Published : 01 May 2025 04:20 PM
Last Updated : 01 May 2025 04:20 PM
மேஷம்: (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சூரியன், புதன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, சந்திரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி, ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் சுக்கிரன் என வலம் வருகிறார்கள்.
பலன்கள்: இந்த வாரம் வேகத்தாலும் விவேகத்தாலும் அனைவரையும் வசீகரிப்பீர்கள். வாக்கு வன்மையால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். எதிர்ப்புகள் விலகும். உங்களது செயல்களுக்கு முட்டுக்கட்டை போட்டவர்கள் விலகி விடுவார்கள். முயற்சிகள் சாதகமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இருந்து வந்த பிரச்சினைகள் சாதகமாக நடந்து முடியும்.
தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டிகள் அகலும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு இருந்த மறைமுக எதிர்ப்புகள் நீங்கி செயல்களில் வேகம் காண்பிப்பீர்கள். குடும்பத்தில் இருந்த வீண் பிரச்சினைகள் நீங்கி அமைதி ஏற்படும். மனக்கசப்பு மாறும். விருந்தினர்கள் வருகை இருக்கும்.
குடும்பச் செலவுகள் குறையும். பெண்களுக்கு நீங்கள் செய்யும் காரியங்களுக்கு இருந்த தடை நீங்கும். எதிர்ப்புகள் விலகும். பணவரத்து கூடும். மாணவர்களுக்கு கல்வி தொடர்பான கவலைகள் நீங்கும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேற்றுமை குறையும்.
அஸ்வினி: இந்த வாரம் திட்டமிட்டபடி எல்லாம் நடக்கும். கடன் தொல்லை குறையும். வழக்குகளில் சாதகமான போக்கு காணப்படும். சொத்து சம்பந்தமான விஷயங்கள் இருந்து வந்த தடைகள் அகலும்.
பரணி: இந்த வாரம் உறவினர்கள் நண்பர்கள் மூலம் தேவையான உதவிகள் கிடைக்கும். தொழில் வியாபாரம் எந்த ஒரு பிரச்சினையும் இன்றி நல்லபடியாக நடைபெறும். எந்த விவகாரத்தில் சிக்கினாலும் சாமர்த்தியமாக மற்றவரை முன் நிறுத்திதான் தப்பித்துக் கொள்ள வேண்டி வரும்.
கார்த்திகை 1ம் பாதம்: இந்த வாரம் எதிர்பார்த்த பணம் வந்து சேரும். விருந்து கேளிக்கை நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேரிடும். சாதூர்யமான பேச்சின் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு உங்கள் வளர்ச்சியில் இருந்த முட்டு கட்டைகள் நீங்கும்.
பரிகாரம்: ஸ்ரீமகா கணபதியை பூஜித்து வழிபட்டு வர எல்லாவற்றிலும் நன்மை உண்டாகும். காரிய தடைகள் நீங்கும்.
ரிஷபம்: (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சீரிஷம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் குரு, சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய் - சுக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி, ராகு - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - அயன சயன போக ஸ்தானத்தில் சூரியன், புதன் என வலம் வருகிறார்கள்.
பலன்கள்: இந்த வாரம் பக்குவமான அணுகுமுறையினால் எந்த காரியத்தையும் சாதிப்பீர்கள். பணவரத்து கூடும். செயல்திறமை அதிகரிக்கும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த ஒரு வேலையை செய்து முடிப்பீர்கள். அரசு தொடர்பான பணிகளில் சாதகமான பலன் கிடைக்கும். எண்ணிய காரியங்கள் கைகூடும் சூழ்நிலை உருவாகும்.
தொழில் வியாபாரம் விரிவாக்கம் செய்வது பற்றிய ஆலோசனையில் ஈடுபடுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பணிசுமை குறைந்து காணப்படும். நிலுவையில் இருந்த பணம் கிடைக்கும். குடும்பத்தில் இருப்பவர்களுக்கு தேவையானவற்றை செய்து கொடுத்து அவர்களது நன்மதிப்பை பெறுவீர்கள். ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும்.
வாழ்க்கை துணையின் ஆதரவுடன் எதிலும் ஈடுபட்டு வெற்றி பெறுவீர்கள். பெண்களுக்கு இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக முடியும். வரவேண்டிய பணம் வந்து சேரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். விளையாட்டுகளில் ஆர்வம் உண்டாகும். ஆசிரியர் ஆதரவு கிடைக்கும்.
கார்த்திகை 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சூழ்நிலை காரணமாக மனச்சங்கடம் ஏற்படும். மற்றவர்களுக்காக நீங்கள் பதில் சொல்ல வேண்டிய இடத்தில் இருப்பீர்கள். அதனால் மனஉளைச்சல் அதிகமாகும். வருமானத்திற்கு குறைவிருக்காது.
ரோகிணி: இந்த வாரம் வியாபாரிகளுக்கு விற்பனை அதிகரிக்கும். மேலிடத்தில் மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். வெளியூர் பயணம் ஒன்றை மேற்கொள்ள நேரலாம். தக்க சமயத்தில் ஒருவருக்கு உதவி புரிவீர்கள்.
மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள்: இந்த வாரம் சிலரிடம் கண்டிப்பாக நடந்து கொள்வீர்கள். உங்களுக்கு பிடித்தமான ஆலயத்திற்குச் சென்று வருவீர்கள். விலையுயர்ந்த பொருள் ஒன்றை பரிசாக பெறுவீர்கள். நண்பர்கள் ஒத்துழைப்பு நல்குவார்கள்.
பரிகாரம்: நந்தீஸ்வரரை வணங்குவதன் மூலம் எதிர்பார்த்த காரியம் நடந்து முடியும். எதிலும் சாதகமான நிலை காணப்படும்.
மிதுனம்: (மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி, ராகு - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் சூரியன், புதன் - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, சந்திரன் என வலம் வருகிறார்கள்.
பலன்கள்: இந்த வாரம் எந்த ஒரு காரியத்திலும் நிதான போக்கைக் கடைபிடித்து வெற்றி பெறுவீர்கள். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. சுலபமாக முடிந்துவிடும் என்று நினைக்கும் காரியம் கூட சற்று தாமதமாகலாம். அரசு மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் இருந்த இழுபறி அகலும்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் அலைச்சலுக்கு பின் நடந்து முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி ஏற்படும். வீடு, வாகனம் தொடர்பான செலவுகள் ஏற்படலாம். தீ, ஆயுதங்களை கையாளும் போது கவனம் தேவை.
உதவிகள் செய்யும்போது ஆலோசித்து செய்வது நல்லது. பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் கூடுதல் கவனம் தேவை. ஒரு முறைக்கு இருமுறை பாடங்களை படிப்பது நல்லது.
மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எடுத்த முயற்சிகள் அனைத்தும் வெற்றிகரமாக நடக்கும். கணவன், மனைவி ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுத்து போவது பிரச்சினைகளை தவிர்க்கும். தெய்வத்தை வழிபட நன்மைகள் நடக்கும்.
திருவாதிரை: இந்த வாரம் சிறு தடங்கல்கள் வரலாம். நன்மைகளை எதிர்பார்த்து காத்திருப்பீர்கள். வெளிநாடு செல்ல விரும்புவர்கள் சிறிது காலம் அதை ஒத்திப் போடுவது நல்லது. பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டிய கால கட்டம்.
புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் அலைச்சல் அதிகமாக இருக்கும். ஆனால் அதற்குத் தக்க வருமானமும், வெகுமதியும் கிடைக்கும். நல்லோர் சிலரை சந்திக்கக் கூடிய வாய்ப்பு கிடைக்கும். குழந்தைகள் மூலம் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
பரிகாரம்: ஸ்ரீஆஞ்சநேயரை வணங்க மனதில் தைரியம் உண்டாகும். எதையும் எதிர்கொள்ளும் துணிச்சல் ஏற்படும்.
கடகம்: (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் சூரியன், புதன் - லாப ஸ்தானத்தில் குரு, சந்திரன் என வலம் வருகிறார்கள்.
பலன்கள்: இந்த வாரம் ஸ்திரமான வளர்ச்சியை பெறுவீர்கள். எதிலும் முன்னேற்றம் காணப்படும். இஷ்டத்திற்கு விரோதமாக காரியங்கள் நடந்தாலும் முடிவு சாதகமாக இருக்கும். வீண் ஆசைகள் மனதில் தோன்றும். கட்டுப்பாட்டுடன் இருப்பது நல்லது. வீண் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பதும் நன்மை தரும்.
தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் திடீர் தடை ஏற்படலாம். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களை அனுசரித்து செல்வது நல்லது. குடும்பம் பற்றிய கவலைகள் ஏற்பட்டாலும் தீர்வு ஏற்படும். மனதில் பக்தி உண்டாகும். சகோதரர்கள் மற்றும் உறவினர்களிடம் பேசும்போதும் கவனம் தேவை.
பெண்களுக்கு எந்த ஒரு செயலையும் யோசித்து செய்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் வெற்றி பெற திட்டமிட்டு பாடங்களை படிப்பதும் தேவையற்ற பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பதும் நல்லது.
புனர்பூசம் 4ம் பாதம்: இந்த வாரம் கணவன் மனைவியிடையே சில ஊடல்கள் வரும். முக்கிய பொறுப்புகளை வகித்து வருபவர்களுக்கு வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டி வரும். வருமானம் திருப்திகரமாக இருக்கும்.
பூசம்: இந்த வாரம் பெண்கள் பொறுமையாக இருக்க வேண்டும். சக ஊழியர்களிடம் பகைமையை வளர்த்துக் கொள்ள நேரிடும். மனதில் இனம்புரியாத கவலை இருந்து கொண்டிருக்கும். தியானம் செய்ய நிம்மதி கிட்டும்.
ஆயில்யம்: இந்த வாரம் பிரச்சினைகளை எளிதில் சமாளிப்பீர்கள். திருமண வயதில் உள்ளவர்களுக்கு நல்ல வரன் அமையலாம். வீண் மருத்துவ செலவுகள் ஏற்படும். கடன் வாங்க முயற்சிக்க வேண்டாம்.
பரிகாரம்: அம்மனை வணங்கி வருவது எல்லா நன்மைகளையும் தரும். மனோதிடம் உண்டாகும்.
சிம்மம்: (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி, ராகு - அஷ்டம ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன், புதன் - தொழில் ஸ்தானத்தில் குரு, சந்திரன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய் என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் சோதனைகளையும், தடைகளையும் தகர்த்தெறிவீர்கள். எல்லா காரியங்களிலும் சாதகமான பலன் கிடைக்கும். எதிலும் லாபம் கிடைக்கும். கடன்கள், நோய்கள் தீரும். திருமணம் தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடந்து முடியும். நன்மை, தீமை பற்றிய கவலை இல்லாமல் தலை நிமிர்ந்து நடப்பீர்கள்.
தொழில், வியாபாரம் தொடர்பான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். கடன் பிரச்சினைகள் குறையும். உத்தியோகஸ்தர்கள் எடுத்த வேலையை கொடுத்த நேரத்தில் முடித்து பாராட்டு பெறுவீர்கள். குடும்பத்தில் இருந்து வந்த சுணக்க நிலை மாறும். குடும்ப உறவினர்களால் வீண் அலைச்சல் உண்டாகலாம்.
மன வலிமை அதிகரிக்கும். உறவினர்கள் மத்தியில் மதிப்பு கூடும். பெண்களுக்கு நன்மை தீமை பற்றிய கவலை இல்லாமல் எதையும் செய்ய முற்படுவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களில் இருந்த சந்தேகம் நீங்கும். உற்சாகமாக படிப்பீர்கள்.
மகம்: இந்த வாரம் சகவியாபாரிகளால் தொந்தரவு ஏற்படும். சேமிப்பிற்கு முயற்சி செய்யுங்கள். ஏனெனில் வருமானம் அதிகமாக வரும். எக்காரணத்தைக் கொண்டும் மற்றவர்களில் பேச்சுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்.
பூரம்: இந்த வாரம் தங்களுக்கு உள்ள வேலையை மட்டும் சரியாக செய்யுங்கள். மற்றவர்களின் பிரச்சினைகளில் தலையிட வேண்டாம். அது உங்களுக்கு பெரும் தலைவலியாக அமைந்து விடலாம். பண விஷயங்களில் எச்சரிக்கையுடன் நடந்து கொள்ளுங்கள்.
உத்திரம் 1ம் பாதம்: இந்த வாரம் புதிய வீடு, வாகனம் போன்றவைகளில் அதிக லாபத்தை காணலாம். ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களுக்கும் சரியான பேச்சுவார்த்தைகள் மூலம் லாபம் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். பெரியோர் ஆசி கிட்டும்.
பரிகாரம்: ஸ்ரீருத்திரமூர்த்தியை வணங்கி வர எதிலும் வெற்றி கிடைக்கும். செயல்களில் வேகம் உண்டாகும்.
கன்னி: (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி, ராகு - களத்திர ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் சூரியன், புதன் - பாக்கிய ஸ்தானத்தில் குரு, சந்திரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் சிக்கனமான நடவடிக்கையினால் முன்னேறுவீர்கள். புத்திசாதுரியமும் அறிவுத்திறனும் அதிகரிக்கும். எதைச் செய்வது எதை விடுவது என்ற மனத்தடுமாற்றம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்த பண வரவு தாமதப்படும். திடீர் சோர்வு உண்டாகும். அடுத்தவரிடம் உங்களது செயல்திட்டங்களை பற்றி கூறுவதை தவிர்ப்பது நல்லது.
தொழில் வியாபாரத்தில் இருப்பவர்கள் அவசரமான முடிவுகள் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. பேச்சாற்றல் மூலம் தொழில் லாபம் கூடும். உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகள் கூறுவதை கேட்டு தடுமாற்றம் அடையலாம். குடும்பத்தில் நடைபெறும் சில விஷயங்கள் உங்கள் கோபத்தை தூண்டலாம். வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.
உறவினர்கள் மத்தியில் இருந்த பழைய பகைகள் மாறும். பெண்களுக்கு அவசர முடிவுகளை தவிர்ப்பது நன்மை தரும். மாணவர்களுக்கு எதிர்கால கல்வி பற்றி முக்கிய முடிவுகளை எடுக்க நினைப்பீர்கள். அடுத்தவர் யோசனைகளை கேட்டு தடுமாற்றம் அடையாமல் இருப்பது நல்லது.
உத்திரம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் சுபநிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொள்வீர்கள். குடும்ப நிர்வாகத்தை கவனிக்கும் பெண்கள் பேச்சில் நிதானத்துடன் நடந்து கொள்ளுங்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணமிருப்பின் அதை தள்ளி வையுங்கள்.
அஸ்தம்: இந்த வாரம் அனைவரிடமும் விட்டுக் கொடுத்து போவது நல்லது. குழப்பத்தின் காரணமாக முடிவுகள் தவறாக அமைந்து விடலாம். ஆதலால் உங்களின் நம்பிக்கைக்கு பாத்திரமான ஒருவரை துணைக்கு வைத்துக் கொள்வது மிகவும் உத்தமம்.
சித்திரை 1, 2 பாதங்கள்: இந்த வாரம் சிலருக்கு உடல்நிலை குறைவு ஏற்பட வாய்ப்புண்டு. தக்க நேரத்தில் உணவு உண்ண முடியாமல் அதனால் வயிற்று உபாதைகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். வியாபாரிகளுக்கு மனக்குழப்பங்கள் ஏற்படக்கூடும்.
பரிகாரம்: ஸ்ரீதுர்க்கை அம்மனை வழிபடுவது எல்லா பிரச்சினைகளையும் தீர்க்கும். எதிர்ப்புகள் அகலும்.
துலாம்: (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் சனி, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - களத்திர ஸ்தானத்தில் சூரியன், புதன் - அஷ்டம ஸ்தானத்தில் குரு, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய் - லாப ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் அடுத்தவர் மதிப்பை பெறுவீர்கள். ஆக்கப்பூர்வமான யோசனைகளை செயல்படுத்தி எதிலும் வெற்றி காண்பீர்கள். தெளிவான மனநிலை இருக்கும். சாமர்த்தியமாக செயல்பட்டு சாதகமான பலன் பெறுவீர்கள். செயல்திறன் அதிகரிக்கும் நெருக்கடியான சமயத்தில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது தாமதப்படும்.
தொழில், வியாபாரம் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். சில நேரங்களில் முக்கிய முடிவு எடுப்பதில் தயக்கம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையுடன் செயல்பட்டு நிர்வாகத்தினரால் பாராட்டு கிடைக்க பெறுவார்கள். குடும்பத்தில் உறவினர்கள் வருகை இருக்கும். நிதானமாக பேசுவது நன்மை தரும்.
பிள்ளைகளிடம் கோபம் காட்டாமல் அன்பாக பேசுவது நல்லது. மகிழ்ச்சி உண்டாகும். பெண்களுக்கு எதிலும் சாமர்த்தியமாக செயல்பட்டு காரிய வெற்றி பெறுவீர்கள். மாணவர்களுக்கு செயல்திறமை அதிகரிக்கும். உயர் கல்வி கற்பவர்கள் கூடுதல் கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது.
சித்திரை 3, 4 பாதங்கள்: இந்த வாரம் செய்யும் காரியங்கள் அனைத்திலுமே திருப்தியும், வெற்றியும் காணப்படும். குடும்பத்தில் பிரச்சினைகள் இருந்தால் அனைவருடனும் அமர்ந்து பேசி நல்வழியில் தீர்வு எடுங்கள். அது உங்கள் எதிர்காலத்திற்கு உதவும்.
சுவாதி: இந்த வாரம் இனம்புரியாத கவலை மனதில் குடிகொண்டிருக்கும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான முயற்சிகளில் ஈடுபட வேண்டாம். தாங்கள் இப்போது உள்ள வேலையை மட்டும் கவனித்து வாருங்கள். எதிலும் நிதானத்துடன் முடிவு எடுங்கள்.
விசாகம் 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் பொருளாதார நிலை சுமாராக இருக்கும். சகோதர சகோதரிகள் யாரேனும் ஒருவர் உங்களுக்கு பிடித்தமான ஒன்றை பரிசாக அளிப்பார்கள். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது ஆரோக்கியத்திற்கு உறுதுணையாக அமையும்.
பரிகாரம்: ஸ்ரீசரஸ்வதி தேவதையை பூஜித்து வர அறிவு திறமை அதிகரிக்கும். கல்வியில் வெற்றி உண்டாகும்.
விருச்சிகம்: (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி, ராகு - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன், புதன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய் - தொழில் ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் சமயோசிதமாக செயல்படுவீர்கள். வாக்கு வன்மையால் ஆதாயம் உண்டாகும். தைரியம் அதிகரிக்கும். சகோதரர்களால் நன்மை உண்டாகும். காரிய வெற்றி ஏற்படும். பணவரத்து கூடும். எதிர்பாலினத்தாருடன் பழகும்போது கவனம் தேவை. எதிர்ப்புகள் குறையும். தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு அவர்களுக்கு கீழே உள்ளவர்களால் லாபம் கிடைக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதையும் செய்து முடிப்பதில் துணிச்சல் உண்டாகும். எதிர்பாரத இடமாற்றம் ஏற்படலாம். குடும்ப விஷயங்களில் சரியான முடிவுக்கு வர முடியாத தடுமாற்றம் ஏற்படலாம்.உறவினர்களுடன் பேசும்போது கவனமாக பேசுவது நல்லது. வாகனங்களில் செல்லும்போதும் பயணங்களின்போதும் கவனம் தேவை. அக்கம்பக்கத்தினரிடம் பழகும்போது கவனம் தேவை.
பெண்களுக்கு திறமையான பேச்சின் மூலம் எதையும் வெற்றிகரமாக செய்து முடித்து ஆதாயம் அடைவீர்கள். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் ஆர்வம் உண்டாகும். கல்வியில் தேர்ச்சி பெறவும் கூடுதல் மதிப்பெண் பெறவும் எதிர்பார்க்கும் உதவிகள் கிடைக்கும்.
விசாகம் 4ம் பாதம்: இந்த வாரம் உற்றார், உறவினர் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். மேலிடத்தில் நற்பெயர் கிடைக்கும். கால்நடைகள் அபிவிருத்தி அடையும். புதிய நிலம் வாங்குவதற்கான முயற்சிகளில் ஈடுபடுவீர்கள்.
அனுஷம்: இந்த வாரம் வியாபாரிகள் புது வாடிக்கையாளர்களை நம்பி கடன் கொடுக்க வேண்டாம். ஏனெனில் வசூலாவதில் சிக்கல்கள் ஏற்படக் கூடும். மற்றபடி பிரச்சினைகள் ஏதும் வராது. பெற்றோருக்கு பெருமை தேடித் தருவீர்கள்.
கேட்டை: இந்த வாரம் சுபவிரயங்கள் உண்டாகலாம். உங்களுக்கு சம்மந்தமான விஷயங்களைத் தவிர மற்ற விஷயங்களில் ஈடுபடுத்திக் கொள்ள வேண்டாம். எதிலும் சற்று நிதானத்துடன் நடந்து கொள்ள நன்மை நடக்கும்.
பரிகாரம்: ஸ்ரீபைரவரை வழிபட்டுவர எல்லா நன்மைகளும் உண்டாகும். தடை நீங்கி காரியங்கள் வெற்றிகரமாக நடந்து முடியும்.
தனுசு: (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி, ராகு - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூரியன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, சந்திரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் திட்டங்களை செயல்படுத்துவீர்கள். நீண்ட நாட்களாக இழுப்பறியாக இருந்த ஒரு காரியத்தில் சாதகமான பலன் கிடைக்கும். மற்றவர்களுக்காக வாதாடி வெற்றி பெறுவீர்கள். முன்கோபம் குறையும். பேச்சினால் ஏற்பட்ட மனஸ்தாபங்கள் நீங்கி பிரிந்தவர்கள் மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் புது தெம்பும் உற்சாகமும் தோன்றும்.
தொழில் வியாபாரம் தொடர்பாக இழுபறியாக இருந்த சில பிரச்சினைகள் நல்ல முடிவுக்கு வரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். பணவரத்து திருப்தியாக இருக்கும். குடும்பத்தில் அமைதி எற்படும். உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். குடும்பத்திற்கு தேவையான பொருட்கள் வாங்குவீர்கள்.
பிள்ளைகளிடம் அன்பு அதிகரிக்கும். பெண்களுக்கு கருத்து வேற்றுமையால் பிரிந்து சென்றவர்கள் கருத்து வேற்றுமை நீங்கி மீண்டும் நட்பு பாராட்டுவார்கள். மாணவர்களுக்கு பாதியில் நிறுத்திய கல்வி தொடர்பான விஷயங்களை மீண்டும் தொடர்வீர்கள்.
மூலம்: இந்த வாரம் பண வரவிற்கு குறைவிருக்காது. குடும்ப ரீதியாகவோ, தொழில் ரீதியாகவோ முக்கிய முடிவுகள் ஏதேனும் எடுக்க வேண்டி இருந்தால் அதை இப்போது எடுக்கலாம். திருமண பேச்சு வெற்றி பெறும்.
பூராடம்: இந்த வாரம் ஆரோக்கியத்தில் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். சிறு உபாதைகளாக இருந்தாலும் மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்து வருவது தான் சிறந்தது. எதிர்பாராத திருப்பம் வந்து மனதிற்கு தொல்லை ஏற்படுத்தக் கூடும்.
உத்திராடம் 1ம் பாதம்: இந்த வாரம் நிதி நிலைமை திருப்தி தரும். செலவுகள் அதிகமாக ஏற்பட்டாலும் அதை சுலபமாக சமாளித்து விட முடியும். கணவன் - மனைவியிடையே அன்யோன்யம் அதிகரிக்கும். சகோதரரால் பிரச்சினை ஏற்பட வாய்ப்புகள் அதிகம். கவனம் தேவை.
பரிகாரம்: சுந்தரகாண்டம் பாராயணம் செய்வது மனக்குழப்பத்தை போக்கும். காரிய வெற்றி உண்டாகும்.
மகரம்: (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி, ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் சூரியன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சந்திரன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய் - அஷ்டம ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் பொறுப்புகள் அதிகரிக்கும். எந்த ஒரு விஷயத்திலும் முடிவு எடுப்பது தாமதமாகும். அடுத்தவர் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பதும் நல்லது. பணவரத்து எதிர்பார்த்த நேரத்தை விட தாமதமாக வந்து சேரும். ஆனால் பூர்வீக சொத்துக்களில் இருந்து பிரச்சினைகள் தீரும்.
தொழில் வியாபாரத்தில் எதிர்பாராத குறுக்கீடுகள் ஏற்பட்டு பின்னர் விலகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மிகவும் கவனமாக தங்களது வேலைகளை செய்வது நல்லது. குடும்பத்தில் விருந்தினர்கள் வருகை இருக்கும். உறவினர்கள், நண்பர்களிடம் கோபத்தை காண்பிக்காமல் பேசுவது நல்லது.
எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதமாகலாம். பெண்களுக்கு வேலைகளை கவனமாக செய்வது நல்லது. பணவரத்து தாமதமாகலாம். மாணவர்களுக்கு கல்வியில் மட்டும் கவனம் செலுத்துவது வெற்றிக்கு உதவும். சகமாணவர், நண்பர்கள் பிரச்சினைகளில் தலையிடுவதை தவிர்ப்பது நல்லது.
உத்திராடம் 2, 3, 4 பாதங்கள்: இந்த வாரம் பிடித்தமான ஒருவரை சந்திக்க நேரலாம். அதனால் மனதிற்கு மகிழ்ச்சி உண்டாகும். சக பாகஸ்தர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்புள்ளது. கூடியவரை வீண் விவாதங்களில் ஈடுபடாமலிருப்பது நல்லது.
திருவோணம்: இந்த வாரம் சிக்கனமாக நடந்து கொள்வது அவசியமாகிறது. நெருங்கிய நண்பர்களுடன் சண்டை சச்சரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. பண உதவி எதையும் எதிர்பார்த்துக் கொண்டிருந்தால் கிடைப்பதற்கான சாத்தியக் கூறு அதிகம் உள்ளது.
அவிட்டம் 1, 2 பாதங்கள்: இந்த வாரம் பிள்ளைகள் விவகாரத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண வயதில் பிள்ளைகள் இருந்தால் அவர்கள் திருமணம் நிச்சயிக்கப்படலாம். விரக்தி மனப் பான்மையை விட்டொழியுங்கள்.
பரிகாரம்: ஸ்ரீகிருஷ்ணபகவானை வழிபட்டு வர எல்லா கஷ்டங்களும் நீங்கும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.
கும்பம்: (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி, ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூரியன், புதன் - சுக ஸ்தானத்தில் குரு, சந்திரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய் - களத்திர ஸ்தானத்தில் கேது என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் வாழ்க்கையில் முன்னேற்றமும் காண்பீர்கள். சுணக்க நிலையில் இருந்த் காரியங்கள் அனைத்தும் வேகம் பெறும். மனச்சஞ்சலம் நீங்கும். யாரையும் நேருக்கு நேர் எதிர்க்காமல் அனுசரித்து செல்வது நன்மைதரும். கெட்ட கனவுகள் தோன்றலாம். வயிறு தொடர்பான நோய்கள் ஏற்பட்டு நீங்கும்.
தொழில் வியாபாரம் மெத்தனமாக காணப்பட்டாலும் பணவரவு இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வீண் அலைச்சலும், டென்ஷனும் ஏற்பட்டு நீங்கும். வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே தேவையில்லாத ஒரு விஷயத்தால் கருத்து வேற்றுமை உண்டாகலாம். எனவே கவனமாக இருப்பது நல்லது.
பிள்ளைகளால் திடீர் செலவு உண்டாகலாம். பெண்களுக்கு யாரையும் எதிர்த்துக் கொள்ளாமல் அனுசரித்து செல்வது நன்மை தரும். மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் கவனமாக இருப்பது நல்லது. பாடங்களை படிப்பதில் கூடுதல் கவனமும், ஆசிரியர்களிடத்தில் பேசும்போது நிதானமும் தேவை.
அவிட்டம் 3, 4 பாதங்கள்: இந்த வாரம் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் உங்களுக்கு வெற்றியே கிடைக்கும். நீங்கள் எதிர்பார்த்து கொண்டிருந்த விஷயங்கள் நல்லபடியாக ஒவ்வொன்றாக நடந்தேறும் என்பதில் ஐயம் வேண்டாம்.
சதயம்: இந்த வாரம் அக்கம் பக்கத்தினரை அனுசரித்து செல்வது நல்லது. தூக்கமின்மை ஏற்படும் மனதில் தேவையில்லாத கற்பனைகளை வளர்த்து கொள்ள வேண்டாம். சுத்தமான உணவுகளை எடுத்துக் கொள்ளுங்கள்.
பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்: இந்த வாரம் நல்ல விசயங்கள் அனைத்தும் உங்களுக்கு வெற்றிகரமாக நடக்கும். சிலர் உங்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள். அவர்களின் திறமையை நீங்கள் பாராட்டி அவர்களுக்கு சன்மானமும் உங்கள் கையால் வழங்குவீர்கள்.
பரிகாரம்: ஸ்ரீசரபேஸ்வரரை வழிபட்டு வர எல்லா தடங்கல்களும் நீங்கும். காரிய வெற்றி ஏற்படும்.
மீனம்: (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசியில் சுக்கிரன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி, ராகு என வலம் வருகிறார்கள்
பலன்கள்: இந்த வாரம் திடமான நம்பிக்கையுடன் எதையும் செய்வீர்கள். எதிலும் சாதகமான நிலை காணப்படும். பணவரத்து அதிகரிக்கும். வாக்கு வன்மை ஏற்படும். உங்கள் பேச்சுக்கு மற்றவர்கள் செவிசாய்ப்பார்கள். புதிய நண்பர்கள் கிடைப்பார்கள். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும்.
தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். லாபம் கூடும். பணியாளர்கள் மூலம் நன்மை உண்டாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் திறமையாக எதையும் செய்து முடித்து பாராட்டு பெறுவார்கள். குடும்பத்தில் குதூகலம் உண்டாகும். வாகனம் வாங்கும் அல்லது புதுப்பிக்கும் பணியில் ஈடுபடுவீர்கள். பயணம் மூலம் சாதகமான பலன் கிடைக்கும்.
குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறும். பெண்களுக்கு உங்களது வார்த்தைகளுக்கு மதிப்பு கூடும். தொலைதூர தகவல்கள் நல்ல தகவல்களாக வரும். மாணவர்களுக்கு கல்வியில் திறமை அதிகரிக்கும். உங்களது செயல்களுக்கு பாராட்டு கிடைக்கும். மனதில் தைரியம் கூடும்.
பூரட்டாதி 4ம் பாதம்: இந்த வாரம் அலைச்சல் அதிகமாக இருப்பதுடன் உடல்சோர்வும் ஏற்படலாம். முக்கிய முடிவுகள் அனைத்தும் உங்களுக்கு சாதகமாகவே அமையும், கவலை வேண்டாம். மகன் அல்லது மகள் திருமணத்திற்கு ஏற்பாடு செய்வீர்கள்.
உத்திரட்டாதி: இந்த வாரம் அடிக்கடி உங்களை நீங்களே பெருமையாக பேசிக்கொள்வீர்கள். நீண்ட தூர பயணம் ஒன்று ஏற்படலாம், அது உங்களுக்கு வெற்றிக்காகவே இருக்கும் என்பதை மனதில் வையுங்கள்.
ரேவதி: இந்த வாரம் உடல்நலத்தில் அக்கறை காட்ட வேண்டி வரும். சிலருக்கு அலர்ஜி சம்மந்தமான உபாதைகள் வந்து மறையும். வருமானத்திற்கு குறை ஏற்படாது.
பரிகாரம்: தட்சிணாமூர்த்தியை வணங்குவது எல்லா நன்மைகளையும் தரும். செல்வ சேர்க்கை உண்டாகும்.
- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT