வித்தியாச தோழிகள்.. சவாலாக ஆரம்பித்து சுவாசமாக மாறிப்போன மரம் நடும் பழக்கம்

வித்தியாச தோழிகள்.. சவாலாக ஆரம்பித்து சுவாசமாக மாறிப்போன மரம் நடும் பழக்கம்
Updated on
1 min read

வர்தா புயலை சென்னைவாசிகள் யாரும் மறந்திருக்க மாட்டார்கள். சாலையோர மரங்கள் வீட்டு காம்பவுண்டுக்குள் நின்றிருந்த மரங்கள் என பாரபட்சமின்றி ஆயிரக்கணக்கான மரங்களை வர்தா வாரிச் சென்றிருந்தது.

வர்தாவில் இருந்து மீளத் தொடங்கியபோது அரசாங்கமும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு அமைப்புகளும் மரம் நட வலியுறுத்தின. புயலின் வேகத்திலேயே பலருக்கும் அந்த அறிவுறுத்தல் மறந்து போயிற்று.

ஆனால், பத்திரிகை ஒன்றின் வாயிலாக விடுக்கப்பட்ட 30 நாட்கள் சவாலை ஏற்று மரம் நட ஆரம்பித்த சென்னை, ஆதம்பாக்கத்தை சேர்ந்த இரு தோழிகள் இன்றுவரையில் தினமும் ஒரு மரம் நடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.

நீ காண வேண்டிய மாற்றத்தை உன்னிடம் இருந்தே தொடங்கு என்ற மகாத்மா காந்தியின் கொள்கையின்படி இயற்கையைப் பேண அவர்கள் செய்துவரும் சேவை பாராட்டத்தக்கது.

மரம் நடும் சேவை குறித்து தோழிகளில் ஒருவரான மீனா "கடந்த டிசம்பர் மாதம் வர்தா புயல் தமிழகத்தை தாக்கிய வேளையில் ஒரு பத்திரிகையில் 30 நாள் சவால் அறிவித்திருந்தார்கள். நானும் என் தோழியும் கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டும் என்று தினமும் ஒரு மரம் நடலாம் என்று முடிவு செய்தோம். எங்கள் முடிவில் தீர்க்கமாக செயல்பட்டோம். எடுத்துக்கொண்ட சவாலில் ஜெயிக்கவும் செய்தோம். ஆனால், சவால் முடிந்த பின்னரும் எங்களுக்கு மரம் நடுவது அன்றாட பழக்கமாக  மாறிவிட்டது. அந்தப் பழக்கத்தை நிறுத்தி விடாமல் இன்றுவரை ஒவ்வொரு இடமாக தேடிச் சென்று மரம் நடுவதை பழக்கமாகக் கொண்டுள்ளோம்" என்றார்.

மரம் நடச் சென்ற இடங்களில் ஏற்பட்ட அனுபவங்களைப் பற்றி கூறிய அவர், "நானும் என் தோழியும் சைக்கிளில் மரக்கன்றுகளையும் மரம் நட தேவையான உபகரணங்களையும் எடுத்துக் கொண்டு கிளம்பிவிடுவோம். நாங்கள் வசிக்கும் ஆதம்பாக்கம் பகுதியில் எந்த இடத்தில் மரம் முறிந்து விழுந்ததோ அந்த இடங்களைத் தேடிக் கண்டுபிடிப்போம். அங்கே புதிதாக மரக்கன்றை நடுவோம். சிலர் எங்களுக்கு உதவி செய்வார்கள். ஆனால், எங்கள் வீட்டு வாசலில் மரம் வைக்க நீங்கள் யார் என்று கேட்டு துரத்தியவர்களும் இருக்கிறார்கள். எங்களைப் பார்த்து நிறைய பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகளும் மரம் நடும் சேவையை கையில் எடுத்தபோது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது" என்றார்.

மரங்களை நட்டுவைப்பதுடன் தங்கள் வேலை முடிந்தது என்று விட்டு விடாமல் இரண்டு நாட்கள் அல்லது மூன்று நாட்களுக்கு ஒருமுறை சென்று அந்த மரங்களின் பராமரிப்பை கண்காணித்துக்கொண்டே இருக்கிறார்கள்.

புவி வெப்பமயமாதல் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் இவ்வேளையில் இவர்களைப் போன்றோர் மேற்கொள்ளும் சிறு முயற்சியும்கூட பெரும் பாராட்டுக்குரியது.

"இன்னும் நிறைய மரக் கன்றுகளை நட வேண்டும் என்பதே எங்களது ஆசை. எங்களைப் பார்த்து இப்போது இன்னும் 10 பேர் இதை கடைபிடிக்கிறார்கள் என்பது மிகுந்த மகிழ்ச்சியைத் தருகிறது" என புன்னைகை பூக்கின்றனர் இந்த பூவைகள்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in