Last Updated : 21 Dec, 2023 04:19 PM

 

Published : 21 Dec 2023 04:19 PM
Last Updated : 21 Dec 2023 04:19 PM

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @ டிச.21 - 27

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - சப்தம ஸ்தானத்தில் சுக்கிரன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், புதன்(வ) - பாக்கிய ஸ்தானத்தில் சூரியன் - லாப ஸ்தானத்தில் சனி - விரைய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது | கிரக மாற்றம்: 22ம் தேதி - புதன் பகவான் அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் செவ்வாய் அஷ்டம ஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் அவரின் பார்வை மூலம் நல்ல பலன்களை பெற போகிறீர்கள். ராசிநாதன் ஆட்சியாக இருப்பதால் மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள். குடும்ப ஸ்தானத்தை ராசிநாதன் பார்க்கிறார். குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது.

கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.

அஸ்வினி: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் முன்னேற தேவையான வாய்ப்பு கிடைக்கும். தொழில் போட்டிகள் விலகும். தேவையான நிதியுதவி கிடைக்கக்கூடும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக பணிகளை கவனித்தாலும் அலுவலக வேலைகளில் தாமதம் இருக்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு சாதகமான பலன் கிடைக்கும்.

பரணி: இந்த வாரம் குடும்பத்தில் இருந்த சண்டைகள் நீங்கும். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் புரிந்து கொண்டு செயல்படுவார்கள். பிள்ளைகள் மூலம் பெருமை உண்டாகும். புத்திசாதுரியத்தால் பொருள் சேர்க்கை ஏற்படும். தாய்வழி உறவினர் மூலம் உதவிகள் கிடைக்கும்.

கிருத்திகை: இந்த வாரம் தடைபட்ட காரியங்களின் தடை நீங்கும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். ஆன்மீக எண்ணம் அதிகரிக்கும். மாணவர்களுக்கு கல்வியில் இருந்த தடை விலகும். தேவையான பண உதவி கிடைக்கும்.

பரிகாரம்: பைரவரை தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும். அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருக சிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்கிரன் - சப்தம ஸ்தானத்தில் செவ்வாய், புதன்(வ) - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சூரியன் - தொழில் ஸ்தானத்தில் சனி - அயன சயன போக ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது. கிரக மாற்றம்: 22ம் தேதி - புதன் பகவான் சப்தம ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: இந்த வாரம் ராசிநாதன் ரண ருண ரோக ஸ்தானத்தில் ஆட்சி வீட்டில் அமர்ந்திருக்கிறார். அவரை குருவும் பார்ப்பதால் நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

தொழில் ஸ்தானாதிபதி சனி ஆட்சியாக இருக்கிறார். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது. குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள்.

கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். கலைத்துறையினருக்கு தொழில் தொடர்பாக வீண் அலைச்சல் இருக்கும். அரசியல் துறையினருக்கு தேவையற்ற அலைச்சலை குறைத்துக் கொள்வது நல்லது. மாணவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறைய கூடும். நன்கு படிப்பது நல்லது. பெற்றோர் ஆதரவு பெருகும். வெளிநாடு சம்பந்தமான படிப்புகளுக்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.

கிருத்திகை: இந்த் வாரம் காரிய தடை, தாமதம் உண்டாகலாம். புதிய முயற்சிகளை தள்ளிப்போடுவதும் கவனமாக செயல்படுவதும் நல்லது. குடும்ப பிரச்சினைகள் தீரும். எதுவும் வரட்டும் பார்க்கலாம் என்ற முரட்டு தைரியம் கூடாது. பொருளாதார சிக்கல் ஏற்பட்டு நீங்கும்.

ரோகினி: இந்த வாரம் எந்த ஒரு காரியத்திலும் தெளிவான முடிவு எடுக்க முடியாத குழப்பம் ஏற்பட்டு பின்னர் சரியாகும். சொன்ன சொல்லை காப்பாற்றி விடுவீர்கள். அதனால் மதிப்பு கூடும். எதிர்ப்புகளை சமாளித்து முன்னேற எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும்.

மிருகசீரிஷம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்கள் திட்டமிட்டபடி செயலாற்றி வெற்றியை எட்டிப்பிடிப்பார்கள். வியாபார போட்டிகள் குறையும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புதிய பதவி கிடைக்கலாம். சிலருக்கு கூடுதல் பொறுப்புகள் வந்த சேரும். வருமானம் கூடும்.

பரிகாரம்: விநாயகருக்கு அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி

மிதுனம் (மிருக சீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சுக்கிரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், புதன்(வ) - சப்தம ஸ்தானத்தில் சூரியன் - பாக்கிய ஸ்தானத்தில் சனி - லாப ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது. கிரக மாற்றம்: 22ம் தேதி - புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: இந்த வாரம் கிடைத்த வாய்ப்பை தவறவிடாமல் சாதகமாக பயன்படுத்திக் கொள்வீர்கள். ராசிநாதன் புதன் ஆறாம் ஸ்தானத்தில் மறைந்திருந்தாலும் செவ்வாயுடன் இணைந்திருப்பதும் நட்பு இருப்பதும் உங்களுக்கு சாதகமான அமைப்பைக் காட்டுகிறது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பஞ்சம விரையாதிபதி சுக்கிரன் சஞ்சாரத்தின் மூலம் மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள்.

புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். உற்சாகத்துடன் காணப்படுவீர்கள். தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும்.

குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். அரசியல்வாதிகள் உங்கள் செயல்பாடுகளை மேலிடம் உற்று நோக்கும். கலைத்துறையினருக்கு எதிர்பார்த்த ஒப்பந்தம் கையெழுத்தாகும். மாணவர்களுக்கு பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

மிருகசீரிஷம்: இந்த வாரம் குடும்பத்திற்கு தேவையான பொருட்களை வாங்குவதில் ஆர்வம் இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் ஏதாவது ஒரு விஷயத்தை பெரிதாக பேசுவார்கள். கணவன் மனைவிக்கிடையே நிதானமான போக்கு காணப்படும். பிள்ளைகளின் கருத்தை அறிந்து அதற்கேற்றார் போல் செயல்படுவது நன்மை தரும். மூத்த சகோதரர் உடல்நலத்தில் கவனம் தேவை.

திருவாதிரை: இந்த வாரம் மனக்குழப்பம் ஏற்பட்டு நீங்கும். திட்டமிட்டு செயல்படுவது காரிய வெற்றிக்கு உதவும். மாணவர்களுக்கு கூடுதலாக பொறுப்புகள் சேரும். கல்வியில் நாட்டம் அதிகரிக்கும். கவனமாக படிப்பது நல்லது. எதிலும் எச்சரிக்கை தேவை. காரிய தடை தாமதம் வரலாம்.

புனர்பூசம்: இந்த வாரம் குடும்ப பிரச்சினை தீரும். ஒரு முறைக்கு பலமுறை எதையும் ஆராய்ந்து பார்த்து செய்வது நன்மை தரும். பணவரவு உண்டு. ஆனால் வீண் செலவும் ஏற்படும். சொத்துக்கள் வாங்குவது, விற்பது ஆகியவற்றில் கவனம் தேவை. பயணங்களின் போதும், வாகனங்களில் செல்லும் போதும் எச்சரிக்கை தேவை.

பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமணத் தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - புதன் - வியாழன்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சுக்கிரன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன்(வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் சூரியன் - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சனி - தொழில் ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது. கிரக மாற்றம்: 22ம் தேதி - புதன் பகவான் பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுபசெலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும். தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்திசாதுரியத்தால் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள். குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும்.

அரசியல்வாதிகள் கட்சி ரகசியங்களை வெளியிட வேண்டாம். கலைத்துறையினர் யதார்த்தமான படைப்புகளால் அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பார்கள். மாணவர்களுக்கு புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.

புனர்பூசம்: இந்த வாரம் சரியான நேரத்தில் உறங்க முடியாத சூழ்நிலை உண்டாகும். மிகவும் வேண்டியவரை பிரிய வேண்டி இருக்கும். மற்றவர்களுக்கு வலிய சென்று உதவுவதால் வீண் விரோதம் ஏற்படும்.

பூசம்: இந்த வாரம் தொழில் வியாபாரம் தொடர்பாக அலைய வேண்டி இருக்கும். எதிர்பார்த்த நிதி வசதி கிடைத்தாலும், திட்டமிட்டதை விட கூடுதல் செலவும் இருக்கும். பணியாளர்களிடம் நிதானத்தை கடைபிடிப்பது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரி கூறுவதுபடி நடந்து கொள்வது நன்மை தரும். நிலுவையில் உள்ள பணம் வரலாம்.

ஆயில்யம்: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களால் சிறுசிறு பிரச்சினைகள் உண்டாகலாம். குழந்தைகளின் உடல் ஆரோக்கியத்திலும், வாழ்க்கை துணையின் ஆரோக்கியத்திலும் கவனம் தேவை. கணவன், மனைவிக்கிடையே இருந்த மனகசப்பு மாறும்.

பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள் - புதன் - வெள்ளி

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) கிரகநிலை - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சுக்கிரன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், புதன்(வ) - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சூரியன் - சப்தம ஸ்தானத்தில் சனி - பாக்கிய ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் ராகு என கிரகநிலைகள் உள்ளது. கிரக மாற்றம்: 22ம் தேதி - புதன் பகவான் சுக ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: இந்த வாரம் உங்களது பணிகளை அடுத்தவரிடம் ஒப்படைக்காமல் நேரிடையாக செய்வது நன்மை தரும். ராசிநாதன் சூரியன் ஐந்தாமிடத்தில் குரு பார்வை பெறுகிறார். ராசிநாதன் இருக்கும் இடம் அவருக்கு நட்பு வீடாகவும் சார ரீதியிலும் அனுகூலமாக இருக்கிறார். லாப ஸ்தான ராசியைப் பார்க்கிறார். எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். தனலாபத்தை தருவார். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும். தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதுரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம். குடும்பத்தில் நிம்மதி காணப்படும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். பெண்களுக்கு உதவி கேட்டு வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். அரசியல்வாதிகள் சகாக்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். நல்ல வரவேற்பு கிடைக்கும். மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.

மகம்: இந்த வாரம் வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பது நல்லது. கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி தொடர்பான செலவு கூடும். கவனத்துடன் பாடங்களை படிப்பது அவசியம். எதிரில் இருப்பவர்களை எடைபோடும் சாமர்த்தியம் உண்டாகும்.

பூரம்: இந்த வாரம் முன்கோபம் வந்தாலும் அதனால் பாதிப்பு இருக்காது. பணவரத்து அதிகரிக்கும். மனோதைரியம் கூடும். எப்படிப்பட்ட சூழ்நிலையையும் சமாளித்து முன்னேறிவிடுவீர்கள். ஆனால் மற்றவர்களின் சூழ்ச்சிக்கு ஆளாகாமல் கவனமாக இருப்பது அவசியம். வழக்கு விவகாரங்களில் சாதகமான பலன் கிடைக்கும்.

உத்திரம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் எதிர்பார்த்த முன்னேற்றம் உண்டாக எடுக்கும் முயற்சிகள் சாதகமான பலன் தரும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு பதவி உயர்வு, வருமான உயர்வு ஆகியவை இருக்கும். சக ஊழியர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சினைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை: ராசியில் கேது - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சுக்கிரன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் செவ்வாய், புதன்(வ) - சுக ஸ்தானத்தில் சூரியன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி - சப்தம ஸ்தானத்தில் ராகு - அஷ்டம ஸ்தானத்தில் குரு என கிரகநிலைகள் உள்ளது | கிரக மாற்றம்: 22ம் தேதி - புதன் பகவான் தைரிய வீர்ய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எந்த ஒரு வேலையையும் மிகவும் பொறுமையாகவும், பொறுப்புடனும் செய்து முடிப்பீர்கள். ராசிநாதன் புதன் தைரிய வீர்ய ஸ்தானத்தில் நல்ல நிலையில் சஞ்சரிக்கிறார். எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். ராசிநாதனின் சார பலத்தின் மூலம் முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும்.

நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும். தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேலதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும். குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும்.

கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள். பெண்களுக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும். அரசியல்வாதிகள் கோஷ்டி சண்டையிலிருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. கலைத்துறையினர் மூத்த கலைஞர்களால் ஆதாயமடைவர். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. பாடங்கள் எளிமையாக தோன்றும்.

உத்திரம்: இந்த வாரம் குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் கூடும். பிள்ளைகளின் நலனில் அக்கறை காட்டுவீர்கள். குடும்பத்தாருடன் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொள்ள நேரலாம். உறவினர்கள் மத்தியில் மதிப்பும் மரியாதையும் கூடும்.

அஸ்தம்: இந்த வாரம் முன் கோபத்தை குறைத்து நிதானத்தை கடைபிடிப்பது பிரச்சினைகள் வராமல் தடுக்கும். பணவரத்து திருப்தி தரும். மாணவர்கள் மிகவும் கவனத்துடன் பாடங்களை படிப்பது கூடுதல் மதிப்பெண் உதவும். எதையும் சமாளிக்கும் திறமை ஏற்படும்.

சித்திரை: இந்த வாரம் மனகுழப்பம் தீரும். எதிலும் பயம் உண்டாகும். எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் தடை தாமதம் ஏற்படும். சங்கடமான சூழ்நிலையை சந்திக்க வேண்டி இருக்கும். ஜீரண கோளாறு போன்ற ஏதாவது ஆரோக்கிய குறைவு ஏற்படலாம். செலவுகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: கிருஷ்ண பரமாத்மாவை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வெள்ளி

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசி ஸ்தானத்தில் சுக்கிரன் - தனவாக்கு ஸ்தானத்தில் செவ்வாய், புதன்(வ) - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சூரியன் - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் சனி - ரண ருண ரோக ஸ்தானத்தில் ராகு - களத்திர ஸ்தானத்தில் குரு - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது. கிரக மாற்றம்: 22ம் தேதி - புதன் பகவான் தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: இந்த வாரம் துணிச்சலாக காரியங்களில் ஈடுபடுவீர்கள். செவ்வாய் பாக்கிய விரையாதிபதி புதனுடன் அமர்ந்திருக்கிறார். வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். லாப ஸ்தானத்தை பார்க்கும் சனியால் பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும்.

புத்தி தெளிவு உண்டாகும். தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும். குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும்.

உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும். பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். அரசியல்வாதிகள் கட்சிப் பிரச்சினைகளில் இருந்து ஒதுங்கி இருப்பது நல்லது. கலைத்துறையினர் புதியவாய்ப்புகளில் வெற்றி அடைவர். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

சித்திரை: இந்த வாரம் அடுத்தவரை நம்பி காரியத்தில் இறங்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான சிறிய பிரச்சினைகளை சந்திக்க வேண்டி இருக்கும். தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். உத்தியோகத்தில் இருப்பவர்கள் எந்த பணியை முதலில் முடிப்பது போன்ற குழப்பத்திற்கு ஆளாக வேண்டி இருக்கும்.

சுவாதி: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்களால் வீண் பிரச்சினை குழப்பம் போன்றவை ஏற்பட்டு பின்னர் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே திடீர் கருத்து வேற்றுமை தோன்றலாம். பிள்ளைகளிடம் பேசும் போது எச்சரிக்கை தேவை. உறவினர்களிடம் எந்த உறுதியையும் தராமல் இருப்பது நல்லது.

விசாகம்: இந்த வாரம் அடுத்தவர்களுக்கு உதவிகள் செய்வதில் சங்கடமான சூழ்நிலை உண்டாகும். சமாளித்து முன்னேறும் திறமை இருக்கும். மாணவர்கள் கல்வியில் முன்னேற வேண்டும் என்று பாடுபடுவீர்கள். போட்டிகள் சாதகமான பலன் தரும்.

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சினை தீரும். மன நிம்மதி கிடைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - ராசியில் செவ்வாய், புதன்(வ) - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் சூரியன் - சுக ஸ்தானத்தில் சனி - பஞ்சம பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு - லாப ஸ்தானத்தில் கேது - விரைய ஸ்தானத்தில் சுக்கிரன் என கிரகநிலைகள் உள்ளது | கிரக மாற்றம்: 22ம் தேதி - புதன் பகவான் ராசியில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: இந்த வாரம் கிரகங்கள் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அள்ளித் தர காத்திருக்கிருக்கிறார்கள். வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். சனி அர்த்தாஷ்டம சஞ்சாரத்தால் காரிய தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். ஆனாலும் சனியின் சார சஞ்சாரத்தால் மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.

தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது. குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும் படியான சூழ்நிலைகள் மாறும். கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும்.

நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும். பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். கலைத்துறையினர் புதுமையான சில படைப்புகளை வெளியிட்டு அனைவரின் கவனத்தையும் ஈர்ப்பர். மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.

விசாகம்: இந்த வாரம் ஆழ்ந்த யோசனையும், அனுபவ அறிவையும் கொண்டு எதையும் சாதிக்க முயற்சிப்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். எதிர்பாலினத்தாரிடம் பழகும் போது மிகவும எச்சரிக்கை தேவை. எந்த காரியத்தை செய்தாலும் அதில் வேகத்தை காட்டாமல் மெத்தனமாகவே செய்ய தோன்றும்.

அனுஷம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் ஈடுபட்டு இருப்பவர்களுக்கு தொழில் தொடர்பான வீண் அலைச்சல் உண்டாகும். பணவரத்து தாமதப்பட்டாலும் வந்து சேரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு வேலை தொடர்பான கவலை உண்டாகும். சக ஊழியர்களுடன் அனுசரித்து செல்வது நல்லது.

கேட்டை: இந்த வாரம் குடும்ப விஷயமாக அலைய வேண்டி இருக்கும். கணவன் மனைவிக்கிடையே இருக்கும் நெருக்கம் குறையும். தாய், தந்தையரின் உடல்நலத்தில் கவனம் தேவை. எதிலும் உற்சாகம் குறைந்து சோம்பல் ஏற்படும்.

பரிகாரம்: திருமுருகாற்றுபடையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால் கண்ட பிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும் | அதிர்ஷ்ட கிழமைகள்: செவ்வாய் - வெள்ளி

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் சூரியன் - தைரிய வீர்ய ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் ராகு - பஞ்சம ஸ்தானத்தில் குரு - தொழில் ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சுக்கிரன் - விரைய ஸ்தானத்தில் செவ்வாய், புதன்(வ) என கிரகநிலைகள் உள்ளது | கிரக மாற்றம்: 22ம் தேதி - புதன் பகவான் விரைய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எந்த நேரத்திலும் தகுதி குறையாமல் செயல்படுவீர்கள். பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும்.

புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும். குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள்.

உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள். பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். அரசியல்வாதிகள் கட்சித் தலைமையின் ஆணையை மீறி தனி ஆவர்த்தனம் காட்ட வேண்டாம். கலைத்துறையினருக்கு வெளிநாட்டு புது நிறுவனங்கள் உங்களுக்கு வாய்ப்பளிக்கும். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

மூலம்: இந்த வாரம் எடுத்த வேலையை சிறப்பாக செய்து முடித்து நற்பெயர் பெறுவீர்கள். அதே நேரத்தில் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் கவனத்தை சிதறவிடாமல் மிகவும் நன்கு கவனித்து பாடங்களை படிப்பது நல்லது. சகமாணவர்களுடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பூராடம்: இந்த வாரம் மனஅமைதி உண்டாகும். எதிலும் நற்பலன் கிடைக்கும். திட்டமிட்டு செயலாற்றுவதிலும், உறுதியான முடிவு எடுப்பீர்கள். வாக்குவன்மையால் காரிய வெற்றி உண்டாகும். எதிர்பாராத திடீர் செலவு உண்டாகலாம். அடுத்தவர் கூறுவதை தவறாக புரிந்து கொண்டு பின்னர் வருத்தப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.

உத்திராடம்: இந்த வாரம் கடவுள் பக்தி அதிகரிக்கும். கொடுக்கல், வாங்கல், சொத்து வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. தொழில் வியாபாரத்தில் இருந்த போட்டி நீங்கும். கடன் விவகாரங்கள் கட்டுக்குள் இருக்கும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை.

பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன் - வெள்ளி

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தனவாக்கு ஸ்தானத்தில் சனி - தைரிய வீர்ய ஸ்தானத்தில் ராகு - சுக ஸ்தானத்தில் குரு - பாக்கிய ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சுக்கிரன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், புதன்(வ) - விரைய ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலைகள் உள்ளது. கிரக மாற்றம்: 22ம் தேதி - புதன் பகவான் லாப ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எத்தனை தடை வந்தாலும் எடுத்த காரியத்தை செய்து முடிப்பதில் பின்வாங்க மாட்டீர்கள். எல்லா வகையிலும் நல்லதே நடக்கும். சுக்கிரன் சஞ்சாரம் அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள்.

புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும். பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும். அரசியல்வாதிகள் எதிர்ப்புகளையும் மீறி முன்னேறுவர். கலைத்துறையினரின் படைப்புத் திறன் வளரும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

உத்திராடம்: இந்த வாரம் உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மறைமுக பிரச்சினைகள் தீரும். தொடங்கிய வேலையை திட்டமிட்டபடி செய்ய முடியாமல் இழுபறியாக இருக்கும். குடும்பத்தில் இருப்பவர்கள் நீங்கள் கூறுவதை ஏற்காமல் தங்களது விருப்பப்படி எதையும் செய்வார்கள்.

திருவோணம்: இந்த வாரம் கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை இருக்கும். பிள்ளைகளுக்காக செலவு செய்ய வேண்டி இருக்கும். அடுத்தவர் கூறும் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல் அதில் உள்ள நல்லது கெட்டதை யோசிப்பது நல்லது. பண விவகாரங்களில் கவனம் தேவை.

அவிட்டம்: இந்த வாரம் எதையும் நன்கு யோசித்து பின்னர் செய்வது நன்மை தரும். மாணவர்கள் நிதானமாக ஆழ்ந்த கவனத்துடன் பாடங்களை படிப்பது நல்லது. மனகஷ்டம், பணகஷ்டம் நீங்கும். உடல் ஆரோக்கியம் உண்டாகும்.

பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - செவ்வாய் - வெள்ளி

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தனவாக்கு குடும்ப ஸ்தானத்தில் ராகு - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு - அஷ்டம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சுக்கிரன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், புதன்(வ) - லாப ஸ்தானத்தில் சூரியன் என கிரகநிலைகள் உள்ளது. கிரக மாற்றம்: 22ம் தேதி - புதன் பகவான் தொழில் கர்ம ஜீவன ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எந்த காரியம் செய்தாலும் அதில் முன்னேற்றம் காண வேண்டும் என்ற ஆர்வம் அதிகரிக்கும். நீங்கள் உழைப்பதற்கு அஞ்சாதவர். நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது. வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். ராசியிலுள்ள சனியின் சஞ்சாரம் எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரியத் தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும்.

கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள். பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. அரசியல்வாதிகளுக்கு தொண்டர்களால் ஆதாயம் ஏற்படும். கலைத்துறையினருக்கு பணவரத்து இருக்கும். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.

அவிட்டம்: இந்த வாரம் மனத்தெளிவு உண்டாகும். எந்த காரியத்தையும் செய்து முடிக்கும் திறமை அதிகரிக்கும். வயிறு கோளாறு உண்டாகலாம். பணவரத்து கூடும். சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் உயரும். ஆன்மீக நாட்டம் தெய்வ பக்தி அதிகரிக்கும்.

சதயம்: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் லாபம் கூடும். ஏற்றுமதி சிறக்கும். எதிர்பார்த்த நிதி உதவி கிடைக்கும். பழைய பாக்கி வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். மேலதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும்.

பூரட்டாதி: இந்த வாரம் குடும்பத்தில் இருப்பவர்கள் உங்களுடன் அனுசரித்து செல்வார்கள். விசேஷ நிகழ்ச்சிகளில் குடும்பத்தினருடன் கலந்து கொள்ள நேரிடும். கணவன் மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளின் உடல்நிலையில் கவனம் தேவை.

பரிகாரம்: விநாயக பெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு - வியாழன்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - ராசி ஸ்தானத்தில் ராகு - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு - களத்திர ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஆயுள் ஸ்தானத்தில் சுக்கிரன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், புதன்(வ) - தொழில் ஸ்தானத்தில் சூரியன் - விரைய ஸ்தானத்தில் சனி என கிரகநிலைகள் உள்ளது. கிரக மாற்றம்: 22ம் தேதி - புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் வக்ர நிவர்த்தி அடைகிறார்.

பலன்கள்: இந்த வாரம் குடும்பத்தில் அக்கறை காட்டுவீர்கள். எல்லா விஷயத்துக்கும் மனசாட்சியை நம்புபவர். நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். ராசிநாதனின் சஞ்சாரம் எல்லாவற்றிலும் இருந்து வந்த மன கவலையை நீக்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.

தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க செய்யும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது. குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும்.

கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது. புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும். பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். அரசியல்வாதிகளுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு உயரும். கலைத்துறையினரின் படைப்புகளுக்கு மதிப்பு, மரியாதை கூடும். மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

பூரட்டாதி: இந்த வாரம் திறமையாக செயல்பட்டு காரிய வெற்றி காண்பீர்கள். மதிப்பும், மரியாதையும் கூடும். மாணவர்கள் கல்வியில் சிரமபட்டு முன்னேற்றம் காண வேண்டி இருக்கும். மனோதைரியம் கூடும்.

உத்திரட்டாதி: இந்த வாரம் மனோ தைரியம் கூடும். எதிர்ப்புகள் விலகும். எந்த சூழ்நிலையையும் அனுசரித்து செல்வீர்கள். வீண் குழப்பம், காரிய தடை ஏற்பட்டு நீங்கும். வாகனங்களில் செல்லும் போது கூடுதல் கவனம் தேவை. பயணங்கள் செல்ல வேண்டி இருக்கும். கவன தடுமாற்றம் உண்டாகலாம். பணவரத்து தாமதப்படும்.

ரேவதி: இந்த வாரம் தொழில் வியாபாரத்தில் சீரான நிலை காணப்படும். எதிர்பார்த்தபடி ஆர்டர்கள் கிடைப்பது தாமதமாகலாம். அரசாங்கம் தொடர்பான காரியங்களில் மெத்தனபோக்கு காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு விருப்பமற்ற இடமாற்றம் உண்டாகலாம்.

பரிகாரம்: நவகிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும் | அதிர்ஷ்ட கிழமைகள்: புதன் - வியாழன் - வெள்ளி.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x