

‘‘இரு வீட்டாரும் எங்களை துரத்திக் கொண்டி ருக்கிறார்கள். எப்படியாவது எங்களை பிரித்துவிட வேண்டும் என்று கொலை வெறியில் அலைந்து கொண்டிருக்கும் அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்ற வேண்டும்’’ என்று கமிஷனர் அலுவ லகத்தில் தஞ்சமடைந்த இளம் ஜோடி மனு கொடுத்துள்ளது.
பொய்யூர் கமிஷனர் அலுவலகத்துக்கு அந்த இளம் ஜோடி நேற்று காலை வந்தது. அவர்கள் இருவரும் கமிஷனரை நேரில் சந்தித்து மனு ஒன்றைக் கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருந்ததாவது:
நாங்கள் கடந்த 5 ஆண்டுகளாகக் காதலித் தோம். ஒரே கம்பெனியில் வேலை செய்த போது எங்களுக்குள் காதல் மலர்ந்தது. நான் அசெம்பிளிங் பிரிவு. அவள் பேக்கே ஜிங் பிரிவு. இருவரும் வெவ்வேறு பிரிவைச் சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டாரும் எங்கள் காதலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இரு வீட்டுக்கும் தெரியா மல் காதலைத் தொடர்ந்தோம்.
‘முதலில் ரகசியமாக திருமணம் செய்துகொள்வது. அப்படி ஒன்றே நடக்காதது போல மீண்டும் வீடுகளுக்கு திரும்பிவிடுவது’ என்று திட்டம்போட்டோம். அலைபாயுதே பாணி.. அலைபாயுதே பாணி.. என்று செய்தித் தாள்களில் பல்லாயிரம் முறை பார்த்துவிட்டதால் அது சலித்துப்போய்விட்டது. அந்த ஐடியாவை கைவிட்டோம்.
பின்னர் வீட்டில் இருந்து ரகசியமாக வெளியேறி கோயிலில் திருமணம் செய்து கொண்டோம். பின்னர் பதிவுத் திருமணமும் செய்துகொண்டு கடந்த 3 மாதங்களாக குடும்பம் நடத்தி வருகிறோம்.
இந்நிலையில், நாங்கள் தங்கியிருக்கும் இடத்தை தெரிந்துகொண்டு இரு வீட்டாரும் ஏகப்பட்ட ஆட்களை திரட்டிக்கொண்டு வந்துவிட்டார்கள். லாரியிலும் ஜீப்பிலுமாக இரு தரப்பிலும் ஏராளமானோர் வந்து திமுதிமுவென்று வீட்டு வாசலில் இறங்க.. எங்களுக்கு என்ன செய்வதென்றே தெரிய வில்லை.
இரு தரப்பும் ஆக்ரோஷமாக மோதிக் கொள்ளும் சண்டைக் காட்சிக்காக நாங்களும் ஆவலோடு காத்திருந்தோம். ஆனால், அப்படி எதுவும் நடக்கவே இல்லை. இரு தரப்பும் கைகுலுக்கிக்கொண்டு ‘‘சம்பந்தி.. சம்பந்தி’’ என்று சந்தோஷ சகதியில் கட்டியுருண்டார்கள். ‘‘பைசா செலவில்லாமல், ‘லெக் பீஸ்’ சண்டை இல்லாமல், மாமன் மச்சான் ரகளை இல்லா மல் கல்யாணம் செய்து கொண்டீர்களே..’’ என்று எங்களுக்கு வாழ்த்து வேறு.
நாங்கள் இருக்கும் இடம் 3 மாதங்களுக்கு முன்பே இரு வீட்டாருக்கும் தெரியுமாம். 3 மாதமாக கம்மென்று இருந்துவிட்டு, இப்போது திடுதிப்பென்று எங்கள் வீட்டு வாசலில் அந்த இரண்டு கூட்டமும் வந்து நின்றதற்கும் காரணம் இருக்கிறது.
இது ஆடி மாதமாம். அந்த கும்பல்கள் எங்களை வாழ்த்த வரவில்லை.. ஆடிக்கு பிரிக்க வந்திருக்கிறார்கள் என்று அப்போது தான் எங்களுக்கு புரியவந்தது. அவர்களி டம் இருந்து தப்பித்து இங்கு தஞ்சம் புகுந்தி ருக்கிறோம். அவர்களிடம் இருந்து எங்களை காப்பாற்றி ஆடி மாதமும் சேர்த்து வைக்குமாறு கேட்டுக் கொள்கிறோம்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
மொத்த மனுவையும் படித்துவிட்டு கமிஷனர் டென்ஷன் ஆனதைப் பார்த்ததும் ஜோடி எஸ்கேப்! அவர்களை கமிஷனர் வலைவீசித் தேடிக்கொண்டிருப்பதாகத் தகவல்!