

பிரபல பரதநாட்டியம் மற்றும் குச்சிப்புடி நடனக் கலைஞர் ‘கலைமாமணி’ உமா முரளி நாட்டிய உலகில் 50 வருடங்களை நிறைவு செய்திருக்கிறார். 50-வது ஆண்டின் அரங்கேற்ற நிகழ்ச்சி ஜூன் 24 சனிக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது. இந்த நிலையில், உமா முரளியுடன் ‘இந்து தமிழ் திசை’ டிஜிட்டலின் சிறப்பு நேர்காணலில் இருந்து..
நடனத்தில் ஐம்பது ஆண்டுகள் நிறைவு செய்ததற்கு வாழ்த்துகள். நாட்டிய உலகில் 50 ஆண்டுகள் என்கிற இந்த காலகட்டத்தில், வாழ்க்கையை திரும்பி பார்க்கும் போது எப்படி உணர்கிறீர்கள்?
“இது நான் தானா என்று எனக்கே பிரமிப்பாக உள்ளது. எந்த துறையாக இருந்தாலும் 50 வருடங்கள் என்பது மிகப் பெரிய விஷயம். ஒரு ஊடகத்திலோ, கலைத்துறையிலோ இருக்கும் போது அதில் இருக்கக்கூடிய சவால்கள் மிகவும் தீவிரமானது. நம் மனதால், உடலால் அதற்கு தாக்குப் பிடிக்கணும். ஈடு கொடுக்கணும். நமக்கு வாழ்க்கையில் தினமும் எவ்வளவோ சவால்கள் இருக்கு. ஒரு நடிகராகவோ நடிகையாவோ இருக்கும் போது, நம்முடைய வேலைக்கு ஏற்ற ஒரு ஊதியம் கிடைக்கும்.
ஆனால் இந்த கலையைப் பொறுத்த வரைக்கும் உரிய அங்கீகராமும் ஊதியமும் பெரிய விஷயம். இந்த கலைக்காக உடலாலும் உயிராலும் நாம் நிறைய உழைப்பைத் தர வேண்டியுள்ளது. முதலீடு என்பதைவிட இதில் நாம் செய்யும் செலவுகள் தான் அதிகமாக இருக்கும். அப்படி இருந்தும் கூட கலை மீதான வேட்கையில் தொடர்ந்து செய்வது எவ்வளவு பெரிய விஷயம் என்பதை, நான் திரும்பி பார்த்தபோது உணர்ந்தேன். இதனால்தான் நான் இதை விழாவாகக் கொண்டாட வேண்டும் என்று திட்டமிட்டேன்”
50 ஆண்டுகள் இன்று விழாவாக மாறியது எப்படி?
“நடனத்திற்கு எப்போது உடல் ஃபிட்டாக இருக்கணும். இன்றும் தினமும் உடற்பயிற்சி செய்யறேன். உணவுக் கட்டுப்பாடுகள் அவசியம். தூக்கத்திலும் கூட கட்டுப்பாடு முக்கியம்.
50 வருடங்கள் என்பது சாதாரண விஷயம் இல்லை. நம் பிறந்த நாளை கொண்டாடுவது பெரிய விஷயம் இல்லை. அது அனைவரும் கொண்டாடலாம். ஆனால் இந்த விஷயத்தை பாராட்டி செய்யணும் என்று நானே யோசித்து ஆரம்பிச்ச விஷயம். இந்த வருடம் லயன்ஸ் கிளப் இன்டர்நேஷனல், Women Icon and Meritorious Service in the field of Classical Dance விருது கொடுத்து என்னை மகளிர் தின விழாவில் கவுரவித்தார்கள். தமிழக ஆளுநர் மாளிகையில் தெலங்கானா மாநிலம் உருவான நாளை கொண்டாடிய தினத்தில், எனக்கு அழைப்பு விடுத்து, என்னுடைய நடனத்திற்கும் ஏற்பாடு செய்து, என்னை ஆளுநர் ஆர்.என்.ரவி சிறப்பு செய்தது … இறையருளா? இல்லை என் பெற்றோர் மற்றும் என் குருவின் ஆசிர்வாதமா? எல்லாமே சேர்ந்து அமைந்ததா என தெரியவில்லை”
இந்தக் கலைச்சேவையை 50 வருடமாக தொடர்ந்து செய்ய உங்களுக்கு உந்து சக்தியாக இருந்தது எது?
“மிகவும் அழகான கேள்வி. இதற்கு அம்மான்னு தான் நான் பதில் சொல்ல முடியும். அம்மா நாலரை வயதில் தண்டபாணி மாஸ்டர் கிட்ட என்னை கூட்டிட்டு போனாங்க. அந்த குழந்தைக்கு என்ன தெரியும் அவர் அவ்வளவு பெரிய குரு அப்படின்னுட்டு. இதை 50 வருடமா தொடரப் போறேன்னு கூட அம்மாவும் யோசிச்சிருக்க மாட்டாங்க நான் யோசிக்கவே முடியாது. ஆனால் அவங்க கொடுத்த ஊக்கம் எப்படின்னா, அது அரங்கேற்றத்தோட முடியல. நிறைய பேர் அப்படித்தான் பண்றாங்க. இங்கு பலருக்கு ஒரு அரங்கேற்றம்னா அது ஒரு பிள்ளையார் சுழி. அதுவே ஒரு முற்றுப் புள்ளி. ஆனா, என் வாழ்க்கையில அது அப்படி நடக்கல. அம்மா இப்ப இல்லை. அவங்க இறந்து நிறைய காலங்கள் ஆயிடுச்சு. ஆனாலும் அவங்க என்னை இப்பவும் என்னை உந்தி தள்ளிக் கொண்டிருப்பது போன்ற உணர்வு இருக்கு, அதனால தான் இவ்வளவு வருஷம் கடந்து நான் இன்னமும் நிறைய பண்ணனும்னு ஆசைப்படுறேன்”
கலைக்கான உங்கள் 50 வருடப் பணியில் மறக்க முடியாத அனுபவங்கள்?
“இந்த 50 வருடத்தில், நிறைய பேர் என்னோட பயணத்தில் இருக்காங்க. நான் தனி ஆள் கிடையாது. என் தோழிகள்,இந்தத் துறையில் எனக்கு மூத்தவர்கள், என் குரு, அம்மா அப்பா … இவங்களோட பயணப்பட்டு இருக்கேன். மேடையில் என்னோடு நடனமாடி இருக்கலாம் அல்லது என்னை அவர்கள் கௌரவித்து இருக்கலாம். இந்த நேரத்துல நான் அவர்களுக்கு மரியாதை செய்யப் போகிறேன். எனக்கு எல்லாமே நல்ல விதமாக அமைஞ்சிருக்கு. எனக்கு நிறைய ஆசீர்வாதங்கள் இருக்கு. அதே சமயத்துல சில பேருக்கு அது அமையாமல் வாய்ப்புகள் கிடைக்காமல் இருக்கலாம். அந்த மாதிரி குழந்தைகளுக்கும் என்னோட பள்ளியின் மூலம் நான் சொல்லி தருகிறேன். எனக்கு இந்த கலையின் மூலம் என்னக் கிடைத்ததோ…அதை நான் திருப்பிக் கொடுக்கணும்னு நினைக்கிறேன். அதுதான் நான் இந்த நிகழ்ச்சி மூலமா நான் செய்ய நினைப்பது.
கிருஷ்ணகான சபாவில் காலையில் 10 மணியிலிருந்து 12:30 மணி வரைக்கும் ஒரு நிகழ்ச்சி இருக்கு. நான் குச்சிபுடியில் தான் கவனம் செலுத்துறேன். பரதம், நான் நிறைய வருஷம் படிச்சிருக்கேன். ஆனா குச்சிப்புடி துறையில் தான் எனக்கு கலைமாமணி விருது கிடைச்சிருக்கு. தமிழ்நாட்டுல நிறைய பரதநாட்டிய நிகழ்ச்சிகள் இருக்கு .ஆனா குச்சிப்புடி அவ்வளவாக இல்லை. அதனால அதில் கவனம் செலுத்தலாம் என்பது என் எண்ணம்.
காலையில் ஐந்து புகழ்பெற்ற கலைஞர்களுக்கு நான் மரியாதை செய்து, அவர்களும் விரிவுரை விளக்கமளிக்க இருக்கிறார்கள்.
மாலையில் என்னுடைய மாணவர்கள் ஆடுறார்கள். இந்த கோவிட் முழுக்க ஆன்லைன்ல தானே வகுப்புகள் எடுத்தோம். ஆன்லைன்ல இந்தியா முழுக்க நிறைய மாணவர்கள் இருக்காங்க. அவங்க எல்லாரும் வந்து ஆடப் போறாங்க . வெளிநாட்டில் இருக்கும் மாணவர்கள் வர முடியல. அதனால இந்தியாவுல இருக்க குழந்தைங்க மட்டும் வந்து பண்ண போறாங்க. நான் என்னோட குரு டாக்டர்.வெம்பட்டி சின்ன சத்யம் அவர்களுடைய ஸ்ரீகிருஷ்ண பாரிஜாதம் என்கிற நாட்டிய நாடகத்தை அவருடைய குச்சிபுடி ஆர்ட் அகடமியோட சேர்ந்து பண்றேன். நாரதகான சபாவில் 5 மணியிலிருந்து இந்த நிகழ்ச்சி ஆரம்பம்”
இந்த நெடிய பயணத்தில நீங்க சந்தித்த சவால்கள்?
“தினமுமே நமக்கு ஒரு சவால் தான். உடல் மற்றும் மனதால் நாம் தினமும் தயார் நிலையில் இருக்க வேண்டும். குறிப்பிட்டு சொல்ல வேண்டும் என்றால், சிம்ம நந்தினி என்று ஒரு நடனம் செய்வேன். கால்களால் கோலம் வரைவது. இந்த பெரிய வாய்ப்பு எனக்கு 2005-ல் வந்தது. அழிந்து போகும் கலைகள் அப்படின்னு Lo oriental festival - Parisல நடத்தினாங்க. அந்த நிகழ்ச்சி அமைப்பாளரான இலங்கை தமிழர்,சிம்ம நந்தினி நீங்க பண்ணணும்னு சொன்னாரு. அந்த சமயத்தில் எனக்கு சிம்ம நந்தினி பற்றி தெரியாது. எனக்கு சவால்கள் மிகவும் பிடிக்கும். யார் அதை சொல்லித் தருவார்கள் என்ற அந்த தேடல் எனக்கு ஒரு பெரிய சவாலாக இருந்தது .
அதை தெரிந்தவர்கள், சில காரணங்களுக்காக எனக்கு சொல்லித் தர முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதையெல்லாம் மீறி ஒரு குருவை கண்டுபிடித்து, நான் கற்றுக் கொண்டு, இன்று வரை உலக அளவில் அந்த ஒரு நடனத்திற்காக மட்டுமே எனக்கு நல்ல பெயர் இருக்கு. அது என் வாழ்க்கையில் ஒரு பிரம்மாஸ்திரம் மாதிரியே ஆகி விட்டது. பெரிய வாய்ப்பாக நினைக்கிற எல்லா சவால்களையும் நாம் எடுத்தால் தான் வாழ்க்கையில் வெற்றி அடைய முடியும்”
குச்சிப்புடி மற்றும் பரதநாட்டியத்தில் அதனுடைய பழமையும் ,பாரம்பரியமும் மாறாமல் இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ற மாதிரி என்ன புதுமைகளை செய்யப் போகிறீர்கள்?
“இப்ப எல்லாமே துரித உணவு மாதிரி ஆயிடுச்சி. இப்பொழுது ஒன்றரை மணி நேரம் ஆடுவதே பெரிய விஷயம்னு நினைக்கிறாங்க. குச்சிப்புடி ஒரு நாடக மரபு சார்ந்தது. பரதத்தில் அலாரிப்பு…ஜதிஸ்வரம் மாதிரி குச்சிப்புடி நாடகம் தான் . நாட்டிய நாடகம் அதன் மரபு. மாஸ்டர் வெம்பட்டி அதிலிருந்து பாமா கலாபம்.. பிரவேச தருவுன்னு பேரு .அதாவது ஒரு நாட்டிய நாடகத்தில் ஒரு கதாப்பாத்திரம் நுழையும் போது ,அதை ஒரு நடனமாக செய்வார்கள். பாரம்பரிய மரபும் மாறாமல்..அதே நேரம் நம்முடைய நடன அமைப்பையும் சேர்த்து நாம் நிறைய விஷயங்களை செய்து வருகிறோம்”
இந்த தருணத்தில் நீங்கள் யாருக்கு நன்றி சொல்ல விரும்புகிறீர்கள்?
“முதலில் என்னுடைய அம்மா அப்பா. என்னுடைய குடும்பத்தினர்,உடன் பிறந்தவர்கள்,குழந்தைகள் என இவர்கள் எல்லோரும் எனக்கு ஆதரவாக இருந்ததால் தான் இத்தனை வருடம் என்னால சிறப்பாக ஆட முடிந்தது. என்னுடைய குரு. இவர்களை தவிர என்னுடைய நடனத்துறை நண்பர்கள்,ஊடக நண்பர்கள்,என் நலம் விரும்பிகள்,ரசிகர்கள், எனக்கு வாய்ப்பளித்து கௌரவித்த சபாக்கள், ஒவ்வொருத்தருக்கும் நன்றி சொல்ல இந்த நேரம் போதாது. இந்த விழாவின் மூலமாக எல்லாருக்குமே எனது மனமார்ந்த நன்றிகள்”
இந்த நடனக் கலையை கற்றுக் கொள்ள விரும்பும் அடுத்த தலைமுறை குழந்தைகளுக்கு நீங்கள் சொல்ல விரும்பும் கருத்து ?
“வாழ்க்கையில் ஒழுக்கம் முதலில் இருக்க வேண்டும். செய்யும் வேலையில் அர்ப்பணிப்பு இருக்க வேண்டும். ஒரு கலை என்பது ஒரு நாள் விஷயம் இல்லை. அதுக்கு பொறுமை வேண்டும். மனம் தளர விடக்கூடாது. ஊடகத்தில் ஒரு நாள் நம்மை தூக்கி எழுதுவாங்க. அதே இன்னொரு நாளைக்கு அப்படியே கீழே இறக்கிடுவாங்க. அன்னைக்கு அவர்கள் கண்ணுக்கு நாம் சரியா ஆடாம இருந்திருக்கலாம். ஆனால் இந்த தருணத்தில் நான் சொல்ல விரும்புவது, பத்திரிகைகள், ஊடகங்கள் கலைஞர்களிடம் உரிமை எடுத்துக்கலாம்.
ஆனால், அது அவர்களுடைய தனிப்பட்ட வாழ்க்கையை வேதனைப்படுத்துவதாகவோ அல்லது அவதூறாகவோ எழுதக் கூடாது. குறிப்பாக நடனக் கலைஞர்களை, நாங்கள் எங்கள் கலையின் மேல் இருக்கும் ஆர்வத்திற்காக இதை செய்துக் கொண்டிருக்கிறோம். குழந்தைகளும் விமர்சனங்களை ஆரோக்கியமாக எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் இனி இதற்கு லாயக்கில்லையோ என்று நினைத்தால் யாருமே முன்னுக்கு வர முடியாது. வாழ்க்கையில் யாரையாவது ஒருவரை நாம் உத்வேகப்படுத்தினால் அது தான் நம்முடைய மிகப் பெரிய வெற்றி” என்றார்.
50 வருடங்களையும் தாண்டி உங்களுடைய பயணம் தொடர எங்களுடைய வாழ்த்துக்கள்.
- நேர்காணல்: ப.கோமதி சுரேஷ்