Last Updated : 07 May, 2025 05:45 PM

 

Published : 07 May 2025 05:45 PM
Last Updated : 07 May 2025 05:45 PM

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ மே 8 - 14

மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சூரியன், புதன் - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சந்திரன் - லாப ஸ்தானத்தில் சனி, ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 11- 05 - 2025 அன்று குரு பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் மனக்கவலை குறையும். பணவரவு இருக்கும். பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். வீண்பழி நீங்கும். சில்லறைச் சண்டைகள் சரியாகும். குடும்பத்தில் அமைதி குறையலாம். நிதானமாக பேசி பழகுவது நல்லது. பொருட்களை பாதுகாப்பாக வைப்பது அவசியம்.

தொழில் வியாபாரத்தில் திடீர் தடைகள் ஏற்பட்டு நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. மேலதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். கவனம் தேவை. மாணவர்களுக்கு கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிக்க வேண்டி இருக்கும். பெற்றோர் சொல்படி கேட்டு நடப்பீர்கள்.

அஸ்வினி: இந்த வாரம் தந்தைக்கு உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வரவேண்டிய பண பாக்கிகள் வந்து சேரும். நீண்ட நாட்களாக இருந்த கடமைகளை நிறைவேற்றிக்கொள்ள சந்தர்ப்பங்களை உருவாக்கிக் கொள்வீர்கள். சுபகாரிய விஷயமாக வெளியூர் செல்ல நேரிடலாம்.

பரணி: இந்த வாரம் உங்களது மேலான யோசனைகளை சொல்ல தயாராகுங்கள். சொன்ன வாக்கை காப்பாற்ற முடியாமல் தவித்த நிலை மாறப் போகிறது. இனியாவது வாக்கு கொடுப்பதற்கு முன் யோசித்து கொடுக்கவும். தைரியம் பிரகாசிக்கும் நேரமிது.

கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் பணி செய்யும் இடத்தினில் எச்சரிக்கை தேவை. சிலருக்கு பணியின் காரணமாக வெளிநாடு அயலூர் செல்ல வேண்டி வரலாம். லாபகரமான முதலீடுகள் செய்ய தயங்க வேண்டாம். எந்த முதலீடுகளையுமே குறுகிய காலம் செய்யாமல் நீண்ட காலமாக செய்யுங்கள். தாய் தந்தையரை வணங்கி எந்த காரியத்தையும் ஆரம்பித்தால் வெற்றியே.

பரிகாரம்: குலதெய்வத்தை பூஜித்து வணங்க குடும்ப பிரச்சினை தீரும். கடன்கட்டுக்குள் இருக்கும்.

ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன் என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 11-05-2025 அன்று குரு பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் நன்மை கிடைக்கும். காரிய அனுகூலம் உண்டாகும். மற்றவர்களுக்கு உதவ முன்வருவீர்கள். மனதில் இருந்த சஞ்சலம் நீங்கி மகிழ்ச்சியும், நிம்மதியும் கிடைக்க பெறுவீர்கள். உங்கள் மீது குற்றம் சொல்ல நினைப்பவர்கள் அதனை விட்டு விடுவார்கள். குடும்பத்தில் சந்தோஷமான சூழ்நிலை காணப்படும். உறவு பலப்படும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றமான நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையான பேச்சால் வெற்றி பெறுவார்கள். வாகன யோகம் உண்டாகும். எந்த ஒரு காரியத்திலும் சரியான முடிவுக்கு வர முடியாமல் தடுமாற்றம் உண்டாகும். பெண்களுக்கு புத்திசாதூரியம் அதிகரிக்கும் பிரச்சினைகள் குறையும்.

கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மேல்மட்டத்தில் உள்ளவர்களுடன் வாக்குவாதங்கள் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். ஆர்வமுடன் பாடங்களை படிப்பீர்கள்.

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை அதிகரிக்கும். நிலம், வீடு, வாகனங்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளிலிருந்து உங்களை விடுவிப்பதற்கு வழிகள் வந்து சேரும். ஓரிரு அதிர்ஷ்ட வாய்ப்புகளும் வந்து சேரும். மாணவர்களுக்கு பொன்னான காலகட்டமிது.

ரோகிணி: இந்த வாரம் பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள். பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு சாதகமான முன்னேற்றம் ஏற்படப்போவது உறுதி.

மிருக சீரிஷம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் சேமிப்பு உயரும். பால் வியாபாரத்தாலும், கால்நடைகளாலும் நன்மை உண்டாகும். நிலம் சம்பந்தப்பட்ட வழக்குகள், உங்களுக்குச் சாதகமாக முடியும். அரசியல்வாதிகள், கட்சியின் மேலிடத்தில், கணிசமான ஆதரவைப் பெறுவீர்கள். அதேசமயம் தொண்டர்கள் உங்களிடம் சற்று பாராமுகமாகவே நடந்து கொள்வார்கள்.

பரிகாரம்: மகாலட்சுமியை பூஜிக்க பணபிரச்சினை நீங்கும். மனநிம்மதி உண்டாகும்.

மிதுனம்: (மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 11-05-2025 அன்று குரு பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் விருப்பங்கள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை சொல்லும் போது கவனம் தேவை. எதிர்பாலினரால் லாபம் கிடைக்கும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரிடலாம். குடும்பத்தில் கலகலப்பு குறையும். எதிலும் வெறுப்பும் திடீர் கோபமும் வரலாம். பேச்சின் இனிமை சாதுர்யம் இவற்றால் எடுத்த காரியங்கள் சாதகமாக முடிய உதவும்.

தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் போட்டியை சந்திக்க வேண்டி இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக பணிகளை மேற்கொள்வது நல்லது. எதிர்ப்புகள் நீங்கும். நீண்ட நாட்களாக இருந்த பிரச்சினை குறையும். பெண்களுக்கு எந்த முயற்சியிலும் சாதகமான பலன் கிடைப்பதில் தாமதமாகும்.

கலைத்துறையினருக்கு வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகள் வீண் பேச்சை குறைப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியை பற்றிய கவலை உண்டாகும். தடையை தாண்டி முன்னேற முயற்சிப்பீர்கள்.

மிருக சீரிஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே அன்பு நீடிக்கும். சுப நிகழ்ச்சிகள் உடனடியாக நிறைவேறாமல் போகலாம். தெய்வ நம்பிக்கையில் அனைத்தும் சுபமாக நிகழும். உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடர்ந்து சற்று சிரத்தை எடுத்து உழைக்க வேண்டியதிருக்கும். உங்கள் உழைப்புக்கு தகுந்த செல்வாக்கும் பணவரவும் கிடைக்கும். மேலதிகாரிகளிடம் அனுசரனையுடன் நடந்து கொள்ளவும்.

திருவாதிரை: இந்த வாரம் பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். அவர்களை கடிந்து கொள்ள வேண்டாம். எடுத்து சொல்லுங்கள். அவர்களை அவசரப்படுத்த வேண்டாம். சிறிய நோய் என்றாலும் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. மருத்துவம் சார்ந்த செலவுகள் காத்திருக்கின்றன, கவனம் தேவை.

புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம். முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது.

பரிகாரம்: பெருமாளை தரிசித்து அர்ச்சனை செய்து வழிபட குழப்பம் நீங்கி மனநிம்மதி கிடைக்கும். சொத்து பிரச்சினை தீரும்.

கடகம்: (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய வீரிய ஸ்தானத்தில் சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 11-05-2025 அன்று குரு பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் செயல்திறன் மூலம் பாராட்டு கிடைக்கும். வாழ்க்கையில் திடீர் திருப்பங்கள் ஏற்படலாம். தெய்வ நம்பிக்கை அதிகரிக்கும். உடல்நல பாதிப்பு உண்டாகலாம். பணவரவு இருக்கும். குடும்பத்தில் காணாமல் போன சந்தோஷம் மீண்டும் வரும். நெருக்கம் அதிகரிக்கும். வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வராது என்று நினைத்த பொருள் வந்து சேரலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் சிறப்பான பலன் கிடைக்க பெறுவார்கள். புதிய பொறுப்புகள் சேரும். வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும். தேவையற்ற வீண் வாக்குவாதம் ஏற்படும். பெண்களுக்கு காரியங்களை செய்து முடிப்பதில் கடினமான நிலை காணப்படும்.

கலைத்துறையினருக்கு வாகனங்களை ஓட்டி செல்லும் போது கவனம் தேவை. அரசியல்வாதிகள் மேலிடத்தை அனுசரித்து செல்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற கடின முயற்சிகளை மேற்கொள்ள வேண்டி இருக்கும்.

புனர் பூசம் 4ம் பாதம்: இந்தவாரம் உங்களது பொருளாதார நிலைமை உயரும். வசதி வய்ப்புகள் அதிகரிக்கும். குழப்பங்கள் அகன்று குதூகலத்தை தரக்கூடிய அமைப்பாகும். நூதனப் பொருட்கள் சேர்க்கை அதிகரிக்கும்.

பூசம்: இந்த வாரம் நல்ல பலன்களையே கிடைக்கப் பெறுவீர்கள். பிள்ளைகளால் இருந்து வந்த தொந்தரவுகள் நீங்கி நல்லவைகள் நடக்க ஆரம்பிக்கும். இறையருளும் தெய்வ நம்பிக்கையும் கூடும். உங்கள் திறமையில் இருந்து வந்த பின்தங்கிய நிலை இனி மாறும்.

ஆயில்யம்: இந்த வாரம் எதிர்பார்த்த புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவை புரிவோருக்கு பண விஷயம் திருப்திகரமாக இருக்கும். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் வாக்குவாதம் ஏற்படலாம். ஆனால் பொருளாதாரம் மிகவும் சிறப்பாக இருக்கிறது.

பரிகாரம்: காமாட்சி அம்மனை வணங்கிவர எல்லா காரியங்களும் நன்மையாக நடக்கும். மனதிருப்தி கிடைக்கும்.

சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் கேது - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் சனி, ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 11-05-2025 அன்று குரு பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் தடை தாமதம் நீங்கும். பயணங்கள் ஏற்படலாம். குருவின் சஞ்சாரத்தின் மூலம் மனக்குழப்பம் நீங்கி தெளிவான முடிவுகள் எடுப்பீர்கள். மற்றவர்களிடம் கெட்ட பெயர் வாங்க நேரலாம். உணவு கட்டுப்பாடு அவசியம். குடும்ப நிம்மதி குறையக்கூடும். வீடு வாகனங்களுக்கான செலவு கூடும்.

தொழில் வியாபாரம் தொடர்பான முக்கிய முடிவுகள் எடுப்பதில் தடுமாற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் நீண்ட நேரம் பணியாற்ற வேண்டி இருக்கும். பொறுப்புடன் செயலாற்றுவது நல்லது. புதிய பொறுப்புகள் சுமையாக வரும். பெண்களுக்கு எதிர்பார்த்த காரியங்கள் நடந்து முடியும்.

கலைத்துறையினருக்கு எதிர்பாராத செலவுகள் உண்டாகும். வீண் கவலை இருக்கும். அரசியல்வாதிகளுக்கு மற்றவர்களால் மனகஷ்டம் ஏற்படும். மாணவர்களுக்கு கவனத் தடுமாற்றம் ஏற்படாமல் பாடங்களை படிப்பது நல்லது. பொறுப்புகள் கூடும். எதிர்பார்த்த மதிப்பெண்கள் கிடைக்கும்.

மகம்: இந்த வாரம் கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் முடிவுக்கு வரும். வீடு மாற்றிக் கொள்ள விரும்புபவர்கள் மாற்றிக் கொள்ளத்தக்க தருணம் வந்து சேரும். புதிய வாகனம் யோகம் வந்துசேரும். உங்களுக்கு சம்பந்தமில்லாத பிரச்சினைகளில் தலையிடுவதும் கருத்து சொல்வதையும் தவிர்த்தல் நலம்.

பூரம்: இந்த வாரம் எந்த விஷயத்திலும் சட்டென்று முடிவெடுங்கள். நல்ல விஷயங்களை தள்ளிப்போட வேண்டாம். வீடு, மனை, ஆடை, ஆபரணங்கள் போன்ற விஷயங்களில் அவசரம் வேண்டாம். எதையும் ஒரு முறைக்கு இருமுறை யோசித்து முடிவெடுக்கவும்.

உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் சின்ன சின்ன குழப்பங்களனைத்தும் மறையும். உங்கள் குடும்பத்தில் நல்ல நல்ல விஷயங்கள், விஷேசங்கள் நடக்கும். உங்கள் தைரியத்திற்கு இறைவனை வேண்டுங்கள். பாதியில் விட்ட படிப்பை தொடருவீர்கள்.

பரிகாரம்: சிவனுக்கு எலுமிச்சம் பழ அபிஷேகம் செய்து வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும். தொழில் போட்டிகள் குறையும்.

கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 11-05-2025 அன்று குரு பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் சாமர்த்தியமான பேச்சின் மூலம் எதையும் செய்து முடிப்பீர்கள். அதே வேளையில் அடுத்தவர் செயல்களுக்கு பொறுப்பேற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகும். குடும்பத்தில் ஏதாவது சிறு சிறு சண்டைகள் ஏற்படலாம். சகோதரர்கள், தகப்பனாரிடம் வீண் வாக்குவாதங்கள் ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் தேவையற்ற இடர்பாடுகள் நீங்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு உழைப்புக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். சக ஊழியர்களுடன் சாமர்த்தியமாக பழகி காரிய அனுகூலம் அடைவீர்கள். அலுவலக விவகாரங்களில் சாமர்த்தியமாக நடந்து கொண்டு எல்லாவற்றையும் சமாளிப்பீர்கள். பெண்களுக்கு சமையல் செய்யும்போது கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு வெளிநாடு வாய்ப்புகள் வந்து சேரும். அரசியல்வாதிகளுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். பயணங்கள் மூலம் காரிய அனுகூலம் உண்டாகும். மாணவர்களுக்கு பாடங்களை கவனமாக படிப்பது நல்லது.

உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் நடைபெற இருந்த நற்காரியங்கள் ஒவ்வொன்றாக நடைபெறும். நண்பர்கள் அனுகூலமாக இருப்பர்கள். கூடிய மட்டிலும் அடுத்தவர் விஷயங்களில் தலையிடுவதை தவிருங்கள். பெரியோர்களை ஆலோசனைகளைக் கேட்டே எதையும் செய்வது நல்லது. தம்பதிகளிடம் ஒத்த கருத்து ஏற்படும்.

அஸ்தம்: இந்த வாரம் பதற்றத்தை தவிர்த்து நிதானத்தை கடைபிடியுங்கள். சிற்சில விரையங்கள் ஏற்பட்டாலும் அவை யாவுமே சுபச்செலவுகள் தான் என்பதை உணருங்கள். எனினும் பணவரவு திருப்திகரமாக இருக்கும். உங்கள் தன்னம்பிக்கை, திறமை அதிகரிக்கும். நுண்கலை, கட்டிடக்கலை சார்ந்த தொழில் செய்பவர்களுக்கு நன்மை கிடைக்கும்.

சித்திரை 1, 2, பாதங்கள்: இந்த வாரம் கலைத்துறையினருக்கு அனைத்து வேலைகளும் சுமுகமாக முடியும். உங்களைத் தேடிப் புதிய வாய்ப்புகள் வரும். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் தாமாகவே அமையும். பொருளாதார வசதிகளில் முன்னேற்றம் ஏற்படும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டு வெற்றி காண்பீர்கள்.

பரிகாரம்: ஐயப்பனை தரிசித்து வணங்கி வர எதிர்பார்த்த காரிய நன்மைகள் உண்டாகும். செல்வம் சேரும்.

துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் சனி, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சந்திரன் என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 11-05-2025 அன்று குரு பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எதிர்ப்புகள் விலகும். பயணத்தின் மூலம் லாபம் உண்டாகும். நண்பர்களால் உதவிகள் கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். சொத்துக்களை வாங்க எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் கிடைக்கும். தொழில் வியாபாரம் வளர்ச்சி பெறும். இது வரை இருந்த தொய்வு நீங்கும். லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி தேடிவரும். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் தீரும். பகைவர்களால் ஏற்பட்ட தொல்லை நீங்கும். பெண்களுக்கு திட்டமிட்டப்படி எதையும் செய்து முடிப்பீர்கள். கலைத்துறையினருக்கு வீண்பழி உண்டாகலாம். வேலைகளில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம்.

அரசியல்வாதிகளுக்கு கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். புதிய பதவிகள் வரும். மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். சக மாணவர்களுடன் நல்லுறவு காணப்படும்.

சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் உங்கள் பொறுப்புகளை பிறரிடம் ஒப்படைத்து விடவேண்டாம். வியாபாரிகள் பிந்தங்கிய நிலையில் இருந்து மீண்டு முன்னேற்றப் பாதையில் அடியெடுத்து வைப்பர். பணவரவு அதிகரிக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான ஆர்வம் பிறக்கும். குறைந்த முதலீட்டில் தொழில் தொடங்கலாம்.

சுவாதி: இந்த வாரம் கணவன் மனைவி உறவு நன்றாக இருக்கும். இருந்தாலும் விட்டு கொடுத்து போவது நல்லது. திருமணத்தடை நீங்கி இனிதே திருமணம் நடைபெறும். நண்பர்கள் உதவிகள் செய்வர். தந்தையார் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வேலைசார்ந்த விஷயங்களில் முன்னேற்றம் ஏற்படும்.

விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும். வெளிநாட்டு வேலை எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும். வியாபாரிகளுக்கு நெடுநாட்களாக இருந்து வந்த கடன்கள் தீரும். கூட்டு வியாபாரத்தில் கணிசமான லாபம் கிடைக்கும்.

பரிகாரம்: ஸ்ரீமஹாலக்ஷ்மிக்கு மஞ்சள் வஸ்திரம் அர்ப்பணித்து வணங்கி வர எல்லா நன்மைகளும் வந்து சேரும்.

விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி, ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சந்திரன் என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 11-05-2025 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் காரிய அனுகூலம் உண்டாகும். புதிய நபர்களின் நட்பு ஏற்படும். உடல் சோர்வு ஏற்பட்டு நீங்கும். சில்லறை பிரச்சினையை சமாளிக்க வேண்டி இருக்கும். பணம் இருந்தும் உரிய நேரத்தில் கைக்கு கிடைக்காமல் தாமதமாக வரும். தொழில் வியாபாரம் தொடர்பான அலைச்சல் அதிகரிக்கும். மனதில் வியாபாரம் பற்றிய கவலை ஏற்படும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை பளு அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி குறையும்படியான ஏதாவது சம்பவங்கள் நடக்கலாம். நண்பர்கள் உறவினர்களிடம் கவனமாக பேசி பழகுவது நல்லது. பெண்களுக்கு எந்த ஒரு காரியத்தையும் செய்யும் முன் தீர ஆலோசனை செய்வது நல்லது.

கலைத்துறையினருக்கு வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். அரசியல்வாதிகளுக்கு மந்த நிலை மாறி வேகம் பிடிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய கடின உழைப்பு தேவை. எல்லோரிடமும் அனுசரித்து செல்வது நல்லது.

விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் தாய் வழியில் இருந்த பிரச்சினைகள் அகன்று சந்தோஷம் பிறக்கும். சொத்து சம்பந்தமான வழக்குகளில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். பிள்ளைகள் உங்களுக்கு சந்தோஷத்தை கொடுப்பர். குழந்தைகளின் கல்யாண தேவைகளை பூர்த்தி செய்வீர்கள்.

அனுஷம்: இந்த வாரம் தைரியமாக பீடு நடை போட்டு உங்கள் வேலைகளை செய்வீர்கள். வெப்பம் சம்பந்தபட்ட உடல் உபாதைகள் ஏற்படலாம். கவனம் தேவை. தம்பதிகளிடையே ஒற்றுமை மேலோங்கும். மனைவி வழியில் உள்ள உறவினர்களுடன் கருத்து பரிமாற்றங்கள் செய்யும் போது மிகுந்த எச்சரிக்கை தேவை.

கேட்டை: இந்த வாரம் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும் தேவைகள் பூர்த்தியாகும். கணவன் மனைவி இடையே அன்னியோன்னியம் பெருகும். உறவினர்கள் வகையில் நிலவி வந்த பிரச்சினைகள் அனைத்தும் அடியோடு மறையும். சுபநிகழ்ச்சிகள் நடக்கும். பெண்களால் அனுகூலம் கிடைக்கும்.

பரிகாரம்: அம்மனுக்கு வேப்பிலையை சாற்றி வழிபட்டு வர குழப்பங்கள் நீங்கும். எதிர்ப்புகள் அகலும்.

தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராகு - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சந்திரன் என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 11-05-2025 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் நீண்ட காலமாக இருந்து வந்த கவலைகள் அகலும். ஆனாலும் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாகனங்களில் செல்லும் போது கவனம் தேவை. மற்றவர்கள் விவகாரங்களில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது. பணவரத்து நன்றாக இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள். தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் போட்டிகளை சந்திக்க வேண்டி இருக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் கடினமான பணிகளை செய்ய வேண்டி இருக்கும். குடும்பத்தில் அமைதி குறையலாம். குடும்பத்தில் இருப்பவர்கள் எதையும் வெளிக்காட்டாமல் உங்களுடன் இன்முகம் கொடுத்து பேசுவார்கள். பெண்களுக்கு அடுத்தவர்கள் பொறுப்புகளை ஏற்காமல் தவிர்ப்பது நல்லது.

கலைத்துறையினருக்கு வெளிநாட்டு வாய்ப்புகள் கைகூடி வரும். அரசியல்வாதிகள் எதிர்பார்த்த பதவிகளை அடைவீர்கள். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது அவசியம்.

மூலம்: இந்த வாரம் முன்னெச்சரிக்கையுடன் நடந்து கொள்ள வேண்டும். செலவுகளை திட்டமிட்டு செய்வது நல்லது. புதிய காரியங்களை செய்ய துவங்குவதற்கு முன் நல்ல நேரம் காலம் பார்த்து செய்வது நல்லது. வேலையில் இருந்த பளு கொஞ்ச கொஞ்சமாகக் குறையும். அதில் இருந்து வந்த சுணக்க நிலையும் மாறும்.

பூராடம்: இந்த வாரம் தாயார் மற்றும் தாய்வழி உறவினர்களுடன் மனக்கசப்பு ஏற்பட வாய்ப்புண்டு, கவனம். பிள்ளைகள் படிப்பில் மிகுந்த கவனம் தேவை. குழந்தைகள் இல்லாதவர்களுக்கு சந்தாண பாக்கியம் கிட்டும். குழந்தைகளைக் கடிந்து கொள்ள வேண்டாம். எடுத்து சொல்லுங்கள்.

உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் தாயார் தாய்வழி உறவினர்களுடன் இருந்த மனக்கசப்புகள் குறையும். வீடு, மனை, வாகனம் யோகம் அமையும். நெடுநாளாக இந்த விஷயத்தில் இருந்த வந்த சுணக்க நிலை மாறும். பிள்ளைகளின் மேல் கவனம் வைக்க வேண்டிய நேரம் இது.

பரிகாரம்: சிவன் கோவிலை தரிசனம் செய்வது மனஅமைதியை தரும். எதிலும் முன்னேற்றம் உண்டாகும்.

மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சந்திரன் என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 11-05-2025 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் நீங்கள் எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். உங்களது பேச்சை மற்றவர்கள் சரியாக புரிந்து கொள்வார்கள். எந்த ஒரு காரியமும் இழுபறியாக இருந்து முடிவில் சாதகமான பலன்தரும். வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம்.

தொழில் வியாபாரத்தில் இருந்த சிக்கல்கள் நீங்கி முன்னேற்றம் உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு சம்பள உயர்வு உண்டாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழ்நிலை காணப்படும். பெண்களுக்கு மனதில் துணிச்சல் அதிகரிக்கும். திட்டமிட்டபடி செயலாற்றி காரிய அனுகூலம் பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பான நெருக்கடிகளை சந்திக்க வேண்டி வரும். அரசியல்வாதிகள் அடுத்தவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நன்மை தரும். நீண்ட தூர தகவல்கள் நல்லவையாக இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பது வேகம் பெறும். கல்வியில் வெற்றி பெறுவீர்கள்.

உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் குடும்பத்தில் மிகவும் நல்ல நிகழ்ச்சிகள் நடைபெற்று சந்தோஷ தருணங்கள் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி தனவரவுகள் வந்து கொண்டிருக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பங்கள் அகன்று நிம்மதி பிறக்கும். தாய் மற்றும் தாய் வழி உறவினர்களால் மூலம் பாசம் அன்பு பெறுவீர்கள்.

திருவோணம்: இந்த வாரம் உடலைப் பற்றி தவறான எண்ணங்கள் தோன்றி மறையும். சுபகாரியங்கள் வெகு சுலபமாக கூடி வரும். விலகி நின்ற உறவுகளும் உரிய நேரத்தில் கை கொடுப்பார்கள். புதிய வீட்டிற்கு செல்வது சிறிது தள்ளிப் போகலாம். பிள்ளைகள் உயர் கல்வி செல்வதற்குண்டான வேலைகளை ஆரம்பிப்பது நல்லது.

அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் சகோதர, சகோதரிகளிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மறைந்து ஒற்றுமை வளரும். அவர்களுடன் சேர்ந்து இனிய பயணங்களைச் செய்வீர்கள். உங்களின் ஆற்றல் அதிகரிக்கும். பகைவர்களை வெற்றி கொள்வீர்கள். உடல் நலம் சீராகும். வருமானம் சிறப்பாக இருக்கும். உங்களின் பெருந்தன்மையை அனைவரும் பாராட்டுவார்கள்.

பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வர காரிய தடை நீங்கும். குடும்ப பிரச்சினை தீரும்.

கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி, ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன் - சுக ஸ்தானத்தில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சந்திரன் என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 11-05-2025 அன்று குரு பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் காரிய தாமதம் நீங்கும். அடுத்தவரை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காமல் இருப்பது நன்மை தரும். பாதியில் நின்ற பணிகள் மீண்டும் தொடங்குவதற்கு முயற்சிகளை மேற்கொள்வீர்கள். எதையும் திட்டமிட்டு செய்வது நல்லது. குடும்பத்தில் இருப்பவர்களால் சந்தோஷமான மனநிலை உருவாகலாம். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் மனம் விட்டு பேசி எடுக்கும் முடிவுகள் நன்மை தரும்.

தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத சிக்கலை சந்திக்க வேண்டி இருக்கலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதல் பணி சுமையை ஏற்க வேண்டி இருக்கும். முக்கிய பொறுப்பு கிடைக்கலாம். பெண்களுக்கு தன்னம்பிக்கை அதிகரிக்கும். கலைத்துறையினருக்கு மனத்துணிவு அதிகரிக்கும்.

அரசியல்வாதிகளுக்கு இடமாற்றம், பதவி இறக்கம் ஆகியவற்றை சந்திக்க வேண்டி இருக்கும். மாணவர்களுக்கு கல்விக்காக செலவு உண்டாகும். கல்வியில் வெற்றி பெறு வோம் என்ற நம்பிக்கை அதிகரிக்கும்.

அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சிலர் தொழில் நிமித்தமாக வெளியூர் அல்லது நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்படலாம். கலைஞர்கள் சீரான நிலையில் இருப்பார். அதிக சிரத்தை எடுத்தால்தான் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். ஆனால் பணப்புழக்கம் கடந்த காலங்களை விட அதிகம் இருக்கும்.

சதயம்: இந்த வாரம் பணப்புழக்கம் கடந்த காலங்களை விட அதிகம் இருக்கும். வெளிநாட்டு பயணங்கள் கிடைக்க கூடும். வேலை இடமாற்றம், பதவி உயர்வு ஏற்படும். சம்பள உயர்வும் கிடைக்கும். லாபகரமான முதலீடுகள் செய்வீர்கள்.

பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் வெளிநாடுக்கு ஏற்றுமதி செய்வோருக்கு புதிய ஆர்டர்கள் வந்து சேரும். புதிய இட ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். தொழிற்சாலைகள் வைத்திருப்போருக்கு நல்ல லாபம் கிடைக்கும். பொதுவான விஷயங்களில் தலையிடுவோருக்கு உங்கள் கருத்துக்களை மற்றவர்கள் ஆமோதிப்பார்கள்.

பரிகாரம்: சனிக்கிழமை அன்று விநாயகருக்கு அருகம்புல் சாற்றி வழிபட்டு வர கடினமான பணிகளும் எளிதாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு என வலம் வருகிறார்கள் | கிரகமாற்றம்: 11-05-2025 அன்று குரு பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பல யோகங்கள் உண்டாகும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். புத்திசாதுரியத்தால் எந்த தடைகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எந்த ஒரு பிரச்சினையும் துணிச்சலுடன் எதிர்கொள்வீர்கள். குடும்பத்தில் மகிழ்ச்சி காணப்படும். உறவினர், நண்பர்கள் மத்தியில் மதிப்பு உயரும்.

தொழில் வியாபார சிக்கல்கள் நீங்கி நன்கு நடைபெறும். கூடுதல் லாபம் கிடைக்க பெறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். சிலருக்கு புதிய பதவி கூடுதல் பொறுப்புகள் கிடைக்கலாம். கடுமையாக உழைக்க வேண்டி இருக்கும். அலுவலகத்தில் அடுத்தவர்களால் திடீர் பிரச்சினை தலை தூக்கலாம்.

பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் சாதகமான பலன் கிடைக்கும். கலைத்துறையினருக்கு கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். அரசியல்வாதிகள் கோபமாக பேசுவதை தவிர்ப்பது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமடைய முழு முயற்சியுடன் படிப்பீர்கள்.

பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் பெண்களால் இருந்த தொல்லைகள் மறைந்து நிம்மதி பிறக்கும். பணத்தேவைகள் பூர்த்தியாகும். அண்டை அயலாரின் ஆதரவு கிடைக்கும். குறுகிய பயணங்கள் அதிகரிக்கும். நிலம், மனை சம்பந்தமான தொந்தரவுகள் நீங்கும்.

உத்திரட்டாதி: இந்த வாரம் முயற்சிகளில் தடைகள் வந்தாலும் குரு பகவானின் வல்லமையால் அதையெல்லாம் முறியடித்து வெற்றிப் பாதையில் பயணிப்பீர்கள். தாய் வழி உறவினர்களுடன் சின்ன கருத்து மோதல்கள் வரலாம். நீங்கள் சொன்ன வாக்கைக் காப்பாற்ற சிறிது போராட வேண்டி வரலாம்.

ரேவதி: இந்த வாரம் வீடு மனை வாங்கும் யோகம் சிலருக்கு கூடி வரும். புதிய சொத்துக்கள் வாங்க நேரம் கைகூடி வரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். ஆனால் அதற்காக சிலர் கடன் வாங்க வேண்டி வரலாம். உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு முன்னேற்றம் காண்பர்.

பரிகாரம்: வியாழக்கிழமையில் குரு பகவானுக்கு கொண்டைக்கடலை மாலை சாற்றி அர்ச்சனை செய்ய எதிர்பார்த்த பணவரத்து இருக்கும். மனமகிழ்ச்சி ஏற்படும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x