Last Updated : 02 Jul, 2014 09:18 AM

 

Published : 02 Jul 2014 09:18 AM
Last Updated : 02 Jul 2014 09:18 AM

சுயதொழில் தொடங்க ரூ.1 கோடி வரை கடனுதவி

சுயதொழில் செய்வதை ஊக்குவிக்கும் நோக்கில் அரசு சார்பில் வழங்கப்பட்டுவரும் உதவிகள் குறித்து பார்த்து வருகிறோம்.

தமிழக அரசின் மற்றொரு திட்டமான புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன வளர்ச்சித் திட்டம் (NEEDS) குறித்து விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் க.ராசு.

NEEDS என்பது என்ன திட்டம்?

இதுவும் தமிழக அரசின் சுய வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம்தான். இத்திட்டத்தின் கீழ் ரூ.5 லட்சம் முதல் ரூ.1 கோடிவரை தொழில் தொடங்க கடனுதவி பெறலாம். முதல் தலைமுறை தொழில் முனைவோரை இலக்காகக் கொண்டு இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. பெற்றோர் சுய தொழில் செய்பவராக இருக்கக் கூடாது. அப்படி இருந்தாலும், கடனுதவி கேட்பவர் திருமணமாகி தனி குடும்பமாக இருந்தால், அவர் முதல் தலைமுறை தொழில் முனை வோராகவே கருதி வங்கிக் கடன் வழங்கப்படும். தொழில் முனைவோருக்கான பயிற்சியும் அளிக்கப்படுகிறது.

கடனுதவி பெற கல்வித் தகுதி உண்டா?

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப் படிப்பு, பட்டயப் படிப்பு மற்றும் ஐ.டி.ஐ. போன்ற தொழில் பயிற்சி முடித்திருக்க வேண்டும்.

வயது வரம்பு உள்ளதா?

குறைந்தபட்சம் 21 வயது, அதிகபட்சமாக 35 வயது நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அதில் சிறப்பு பிரிவினரான மகளிர், தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர் மாற்றுத் திறனாளிகள், திருநங்கைகள் ஆகியோர் 45 வயது வரை இத்திட்டத்தில் கடனுதவி பெறலாம்.

இட ஒதுக்கீடு உள்ளதா?

பெண்களை தொழில் முனைவோராக உருவாக்க முன்னுரிமை அளித்து அவர்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. தாழ்த்தப்பட்ட வகுப்பின ருக்கு 18 சதவீதம், பழங்குடியினருக்கு ஒரு சதவீதம், மாற்றுத் திறனாளிகளுக்கு 3 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

தமிழக அரசால் செயல்படுத்தப்படும் இந்த திட்டத்தால் பிற மாநிலத்தவர் பயன்பெற முடியுமா?

தமிழகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமின்றி நாட்டின் எந்த ஒரு பகுதியில் இருப்பவர்களும் இத்திட்டத்தின் கீழ் கடனுதவி பெற முடியும். எனினும், அவர்கள் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் தமிழகத்தில் வசிப்பவராக இருக்கவேண்டும். வங்கியில் கடன் பெற்றுத்தான் தொழில் தொடங்க முடியும் என்பதால் மேற்கண்ட நிபந்தனை விதிக்கப்படுகிறது. .

UYEGP திட்டத்தில் வருமான உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டது போல, NEEDS திட்டத்துக்கும் உள்ளதா?

UYEGP திட்டத்தில் கடனுதவி பெற விண்ணப்பதாரர் ஆண்டு வருமானம் ரூ.1.50 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஆனால், NEEDS திட்டத்தில் அதுபோல வருமான உச்சவரம்பு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.

(மீண்டும் நாளை சந்திப்போம்)

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x