Last Updated : 30 Nov, 2017 04:49 PM

 

Published : 30 Nov 2017 04:49 PM
Last Updated : 30 Nov 2017 04:49 PM

வென்றால் ஒரு முடிவு; தோற்றால் ஒரு வாய்ப்பு: தற்கொலை எதற்குமே தீர்வல்ல!

அண்மைக்காலமாக வரும் பிரேக்கிங் செய்திகளில் என்னை மிகவும் பாதித்தது பள்ளி, கல்லூரி மாணவர்களின் தற்கொலை குறித்த செய்திகள் தான்.

பெற்றோரை அழைத்து வாருங்கள் என ஆசிரியை கூறியதால் வேலூர் பணப்பாக்கத்தைச் சேர்ந்த பள்ளி மாணவிகள் 4 பேர் தற்கொலை செய்துகொண்டனர். காஞ்சிபுரத்தில் 8ம் வகுப்பு படிக்‍கும் மாணவர் ஒருவர் மன அழுத்தம் காரணமாக தீக்‍குளித்து படுகாயமடைந்தார்.

இப்படியாக, கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதும் தற்கொலைக்கு முயற்சிப்பதும் அதிகரித்திருக்கிறது. 

பிறப்பும் இறப்பும் இயற்கை என்ற விதியை மீறி, பிறப்பு என்பது மருத்துவர்கள் நிர்ணயிப்பதும், இறப்பு என்பது நமக்கு நாமே நிர்ணயிப்பதும் என்று ஆகிவிட்டது.

தேசிய குற்றவியல் ஆவணங்கள் ஆணையம், 2015-ம் ஆண்டில் இந்தியாவில் தற்கொலை செய்துகொண்டோர் குறித்த புள்ளிவிவரத்தை வெளியிட்டுள்ளது. அதன்படி, இந்தியாவில் 2015-ம் ஆண்டில் தற்கொலை செய்து கொண்டவர்கள் 1,33,623 பேர். இவர்களில் 30 வயதுக்கும் கீழே உள்ளவர்களின் எண்ணிக்கை 53,260. அதாவது 39.8%.

இளம் வயதினர் தற்கொலைகளுக்கு காரணம் என்ன?

தற்கொலைக்கான காரணங்களை கண்டுபிடிக்க எத்தனை ஆய்வுகள் நடத்தினாலும் தற்கொலைகள் குறைந்தபாடில்லை. தீர்வு ஆய்வுகளில் இல்லை, வாழ்க்கை முறையில் தான் என்பதை நாம் உணரும் வரை தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கும்.

புரிதல் என்ற ஒரு முக்கிய உணர்வை இன்றைய குடும்பங்கள் இழந்துள்ளன. பெற்றோர்கள் பிள்ளைகளைப் புரிந்துகொள்ளவதில்லை, பிள்ளைகள் பெற்றோர்களைப் புரிந்துகொள்வதில்லை, மிக முக்கியமாக பெற்றோர்களுக்கிடையே புரிதல் இல்லை.

புரிதல், பிரச்சினை உருவாவதைத் தடுக்காது, ஆனால் பிரச்சினையை எதிர்கொள்ளும் திறனை அளிக்கும்.

இளம்பருவத்தினர் தற்கொலை செய்துகொள்ள எத்தனை காரணங்கள் இருந்தாலும், எல்லோரும் முன்வைக்கும் முதல் காரணம், பெற்றோரின் வளர்ப்பு. பெற்றோர்கள் இங்கே கோபப்படக்கூடும், ஆனால் சற்று நிதானமாக இதை வாசியுங்கள். ஒரு கரு உருவாகும்போதே, ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால், நம்மில் எத்தனை பேர் அக்குழந்தைக்கு ஓர் அழகான, தன்னம்பிக்கை உள்ள பத்து மாதங்களை உருவாக்கிக்கொடுக்கிறோம்? சூழ்நிலையை நீங்கள் காரணம் சொல்லலாம், ஆனால் அச்சூழ்நிலையை உருவாக்குவது உங்கள் கையில்தான் இருக்கிறது.

 

 

இதை வாசிக்கும் சில ஆண்கள், தம் மனைவியை குற்றம் சொல்ல தயாராக இருப்பீர்கள். அந்தப் பெண் கருவுற்ற காலங்களில், அவளுடன் சேர்ந்து அக்குழந்தையை பத்து மாதங்கள் சுமக்க வேண்டியது உங்கள் கடமையும்கூட. குழந்தைகளிடம் பெற்றோர் செலவழிக்கும் நேரம் என்றும் வீண்போவதில்லை. குழந்தைகளுக்கு அந்நேரங்களே அவர்கள் வாழ்க்கையை மெறுகேற்றுகிற நேரம்.

பாசத்திற்கும் அதீத அன்பிற்கும் உள்ள வித்தியாசத்தை பெற்றோர்கள் உணர வேண்டும். பாசமுள்ள தாய் தந்தையினர் குழந்தைகளின் தேவைகளைப் புரிந்து செயல்படுவர். அதீத அன்புள்ள பெற்றோர், குழந்தைகளின் வேண்டுதலுக்கு ஏற்ப செயல்படுவர். அதனால், எதை வேண்டுமானாலும் பெற்றுவிடலாம் என்ற எண்ணம் சிறு வயது முதலே குழந்தைகளிடம் தோன்றுகிறது.

இந்த எண்ணம் குழந்தைகளின் மன வலிமையையும் போராடும் குணத்தையும் சிதைக்கிறது. மன வலிமையற்ற குழந்தைகளே வாழ்க்கையை எதிர்கொள்ள பயந்து, இதுபோன்ற தவறான முடிவுகளை எடுக்கின்றனர். வேறு சில பெற்றோர் தங்கள் குழந்தைகளின் தேவைகளை உணர்வதில்லை. அக்குழந்தைகள் சிறு வயது முதலே ஏமாற்றப் பாதையில், தாழ்வு மனப்பான்மையில் வளர்கின்றனர். ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலையில், அத்தகையோரும் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர். இக்குழந்தைகளை எளிதில் மீட்டுவிடலாம், கொஞ்சம் தன்னம்பிக்கையும் அளவான பாசமும் இவர்களுக்கு போதும்.

பொதுவாக பெற்றோர் ஒரு குழந்தைக்கு அத்தியாவசியமாக தர வேண்டியது தன்னம்பிக்கை, பாசம், சுதந்திரம், பிரச்சினையை எதிர்கொள்ளும் தைரியம், இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொடுத்தல், நன்நடத்தை மற்றும் சமூக அக்கறை. ஒரு குழந்தைக்கு எது தேவையில்லை என்பதை ஒவ்வொரு குழந்தைக்கும் ஏற்ப பெற்றோர் தான் முடிவு செய்ய வேண்டும்.

உறவினர்களும் ஆசிரியர்களும் இதற்கு விதிவிலக்கு அல்ல, குழந்தைகளின் தேவையை உணர்ந்து செயல்பட்டால், குழந்தைகள் யாரிடமும் எந்த ஒரு விஷயத்தையும் மறைக்கமாட்டார்கள்.

என்னதான் பெற்றோர், ஆசிரியர், உறவினர் என்று நாம் பேசினாலும், தன் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள வேண்டியது அவரவர் கடமை. நம் செயல் மூலம் வாழ்க்கை சொல்லித்தரும் பாடத்தைவிட, வேறு யாராலும் நன்றாக கற்றுத் தர முடியாது. ஆனால், வாழ்க்கை பாடங்கள் மூலம் நாம் கற்றுக்கொண்டு சாதிக்கிறோமா இல்லை அதை சகித்துக்கொள்ள முடியாமல், தவறான செயலில் இறங்குகிறோமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.

துயரமான நேரங்களில் வாழ்க்கையை நோக்கி சவால் விடுங்கள், வென்றால் ஒரு முடிவு, தோற்றால் ஒரு வாய்ப்பு. மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள், நடக்கவில்லை என்றால் மாறும்வரை போராடு. போராட்ட குணம் மட்டுமே நாம் அனைவருக்கும் நம் முன்னோர் விட்டுச்சென்ற ஒரே சொத்து.

நாடகத்தை நடிக்க மட்டுமே நமக்கு உரிமை, முடிக்க உரிமையில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x