Last Updated : 23 Nov, 2017 07:16 PM

 

Published : 23 Nov 2017 07:16 PM
Last Updated : 23 Nov 2017 07:16 PM

சினிமாவைத் தாண்டியும் சில ‘அசோக்குமார்கள்’

சினிமா இணை தயாரிப்பாளர் அசோக்குமார் கடந்த 21-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தில், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் கந்து வட்டி கேட்டு கடும் நெருக்கடி கொடுத்தாக குறிப்பிட்டிருந்தார். இந்த சம்பவம் தமிழக திரையுலகையும் தாண்டி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

நெல்லை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன், இசக்கிமுத்து குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்திற்கு பின், மீண்டும் ஒரு கந்துவட்டி சம்பவம் தமிழகத்தை உலுக்கியுள்ளது.

இரண்டு தற்கொலை சம்பவங்களுக்கும் அடிப்படைக் காரணம் கந்துவட்டி தான் என்றாலும், சில வேறுபாடுகள் உள்ளன. அன்றாட வாழ்க்கை தேவைக்காக சில ஆயிரம் ரூபாய் கடன் வாங்கி அதனால் கந்துவட்டி கும்பலிடம் சிக்கிக் கொண்டது இசக்கிமுத்துவின் கதை. ஆனால் கனவுத் தொழிற்சாலையான சினிமாவில் தனது கற்பனையையும் நிஜமாக்க விரும்புபவர்கள் அதற்கு தேவையான கோடிக்கணக்கான ரூபாயை கடனாக பெற்று கந்துவட்டி கும்பலிடம் சிக்கிக்கொண்டது அசோக்குமாரின் கதை.

சினிமா என்பது பிரம்மாண்டம், கற்பனையை நனவாக்கும் பாதை, இலக்கு வெற்றி பெற்றால் பணம், புகழ் வந்து சேரும் என்பதால் இதனால் ஈர்க்கப்படுபவர்கள் பலர். இதனால்தான் கோடம்பாக்கம் கனவில் தமிழகத்தின் கடைக்கோடி கிராமங்களில் இருந்தும் இளைஞர்கள் சென்னைக்கு பயணப்படுகின்றனர். ஆனால் அதற்குத் தேவையான பணம் என்பது சாதாரணமானதல்ல.

கனவுத் தொழிற்சாலையை உருவாக்க தேவைப்படும் பணம் கையில் இல்லாத நிலையில், வட்டிக்குப் பணம் தருபவர்களை நாடுவதும் காலம் காலமாக நடந்து வருவதுதான். பெரும்பாலான தயாரிப்பாளர்களிடம் கோடிக்கணக்கான ரூபாய் இருக்காது என்பதால் அவர்கள் தேர்வு வட்டிக்கு பணம் வாங்குவதுதான்.

அதனால்தான், சினிமா என்பது வென்றால்தான் வாழ்க்கை என்றாகி விடுகிறது. திரைத்துறையில் வென்று பவனி வருவது சிலர் என்றால் தோற்று ஒதுங்கி வாழ்க்கையை தொலைத்தவர்கள் பலர். ஏனெனில் சினிமா என்பது அடிப்படையில் தொழில் என்ற புரிதல் இங்கு அவசியம்.

சினிமா மட்டுமின்றி வேறு பல தொழில்களும் வட்டிக்கு வாங்கி செய்யப்படுகிறது. எனக்கு தெரிந்த ஓட்டல் வர்த்தகர் ஒருவர் வட்டிக்கு கடன் வாங்கி தொழில் செய்கிறார். வட்டியின் அளவு அதிகமாக இருப்பதை சுட்டிக்காட்டி, சம்பாதிக்கும் பணம் எல்லாம் வட்டிக்கு போய் விடுகிறதே? என்றேன்.

ஆனால் அவரோ, அந்த வருமானத்திற்கு ஆதாரமாக இருப்பது, வட்டிக்கு வாங்கிய பணம் அல்லவா? என தனது செயலுக்கு நியாயம் கற்பிப்பார். சரி பல ஆண்டுகளாக இதுபோன்று வட்டிக்கு வாங்குவது சரியா. தொழிலுக்கு என குறிப்பிட்ட தொகையை ஒதுக்கீடு வைத்து அதை தொழில் சுழற்சிக்கு பயன்படுத்தக் கூடாதா? என கேட்டால் அதெல்லாம் சாத்தியமில்லை என்பது தான் அவரது பதில்.

சரி நீங்கள் தனிநபர் இல்லையே, உங்களுக்கு என சங்கம் உள்ளது. உங்கள் பகுதியிலேயே ஓட்டல் உரிமையாளர்கள் பலர் ஒன்று சேர்ந்து ஒரு நிதியை கையாளக் கூடாதா? அதை தேவைக்கு பயன்படுத்தி கொடூர வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்க்க கூடாதா? என்றால், அதற்கு வாய்ப்பில்லை என்கிறார் அவர். முதலில் நிதியை உருவாக்குவது கடினம், அப்படியே உருவாக்கினாலும், அதை கையாள விதிமுறைகளை உருவாக்குவது அதை விட கடினம் என்பது அவரது வாதம்.

இதுபோலவே தமிழகத்தின் பல காய்கறி சந்தைகளிலும் தினந்தோறும் வட்டிக்கு பணம் வாங்கி அதில் காய்கறி, பழங்கள், பூக்கள் வாங்கி விற்பனை செய்து, அதில் கிடைக்கும் சிறு தொகையில், பெரும் பகுதியை வட்டியாக செலுத்திவிட்டு, சிறு பகுதியை தனது அன்றாட செலவுக்கு எடுத்துக்கொள்ளும் பலரும் இன்றளவும் இருக்கிறார்கள். ஆயிரம் ரூபாய் தினசரி வட்டிக்கு வாங்கி, அதில் வாழை இலை வாங்கி விற்பனை செய்யும் பெண்கள் இருக்கிறார்கள்.

ஆயிரம் ரூபாய்க்கு சில நூறு ரூபாய்கள் தினசரி வட்டி. ஆண்டுகள் உருண்டோடினாலும், அவர்களால் கந்து வட்டி வலைப்பின்னலை உடைத்து வெளியே வர முடியவில்லை. தங்கள் தொழிலுக்கு என குறிப்பிட்ட தொகையை முதலீடாக சேர்க்க முடிவில்லை. ‘வாய்க்கும், வயிற்றுக்கும்’ என்பது போலவே, காலம் முழுவதும் அவர்கள் போராட்டம் அப்படியே முடிந்து விடுகிறது.

ஆனால் இதுபோன்றவர்களுக்கு வட்டிக்கு பணம் தருபவர்கள் கொழுத்து, பருத்து, வலைப்பின்னலை பெருக்கி திமிங்கலமாக உருவெடுக்க முடிகிறது. தங்களை தற்காத்துக்கொள்ள அரசியலையும், அதிகாரத்தையும் வளைக்க முடிகிறது.

நாள் வட்டி, மீட்டர் வட்டி, மணி வட்டி, வட்டிக்கு வட்டி, அதற்கும் வட்டி, நடந்தால் வட்டி, அமர்ந்தால் வட்டி என வட்டியின் வடிவங்கள் விஸ்வரூபம் எடுக்கிறது. இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி எப்படி என்பது தான் கேள்வி.

விஜய் மல்லையா போன்ற தொழிலதிபர்களுக்கும் கடன் வழங்க முன் வரும் வங்கிகள், இதுபோன்ற சாதாரண இந்தியர்களுக்கு கடன் தரும் நாள் எந்நாளோ?

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x