Published : 31 Jul 2014 06:39 PM
Last Updated : 31 Jul 2014 06:39 PM

பெங்களூர் பந்த்தும் கேள்விக்குறியாகும் ஆசிரியர் - மாணவர் பந்தமும்!

பெரும்பாலும் 'பந்த்' எனப்படும் முழு அடைப்புகள் அரசியல் காரணங்களால் நடைபெறும். இம்முறை ஒரு பிரபல பள்ளியில் ஆறு வயது குழந்தைக்கு ஏற்பட்ட துயரத்திற்காக பெங்களுரில் பந்த் மேற்கொள்ளப்பட்டது. பாலியல் பலாத்கார விவகாரம் குறித்து பெற்றோர்கள் கொதித்தெழுந்து, பல பள்ளிகளில் ஆலோசனை நடந்து, அங்கு பெரும்பாலும் பாதுகாப்புகள் பலப்படுத்தப்பட்டு இருக்கின்றன.

பொதுவாக பல சிறு வயது பாலியல் பலாத்காரங்கள் வெளியில் வருவது இல்லை. அதைச் சொல்வதற்கான சூழ்நிலைகூட பெரும்பாலும் குழந்தைகளுக்கு வாய்ப்பது இல்லை.

சமூகம் பெண்களை போகப் பொருளாக நினைப்பது கொடுமை என்றால், அதை நாமும் கொண்டாடலாம் என்று ஆதிக்க மனதோடு பார்ப்பது இன்னும் கொடுமை.

எத்தனை கல்வி முறை மேம்பட்டாலும் வீட்டில் ஆண் குழந்தைகள் வளர்ப்பு மாற வேண்டும். தந்தை அதிகாரமும், ஆணவமுமாய் இருக்கும் தலைமுறை கொஞ்சம் மாறி வருகிறது என்றாலும், பெரும்பாலும் ஆண் ஆதிக்க குடும்பங்களே அதிகம்.

இந்தக் குழந்தை அதிகபட்ச குறும்பு செய்தாள், அதனால் பாலியல் பலாத்காரம் செய்தோம் என்று அந்த ஆசிரியர்கள் வாக்குமூலம் கொடுத்து இருக்கிறார்கள். ஆதிக்க மனதின் ஒரு வன்மம். எத்தனை வலித்து இருக்கும் அந்த குழந்தைக்கு. நினைத்து பார்க்க மனம் நடுங்கி தொலைக்கிறதே... நிகழ்வு என்றால் எத்தனை பயங்கரமானதாக இருக்கும்.

தோழி சொன்னார்... "எத்தனை வலிகள் பழகி கொண்டு போகிறோம். பிஞ்சுக் குழந்தைக்கு வலி கொடுப்பது என்றால், அது கொலையை விட பாதகமான செயல்."

எத்தனையோ ஏழைக் குழந்தைகள், நடுத்தர வர்க்க குழந்தைகள், பணக்கார வீட்டில் தனியே விடப்படும் குழந்தைகள் என சமூகம் அதன் கோரப் பற்களை குழந்தைகளிடம் காட்டுகிறது.

மகாபலிபுரத்தில் இது தனி தொழிலாக நடைப்பெறுகிறது எனக் கேள்வி. இணையத்தில் பெருக்கெடுத்தோடும் குழந்தைகளுக்கு எதிரான வக்கிரங்கள் இன்னொரு பக்கம். எங்கள் இணையக் குழுவில் முடிந்தவரை அதுபோன்ற பக்கங்களை ரிபோர்ட் செய்து முடக்குகிறோம். ஆனால், கணக்கில் இல்லாத வக்கிரங்கள் கொட்டிக் கிடக்கிறது.

எத்தனை வக்கிரங்கள் இணையத்தில் இருக்கிறது என்று தெரியாமலே பெற்றோர்கள் இருப்பது இன்னொரு விதம். மூன்றாம் வகுப்பு மாணவன், மாணவி கூட சில பாலியல் சந்தேகங்களை விவாதிப்பது தெரிய வருகிறது. பள்ளியில் சரியான முறையில் பாலியல் கல்வியும் அவசியமாகிறது.

இன்று வெளியில் சென்றபோது (பெங்களூரில்) பெரும்பாலான கடைகள் மூடியும் சில கடைகள் திறந்தும் இருந்தன. ஒரு செய்தியில் பந்த் வெற்றி என்று காலியான சாலையையும், கதவடைத்த கடைகளையும் காட்டலாம். இன்னொரு செய்தியில் மக்கள் ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்று குறைந்த அளவே சென்ற வாகனங்களையும், திறந்து இருந்த உணவு விடுதிகளையும் காட்டலாம். உண்மையான செய்திகள் போய், செய்திகள் ஒவ்வொரு கண்ணோட்டத்தில் வரும் காலமிது. திரிக்கப்பட்டு வெளிவருவதே இத்தனை இருக்கிறது.

காலம் படுவேகமாக நகர்ந்துகொண்டு இருக்கிறது. வக்கிர மனங்கள் அதிகமாகிறது. ஒவ்வொரு நிமிடமும் ஒருவரை பாலியல் பலாத்காரத்துக்கு பலியிடுகிறோம். நம் வீட்டில் நடப்பதுகூட அறியாமல் தூங்கிக் கொண்டு இருக்கிறோம். நம்முடைய சகோதரி, தாய், மனைவி.. ஏன் பாட்டிக்கூட இந்த வன்முறைக்கு பலியாகலாம். ஒட்டுமொத்த சமூகமும் விழிப்புணர்வு பெற வேண்டிய நேரம்.

டெல்லி சம்பவம் போல இதையும் கடக்கப் போகிறோம். இதை சமூக விழிப்புணர்வாக அரசாங்கம் கொண்டு செல்லப்போவது இல்லை.

எய்ட்ஸ், குடும்பக் கட்டுப்பாடு போல இதிலும் விழிப்புணர்வு கொண்டு வந்து, இன்னும் தண்டனைகள் கடுமை ஆக்கலாம். குழந்தைகளை தொட்டால் தடா, பொடா போல ஒரு சட்டத்தில் உள்ளே போட வேண்டும். ஆண் குழந்தைகளுக்கு புரிதலை ஏற்படுத்தலாம். பள்ளி, கல்லூரிகளில் கவுன்சிலர்களை அதிகப்படுதலாம். இணக்கமான சூழ்நிலையை உருவாக்கலாம்.

என் படித்த தோழிகூட வெளியூரில் பெண்ணை படிக்க அனுப்ப யோசனை செய்கிறாள். பெண் குழந்தைகளுக்கான வாய்ப்புகள் பறிபோகும் கொடுமையும் இந்தச் செய்திக்கு பின் இருக்கிறது. சில வெளிநாடுகளில் பெண்கள் இந்தியாவில் தனியே நடமாட வேண்டாம் என்று எச்சரிக்கை செய்கிறதாம்.

வெளிநாட்டில் என் தோழியின் நண்பரிடம் "இதுவரை எத்தனை பெண்களை பலாத்காரம் செய்திருக்கீங்க?" என்று டாக்சி டிரைவர் கேட்டாராம். இந்திய ஆண் ஒவ்வொருவரும் ரேப் செய்வார்கள் என்று புரிதலாம் அவர்களுக்கு. எப்படிப்பட்ட நல்ல பெயர் வாங்கி வைத்து இருக்கிறோம்.

இப்போது சில பள்ளிகளில் 'நோ டச்' பாலிசி கொண்டு வந்து இருகிறார்கள். ஆர்வமாக ஐந்து வயது குழந்தை, தன் ஆசிரியரை அணைத்துக்கொள்ள முடியாது. ஆசிரியர் - மாணவர் பந்தமே கேள்விக் குறியாகிறது இங்கே. இனி கண்காணிப்பு கேமராக்களின் மேற்பார்வையில் வகுப்புகள் செயல்படும். இயல்பு பறிபோகும். இன்னும் ஆசிரியர் மாணவர் உறவு சீர்குலையும்.

பந்த் இன்று முடியும். எதிர்ப்பு தெரிவித்தாகிவிட்டது. சரி, நாளை என்ன செய்ய போகிறோம்... இந்தக் குழந்தைகளைப் பாதுகாக்க?

கிர்த்திகா தரன், பெங்களூர். - தொடர்புக்கு kirthikatharan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x