Published : 25 Oct 2017 09:38 PM
Last Updated : 25 Oct 2017 09:38 PM

கந்துவட்டிக் குடும்பங்கள் தீக்கிரையாகும் காலம்: இதுவும் கடந்து போகுமா?

 

2004 ஜூலை 16-ம் தேதி கும்பகோணம் ஆரம்பப் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்து 94 குழந்தைகளின் உயிரை காவு வாங்கியது. பலர் காயமுற்றனர். இறந்த குழந்தைகள் அனைவரும் 7 வயதிலிருந்து 11 வயதுக்குட்பட்டவர்கள். மதிய உணவு தயாரிக்கும்போது ஏற்பட்ட இத்தீ விபத்தில் அகப்பட்ட இப்பள்ளியில் முறையான கட்டுமான விதிமுறைகள் பின்பற்றப்படவில்லை என தெரிய வந்தது.

உடனே பின் தமிழகம் முழுக்க உள்ள ஆயிரக்கணக்கான பள்ளிகளில் அதிகாரிகள் ஆய்வு நடத்தினர். அதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் கும்பகோணம் பள்ளியை விடவும் தரந்தாழ்ந்த கட்டமைப்புடன் இயங்கி வருவது கண்டு பிடிக்கப்பட்டது. பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகளும் கட்டமைப்பு விதிகளும் கொண்டுவரப்பட்டன.

கும்பகோணம் பள்ளித் தீ விபத்து நிகழ்வதற்கு 6 மாதங்களுக்கு முன்பு. அதாவது 2004ம் ஆண்டு ஜனவரி 23ம் தேதி, 64 மனித உயிர்களை விழுங்கிய ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீ விபத்து. இந்த விபத்தில் 33 பேர் காயமடைந்தனர். இவ்விபத்தும் அதிகாரிகளின் அலட்சியத்தால் நிகழ்ந்த மிகவும் கோரமான சம்பவம். இந்த வழக்கிலும் குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை கிடைக்காதபடி குற்றப் பத்திரிகையை சமர்ப்பித்தனர் காவல் துறையினர். இதையொட்டி அதிகாரிகள் தூங்கி விழித்துக்கொண்டனர். தமிழகம் முழுக்க உள்ள அத்தனை திருமண மண்டபங்களிலும் அதிரடி சோதனைகள் மேற்கொண்டனர். உரிய வசதிகள், கட்டுமான வசதிகள் இல்லாத மண்டபங்களை பூட்டி சீல் வைத்தனர். மண்டபங்களுக்கு புதிய கட்டுப்பாடுகளும், கட்டமைப்பு முறைகளும் ஏற்படுத்தப்பட்டன.

தீண்டாமைக் கொடுமை புகாரை போலீஸார் ஏற்காமல் கட்டப்பஞ்சாயத்து செய்ததால் கோவை ஆட்சியர் குறைதீர் நாள் ஒன்றில் தன்னை உயிரோடு கொளுத்திக் கொண்டார் தலித் இளைஞர் ஒருவர். தீச்சுவாலையுடன் அவர் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் எரிந்தபடி அங்கமிங்கும் ஓடிய அந்த மனிதரை தொலைக்காட்சிகளில் பார்த்து மாநிலமே பதைபதைத்தது. தமிழகமெங்கும் உள்ள காவல்நிலைய அதிகாரிகள் விழித்துக் கொண்டு நிலுவையில் உள்ள தீண்டாமை வன்கொடுமை புகார்களை தூசி தட்டி எடுத்து அதற்கெல்லாம் நடவடிக்கை எடுப்பது போல் பாவ்லா காட்டினர்.

சென்னையில் மெளலிவாக்கம் அடுக்குமாடிக் கட்டிடம் கட்டும்போதே சரிந்ததில் அறுபதுக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். மக்கள் செத்த உயிர்களை பார்த்துப் பதற, வழக்கம் போல் அப்போதுதான் சாமி வந்தவர்கள் போல் முறையான மண் பரிசோதனை செய்யாமல் கட்டப்படும் கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்வதாக, நடவடிக்கை எடுப்பதாக புறப்பட்டனர்.

இதேபோல் சமீப காலங்களில் சோமனூர் பஸ்நிலையம் இடிந்ததில், டெங்கு புறப்பட்டதில், இன்னபிற, இன்னபிற சங்கதிகளில் மனித உயிர்கள் இறப்பு வழக்கத்திற்கு மாறாக அதிகமாகி சென்சிடிவ் ஆகி நிலைகுழைந்து மீடியா வெளிச்சத்திற்கு வரும் பிரச்சினைகளில் எல்லாம் 'வெறுமனே ஆக்ஷன் ரிப்போர்ட்!' காட்டிக் கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகள்.

மேற்சொன்ன விஷயங்களில் பிரச்சினை 'சென்சிடிவ்' வாக இருக்கும் போது பரபரப்பு காட்டுவதும், பிறகு வழக்கம் போல் செயல்படுவதும் அவர்களுக்கு வாடிக்கையாக இருக்கிறது. அந்த வகையில் இப்போது கந்துவட்டியால் சாகும் குடும்பங்களின் மீதான போலி கரிசனப் பார்வை வந்திருக்கிறது.

ஒரு வேளை நெல்லை, காசிதர்மம் இசக்கிமுத்து தன் மனைவி, இரண்டு மகள்களுடன் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீக்குளிக்காமல், தன் மனதில் எரிந்து கொண்டிருந்த நெருப்பை உடலில் பொருத்தி வெளியுலகுக்கு காட்டாமல் தன் வீட்டிற்குள்ளேயே இச்செயலை செய்திருந்தால் இந்த துயர சம்பவம் இந்த அளவுக்கு வீரியம் பெற்றிருக்குமா என்பது சந்தேகம்தான்.

6 முறை மனுகொடுத்தும், கந்து வட்டி வாங்குபவர்களுக்கு ஆதரவாகவே செயல்பட்ட உள்ளூர் போலீஸின் செயல்பாடுகளை பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு ஆணித்தரமாக வெளிப்படுத்தியும் கூட, 'மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது. பல முறை வீடுதேடி சென்றும் புகார்தாரர் குறிப்பிட்ட முகவரியில் இல்லை' என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டி வருவது வேடிக்கையாக உள்ளது.

கந்துவட்டிக்குள் சிக்கியவன்/ சிக்கிய குடும்பம் எந்த காலத்தில் அதே வீட்டில் இருந்திருக்கிறது? இருந்தால் கந்துவட்டி கும்பல் விட்டுவிடுமா? போலீஸ்தான் அழைத்துச் சென்று உடனே வழக்கு பதிவு செய்து கந்துவட்டிக்கு விட்டவன் மீது நடவடிக்கை எடுத்து விடுமா?

1999ம் ஆண்டு நான் நிருபராக பணிபுரிந்த சமயத்தில் ஒரு கடிதம் வந்தது. அதில் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் கையெழுத்திட்டிருந்தனர். கோவை, பாப்பநாயக்கன்பாளையம், பழையூர் பகுதிகளில் தாங்கள் வசித்து வந்ததாகவும், இங்கே ஆட்டோ ஃபண்டு, பலகார ஃபண்டு, தீபாவளி ஃபண்டு என்று ஆட்டோக்காரர்கள், டாக்ஸிக்கார்கள் நடத்துவதாகவும், வாராவாரம் ஒருதொகையை சீட்டு போல வாங்கிக் கொண்டு, சீட்டு பணம் கட்டியவர்களிடமே அதை ரூ.10 வட்டிக்கு விடுவதாகவும், அதில் தாங்கள் பாதிக்கப்பட்டு ஊரை விட்டே ஓடி தலைமறைவு வாழ்க்கை வாழ்வதாகவும், தம் நகை, வீடு, பொருள் எல்லாமே ஃபண்டு நடத்துபவர்கள் கைப்பற்றி வைத்திருப்பதாகவும் அந்த புகார் நீண்டது.

அதை எடுத்துக் கொண்டு விசாரித்ததில் கோவை பகுதிகளில் ஆட்டோ, டாக்ஸி ஸ்டேண்ட் என்று ஒன்றிருந்தால் அதில் குறைந்தபட்சம் நான்கைந்து ஃபண்டுகள் நடப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதை நடத்துபவர்கள் எல்லாம் ஒரு காலத்தில் வாடகைக்கு ஆட்டோ, டாக்ஸி ஓட்டிக் கொண்டு இருந்ததும், இந்த ஃபண்டு நடத்திய பின்பு எல்லோருமே கோடீஸ்வரர்களாக மாறி, நாலு பங்களா, ஐந்து பங்களா, ரியல் எஸ்டேட், கட்சிப் பொறுப்புகள் என கொழுத்திருப்பதும் அறிய வந்தது. இப்படி மட்டும் கோவையில் ஆயிரக்கணக்கில் ஃபண்டுகள். இவர்கள் உறுப்பினர்களிடம் தீபாவளியின் போது ரூ.200 முதல் தவணை தொகை பெறுவார்கள்.

பிறகு வாராவாரம் உறுப்பினர்களிடம் தலா ரூ.20 வீதம் வசூலிப்பார்கள். இதை உறுப்பினர்களிடமே வட்டிக்கு விடுவார்கள். அதாவது ரூ. 1000 வட்டிக்கு வாங்கினால், அதில் ரூ.880 மட்டும் கொடுப்பார்கள். அதில் ரூ. 20 எழுத்துக்கூலி. மீதி ரூ.100 வட்டி. அதை வாராவாரம் ரூ.100 வீதம் 10 வாரங்களுக்கு செலுத்த வேண்டும். ஒரு வாரம் பணம் கட்டாவிட்டால் அடுத்த வாரம் ரூ.200 ஆக கட்டுவதோடு, முந்தைய வாரம் செலுத்தாதற்கு அபராத வட்டியும் செலுத்த வேண்டும். இந்த பணத்தை கணக்கிட்டு வருட முடிவில் தீபாவளிக்கு முந்தின வாரம் உறுப்பினர்களுக்கே பிரித்து தருவார்கள்.

இந்த ஃபண்டு நடத்துவதற்காக ஒரு சீட்டுக்கு ரூ.200ஐ எடுத்துக் கொள்வார்கள். எழுத்துக்கூலியாக சேரும் பணமும் இவர்களுக்கே. இதில் உறுப்பினர்கள் யாவரும் குறிப்பிட்ட ஒரு தொகையை ஒரு வருடத்தில் வட்டிக்கு எடுத்திருக்க வேண்டும். இல்லாவிட்டால் எடுத்தேயாக வேண்டும் என கட்டாயப்படுத்துவார்கள். அப்படியும் எடுக்காதவர்களிடம் ஃபண்டு பிரிக்கும்போது குறிப்பிட்ட தொகையை அதற்காக பிடித்தம் செய்து கொள்வார்கள். இதில் முறைகேடு, ஊழல் வேறு நடக்கும். இப்படி மட்டும் 18 ஆண்டுகளுக்கு முன்பே கோவையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஃபண்டுகள் நடந்து வந்தது.

இவர்களிடம் ரூ. 1 லட்சம் முதல் ரூ.10 லட்சம் வரை வாங்கி வீடு, வாசல்களை, தொழிற் சாலைகளை, விலை மதிப்பு மிக்க வாகனங்களை, நகைகளை இழந்தவர்கள் கணக்கில் அடங்காது. குறிப்பாக தமிழகமெங்கும் அப்போது பிரபலமாகியிருந்த ஒரு மசாலா தூள் நிறுவனம் இவர்களிடம் கடன் வாங்கியதாலேயே முடிந்து போனது. அந்த நிறுவனத்தின் முதலாளியே ஊரை விட்டு ஓடிய சம்பவமும் நடந்தது.

இது தொடர்பாக அப்போது செய்தி வந்தபோது பெயரளவுக்கு போலீஸார் ரெய்டு நடவடிக்கையில் இறங்கினர். ஓரிரு வாரங்கள்தான். பிறகு பழையபடிதான். தற்போது இதுபோன்ற ஃபண்டுகள் இப்போதும் கோவையில் சுமார் 10 ஆயிரத்திற்கும் மேல் இயங்கிக் கொண்டுதான் இருக்கிறது. வட்டிக்கு வாங்கி கட்ட முடியாதவர்கள் ஊரை விட்டு ஓடிக் கொண்டேயிருக்கிறார்கள். இந்த விவகாரத்தில் நிறைய தற்கொலைகளும் நடந்துள்ளன.

இது மட்டுமல்ல கோவையில் வைசியாள் வீதி, ஒப்பணக்கார வீதி, தியாகி குமரன் மார்க்கெட், டவுன்ஹால், கிராஸ்கட் ரோடு, 100 அடி ரோடு, சண்டே மார்க்கெட், கவுண்டம்பாளையம் காய்கறி மார்க்கெட் பகுதிகளில் எல்லாம் தினசரி மீட்டர் வட்டிக்கு விடுபவர்கள் ஆயிரக்கணக்கில் உள்ளார்கள். காலையில் ரூ.100 வாங்கினால் மாலையில் ரூ.200 ஆக தரவேண்டும் என்றால் இந்த வட்டிவிகிதத்தை கணக்குப் போட்டுப் பாருங்கள். இதில் வரும் சண்டை, சச்சரவுகள் கட்டப் பஞ்சாயத்துகள் அரசியல் கட்சி நிர்வாகிகள் மூலமே நடக்கிறது.

அதையும் தாண்டி போலீஸ் ஸ்டேஷன் போனால் வதைபடுவது வட்டிக்கு வாங்கியவன்தான். ஏனென்றால் அந்த அளவுக்கு ஸ்டேஷன்களுக்கு மாமூல் போகிறது. அது மட்டுமல்ல, அந்த புகாரை கொண்டு வருபவர்கள் பெரிய அளவில் அவமானப்படுத்தப் பட்டார்கள்.

உதாரணத்திற்கு ஒன்று. கோவை மாவட்ட போலீஸ் உயரதிகாரி ஒருவரிடம் ஒரு தாயும் மகளும் புகார் கொண்டு வந்திருந்தபோது நானும் இருந்தேன். வழக்கம்போன்ற கந்துவட்டிப் புகார்தான். வட்டியே அசல் அளவு செலுத்தியாகி விட்டது. ஒரு மாத தவணை கட்டவில்லை. வீட்டில் உள்ள பாத்திரம் பண்டம் எல்லாம் தூக்கி சென்றுவிட்டார்கள். 'வந்தவர்கள் என் மகளின் கையைப் பிடித்தும் இழுத்து வேனில் ஏற்றிவிட்டார்கள். அவர்கள் காலில் கையில் விழுந்து அவளை மீட்டு வந்தேன். இன்னும் ரெண்டு நாளில் பணத்தை கொடுக்கலைன்னா, உம் மகளை தானா எங்கிட்ட கொண்டு வந்து விடறே!'ன்னு அழுகிறாள் தாய். அந்த போலீஸ் அதிகாரி அந்த தாயையும் பார்க்கிறார். மகளையும் பார்க்கிறார்.

அவர் அதிகாரி பார்த்த பார்வையில் புழுப்போல நெளிகிறார். என்னையும் பார்க்கிறார். 'இவங்க என்ன சொல்றாங்க?' என்னிடமே கேட்கிறார். பிறகு அந்த தாயிடமே திரும்பி, 'என்னம்மா சொல்றே? வட்டிப்பணம் கட்டலை. அதுக்காக உம் பொண்ணை எதுக்கும்மா கொண்டு வந்து விடச் சொல்றாங்க? புரியலையே! புரியும்படி சொல்!' என்கிறார்.

அந்தத் தாய் தன் மகளை கந்து வட்டிக்காரன் பாலியல் ரீதியாக பயன்படுத்தப் பார்ப்பதை அப்பட்டமாக சொல்லவும் முடியாமல், விழுங்கவும் முடியாமல் தவிக்கிறார். 'என்ன சார், இது புரியலையா? அவங்க அந்த பெண்ணை மிஸ்யூஸ் பண்ணப்பார்க்கிறாங்க!' என நான் சொல்ல, 'அதை அவங்க எப்படி பண்றாங்கன்னு அவங்க வாயால சொன்னாத்தானே ஆகும்?' என்றவர், 'போயிட்டு நாளைக்கு வாங்க!' என்று அனுப்பி விடுகிறார்.

நிருபர் என்கிற அடையாளத்தில் நான் அங்கு இருந்ததால் அவர்கள் அந்த அளவோடு அந்த பெண்மணிகள் தப்பினார்கள் போலும். இல்லாவிட்டால் திண்டாட்டம்தான். அந்த விசாரணையை நடத்திய அதிகாரிதான் பின்னாளில் ஜெயலட்சுமி விவகாரத்திலும், வேறு பல பெண்கள் விஷயத்திலும் அகப்பட்டு சஸ்பெண்ட், டிஸ்மிஸ் நடவடிக்கைக்கும் உள்ளாக்கப்பட்டார் என்பது இதில் சொல்லப்பட வேண்டிய விஷயம்.

கந்துவட்டியில் துன்பப்பட்ட மக்கள் 2003-ம் ஆண்டு நவம்பர் மாதம் 14-ம் தேதி வெளியிடப்பட்ட கந்துவட்டி தடைச்சட்டத்தைப் பார்த்து சந்தோஷப்பட்டனர். அதைக் கொண்டு வந்த ஜெயலலிதாவை வாயாரப் போற்றினர். ஆனால் அது எல்லாம் நீர்க்குமிழியாய் போகும் அளவு அந்த கந்துவட்டி சட்டத்தை வைத்து போலீஸார் மாமூல் வசூலிப்பை கூடுதலாக்கிக் கொண்டனரே ஒழிய வேறொன்றும் நடக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் இந்த விவகாரத்தில் போலீஸிடம் போனவர்கள் புலியிடம் தப்பி, புதைமணலில் சிக்கியவர்கள் போல துன்பப்பட்டார்கள். கந்துவட்டிக்காரன் பணத்தைக் கேட்டு மிரட்டுவதை விட கூடுதல் மிரட்டல் போலீஸ் ஸ்டேஷன்கள் மூலம்தான் அவர்களுக்கு வந்தது.

இதேபோல் கந்து வட்டிக் கொடுமையிலிருந்து தப்பிக்க பல பெண்கள் சுய உதவிக்குழுக்களில் சேர்ந்தனர். நேரடியாக அரசு வங்கிகள் மூலம் வரும் பணம். குறைந்த பட்ச வட்டி. சுயமாக பெண்கள் நிற்கும் தன்மை. அதை அரசும் அற்புதமாக மக்களிடம் விழிப்புணர்வு ஊட்டி கொண்டு போனது. அதிலும் கந்து வட்டிக்காரர்கள் தன் மனைவி, மகள்கள் மூலம் ஊடுருவினர். அது இன்னும் பயங்கரமானதாக தற்போது மாறியிருக்கிறது.

'கந்துவட்டிக்கு ஏன் வாங்குகிறார்கள். அறிவு இல்லை!' என்று நம் அறிவுஜீவிகள் பலர் பொதுப் புத்தியில் இப்போதும் திட்டுவது காதில் ஒலிக்கிறது. உங்கள் வீட்டுப் பெண்ணைக்கூட உங்களை அறியாமல் வேறு வகையில் வளைத்துப் போட ஒரு கந்துவட்டி கும்பல் தயாராக இருக்கலாம். இன்னும் சொல்லப்போனால் கந்துவட்டிக்காரர்களை தேடிப்போகிறவர்கள் அதிகம் இல்லை. வட்டிக்கு வாங்குபவர்களை தேடி வந்து அவர்களே உருவாக்குகிறார்கள் என்பதுதான் உண்மை.

அதை நீங்கள் அறிந்து, உணர்ந்து கொள்ள வேண்டுமானால் வேறொன்றும் செய்ய வேண்டும். உங்கள் வீட்டுக்குப் பக்கத்திலேயே ஒரு சின்ன பெட்டிக்கடை ஆரம்பியுங்கள். அதில் பீடி, சிகரெட், மிட்டாய்கள் வாங்கி வையுங்கள். அல்லது ஒரு சின்னதாக ஒரு காய்கறிக்கடை, ஒரு டீக்கடை, ஒரு பலகாரக்கடை வையுங்கள். அதற்கு பொருட்கள் சப்ளை செய்ய வருபவர்களை விட ஒரு கைப்பையையும், ஒரு நோட்டையும் எடுத்துக் கொண்டு வண்டியில் வருபவர்கள் அதிகமாக இருக்கும்.

'என்ன அண்ணாச்சி. புதுசா கடை ஆரம்பிச்சிருக்கீங்க போலயிருக்கு. இப்படி வச்சா எப்படி வியாபாரம் ஆகும். கடை சிறிசா இருந்தாலும் பொருள் நிறையா இருக்க வேண்டாம். அப்பத்தானே ஒரு நாளைக்கு நல்லா வியாபாரம் ஆகும். என்ன வெறும் ஐம்பதாயிரத்துல கடையா? போதுமா? அவ்வளவுதான் பணம் இருக்கா? நான் தர்றேன் அண்ணாச்சி. ஒரு அம்பது ரூபா வாங்கிப்போடுங்க. ஒருநாளைக்கு முன்னுாறு ரூபாய் ஆகிற வியாபாரம் ஒரு நாளைக்கு மூவாயிரமா நடக்கும். லாபம் மட்டும் அதுல ஆயிரம் வரும். அதுல ஐநூறு எனக்கு கடன் கட்டினீங்கன்னா போதும். நூறுநாள்ல கடன் அடைஞ்சிடும். அதுக்குள்ள அதே அளவு ரூபாய் ஐம்பதாயிரம் உங்களுக்கும் லாபம் வந்திருக்கும். எந்த செக்யூரிட்டியும் வேண்டாம். உங்க கடை இருக்குல்ல போதும். நீங்க எங்க போயிருவீங்க அண்ணாச்சி. உங்களைத்தான், உங்க பொண்டாட்டி, புள்ளைகளைத்தான் தெரியுமே. அதோ அந்தக் கோடியிலதான இருக்கீங்க!' என்று வாய் ரொம்ப பேசுவார்கள்.  

அவர்களிடம் அகப்பட்டால் போச்சு. அப்புறம் நீங்க பெட்டிக்கடையில் பாடுபடுவது மட்டுமல்ல, வீட்டில் மனைவி பாடுபடுவது, உங்க பிள்ளைகள் பாடுபடுவது எல்லாமே வண்டியில் வந்து வாய் ரொம்ப பேசியிருக்கு எழுதி வைக்க வேண்டியதுதான். இது கூட சாதாரணம்தான். கோவையில் கடைவீதிகளின் சில இடங்களில் கந்து வட்டிக்காரர்களிடம் கடன் பெற்றே ஆக வேண்டும் என்ற எழுதப்படாத விதிமுறை இருக்கிறது. ஒரு வேளை அவர்கள் கடனே வேண்டாம் என்று விட்டு, விட்டால் அவர்கள் வசம் உள்ள தாதாக்கள் வருவார்கள். வேண்டுமென்றே கடையில் உள்ளவர்களை வம்புக்கு இழுப்பார்கள். வீண்ரகளையிலும் ஈடுபடுவார்கள். கண்ணாடி ஷோகேஸ் எல்லாம் உடைப்பார்கள். 'என்ன அண்ணாச்சி, நம்ம ஆளு கடன் கொடுக்க வந்தா வேண்டாங்கிறீங்களாமே. அப்புறம் எங்க பொழப்பு எப்படி ஓடுமாம்?' என்று நக்கலாக வேறு கேள்விகள் பறக்கும்.

இதற்கும் மதச்சாயம், சாதிச்சாயம் வேறு பூசப்படும். இதெல்லாம் உள்ளூர் போலீஸாருக்கு தெரியாமல் இல்லை. சிலருக்கு மாமூல் போய்விடுமே என்ற கவலை. வேறு சிலருக்கு தன் நிம்மதியே போய்விடுமே என்ற அச்சம்.

இப்போது கந்துவட்டியில் மூன்று உயிர்கள் துள்ளத்துடிக்க ஒரு ஆட்சியர் வாசலில் பொதுமக்கள் கண்ணெதிரே பார்த்த பின்புதான் கந்து வட்டிக்காரர்களை குண்டர் தடுப்புக்காவல் சட்டத்தில் அடைக்க வேண்டும் என்ற குரல்கள் இப்போது வலுத்து வருகிறது. அதில் அரசியல் கட்சித்தலைவர்கள் கூட இருக்கிறார்கள். அவர்கள் முதலில் அவர்கள் கட்சியில் எத்தனை பேர் கந்து வட்டி தொழில் செய்கிறார்கள் என்பதை கணக்கெடுத்து நடவடிக்கை எடுப்பார்களா தெரியவில்லை.

என்னைப் பொறுத்தவரை கந்து வட்டிக்கு எதிராக குண்டாஸ் மட்டும் போதாது. இன்னமும் கூடுதலாக கடுமையான சட்டங்கள் இதற்கு கொண்டு வர வேண்டும். அதற்கென தனி ஆணையமும் அமைக்க வேண்டும் என்பதேயாகும். அப்படி அமைக்கும்போதுதான் கந்துவட்டியால் நிகழும் தற்கொலைகளைத் தடுக்க முடியும்.

ஆனாலும் கந்துவட்டி விட்டவர்கள் அத்தனை பேரும் அரசியல் போர்வையில் பாதுகாப்பாய் இருப்பதனால் ஸ்ரீரங்கம் திருமண மண்டப தீ விபத்து போல், கும்பகோணம் பள்ளிக் குழந்தைகள் தீயில் கருகியது போல் இது கந்துவட்டிக்கு வாங்கிய குடும்பங்கள் தீக்கிரையாகும் காலமாகத்தான் அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் இயங்கிக் கொண்டிருக்கிறார்கள். எனவே இதுவும் அப்படியே கடந்துதான் போகும் என்பதே நிஜம்!

 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x