Last Updated : 21 Apr, 2023 09:22 PM

Published : 21 Apr 2023 09:22 PM
Last Updated : 21 Apr 2023 09:22 PM

குரு பெயர்ச்சி 2023 - 24 | மீனம் ராசியினருக்கு எப்படி? - முழுமையான பலன்கள்

மீனம் (பூரட்டாதி 4ம் பாதம், உத்திரட்டாதி, ரேவதி) பலன்கள்: எதையும் திட்டமிட்டு செய்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்குள் ஜென்ம குருவாக அமர்ந்து உங்களுக்கு ஏகப்பட்ட மன உளைச்சலை தந்து, எதிலும் ஈடுபாடு இல்லாமல் செய்தாரே! எங்கு சென்றாலும் எதிர்ப்புகள், ஏமாற்றங்கள் தானே மிஞ்சியது குடும்பத்தினர் உங்களை ஒரு பொருட்டாக மதிக்காமல் புறக்கணித்தார்களே! இப்படி பலவகையிலும் உங்களை அலைக்கழித்த குருபகவான் ஏப்.22, 2023 முதல் மே 01, 2024 வரை உங்கள் ராசிக்கு தனவீடான 2-ம் வீட்டில் அமர்வதால் அடிமனதில் இருந்த போராட்டம் நீங்கும். சந்தேகத்தால் பிரிந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். அடுக்கடுக்காக செலவுகள் வந்து அலைக்கழித்த நிலை மாறி, இனி எதையும் சமாளிக்கும் வகையில் பணபலம் கூடும். குடும்ப ஸ்தானத்தில் குரு அமர்வதால் வீட்டில் நிம்மதியுண்டாகும்.

சுப நிகழ்ச்சிகள் நடக்கும். உறவினர்கள் தேடி வருவார்கள். சோர்ந்த முகம் மலரும். வரவேண்டிய பணமெல்லாம் வந்து சேரும். வங்கியில் அடமானமாக வைத்திருந்த வீட்டுப் பத்திரத்தை மீட்பீர்கள். அநாவசியமாகப் பேசி நல்ல நண்பர்களையெல்லாம் இழந்தீர்களே, இனி நிதானித்துப் பேசுவீர்கள். உடன்பிறந்தவர்களுடன் இருந்த உரசல் போக்கு நீங்கும். பெரிய நோயெல்லாம் இருப்பது போல பயந்தீர்களே! மருத்துவச் செலவுகளும் அதிகமானதே! இனி ஆரோக்கியம் பற்றிய பயம் நீங்கும். வீட்டில் பேச ஆரம்பித்தாலே பிரச்சினைகள் வெடித்ததே! இனி இதமாகப் பேசி சாதித்துக் காட்டுவீர்கள்.

குரு பகவான் ஆறாவது வீட்டை பார்ப்பதால் எதிர்த்தவர்கள் அடங்குவார்கள். கடன் பிரச்சினைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். வீண் வதந்திகளிலிருந்து விடுபடுவீர்கள். மறைமுக எதிரிகளை கண்டறிந்து ஒதுக்குவீர்கள். அலைச்சல்கள் குறையும். குருபகவான் எட்டாவது வீட்டை பார்ப்பதால் எதிர்பாராத வகையில் பணம் வரும். திட்டமிட்டபடி அயல்நாட்டுப் பயணங்கள் கூடி வரும். விசா பெறுவதில் தடையிருக்காது. பத்தாவது வீட்டையும் பார்ப்பதால் கவுரவப் பதவிகள் தேடி வரும். வி.ஐ.பிகளுக்கு நெருக்கமாவீர்கள். வேலையில்லாமல் தவித்துக் கொண்டிருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப். 06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டங்களில் உங்கள் ரசனைக்கேற்ற வீடு அமையும். புது முதலீடுகள் செய்வீர்கள். ஷேர் மூலம் பணம் வரும். குடும்பத்தினருடன் உல்லாசப் பயணங்கள் சென்று வருவீர்கள். பெரிய பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வழக்கு மூலம் பணம் வரும். வேலை கிடைக்கும். தங்கம் சேரும். மகளுக்கு வரன் அமையும். உறவினர்களுடன் இருந்த பிணக்குகள் நீங்கும். போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப். 06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால் இளைய சகோதர வகையில் உதவிகள் கிடைக்கும். பெரிய பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். தெலுங்கு, இந்தி பேசுபவர்கள் உதவுவார்கள். சொத்துப் பிரச்சினை தீரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள்.

ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் செலவினங்கள் அதிகரிக்கும். மறைமுக எதிரிகளை இனம் கண்டறிவீர்கள். குடும்ப அந்தரங்க விஷயங்களை வெளியாரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.

செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். வாகனம் வாங்குவீர்கள். திருமணம் கூடி வரும்.

வியாபாரத்தில் ஆர்வம் பிறக்கும். பிரச்சினை தந்த பங்குதாரர்களை நீக்குவீர்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு நஷ்டப்படாமல், சந்தை நிலவரத்தை உற்று நோக்கி புது முதலீடு செய்யுங்கள். லாபம் கணிசமாக உயரும். தேங்கிக் கிடந்த சரக்குகள் விற்றுத் தீரும். வேலையாட்கள் பொறுப்பாக நடந்து கொள்வார்கள். மே, ஜூன், ஆகஸ்ட், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். புது ஏஜென்ஸி எடுப்பீர்கள். ஹோட்டல், பைனான்ஸ், கெமிக்கல், கல்வி நிறுவனங்கள், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். விலகிச் சென்ற பங்குதாரர்கள் மீண்டும் தேடி வருவார்கள்.

உத்தியோகத்தில் வேலை நிரந்தரமாகும். எதற்கெடுத்தாலும் உங்களையே குற்றம் சொல்லிக் கொண்டிருந்த மேலதிகாரி இனி பணிந்து போவார். சக ஊழியர்கள் உங்களை ஏளனப்படுத்திப் பேசினார்களே! இனி உங்களை மதிப்பார்கள். பதவி உயர்வு சம்பந்தப்பட்ட வழக்கில் உங்கள் பக்கம் வெற்றி கிடைக்கும். ஜூன், ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் வேறு சில வாய்ப்புகள் தேடி வரும். சம்பளம் உயரும். கணினி துறையினர் இழந்த சலுகைகளை மீண்டும் பெறுவார்கள்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் சிக்கல்களிலிருந்து உங்களை விடுவிப்பதுடன் எங்கும் எதிலும் சாதிக்கும் வல்லமையை அள்ளித் தரும்.

பரிகாரம்: சுவாமிமலை ஸ்ரீமுருகப் பெருமானை சஷ்டி திதி நடைபெறும் நாளில் சென்று தரிசியுங்கள். தந்தையால் கைவிடப்பட்டவர்களுக்கு உதவுங்கள். மேன்மேலும் வெற்றி பெறுவீர்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x