Last Updated : 23 Jul, 2014 10:46 AM

 

Published : 23 Jul 2014 10:46 AM
Last Updated : 23 Jul 2014 10:46 AM

அதிக மதிப்பெண் பெறும் சிறுபான்மையினருக்குப் பரிசு

பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை மூலம் சிறுபான்மையினருக்கு வழங்கப்படும் கல்வி உதவித் தொகை, சலுகைகள் குறித்து விளக்கம் அளிக்கிறார் நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அ. கருப்பையா.

பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு கல்வி நிலையங்களில் எத்தனை சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது?

அரசு மற்றும் அரசு சார்ந்த கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட முஸ்லிம்களுக்கு 3.5 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படுகிறது. வேலைவாய்ப்பிலும் இந்த இடஒதுக்கீடு உண்டு.

அதிக மதிப்பெண் பெறும் சிறுபான்மையின மாணவர்களை ஊக்குவிக்க அரசு சார்பில் ஏதேனும் பரிசு வழங்கப்படுகிறதா?

10-ம் வகுப்பு, பிளஸ்2 அரசு பொதுத் தேர்வுகளில் முதல் 3 இடங்களைப் பிடிப்பவர்களுக்கு மாவட்ட மற்றும் மாநில அளவில் பரிசுகள் வழங்கப்படுகிறது. இதைப் பெற தமிழை முதன்மைப் பாடமாக படித்திருக்க வேண்டும்.

பிளஸ்2 வகுப்பில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே ரூ.50 ஆயிரம், ரூ.30 ஆயிரம், ரூ.20 ஆயிரம் வழங்கப்படுகிறது. மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே ரூ.6 ஆயிரம், ரூ.4 ஆயிரம், ரூ.2 ஆயிரம் வழங்கப்படுகிறது.

10-ம் வகுப்பில் மாநில அளவில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே ரூ.25 ஆயிரம், ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம் வழங்கப்படுகிறது.

மாவட்ட அளவில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே ரூ.3 ஆயிரம், ரூ.2 ஆயிரம், ரூ.1000 வழங்கப்படுகிறது.

பரிசுத்தொகை பெற என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்?

மதிப்பெண் மற்றும் சாதிச் சான்றிதழை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் வழங்க வேண்டும். மதம் மாறிய கிறிஸ்தவ ஆதிதிராவிடர்களுக்கு இந்தப் பரிசுத்தொகை ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் வழங்கப்படும்.

உருது மொழியில் பயிலும் சிறுபான்மையின மாணவர்களுக்கு பரிசுத் தொகை உண்டா?

உருது மொழியை முதல் அல்லது இரண்டாவது மொழியாக படிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படுகிறது. பிளஸ்2 வகுப்பில் முதல்3 இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே ரூ.15 ஆயிரம், ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம் வழங்கப்படுகிறது. 10-ம் வகுப்பில் முதல் 3 இடங்களைப் பெறுபவர்களுக்கு முறையே ரூ.10 ஆயிரம், ரூ.5 ஆயிரம், ரூ.3 ஆயிரம் வழங்கப்படுகிறது.

சிறுபான்மையின மாணவிகளுக்குத் தனியாக விடுதி வசதி உள்ளதா?

தமிழகத்தில் கன்னியாகுமரி, தஞ்சாவூர், வேலூர், திருச்சி, திண்டுக்கல், கோவை, மதுரை, கிருஷ்ணகிரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் இலவசமாக உணவு மற்றும் தங்கும் வசதியுடன் 12 விடுதிகள் உள்ளன.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x