Last Updated : 21 Apr, 2023 03:34 PM

Published : 21 Apr 2023 03:34 PM
Last Updated : 21 Apr 2023 03:34 PM

குரு பெயர்ச்சி 2023 - 24 | ரிஷபம் ராசியினருக்கு எப்படி? - முழுமையான பலன்கள்

ரிஷபம் (கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2, பாதங்கள்) பலன்கள்: இதயம் அழுதுக் கொண்டிருந்தாலும், உதட்டில் புன்னகையை உதிர்ப்பவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் இருந்து ஓரளவு பணப்புழக்கத்தையும், வசதி வாய்ப்பையும், பிரபலங்களின் அறிமுகத்தையும் கொடுத்து வந்த குருபகவான் ஏப்.22, 2023 முதல் மே 01, 2024 வரை உங்களின் விரய வீடான 12 ம் வீட்டிலேயே அமர்வதால் செலவுகளை குறைத்துக் கொள்ளவும். எதிர்பாராத வகையில் முன்னேற்றம் ஏற்படும். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள்.

குடும்பத்தில் விட்டுக் கொடுத்து போகவும். நினைத்த காரியங்கள் கூட இழுபறியாகி முடியும். யாரையும் நம்பி எந்த பொறுப்பையும் ஒப்படைக்க வேண்டாம். புகழ் பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். குரு பகவான் உங்கள் 4 ம் வீட்டை பார்ப்பதால் தாயாருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தாய்வழி உறவினர்களால் உதவியுண்டு. பூர்வீகச் சொத்து கைக்கு வந்து சேரும். வீடு வாங்கும் திட்டம் இப்போது நிறைவேறும். உங்களிடம் இருந்த கூடாப்பழக்கங்கள் குறையும்.

குரு 6 ம் வீட்டைப் பார்ப்பதால் மறைமுக எதிரிகளை கண்டறிவீர்கள். சில நேரங்களில் எதிரிகளால் ஆதாயம் உண்டாகும். கால் வலி, இடுப்பு வலி தீரும். இழுபறியான வழக்குகள் இனி சாதகமாக முடியும். வேற்று மதத்தினர், மொழியினரால் ஆதாயமுண்டு. குரு 8 ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாட்டு பயணங்கள் இருக்கும். வெளிமாநிலத்தினர் உதவுவர். அரசு விஷயங்கள் உடனே முடியும். அரசியல்வாதிகள் தலைமையை பற்றி விமர்சனம் செய்யாதீர்கள். புது பதவிக்கு ஆசைப்பட வேண்டாம்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டங்களில் உங்கள் பலம் பலவீனத்தை உணர்வீர்கள். மருத்துவச் செலவுகள், திடீர் பயணங்கள் உண்டு. மகான்கள், சித்தர்களின் நட்பு கிடைக்கும். குலதெய்வப் பிரார்த்தனைகளை முடிப்பீர்கள்.

ஜூன் 23, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை உங்கள் ராசிநாதனான சுக்கிரனின் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் திடீர் பணவரவு உண்டு. பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். கவுரவப் பதவிகள் தேடி வரும். தடைபட்ட கல்யாணம் முடியும்.

ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் உங்கள் சுகாதிபதியான சூரியனின் நட்சத்திரமான கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் அரசால் ஆதாயமடைவீர்கள். ஆனாலும் பெற்றோருக்கு மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும். வீட்டை சீரமைப்பீர்கள்.

செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் நீண்ட நாளாக தடைபட்டு, தள்ளிப் போன காரியங்களெல்லாம் முடிவடையும். கணவன் மனைவிக்குள் இருந்து வந்த பனிப்போர் நீங்கும்; என்றாலும் மறைமுக எதிர்ப்புகள், பணப் பற்றாக்குறை, இனம் தெரியாத கவலைகள் வந்துச் செல்லும்.

வியாபாரத்தில் புதிய மாற்றங்களை கொண்டு வருவீர்கள். பழைய பாக்கிகள் வசூலாகும். வங்கிக் கடன் பெற்று புது முதலீடு செய்வீர்கள். கமிஷன், ஏஜென்சி, மருந்து, உர வகைகளால் லாபமடைவீர்கள். இடைத்தரகர்களை நம்பி புது வியாபாரத்தில் நுழைய வேண்டாம். பிப்ரவரி, மார்ச் மாதங்களில் புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் சின்னச் சின்ன மனஸ்தாபங்கள் வரத்தான் செய்யும். நீங்கள் கொஞ்சம் அனுசரித்து போவது நல்லது.

உத்தியோகத்தில் வேலைச்சுமை வாட்டியெடுக்கத்தான் செய்யும். மூத்த அதிகாரிகளிடம் அதிக நெருக்கமும் வேண்டாம், பகையும் வேண்டாம். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கப் பாருங்கள். செப்டம்பர், மார்ச் மாதங்களில் பதவி உயர்வுக்கு உங்களுடைய பெயர் பரிசீலிக்கப்படும். முக்கிய கோப்புகளில் கையெழுத்திடுவதற்கு முன்பாக நிதானிப்பது நல்லது. கணினி துறையினருக்கு வேலை பளு அதிகரிக்கும். அதிக நேரம் உழைக்க வேண்டி வரும்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் நாலாவிதத்திலும் உங்களுக்கு அனுபவ அறிவை தருவதுடன், படிப்படியாக முன்னேற்றத்தையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: திருச்சிக்கு அருகே திருவெறும்பூரில் உள்ள சிவாலயத்தில் அருள்பாலிக்கும் ஸ்ரீ பாலச்சந்திர விநாயகரையும், ஸ்ரீ எறும்பீஸ்வரரையும், ஸ்ரீ தட்சிணாமூர்த்தியையும் வியாழக்கிழமையில் தரிசியுங்கள். விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும். இளநீரை தானமாகக் கொடுங்கள்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x