Last Updated : 21 Apr, 2023 05:14 PM

Published : 21 Apr 2023 05:14 PM
Last Updated : 21 Apr 2023 05:14 PM

குரு பெயர்ச்சி 2023 - 24 | சிம்மம் ராசியினருக்கு எப்படி? - முழுமையான பலன்கள்

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்) பலன்கள்: மனதில் பட்டதை மறைக்காமல் பேசும் நீங்கள், பாகுபாடு பார்க்காமல் உதவுபவர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு மறைவு ஸ்தானமான 8ம் வீட்டில் அமர்ந்து செயலில் தடுமாற்றத்தையும், கையில் பணமில்லாமல் கலங்கவும் செய்த குருபகவான் ஏப்.22, 2023 முதல் மே.01, 2024 வரை இப்பொழுது உங்கள் ராசிக்கு பாக்கிய வீடான 9ம் வீட்டில் நுழைவதால் வாழ்வில் புது வியூகங்களை அமைத்து முன்னேறுவீர்கள். இனி எதைத் தொட்டாலும் எளிதாக முடியும்.

கணவன் - மனைவிக்குள் மனம்விட்டுப் பேசுவீர்கள். தள்ளிப் போன சுபகாரியங்கள் கூடிவரும். இனி கையில் நாலு காசு தங்கும். வருங்காலத்துக்காக சேமிப்பீர்கள். குடும்பம், பொது இடங்களில் முதல் மரியாதை கிடைக்கும். வங்கியிலிருந்த நகையை மீட்பீர்கள். வீடு, மனை வாங்குவீர்கள். உங்கள் கனவு இல்லத்தை கட்டி முடிப்பீர்கள்.

குருபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் துவண்டிருந்த உங்கள் முகம் இனி பிரகாசிக்கும். பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும். வட்டிக்கு வாங்கிய கடனை கொஞ்சம் கொஞ்சமாக தந்து முடிப்பீர்கள். செய்யும் வேலைகளில் இனி முதல் முயற்சியிலேயே வெற்றி கிட்டும். குரு உங்களின் 3ம் வீட்டை பார்ப்பதால் இளைய சகோதர வகையில் இருந்த மனத்தாங்கல் நீங்கும். விலையுயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள். குலதெய்வப் பிராத்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

குரு உங்களின் 5ம் வீட்டை பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். மகனுக்கு அயல் நாட்டில் படிப்பு, வேலை கிடைக்கும். கல்யாணம் சிறப்பாக நடக்கும். பழைய சொந்தங்கள் தேடி வரும். அரசியல்வாதிகள் வீண் விமர்சனங்களை தவிர்ப்பது நல்லது. தலைமையின் சொந்த விஷயங்களில் தலையிடும் அளவுக்கு நெருக்கமாவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர்கள், நண்பர்களால் பயனடைவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக் கட்டத்தில் மகம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை, சற்றே உடல் நலக்குறைவு வந்து நீங்கும். பணவரவு உண்டு. செல்வாக்கு கூடும். கவுரவப் பதவிகள் தேடி வரும். சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். இழுபறியாக இருந்த வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும்.

ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால் மகம் நட்சத்திரக்காரர்களுக்கு திடீர் பணவரவு, எதிலும் வெற்றியுண்டு, எதிரிகளை வீழ்த்துவீர்கள், திருமணம் கூடிவரும். ஆனால் பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சலும், சிறுசிறு தடைகளும் வந்து நீங்கும். முன்னேற்றம் தடைபடாது.

ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் உங்கள் ராசிநாதனான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் நிர்வாகத் திறமை கூடும். அரசால் ஆதாயம் உண்டு. வேலை கிடைக்கும்.

செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் பிரபலங் களின் உதவியுடன் தள்ளிப் போன காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். பணவரவு உண்டு. செல்வாக்கு அதிகரிக்கும். மகளுக்கு திருமணம் கூடி வரும்.

வியாபாரத்தில் இருந்து வந்த மந்த நிலை மாறும். பெரிதாக முதலீடு செய்து போட்டியாளர்களை திகைக்கச் செய்வீர்கள். பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலிப்பீர்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். எலக்ட்ரிக்கல்ஸ், டிராவல்ஸ், கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயமடைவீர்கள். பங்குதாரர்களிடம் இருந்து வந்த கருத்து மோதல்கள் நீங்கும்.

உத்தியோகத்தில் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மேலதிகாரிக்கு நெருக்கமாவீர்கள். சக ஊழியர்களிடம் இருந்து வந்த மனக்கசப்புகள் நீங்கும். சிலருக்கு வேறு நல்ல புது வாய்ப்புகளும் தேடி வரும். கணினி துறையினர்களுக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் தேடி வரும்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் எங்கும் எதிலும் வெற்றியையும், எதிர்பாராத வளர்ச்சியையும் தருவதாகவும் அமையும்.

பரிகாரம்: சென்னைக்கு தெற்கேயுள்ள திருக்கழுக்குன்றத்தில் அருள்பாலிக்கும் வேதகிரீஸ்வரரையும், நந்தீஸ்வரரையும் பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். புற்று நோயாளிகளுக்கு உதவுங்கள். செழிப்பு கூடும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x