Last Updated : 21 Apr, 2023 07:58 PM

Published : 21 Apr 2023 07:58 PM
Last Updated : 21 Apr 2023 07:58 PM

குரு பெயர்ச்சி 2023 - 24 | மகரம் ராசியினருக்கு எப்படி? - முழுமையான பலன்கள்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1,2 பாதங்கள்) பலன்கள்: நிர்வாகத் திறமை அதிகமுள்ளவர்களே! இதுவரை உங்களின் முயற்சி வீடான மூன்றாம் வீட்டில் அமர்ந்துகொண்டு, உங்களை முடக்கி வைத்த குரு பகவான் ஏப்.22, 2023 முதல் மே 01, 2024 வரை நான்காவது வீட்டில் அமர்வதால் நீங்கள் கொஞ்சம் கவனமாகத்தான் இருக்க வேண்டும். சேமிப்புகள் கரையும். உங்களைப் பற்றியோ, உங்கள் குடும்பத்தாரைப் பற்றியோ உறவினர்கள், நண்பர்கள் விமர்சித்துப் பேசுவதைக் கேட்டு மனைவி மக்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். உங்களின் கோபதாபங்களை, கூடா பழக்கவழக்கங்களை உங்கள் மனைவி சில நேரங்களில் சுட்டிக் காட்டுவார். அதற்காக வருத்தப்படாதீர்கள். உணர்ச்சிவசப்படாமல் அறிவுப் பூர்வமாக முடிவெடுப்பது நல்லது. விரக்தி, சோர்வு, டென்ஷன் அதிகரிக்கும். தாயாருக்கு மருத்துவச் செலவுகள் வந்துபோகும்.

நீண்ட தூர, இரவுநேரப் பயணங்களை தவிர்க்கப் பாருங்கள். வாகன விபத்துகள் வரக்கூடும். நண்பர்கள், உறவினர்களிடம் விட்டுக்கொடுத்துப் போகவும். நீர், நெருப்பு, மின்சாரத்தை கவனமாக கையாளுங்கள். சொத்து சம்பந்தப்பட்ட வழக்குகளை கவனமாக கையாளுங்கள். மகளுக்கு கல்யாணம் திடீரென ஏற்பாடாகும்.

மகனுக்கு இருந்த கூடாபழக்க வழக்கங்கள் நீங்கும். குரு உங்கள் ராசிக்கு 8-ம் வீட்டை பார்ப்பதால் வேற்று மொழி, மதத்தினரால் உதவியுண்டு. பிள்ளைகளை அன்பாக நடத்துங்கள். அவர்களின் உடல்நலத்தில் கவனம் தேவை. உயர் கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு பிள்ளைகள் உங்களை விட்டுப் பிரிவார்கள். உணவு விஷயங்களில் கட்டுப்பாடு தேவை. நேரந்தவறி சாப்பிடுவதை தவிர்க்கவும்.

சொத்து வாங்குவது விற்பதில் எச்சரிக்கையாக இருங்கள். பால்ய சிநேகிதர்களால் துரோகம், ஏமாற்றங்களை சந்திக்க நேரிடும். உங்களின் 10-ம் வீட்டை குரு பார்ப்பதால் உத்தியோகத்தில் மகிழ்ச்சி தங்கும். பிரபலங்களின் சந்திப்பு நிகழும். புதிய பொறுப்புகள் சேரும். உங்களுக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கும். புது வாகனம் வாங்குவீர்கள்.

எந்தப் பிரச்சினைக்காகவும் நீதிமன்றம் போகாமல் லாபமோ நஷ்டமோ பேசித் தீர்த்துக் கொள்ளப் பாருங்கள். உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டை குரு பார்ப்பதால் சுபச்செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிக காரியங்களுக்காகவும் அதிகம் செலவு செய்வீர்கள். நேரம் கிடைக்கும் போதெல்லாம் யோகா, தியானம் செய்யுங்கள். அரசியல்வாதிகள் ஆதாரமின்றி யாரையும் விமர்சிக்க வேண்டாம். அண்டை அயலாரை அரவணைத்துப் போங்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டங்களில் கொஞ்சம் அலைச்சலும், செலவினங்களும் இருக்கும். பழைய நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடியுங்கள். ஊர் பொது விவகாரங்களில் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் உங்கள் உழைப்பை பயன்படுத்திக் கொள்வார்கள். தேவையற்ற விவாதங்களில் ஈடுபட்டு, நண்பர்கள், உறவினர்கள் மத்தியில் உங்கள் மதிப்பை குறைத்துக் கொள்ளாதீர்கள். வீண் அலைச்சலால் உடல்நலம் கெடும். உடல் ஆரோக்கியத்தையும் பார்த்துக் கொள்ளவும்.

ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை உங்கள் யோகாதிபதியான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் எதிர்பாராத பணவரவு, திடீர் யோகம் உண்டு. பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். காற்றோட்டம், தண்ணீர் வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். தள்ளிப் போன கல்யாணம் முடியும். வீட்டை கட்டி முடிப்பீர்கள். குழந்தை பாக்கியம் உண்டு. புது வேலை கிடைக்கும். சமையலறையை நவீனமாக்குவீர்கள். புதிய நண்பர்கள் மூலம் சில ஆதாயங்கள் உண்டு. குழந்தைகளின் மனதறிந்து அதற்கு ஏற்றார்போல் நடந்து கொள்ளுங்கள். அவர்களின் எதிர்காலம் பற்றிய சிந்தனை உங்கள் மனதில் இருக்கட்டும். அவர்கள் விரும்பும் படிப்பிலேயே அவர்களை சேர்க்கவும்.

ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். வழக்கு விவகாரத்தில் திருப்பம் உண்டாகும். நீண்ட நாளாக பேசாமல் இருந்த உறவினர்கள் உங்களிடம் வலிய வந்து பேசுவார்கள். விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை. பழையபடி உறவினர்களுடன் பேசி, மகிழ்ச்சியாக இருக்க முயற்சி செய்யவும். பழைய பகையை மனதில் நினைத்துக் கொண்டிருக்க வேண்டாம். குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.

செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் மின்னணு, மின்சார சாதனங்களை கவனமாக கையாளுங்கள். கர்ப்பிணிப் பெண்கள், மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். மகளின் திருமண விஷயத்தில் கவனமுடன் இருக்கவும். வீடு, வாகன பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். பழைய வீட்டை சீரமைத்து, விரிவுபடுத்தி கட்டுவீர்கள். பூர்வீக சொத்துப் பிரச்சினைகள் தீர வழி கிடைக்கும். சகோதரர்கள் ஆதரவாக இருப்பார்கள். எதிர்காலம் குறித்த கவலை தீரும்.

வியாபாரத்தில் பெரிய முதலீடுகளை தவிர்த்துவிட்டு, இருப்பதை வைத்து முன்னேறப் பாருங்கள். பழைய பாக்கிகளை கனிவாக பேசி வசூலியுங்கள். வேலையாட்கள் அவ்வப்போது குடைச்சல் கொடுப்பார்கள். அவர்களிடம் தொழில் ரகசியங்களை சொல்லிக் கொண்டிருக்காதீர்கள். வாடிக்கையாளர்களை அதிகப்படுத்த புதிய அணுகுமுறைகள் நல்லது. விளம்பர யுக்திகளையும் கையாளுங்கள். உணவு, கெமிக்கல், எண்ணெய் வகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் கொஞ்சம் முரண்பாடாகப் பேசுவார்கள். நீங்கள் கொஞ்சம் வளைந்து கொடுத்துப் போகவும்.

காரியத்தை விட வீரியம் பெரிதல்ல. வெற்றி மட்டுமே உங்கள் இலக்காக இருக்கட்டும். உத்தியோகத்தில் பல வேலைகளை நீங்களே பார்க்க வேண்டி வரும். மூத்த அதிகாரி பாராட்டுவார். ஆனால் நேரடி அதிகாரி உங்களைப் பற்றிக் குறைக் கூறிக் கொண்டிருப்பார். பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமாக கிடைக்கும். உயர் அதிகாரிகளைப் பற்றி நீங்கள் யாரிடமும் விமர்சனம் செய்யாதீர்கள். சக ஊழியர்களின் ஆதரவு ஓரளவு இருக்கும். அயல்நாட்டுத் தொடர்புள்ள நிறுவனங்களிலிருந்து உங்களுக்கு அழைப்பு வரும்.

குருபகவான் 10-ம் வீட்டை பார்ப்பதால் சவால்களை சமாளிப்பீர்கள். கணினி துறையினர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கத்தான் செய்யும். இருப்பதை விட்டுவிட்டு பறப்பதற்கு விரும்ப வேண்டாம். இருக்கும் வேலையை தக்கவைத்துக் கொள்ளப் பார்க்கவும்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் வேலைச் சுமையையும், மன உளைச்சலையும் தந்தாலும் பல வகையிலும் உங்களை திறமைசாலியாக மாற்றும்.

பரிகாரம்: கும்பகோணம் அய்யாவாடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீபிரத்யங்கரா தேவியை அமாவாசை நாளில் சென்று வணங்குங்கள். துப்புரவு பணியாளருக்கு உதவுங்கள். முயற்சிகள் பலிதமாகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x