எழுத்துலகில் ஏஐ: சரியா, தவறா?

தமிழ்ப் பதிப்பாளர்கள் ஏஐ-யின் பங்கை வெளிப்படையாக அறிவிக்கும் நடைமுறையைத் தொடங்க வேண்டும்
எழுத்துலகில் ஏஐ: சரியா, தவறா?
Updated on: 
3 min read

தமிழ்நாட்டின் பொது நூலகக் கொள்முதலில், ஒரு பதிப்பகத்தின் பல தலைப்புகள் செயற்கை நுண்ணறிவின் (ஏஐ) உதவியோடு உருவாக்கப்பட்டுள்ளதாகச் சர்ச்சை எழுந்திருக்கிறது. பதிப்பகத் தரப்பு குற்றச்சாட்டுகளை மறுக்கிறது; விசாரணை நடைபெற்றுவருகிறது. இந்தச் சர்ச்சையில் ஒரு சொற்றொடர் பரவலாக ஒலிக்கிறது: ‘ஏஐ ஒரு குப்பை’. விசாரணை முடிந்தபிறகும் ஒரு கேள்வி எஞ்சி நிற்கும்: ‘ஏஐ உதவியோடு எழுதப்படும் படைப்புகள் தரமானவையா, தரமற்றவையா?’

உலக மேடையின் கவலை: அண்மையில் பிராங்பர்ட் புத்தகக் காட்சி தொடங்குவதற்கு முந்தைய நாள் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் ஜெர்மன் பதிப்பாளர், புத்தக விற்பனையாளர் சங்கத்தின் தலைவர் செபாஸ்டியன் குகோல்ட்ஸ் முதலில் ஒரு நல்ல செய்தியைச் சொன்னார்: ‘புத்தகங்கள் மீதான காதல் இன்னும் உயிர்ப்போடு இருக்கிறது’.

கூடவே வாசிப்புத் திறன் குறைபாடு ஒரு சிக்கலாக இருக்கிறது என்றார். ‘இந்தக் குறைபாட்டை இயந்திரம் நிரப்பிவிடும் என்று சிலர் நினைக்கலாம். ஆனால், அது தரும் பதில்கள் சில நேரம் சரியாகவும் சில நேரம் தவறாகவும் இருக்கின்றன; அவற்றால் அந்தக் குறையை ஈடுகட்ட முடியாது’ என்றார் அவர்.

அதே நிகழ்வில் யுனெஸ்கோவின் மேற்பார்வையில் இயங்கும் ஆய்வு மையம் இன்னொரு கேள்வியை எழுப்பியது: நம்பகமான தகவலையும் இயந்திரம் உருவாக்கியதையும் ஒரு சாதாரண வாசகர் எப்படிப் பிரித்தறிவார்? விமர்சகர்களின் கவலை வேறு விதமானது. இயந்திரம் எழுதுவதில் புதுமை இல்லை, அது ஏற்கெனவே உள்ளவற்றையே கணிக்கக்கூடிய வழியில் தொகுத்துத் தருகிறது என்கிறார்கள். இந்த விவாதத்தில் இரண்டு கேள்விகள் கலந்துவிடுகின்றன: ஒன்று நியாயம், இன்னொன்று தரம்.

Loading content, please wait...

X