டாக்டர். வ.அய்.சுப்பிரமணியம் 1982-ல் பணியேற்றதும் செய்த முதல் காரியம் எல்லா பணியாளர்களுக்கும் காலண்டர் அச்சடித்து வழங்கியதுதான். அவர் பணி ஏற்ற நாள் முதல் பணிநிறைவு நாள் வரை ஒவ்வொரு தேதியிலும் விடுமுறை போக எஞ்சிய நாட்கள் அந்த காலண்டரில் குறிக்கப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் எஞ்சிய நாள் குறைந்துகொண்டே வருமாறு குறிப்பிடப்பட்ட அந்த காலண்டர் அவர் கோட்டுப் பையில் எப்போதும் இருக்கும்.

சென்னையில் அப்போது நான் தனிக்கட்டை. ஒரு அறை எடுத்துத் தங்கியிருந்த போது பக்கத்து அறையில் ராஜு (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்று ஒருவர் வசித்தார். யாரோடும் பேச மாட்டார்.

ஒருநாள் அவர் அறையிலே பேசியபடி தூங்கிப்போனேன். நள்ளிரவில் கூக்குரல். என்னை யாரோ உலுக்குவதுபோல இருந்தது. விழித்தால் ராஜு “உங்களுக்கு கேட்கிறதா அதோ குதிரைக்குளம்படி சத்தம்?” எனக்கு ஒன்றும் புரியவில்லை. என் எதிரே சுவரில் ஒரு பிரம்மாண்ட படக் காலண்டர். அதில் வெள்ளை வெளேர் என குதிரை ஓடிவருகிறது. அதன்மீது கல்கி அவதாரம் எடுத்திருக்கும் கிருஷ்ண பரமாத்மா!

“பார்த்தீர்களா அந்தக் குதிரையை.. சத்தம் கேட்கிறதா?”

ராஜுவின் விசித்திர நடத்தைக்கு விளக்கம் அடுத்த வாரம் கிடைத்தது. வீட்டு முன்னால் நின்ற போலீஸ் ஜீப்பில் ஏறிக்கொண்டு ராஜு போய்விட்டார். அலுவலகப் பணத்தை லட்சக்கணக்கில் கையாடிவிட்டாராம். கையாடல் செய்து என்ன பண்ணினார் அந்தப் பணத்தை தெரியுமா?

ரேஸில் தொலைத்திருக்கிறார்!

இப்போது புரிந்தது அவரைக் கடைத்தேற்ற கடவுளை நம்பாமல் குதிரையை நம்பியதால் வந்த வினை.

அது கல்கியின் குதிரை அல்ல; ரேஸ் குதிரை!

தஞ்சாவூர்க் கவிராயர்.

தொடர்புக்கு:

thanjavurkavirayar@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x