Published : 01 Oct 2017 11:45 am

Updated : 01 Oct 2017 11:45 am

 

Published : 01 Oct 2017 11:45 AM
Last Updated : 01 Oct 2017 11:45 AM

காலத்தின் வாசனை: உரையாடிய காலம்!

ரு ஜென் கதை. குருவைப் பார்க்க வேண்டும் என்ற ஆவலில் ஒரு சீடன் தொலை தூரத்திலிருந்து ஓடிவந்துகொண்டிருந்தான்.


குருவைக் கண்டதும் நின்றான். மூச்சு இரைத்தது.

“ஏன் இப்படி ஓடி வருகிறாய்?” - குரு கேட்டார்.

“உங்களைப் பார்க்க வேண்டும் என்றுதான்!” - சீடன்

“பார்த்துவிட்டாயா?”

“பார்த்துவிட்டேன்!”

“சரி இப்போது நான் உன்னைப் பார்க்க வேண்டும். பேசு!” என்றாராம்.

ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வதற்கு உரையாடல் முக்கியம். மனிதர்கள் ஒருவரோடு ஒருவர் மனம் விட்டு உரையாடி மகிழ்ந்த காலம் காணாமல் போய்விட்டது.

எழுத்தாளர் தஞ்சை ப்ரகாஷ் உரையாடல் கலையின் உச்சம் தொட்டவர். உலக இலக்கியங்களையும், நானாவிதமான வாழ்க்கை அனுபவங்களையும் தமது உரையாடலின் வாயிலாக கேட்பவர்களைச் சொக்க வைத்தவர் ப்ரகாஷ். நாவலாகவும் சிறுகதையாகவும் மலர்ந்திருக்க வேண்டிய எத்தனையோ கற்பனைகள் உரையாடல்களாக உதிர்ந்துபோயின. தெரு முனைகளில் தேநீர்க்கடை வாசல்களில், முற்றிய இரவுகளின் பனிமூட்டங்களில் ப்ரகாஷின் உரையாடலைக் கேட்டபடி தஞ்சையில் சுற்றித் திரிந்தது ஒரு ரசிகர் கூட்டம்.

தென்காசிச் சாரலில் ரசிகமணி டி.கே.சி.யின் உரையாடலைக் கேட்க வாய்த்தவர்கள் பாக்கியவான்கள். குற்றால அருவியிலும் ரசிகமணியின் தமிழ் அருவியிலும் ஆசைதீரக் குளித்துவிட்டுத் திரும்பிய இலக்கிய அன்பர்கள் வாழ்நாள் முழுதும் தங்கள்அனுபவங்களைச் சொல்லிச் சொல்லி மகிழ்ந்தார்கள்.

மனிதர்கள் ஒருவருக்கு ஒருவர் மனம்விட்டுப் பேசுவதெற்கென்றே கட்டப்பட்டவை அக்காலத் திண்ணைகள். பாரதியார் வீட்டுத் தாழ்வாரத்தில் ஒரு நீண்ட பெஞ்சு, அதில் உட்கார்ந்து நாட்டு நடப்புகளை நண்பர்களோடு விவாதிப்பது பாரதியார் வழக்கம். தம்முடைய இடிப்பள்ளிக் காலம் என்ற கட்டுரையில் பாரதியின் உயிரோட்டமான உரையாடலைக் கேட்கலாம். காக்காய்ப் பார்லிமெண்ட், காளிகோயில், தராசுக்கடை, கந்தன் வள்ளி போன்ற சொற்சித்திரங்களை உரையாடல் பாணியிலேயே வரைந்திருப்பார்.

அந்தக் காலத்துக் கல்யாண வீடுகள் கல்யாணத்துக்குப் பத்து நாட்களுக்கு முன்பே களைகட்டிவிடும். பல வருடங்களாகப் பார்க்காமல் இருந்த உறவினர்கள் வந்துசேர்வார்கள். ஒன்றாக உட்கார்ந்து விடிய விடியப் பேசித் தீர்ப்பார்கள். கல்யாண மண்டபத்தில் எதிரும் புதிருமாக முட்டிக்கொள்ளும் உறவுக்காரர்களிடையே புதுசாக உறவுப் பூக்கள் பூக்கும். அவை கல்யாண மாலைகளாகவும் தொடுக்கப்படும். ஆம்! திருமணங்கள் சொர்க்கத்தில் அல்ல. திருமண மண்டபத்திலேயே நிச்சயிக்கப்பட்டு விடும். மாமா எப்படி இருக்கீங்க? என்று கேட்டமாத்திரத்தில். கண்ணீர் மடைதிறக்க கட்டித் தழுவிக்கொள்ளும் உறவுகளின் பாச நீரோட்டத்தில் பகைமைகள் கரைந்துபோனதைப் பார்த்திருக்கிறேன்.

பறவைகளும் விலங்குகளும் பேசுவதை மொழிபெயர்ப்பவர்கள் இருந்திருக்கிறார்கள். தாவரங்களுக்கிடையே கூட உரையாடல் நிகழ்கிறது. அது மெளனத்தின் உரையாடல் அபூர்வமாக மனிதர்களிலேயும் இது நிகழ்கிறது. மெளலானா ஜலாலுதீன் ரூமி என்ற பாரசீகக் கவிஞரின் கவிதை வரிகள்; இரு நண்பர்களின் உரையாடல் என்னும் இரு கரைகளுக்கு நடுவே ஓடிக்கொண்டிருக்கிறது பேசாத பேச்சென்னும் பேராறு.

ரமண மகரிஷியின் ஆன்மிக உரையாடல்கள் அற்புதமானவை. இவற்றை சூரிநாகம்மா போன்ற சீடர்கள் தொகுத்திருக்கிறார்கள். பகவான் ரமணருடன் உரையாடுவதெற்கென்றே அமெரிக்காவிலிருந்து வந்த பால் பிரண்ட்டன் என்ற நாவலாசிரியர் தமது கேள்விகளை எழுதி எடுத்து வந்தார். ஆனால் ரமணரின் முன் அமர்ந்த வேளையில் இவர் மனம் அமைதியும் தெளிவும் பெற்றது. கேள்விகள் அடங்கிய தாளை அவர் எடுக்கவே இல்லை.

எழுத்தாளர் நகுலனைச் சந்திக்க ஒரு நண்பர் வந்தார். இரண்டு பேரும் மணிக்கணக்கில் ஒன்றுமே பேசாமல் உட்கார்ந்திருந்தார்களாம். வந்தவர் புறப்பட்டார். வாசல் வரை வழியனுப்ப வந்த நகுலன் அவரைப் பார்த்து கடைசியாக வாய்திறந்து “போறுமோல்லியோ?” என்று கேட்டாராம். அவரும் “போறும் போறும்” என்று சொல்லிவிட்டுப் போய்ச் சேர்ந்தாராம்.

எனக்கும் அப்படி ஒரு நண்பர் இருக்கிறார் வயது 86. வீட்டுக்குள் அப்படி ஒரு நிசப்தம். அவரும் அவர் மகனும்தான் அந்த வீட்டில் வசிக்கிறார்கள். மேஜை கட்டில் இரண்டு நாற்காலி சுவற்றில் ஒரு பழங்கால கடிகாரம் ஓடுகிறது. ஆனால் காலம் நின்றுவிட்டது. பெரியவர் ஐம்பது வருஷ நினைவுகளில் கட்டிய சிலந்தியாய் வாழ்கிறார். எப்போதாவது என்போன்ற பூச்சிகள் சிக்குவதுண்டு. பேசவே மாட்டார். மெல்ல ஒரு புன்னகை.

அவரும் அவர் மகனும் கூட பேசிப் பார்த்ததில்லை. அவர் உடம்பு இஸ்திரி போட்டமாதிரி தட்டையாக இருக்கும். தலையில் ஒரு காலத்தில் சாயம் பூசி இருப்பார் போலும். பாதி வெளுப்பு பாதி பழுப்பு. அப்படியே நெருப்பு பிடித்து எரிந்த தலையில் தண்ணீர் ஊற்றி அணைத்தமாதிரி இருக்கும். நல்ல வாசனைப் புகையிலை வாய்நிறைய வெளியே போய் துப்பிவிட்டு வருவார். தண்ணீர் குடிப்பார். ஏதோ பேசப்போகிறார் என்று நினைத்தால் ஏமாற நேரும். மறுபடி அடுத்த சுற்று வெற்றிலை புகையிலை யோகம்தான். வாய் முழுவதும் அடைபட்டதும் கண்வழி பேச முயற்சிப்பார். பேச்சற்ற அவரது உரையாடல் எனக்கு பிடிக்கும்.

மனிதரிடையே உரையாடல் அவசியம். அது மொழியின் துணை கொண்டும் நிகழலாம். மெளனமாகவும் நிகழலாம். உட்கார்ந்து பேச நேரமின்றி ஓடிக்கொண்டிருக்கிற இந்த ஓட்டத்தைச் சற்றே நிறுத்தி சக மனிதர்களிடம் உரையாடியும் உறவாடியும் மகிழ்வோம்.

- தஞ்சாவூர்க் கவிராயர், தொடர்புக்கு: thanjavurkavirayar@gmail.com


Sign up to receive our newsletter in your inbox every day!

More From This Category

rose

பளிச் பத்து 26: ரோஜா

வலைஞர் பக்கம்

More From this Author

x