மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 15 - 21

மகரம், கும்பம், மீனம் ராசிகளுக்கு இந்த வாரம் எப்படி? | பலன்கள் @ ஜூன் 15 - 21
Updated on
3 min read

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் சனி - சுக ஸ்தானத்தில் குரு, ராகு, சந்திரன் - பஞ்சம ஸ்தானத்தில் சூர்யன், புதன் - களத்திர ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - தொழில் ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 15-06-2023 அன்று சூரிய பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் வரவைப் போலவே செலவும் இருக்கும். வெளியூர் பயணங்களால் அலைச்சலும், எதிர்பாராத பொருள் இழப்பும் இருக்கும். எனவே கவனமாக இருப்பது நல்லது. திடீர் கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்ப்புகளை சமாளிக்கும் போது கவனம் தேவை. தொழில் வியாபாரம் தொடர்பான செலவுகள் கூடும். கூட்டு தொழில் செய்பவர்கள் முன்னேற்றம் காண்பார்கள். வியாபாரம் தொடர்பான முயற்சி வீண் முயற்சியாக இருந்தாலும் பின்னாளில் அதற்கான பலன் கிடைக்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூடுதல் வேலை சுமை இருக்கும். எப்படியும் செய்து முடித்து நல்ல பெயர் வாங்கி விடுவீர்கள். மேலிடம் உங்களுக்கு அனுக்கூலமாக இருக்கும். குடும்பத்தில் நல்ல காரியங்கள் நடக்கும். நிம்மதி ஏற்படும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய கவலைகள் நீங்கும். பெண்களுக்கு வீண் அலைச்சலும் எதிர்பாராத செலவும் உண்டாகும். கவனம் தேவை.

கலைத்துறையினருக்கு வாகனத்தை ஓட்டும் போது கவனம் தேவை. எதிர்பார்த்த தகவல்கள் தாமதமாக வரும். கூட இருப்பவர்களிடம் எந்த விஷயத்தையும் சொல்லும் போது கவனம் தேவை. அரசியல்துறையினருக்கு மனகுழப்பம் நீங்கும். ஆனால் பிறருடன் பழகும் போது நிதானம் தேவை. தொழிலில் முன்னேற்றம் காணப்படும். பொருளாதார முன்னேற்றம் உண்டாகும். பழைய பாக்கிகள் வசூலிப்பது வேகம் பிடிக்கும். மாணவர்களுக்கு வழக்கத்தை விட கூடுதல் நேரம் ஒதுக்கி பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: சனீஸ்வர ஸ்தோத்திரங்களை சொல்லி நல்லெண்ணை தீபம் ஏற்றி சனி பகவானை வழிபடுவதால் துன்பங்கள் நீங்கி வாழ்க்கையில் இன்பம் உண்டாகும்.

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) கிரகநிலை - ராசியில் சனி - தைரிய ஸ்தானத்தில் குரு, ராகு, சந்திரன் - சுக ஸ்தானத்தில் சூர்யன், புதன் - ரண ருண ரோக ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - பாக்கிய ஸ்தானத்தில் கேது என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 15-06-2023 அன்று சூரிய பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் வீண் கவலை ஏற்பட்டு நீங்கும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பதில் வேகம் காட்டுவீர்கள். பணவரத்து திருப்திகரமாக இருக்கும். அதே நேரத்தில் எதிர்பாராத செலவும் ஏற்படும். உடமைகளை கவனமாக பாதுகாத்துக் கொள்வது நல்லது. தொழில் வியாபாரத்தில் ஏற்படும் பணதேவையை சரிகட்ட நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழிலில் முன்னேற்றம் காண தேவையான பணிகளில் ஈடுபடுவீர்கள்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலகம் தொடர்பான வேலைகளில் அலைச்சல் இருக்கும். ஆனால் செய்த வேலைக்கு நல்ல பலனை எதிர்பார்க்கலாம். சக ஊழியர்கள் மூலம் நன்மைகளைப் பெறுவீர்கள். மேலிடத்திலிருந்து கனிவான உபசரிப்பைப் பெறுவீர்கள். குடும்பத்தில் அனுகூலமான பலன்கள் உண்டாகும். குடும்பத்தில் வீண் பிரச்சினைகள் அகலும். எந்த விஷயத்தையும் லாவகமாக கையாண்டு சமாளிப்பீர்கள். கணவன், மனைவிக்கிடையே பழைய விஷயங்களை பேசாமல் இருப்பதன் மூலம் ஒற்றுமை இருக்கும்.

பெண்களுக்கு பணவரத்து திருப்திகரமாக இருக்கும். பயணங்களின் போது பொருட்களின் மீது கவனம் தேவை. கலைத்துறையினருக்கு நன்மை தீமை பற்றி கவலைப்படாமல் தங்களுக்கு கொடுக்கப்பட்ட பணியை திறம்பட செய்வீர்கள். அரசியல்துறையினருக்கு கடன் தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணவரத்து கூடும். மனகுழப்பம் நீங்கும். மாணவர்களுக்கு தேர்வில் கூடுதல் மதிப்பெண் பெற எடுக்கும் முயற்சிகள் கைகூடும்.

பரிகாரம்: சிவனை தீபம் ஏற்றி வழிபட எல்லா பிரச்சினைகளும் நீங்கும். எதிலும் வெற்றி உண்டாகும். மனநிம்மதி ஏற்படும்.

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) கிரகநிலை - தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் குரு, ராகு, சந்திரன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் செவ்வாய், சுக்ரன் - அஷ்டம ஸ்தானத்தில் கேது - அயன சயன போக ஸ்தானத்தில் சனி என கிரக நிலைகள் உள்ளது.

கிரகமாற்றம்: 15-06-2023 அன்று சூரிய பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்: இந்த வாரம் சொன்ன சொல்லை காப்பாற்றுவீர்கள். திடீர் கோபம் உண்டாகும். கட்டுப்படுத்திக் கொள்வது நல்லது. அடுத்தவர்களால் இருந்த தொல்லைகள் குறையும். நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த காரியம் சாதகமாக நடந்து முடியும். நோய் நீங்கி உடல் ஆரோக்கியம் உண்டாகும். தொழில் வியாபாரம் தொடர்பான விஷயங்களில் கூடுதல் அலைச்சல் இருந்தாலும் முடிவில் சாதகமான பலன் கிடைக்கும். வாடிக்கையாளர்களை அனுசரித்து செல்வது நல்லது.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு அலுவலக வேலை தொடர்பான கவலை ஏற்பட்டு நீங்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி இருக்கும். மேலதிகாரிகள் ஆதரவு கிடைக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கலாம். உறவினர்களிடம் நிதானமாக பேசுவது நல்லது. கணவன், மனைவிக்கிடையே இருந்த இடைவெளி குறையும். பெரியோர் ஆதரவும் கிடைக்கும். பிள்ளைகளிடம் இனிமையாக பேசுவது நல்லது. பெண்கள் கோபத்தை குறைத்து நிதானமாக பேசுவதன் மூலம் நன்மை ஏற்படும். கூடுதலாக எதிலும் உழைக்க வேண்டி இருக்கும்.

கலைத்துறையினர் புத்திசாதுரியத்தால் எதையும் சமாளிப்பீர்கள். வீண் அலைச்சல் ஏற்படும். நீங்கள் நினைப்பதுபடி மற்றவர்கள் நடந்து கொள்ளாததால் டென்ஷன் ஏற்படலாம். அரசியல்துறையினருக்கு பணிகளில் இடையூறுகள் ஏற்படலாம். பழைய பாக்கிகள் வசூலில் தாமதமான நிலை காணப்படும். வேலை சுமை அதிகரிப்பதுடன் அலைச்சலும் அதனால் சோர்வும் உண்டாகும். சொன்ன சொல்லை எப்பாடுபட்டாவது காப்பாற்றுவீர்கள். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றம் காண கூடுதல் கவனமுடனும் ஆசிரியர்களின் உதவியுடனும் பாடங்களை படிப்பது நல்லது.

பரிகாரம்: நவக்கிரகத்தில் குருவை வியாழக்கிழமைகளில் வணங்கி வருவது மன அமைதியை தரும். கடன் தொல்லை குறையும் | இந்தவாரம் கிரகங்களின் நிலை:

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்

அனைத்து ராசிகளுக்கான வார பலன்கள் @ ஜூன் 15 - 21

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in