

பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் மாணவர்களுக்கு தமிழக அரசு அளிக்கும் உதவிகள் குறித்து விளக்குகிறார் நாமக்கல் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் அ.கருப்பையா.
பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் மாணவர்களுக்கு இலவச விடுதி வசதி உள்ளதா?
ஆம். தமிழகம் முழுவதும் மொத்தம் 973 பி.சி., எம்.பி.சி., சீர்மரபினர் மாணவர் விடுதிகள் உள்ளன. விடுதியில் சேர்ந்து படிக்கவேண்டும் என்றால், மாணவரது பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ.50 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்கவேண்டும். அதுமட்டுமின்றி, மாணவனாக இருந்தால் வீட்டில் இருந்து பள்ளி செல்லும் தொலைவு குறைந்தபட்சம் 5 கி.மீ. இருக்கவேண்டும். மாணவிகளுக்கு பள்ளி செல்லும் தொலைவு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.
பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு தனித்தனியாக விடுதி வசதி உள்ளதா?
ஆம். எல்லா மாவட்டங்களிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு தனித்தனி விடுதிகள் உள்ளன. 6-ம் வகுப்பு முதல் பிளஸ்2 வரை படிக்கும் மாணவ, மாணவிகள் மட்டுமே பள்ளி விடுதிகளில் சேர்க்கப்படுவர். பட்டம், பட்டயப் படிப்பு படிப்பவர்களுக்கென கல்லூரி விடுதிகள் உள்ளன.
இலவச விடுதியில் மாணவ, மாணவிகளுக்கு என்னென்ன வசதிகள் செய்து தரப்படுகின்றன?
விடுதிக்கு கட்டணம் கிடையாது. 10-ம் வகுப்பு வரை 2 ஜோடி சீருடை இலவசமாக வழங்கப்படும். 10-ம் வகுப்பு, பிளஸ்2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு சிறப்பு வழிகாட்டி புத்தகம் வழங்கப்படும். மலைப் பிரதேசங்களில் தங்கிப் படிக்கும் மாணவர்களுக்கு கம்பளி ஆடை (ஸ்வெட்டர்) வழங்கப்படும்.
விடுதியில் தங்கிப் படிப்பதற்கான விண்ணப்பம் எங்கு வாங்க வேண்டும்?
அந்தந்த மாவட்ட பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை நலத்துறை அலுவலகம் மற்றும் சம்பந்தப்பட்ட விடுதிக் காப்பாளர்களிடம் விண்ணப்பம் பெற்றுக்கொள்ளலாம். அதை பூர்த்தி செய்து பிற்படுத்தப்பட்ட மற்றும் சிறுபான்மை நலத்துறை அலுவலகத்தில் வழங்க வேண்டும்.
மாணவ, மாணவிகள் விடுதியில் அதிகபட்ச சேர்க்கை விகிதம் எவ்வளவு?
பிற்படுத்தப்பட்ட மாணவ, மாணவிகள் விடுதியில் 60 சதவீதம் பி.சி. பிரிவினருக்கு, 20 சதவீதம் எம்.பி.சி. பிரிவினருக்கு, 15 சதவீதம் எஸ்.சி. பிரிவினருக்கு, மீதமுள்ள 5 சதவீதம் பிற பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதேபோல எம்.பி.சி. மாணவ, மாணவிகள் விடுதிகளில் 60 சதவீதம் எம்.பி.சி. பிரிவினருக்கு, 20 சதவீதம் பி.சி. பிரிவினருக்கு, 15 சதவீதம் எஸ்.சி. பிரிவினருக்கு, மீதமுள்ள 5 சதவீதம் பிற பிரிவினரைச் சேர்ந்தவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.