Last Updated : 20 Jul, 2023 02:30 PM

 

Published : 20 Jul 2023 02:30 PM
Last Updated : 20 Jul 2023 02:30 PM

மேஷம் முதல் மீனம் வரை: 12 ராசிகளுக்கான வார பலன்கள் @  ஜூலை 20 - 26

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் குரு, ராகு - சுக ஸ்தானத்தில் புதன், சூர்யன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் கேது - லாப ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 23-07-2023 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் நல்ல பலன்களை பெறப் போகிறீர்கள். மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். மனக்கவலை குறையும். எல்லாவகையிலும் சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். சற்று கூடுதலாக எதிலும் கவனம் செலுத்துவது நல்லது. திடீர் செலவு உண்டாகலாம். திட்டமிட்டபடி செல்ல முடியாமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம்.

தொழில் வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும் என்ற தன்னம்பிக்கை ஏற்படும். சரக்குகளை வாடிக்கையாளர்களுக்கு அனுப்பும் போது கவனம் தேவை. உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலை சந்திக்க வேண்டி வரும். அலுவலக வேலைகள் உடனே முடியாமல் இழுபறியாக இருக்கும். நல்ல பெயர் கிடைக்கப் பெறுவீர்கள்.

குடும்பத்தில் வெளிநபர்களால் ஏதாவது குழப்பம் ஏற்படலாம். சொந்த விஷயங்களுக்கு அடுத்தவர் ஆலோசனைகளை கேட்பதை தவிர்ப்பது நல்லது. கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டு பேசுவதன் மூலம் இடைவெளி குறையும். பிள்ளைகள் நலனுக்காக செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.

பெண்களுக்கு எதிலும் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பாராமல் பயணத்தில் தடங்கல் ஏற்படலாம். மாணவர்களுக்கு கல்வியில் மேன்மை அடைய கூடுதல் கவனத்துடன் படிப்பது அவசியம்.

பரிகாரம்: செவ்வாய்க்கிழமையில் நவகிரகத்தில் செவ்வாயை அர்ச்சனை செய்து தீபம் ஏற்றி வணங்குவது வாழ்வில் முன்னேற்றத்தை தரும்.

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசிரீஷம் 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் புதன், சூர்யன் - சுக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் கேது - தொழில் ஸ்தானத்தில் சனி (வ) - அயன சயன போக ஸ்தானத்தில் குரு, ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 23-07-2023 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் நல்ல யோகமான பலன்களைப் பெற போகிறீர்கள். பணவரத்து அதிகரிக்கும். மனதில் ஏதாவது ஒரு கவலை உண்டாகும். சொத்துக்கள் சம்பந்தமான காரிய அனுகூலம் ஏற்படும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவி கிடைக்கக் கூடும். புதிய நபர்களின் நட்பு கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்கள் சாதகமாக நடக்கும். நயமாக பேசுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கவனமாக செயல்படுவது நல்லது. வேலை பார்க்கும் இடத்தில் பொருள்களை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். வீட்டிற்கு தேவையான பொருள்களை வாங்கி மகிழ்வீர்கள். கணவன், மனைவிக்கிடையே உறவு பலப்படும். பிள்ளைகள் மகிழ்ச்சியடைய தேவையானவற்றை செய்வீர்கள்.

பெண்களுக்கு காரிய அனுகூலம் உண்டாகும். மனதில் ஏதாவது கவலை இருந்து வரும். மாணவர்களுக்கு வீண் அலைச்சல் ஏற்படலாம். பாடங்களில் கவனம் செலுத்துவது குறைய கூடும். நன்கு படிப்பது நல்லது. பெற்றோர் ஆதரவு பெருகும். வெளிநாடு சம்பந்தமான படிப்புகளுக்கு உரிய முயற்சிகளை மேற்கொள்வது நல்லது.

பரிகாரம்: வெள்ளிக்கிழமையில் நவக்கிரகத்தில் சுக்கிரனுக்கு தீபம் ஏற்றி அர்ச்சனை செய்ய செல்வம் சேரும். மனதில் மகிழ்ச்சி உண்டாகும்.

மிதுனம் (மிருக சிரீஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் புதன், சூர்யன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - பாக்கிய ஸ்தானத்தில் சனி (வ) - லாப ஸ்தானத்தில் குரு, ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 23-07-2023 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் உங்களுக்கு சாதகமான அமைப்பைக் காட்டுகிறது. வழக்கு சம்பந்தமான விஷயங்களில் சாதகமான பலன் கிடைக்கும். பயணங்கள் செல்ல நேரிடலாம். மனதிருப்தியுடன் செயலாற்றுவீர்கள். புத்திசாதூரியம் மூலம் காரிய வெற்றி கிடைக்கும். கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதன் மூலம் மற்றவர்களிடம் மதிப்பு கூடும் பாராட்டு கிடைக்கும். உடல்சோர்வு உண்டாகும். மாத இறுதியில் உற்சாகத்துடன் காணப்படுவீர்கள்.

தொழில் வியாபாரம் முன்னேற்றம் காண புதிய திட்டங்களை தீட்டுவீர்கள். புதிய ஆர்டர்கள் கிடைக்க கூடிய சூழ்நிலை காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் உற்சாகமாக செயல்பட்டு வேலைகளை உடனுக்குடன் செய்து முடிப்பார்கள். புதிய பதவி அல்லது பொறுப்புகள் கிடைக்கும்.

குடும்பத்தில் கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். குடும்பத்துடன் விருந்து, கேளிக்கை நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் சூழ்நிலை வரும். குழந்தைகள் உற்சாகமாக காணப்படுவார்கள்.

பெண்களுக்கு மனதிருப்தியுடன் காரியங்களை செய்து சாதகமான பலன் பெறுவீர்கள். பயணம் செல்ல நேரலாம். மாணவர்களுக்கு பாடங்களை கவனமாக படித்து கூடுதல் மதிப்பெண் பெறுவீர்கள். பொறுப்புகள் அதிகரிக்கும்.

பரிகாரம்: பெருமாளை புதன்கிழமைகளில் அர்ச்சனை செய்து வணங்க திருமண தடை நீங்கும். குடும்பத்தில் சுபிட்சம் உண்டாகும்.

கடகம் (புனர்பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) கிரகநிலை - ராசியில் புதன், சூர்யன் - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - சுக ஸ்தானத்தில் கேது - அஷ்டம ஸ்தானத்தில் சனி (வ) - தொழில் ஸ்தானத்தில் குரு, ராகு என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 23-07-2023 அன்று புதன் பகவான் ராசியில் இருந்து தன வாக்கு குடும்ப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எடுத்த காரியத்தை எப்படியும் செய்து முடித்து விடுவீர்கள். சுபசெலவுகள் ஏற்படும். வேலை காரணமாக வீட்டை விட்டு வெளியில் தங்க நேரலாம். திட்டமிடுவதில் பின்னடைவு ஏற்படும். பணவரவு எதிர்பார்த்தபடி இருக்கும். பெரியோர் நேசம் கிடைக்கும். வாகன யோகம் உண்டாகும்.

தொழில் வியாபாரம் வாக்கு வன்மையால் சிறப்பாக நடக்கும். பழைய பாக்கிகள் வசூலாகலாம். புதிய வாடிக்கையாளர்கள் கிடைப்பார்கள். உத்தியோகம் தொடர்பான பயணங்கள் செல்ல நேரலாம். உத்தியோகஸ்தர்கள் புத்தி சாதூரியத்தால் மேலதிகாரிகள் கொடுத்த வேலையை சிறப்பாக செய்து முடிப்பார்கள்.

குடும்பத்தில் இருந்த குழப்பம் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுக்கு தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள்.

பெண்களுக்கு காரியங்களில் இருந்த பின்னடைவு நீங்கும். எதிர்பார்த்த பணவரவு இருக்கும். மாணவர்களுக்கு புத்திசாதூரியம் வெளிப்படும். கல்வியில் இருந்த தொய்வு நீங்கும்.

பரிகாரம்: அம்மனுக்கு அரளிப்பூ அர்ப்பணித்து அர்ச்சனை செய்து வணங்க எல்லா காரியங்களும் கைகூடும். எதிர்ப்புகள் நீங்கும்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம், 1ம் பாதம்) கிரகநிலை - ராசியில் செவ்வாய், சுக்ரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - களத்திர ஸ்தானத்தில் சனி (வ) - பாக்கிய ஸ்தானத்தில் குரு, ராகு - அயன சயன போக ஸ்தானத்தில் புதன், சூர்யன் என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 23-07-2023 அன்று புதன் பகவான் அயன சயன போக ஸ்தானத்தில் இருந்து ராசிக்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எல்லாவகையிலும் நன்மை உண்டாகும். தனலாபம் கிடைக்கும். அடுத்தவர்களுக்கு உதவுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். எதிர்பாலினத்தாரால் செலவு ஏற்படும். கோபத்தால் சில்லறை சண்டைகள் ஏற்படலாம். பணவரத்து கூடும். காரிய அனுகூலம் உண்டாகும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்த நிலை மாறும். விற்பனை அதிகரிக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் காணப்படும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் புத்திசாதூரியத்தால் வேலைகளை திறமையாக செய்து முடித்து பாராட்டு பெறுவீர்கள். பதவி உயர்வு கிடைக்கலாம்.

குடும்பத்தில் நிம்மதி காணப்படும். விருந்து நிகழ்ச்சியில் குடும்பத்தினருடன் கலந்து கொண்டு மகிழ்ச்சி அடைவீர்கள். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். குழந்தைகளின் செயல்களால் பெருமை அடைவீர்கள்.

பெண்களுக்கு உதவி கேட்டு உங்களை நாடி வருபவர்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். திடீர் செலவு உண்டாகலாம். மாணவர்களுக்கு சகமாணவர்களுடன் கவனமாக பழகுவது நல்லது. கல்வியில் அதிக கவனம் தேவை.

பரிகாரம்: தினமும் சூரிய நமஸ்காரம் செய்து சிவனை வணங்க பிரச்சினைகள் குறையும். காரிய வெற்றி உண்டாகும்.

கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதங்கள், அஸ்தம், சித்திரை 1, 2, பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சனி (வ) - அஷ்டம ஸ்தானத்தில் குரு, ராகு - லாப ஸ்தானத்தில் புதன், சூர்யன் - அயன சயன போக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 23-07-2023 அன்று புதன் பகவான் லாப ஸ்தானத்தில் இருந்து அயன சயன போக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எல்லா காரியங்களும் அனுகூலமாக நடந்து முடியும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். எதிர்பார்த்த தகவல்கள் நல்ல தகவலாக வரும். விருப்பங்கள் கைகூடும். நண்பர்கள் மத்தியில் மரியாதையும், அந்தஸ்தும் உயரும். மற்றவர்களிடம் பேசும்போது கோபத்தை குறைத்து பேசுவது நல்லது. பணவரத்து இருக்கும்.

தொழில் வியாபாரத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசாங்கம் மூலம் நடக்க வேண்டிய காரியங்களில் சாதகமான நிலை காணப்படும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு வெற்றி பெறுவார்கள். மேலதிகாரிகள் ஆதரவும் கிடைக்கும்.

குடும்பத்தில் குதூகலமான சூழ்நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே மகிழ்ச்சி கூடும். உங்கள் சொல்படி பிள்ளைகள் நடந்து கொள்வது மனதுக்கு இதமளிக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் உங்களை நாடி வருவார்கள்.

பெண்களுக்கு நிதானமாக பேசுவது நன்மை தரும். பணவரத்து திருப்தி தரும். எதிர்பார்த்த தகவல்கள் வரும். மாணவர்களுக்கு சக மாணவர்களுடன் பழகும் போது கவனம் தேவை. பாடங்கள் எளிமையாக தோன்றும்.

பரிகாரம்: கிருஷ்ணபரமாத்மாவை வணங்க கஷ்டங்கள் தீரும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும்.

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) கிரகநிலை - ராசியில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சனி (வ) - களத்திர ஸ்தானத்தில் குரு, ராகு - தொழில் ஸ்தானத்தில் புதன், சூர்யன் - லாப ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 23-07-2023 அன்று புதன் பகவான் தொழில் ஸ்தானத்தில் இருந்து லாப ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் வாழ்க்கையில் நல்ல திருப்பம் ஏற்படும். பயணங்கள் மூலம் லாபம் கிடைக்க செய்யும். மனதில் மகிழ்ச்சி ஏற்படும் படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிகத்தில் நாட்டம் உண்டாகும். மனோ தைரியம் அதிகரிக்கும். புத்தி தெளிவு உண்டாகும்.

தொழில் வியாபாரம் திருப்திகரமாக நடக்கும். தொழில் தொடர்பான விஷயங்கள் அனுகூலமாக நடக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். சிலருக்கு எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்கும்.

குடும்பத்தில் சந்தோஷமான நிலை காணப்படும். கணவன், மனைவிக்கிடையே இருந்த கருத்து வேற்றுமை நீங்கும். உறவினர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பிள்ளைகள் மனம் மகிழும் படி தேவையான பொருட்களை வாங்கி கொடுப்பீர்கள். விருப்பங்கள் கைகூடும். அக்கம் பக்கத்தினருடன் அனுசரித்து செல்வது நன்மை தரும்.

பெண்களுக்கு மனம் மகிழும்படியான காரியங்கள் நடக்கும். ஆன்மிக நாட்டம் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண்பீர்கள். நண்பர்கள் மத்தியில் மதிப்பு கூடும்.

பரிகாரம்: மகாலட்சுமியை வணங்க கடன் பிரச்சினை தீரும். மன நிம்மதி கிடைக்கும்.

விருச்சிகம் (விசாகம் 4ம் பாதம், அனுஷம், கேட்டை) கிரகநிலை - சுக ஸ்தானத்தில் சனி (வ) - ரண ருண ரோக ஸ்தானத்தில் குரு, ராகு - பாக்கிய ஸ்தானத்தில் புதன், சூர்யன் - தொழில் ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - அயன சயன போக ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 23-07-2023 அன்று புதன் பகவான் பாக்கிய ஸ்தானத்தில் இருந்து தொழில் ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் உங்களுக்கு அனுகூலமான பலன்களை அள்ளித் தர கிரகங்கள் காத்திருக்கின்றன. வீடு - மனை - வாகனம் சம்பந்தமான காரியங்களில் எதிர்பார்த்த பலன்கள் கிட்டும். காரியத் தடை தாமதம் ஏற்படும். எதிர்பார்த்தபடி எதுவும் நடக்காமல் இழுபறியாக இருக்கும். ஆனாலும் சனியின் சார சஞ்சாரத்தால் மனமகிழும்படியாக எல்லாம் நடந்து முடியும்.

தொழில் வியாபாரம் நன்றாக இருக்கும். பழைய பாக்கிகள் வசூலாவதில் வேகம் இருக்கும். கொடுக்கல், வாங்கலில் இருந்த சுணக்க நிலை மாறும். பணவரத்து இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான பயணம் செல்ல வேண்டி இருக்கலாம். உங்களுக்கு நற்பெயர் கிடைப்பதில் எந்த இடையூறும் இருக்காது.

குடும்பத்தில் இருந்து வந்த மனம் நோகும் படியான சூழ்நிலைகள் மாறும். ஆனாலும் அனைத்து விஷயங்களிலும் நீங்கள் அனுசரித்து செல்வது நல்லது. கணவன் மனைவிக்கிடையே எதிர்பாராத மனவருத்தம் ஏற்பட்டு நீங்கும். பிள்ளைகள் பற்றிய கவலை உண்டாகும். நிதானமாக செய்யும் செயல்கள் வெற்றியை தரும்.

பெண்களுக்கு எடுத்த காரியத்தை வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். கொடுக்கல், வாங்கலில் கவனம் தேவை. மாணவர்களுக்கு கல்வி பற்றிய கவலை குறையும். அதிக மதிப்பெண் எடுக்க ஆர்வமாக படிப்பீர்கள்.

பரிகாரம்: திருமுருகாற்றுபடையை பாராயணம் செய்து வர கந்தன் அருளால் பிணி நீங்கும். குடும்ப கஷ்டம் தீரும்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் 1ம் பாதம்) கிரகநிலை - தைரிய வீரிய ஸ்தானத்தில் சனி (வ) - பஞ்சம ஸ்தானத்தில் குரு, ராகு - அஷ்டம ஸ்தானத்தில் புதன், சூர்யன் - பாக்கிய ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - லாப ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 23-07-2023 அன்று புதன் பகவான் அஷ்டம ஸ்தானத்தில் இருந்து பாக்கிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் பேச்சின் இனிமையால் காரியம் கைகூடும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். ஆனாலும் எதிலும் கூடுதல் கவனத்துடன் செயல்படுவது நல்லது. தொழில் வியாபாரம் திருப்தியாக நடக்கும். எதிர்பார்த்த பண உதவி கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலக வேலையாக அலைய வேண்டி இருக்கும். புதிய பொறுப்புகள் சிலருக்கு கிடைக்கலாம். வெளிநாடு செல்ல0 முயற்சிப்பவர்களுக்கு அனுகூலம் கிடைக்கும்.

குடும்பத்தில் சகஜநிலை காணப்படும். உறவினர்கள் மூலம் நல்ல தகவல் வந்து சேரும். கணவன் மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். குடும்பத்தினருடன் ஆன்மிக பயணம் செல்லும் நிலை உருவாகும். மற்றவர்கள் ஆலோசனை கேட்டு உங்களை நாடி வருவார்கள். உங்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவார்கள்.

பெண்களுக்கு எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். கூடுதல் கவனத்துடன் செய்யும் காரியங்கள் சாதகமான பலன் தரும். மாணவர்களுக்கு மற்றவர்களை அனுசரித்து செல்வது நல்லது. கல்வியில் திருப்தி உண்டாகும்.

பரிகாரம்: குருவிற்கு சாமந்தி மலரை சமர்பித்து வியாழக்கிழமையில் வணங்கி வர எல்லா நன்மைகளும் உண்டாகும்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி (வ) - சுக ஸ்தானத்தில் குரு, ராகு - களத்திர ஸ்தானத்தில் புதன், சூர்யன் - அஷ்டம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 23-07-2023 அன்று புதன் பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் எல்லாவகையிலும் நல்லதே நடக்கும். சுக்கிரன் சஞ்சாரம் அனுகூலமான பலன் தரும். பணவரத்து அதிகரிக்கும். எதிர்ப்புகள் விலகும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். விரும்பிய காரியங்களை செய்து சாதகமான பலன் கிடைக்க பெறுவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்கள் சாதகமாக நடந்து முடியும். வியாபார போட்டிகள் குறையும். பழைய பாக்கிகள் வசூலாகும். தொழில் விரிவாக்கத்திற்கு தேவையான பண உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்க பெறுவார்கள். பணி நிமித்தமாக வெளிநாடு செல்ல வேண்டி வரும்.

குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். பிள்ளைகள் உங்கள் சொல்படி நடப்பது மனதுக்கு திருப்தி தரும். உறவினர்கள் - நண்பர்கள் மூலம் நன்மை நடக்கும்.

பெண்களுக்கு பணவரத்து எதிர்பார்த்த படி இருக்கும். எடுத்த காரியங்களில் சாதகமான பலன் கிடைக்கும். மாணவர்களுக்கு கல்வியில் எதிர்பார்த்த உயர்வு கிடைக்கும். உற்சாகமாக காணப்படுவீர்கள்.

பரிகாரம்: சனி பகவானுக்கு எள் தீபம் ஏற்றி வணங்கி வர கஷ்டங்கள் நீங்கும். ஆரோக்கியம் உண்டாகும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி (வ) - தைரிய வீரிய ஸ்தானத்தில் குரு, ராகு - ரண ருண ரோக ஸ்தானத்தில் புதன், சூர்யன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 23-07-2023 அன்று புதன் பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் நல்ல பலன்களைப் பெறுவதில் சிரமம் இருக்காது. வீணாக மனதை உறுத்திக் கொண்டிருந்த கவலை நீங்கும். எவ்வளவு திறமையுடன் செயல்பட்டாலும் காரிய தடங்கலை ஏற்படுத்தும். அடுத்தவருக்கு உதவிகள் செய்யும் போது கவனம் தேவை. பயணத்தினால் வீண் செலவும், அலைச்சலும் உண்டாகும்.

தொழில் வியாபாரம் தொடர்பான காரியங்களில் இழுபறியான நிலை காணப்படும். புதிய ஆர்டர்கள் தொடர்பாக அலையும்படி இருந்தாலும் சாதகமாக முடியும். பணவரத்து திருப்தி தரும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் அலுவலகம் தொடர்பான பணிகளில் முழுமூச்சுடன் செயல்பட்டு முன்னேற்றம் காண்பார்கள். பயணங்களின் போது உடமைகளை கவனமாக பாதுகாப்பாக வைப்பது நல்லது.

குடும்பத்தில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். குழந்தைகளின் எதிர்காலத்திற்கான திட்டங்களை செயல்படுத்துவீர்கள். புதிதாக வீடு - மனை வாங்குவதற்கான வேலைகளைத் தொடங்குவீர்கள்.

பெண்களுக்கு மற்றவர்களின் பொறுப்புகளை ஏற்பதை தவிர்ப்பது நல்லது. வீண் அலைச்சல் உண்டாகலாம். மாணவர்களுக்கு பாடங்களை படிப்பதில் முழுமூச்சுடன் ஈடுபடுவீர்கள். உங்களது பொருட்களின் மீது கூடுதல் கவனம் இருப்பது நல்லது.

பரிகாரம்: விநாயகபெருமானை தேங்காய் தீபம் ஏற்றி வழிபடுவது காரிய தடைகளை போக்கும். நன்மை கிடைக்கும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, ராகு - பஞ்சம ஸ்தானத்தில் புதன், சூர்யன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி (வ) என கிரகநிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 23-07-2023 அன்று புதன் பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் நீண்ட நாட்களாக இருந்து வந்த உடல் உபாதை மறையும். ராசிநாதனின் சஞ்சாரம் எல்லாவற்றிலும் இருந்து வந்த மனகவலையை நீக்கும். வாகனத்தில் செல்லும் போது எச்சரிக்கை தேவை. தாயின் உடல்நிலையில் கவனம் அவசியம். திட்டமிட்டபடி காரியங்களை செய்ய முடியாமல் தடங்கல்கள் ஏற்படலாம். எனவே எந்த ஒரு வேலையை செய்வதாய் இருந்தாலும் தகுந்த முன்னேற்பாடுகள் தேவை.

தொழில் வியாபாரத்தில் லாபம் அதிகரிக்க செய்யும். பணவரத்து இருக்கும். பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் கூடுதலாக உழைக்க வேண்டி இருக்கும். உழைப்புக்கு ஏற்ற பலன் தாமதமாக கிடைக்கும். சக ஊழியர்களிடம் அனுசரித்து செல்வது நல்லது.

குடும்பத்தில் இதமான சூழ்நிலை காணப்படும். உறவினர்கள் வருகை இருக்கும். கணவன் மனைவிக்கிடையே ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.
பிள்ளைகளின் முன்னேற்றத்தில் கூடுதல் கவனம் செலுத்துவீர்கள். புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.

பெண்களுக்கு திடீர் செலவு உண்டாகலாம். காரியங்களில் தடை தாமதம் ஏற்படலாம் கவனம் தேவை. மாணவர்களுக்கு மிகவும் கவனமாக பாடங்களை படிப்பது முன்னேற்றத்திற்கு உதவும்.

பரிகாரம்: நவகிரகத்தில் குருவுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபட செல்வம் சேரும். கல்வியில் வெற்றி கிடைக்கும்.

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x