Last Updated : 21 Apr, 2023 04:23 PM

Published : 21 Apr 2023 04:23 PM
Last Updated : 21 Apr 2023 04:23 PM

குரு பெயர்ச்சி 2023 - 24 | கடகம் ராசியினருக்கு எப்படி? - முழுமையான பலன்கள்

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) பலன்கள்: ஈர மனசும் இயல்பான பேச்சும் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 9வது வீட்டில் அமர்ந்திருந்து ஓரளவு வசதி வாய்ப்புகளையும், புதிய தொடர்புகளையும் கொடுத்த குருபகவான் இப்போது ஏப்.22, 2023 முதல் மே 01, 2024 வரை உங்கள் ராசிக்கு பத்தாவது வீட்டுக்குள்ளேயே அமர்ந்திருப்பதால் எதிலும் இழுபறி நிலை உண்டாகும். வீண் விவாதங்களை தவிர்ப்பது நல்லது. என்றாலும் குருவின் பார்வையால் பல நன்மை உண்டாகும். உங்கள் ராசிக்கு 2ம் வீடான வாக்கு ஸ்தானத்தை குரு பார்ப்பதால் பேசியே பல பெரிய காரியங்களை முடிப்பீர்கள். வர வேண்டிய பணம் வரும்.

பழைய சொத்துப் பிரச்சினைகளுக்கு சுமுகமான தீர்வு கிடைக்கும். குடும்பத்தில் ஓரளவு நிம்மதி கிட்டும். பார்வை கோளாறு நீங்கும். உங்கள் ராசிக்கு 4ம் வீட்டை குரு பார்ப்பதால் தாய்மாமன் வகையிலிருந்த மனக்கசப்புகள் தீரும். ஆன்மிகத்தில் ஈடுபாடு அதிகரிக்கும். நல்ல வீட்டுக்கு மாறுவீர்கள். சிலருக்கு வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். பழுதாகியிருந்த வாகனத்தை மாற்றுவீர்கள். 6ம் வீட்டை குரு பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை தீர்க்க வழி பிறக்கும். வெளிநாட்டிலிருப்பவர்களின் உதவி கிடைக்கும். அரசியல்வாதி களுக்கு சின்ன சின்ன குழப்பங்கள், டென்ஷன் வந்து போகும். தலைமையின் பார்வை உங்கள் மீது விழும்.

யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். உத்தியோக ஸ்தானமான பத்தாம் வீட்டில் குரு நிற்பதால் வேலைச்சுமை வாட்டியெடுக்கும். பிள்ளைகளின் பொறுப்பில்லாத்தனத்தை நினைத்து வருந்துவீர்கள். அவர்கள் போக்கிலேயே சென்று திருத்தப் பாருங்கள். பிள்ளைகளின் உயர் கல்விக்காக அதிகம் போராட வேண்டியிருக்கும். கல்யாணமும் இழுபறியாகி முடியும். உடன் பிறந்தவர்கள் பல தருணங்களில் தொந்தரவு தருவார்கள். உங்கள் புகழை கெடுப்பதற்கு சிலர் முயல்வார்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் செலவுகள் அதிகரிக்கும் என்றாலும் எதிர்பாராத பணவரவு உண்டு. பிரபலங்களின் நட்பு கிடைக்கும்.

ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை பரணி நட்சத்திரத்தில் செல்வதால் மூத்த சகோதர வகையில் உதவி உண்டு. மறைமுக எதிரிகளை கண்டறிவீர்கள். சொத்துகள் வாங்குவது, விற்பதில் கவனம் தேவை.

ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தை தந்து முடிப்பீர்கள். உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும்.

செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் வீண் அலைச்சல், தர்ம சங்கடமான சூழ்நிலைகள், தாயாருக்கு தைராய்டு, முதுகுத் தண்டில் வலி வந்து போகும்.

வியாபாரத்தில் போட்டியாளர்களை சமாளிக்க, விளம்பர யுக்திகளை கையாளுங்கள். சந்தை நிலவரங்களையும் அவ்வப்போது அறிந்து கொள்வது நல்லது. மற்றவர்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் முடிவெடுக்கப் பாருங்கள். வேலையாட்கள் சில சமயங்களில் முரண்டு பிடிப்பார்கள். கமிஷன், கெமிக்கல், எலக்ட்ரிக்கல் மற்றும் துணி வகைகளால் ஆதாய மடைவீர்கள். கூட்டுத் தொழிலில் முரண்டு பிடித்த பங்குதாரர்கள் வளைந்து வருவார்கள். ஜூன், செப்டம்பர் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகத்தில் சின்ன சின்ன அவமானங் களையும், இடமாற்றங்களையும் சந்திக்க நேரிடும். வேலை பளு அதிகரிக்கும். மற்றவர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். மேலதிகாரியால் அலைக்கழிக்கப்படுவீர்கள். அநாவசியமாக விடுப்புகள் எடுப்பதை நிறுத்துங்கள். சக ஊழியர்களால் சில இன்னல்கள் வரத்தான் செய்யும். செப்டம்பர், அக்டோபர், ஜனவரி மாதங்களில் உயர்வு உண்டு. கணினி துறையினருக்கு அயல்நாட்டு வாய்ப்புகள் வரும்.

மொத்தத்தில் இந்த குருமாற்றம் உங்களுக்கு வேலைச் சுமையையும், இழப்புகளையும் தந்தாலும் செயற்கரிய செயல்களையும் செய்ய வைக்கும்.

பரிகாரம்: கும்பகோணம் அருகிலுள்ள திருக்கொள்ளம்புதூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீ வில்வ வனநாதரையும், ஸ்ரீதட்சிணாமூர்த்தியையும் சனிக்கிழமையில் சென்று தரிசியுங்கள். மூட்டைத் தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். முயற்சிகள் பலிதமாகும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x