Last Updated : 21 Apr, 2023 03:06 PM

Published : 21 Apr 2023 03:06 PM
Last Updated : 21 Apr 2023 03:06 PM

குரு பெயர்ச்சி 2023 - 24 | மேஷம் ராசியினருக்கு எப்படி? - முழுமையான பலன்கள்

மேஷம் (அஸ்வினி, பரணி, கார்த்திகை 1ம் பாதம்) பலன்கள்: பரந்த மனதும், பிரதிபலன் பாராமல் உதவும் பண்பும் கொண்டவர்களே! இதுவரை உங்கள் ராசிக்கு 12-வது வீட்டில் அமர்ந்து கொண்டு வீண்பழி, விரயச் செலவு, மன உளைச்சல் என உங்கள் நிம்மதியை கெடுத்த குருபகவான் இப்பொழுது ஏப். 22, 2023 முதல் உங்கள் ராசிக்குள் நுழைந்து மே 01, 2024 வரை ஜென்மகுருவாக அமர்வதால் உடல் நிலை பாதிக்கும். தலைச்சுற்றல், ஹீமோகுளோபின், கால்சியம் சத்துக்குறைவு என வரக்கூடும். கணவன் மனைவிக்குள் வீண் சந்தேகம், சச்சரவு, பிரிவு வரக்கூடும்.

குருவின் பார்வையால் கெடுபலன்கள் குறையும். குருபகவான் உங்களின் 5 ம் வீட்டை தனது அருட்பார்வையால் பார்ப்பதால் குழந்தை பாக்கியம் உண்டாகும். பிள்ளைகளைப் பற்றிய கவலைகள் விலகும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். சொத்து சம்பந்தப்பட்ட விஷயங்கள் சாதகமாக அமையும். பழைய வாகனத்தை மாற்றுவீர்கள். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்களுக்கு குடும்பத்துடன் சென்று வருவீர்கள். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது.

குரு பகவான் 7 ம் வீட்டையும் பார்ப்பதால் மனைவி வழியில் ஓரளவு மகிழ்ச்சியுண்டு. வீட்டில் தள்ளிப் போய் கொண்டிருந்த கல்யாண வைபவங்கள் இனி கோலாகலமாக நடக்கும். ஆன்மிக காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள். சித்தர்களின் ஆசி கிட்டும். வழக்குகளிலிருந்த பின்னடைவு விலகும்.

பாக்ய வீடான 9 ம் வீட்டில் குருவின் பார்வை விழுவதால் வரவேண்டிய பணம் தக்கசமயத்தில் வந்து கைகொடுக்கும். தந்தையின் உடல்நிலை சீராக இருக்கும். அவர்வழி சொந்தங்களால் ஆதாயமுண்டு. தைரியமாக முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். அரசியல்வாதிகள் கோஷ்டி பூசலில் சிக்காமல் இருப்பது நல்லது. திடீரென்று புதிய பதவியில் அமர்த்தப்படுவீர்கள்.

குரு பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: ஏப்.22, 2023 முதல் ஜூன் 23, 2023 வரை மற்றும் நவ.23, 2023 முதல் பிப்.06, 2024 வரை உள்ள காலகட்டங்களில் குருபகவான் அசுவினி நட்சத்திரத்தில் செல்வதால் அசுவினி நட்சத்திரக்காரர்கள் மேற்கண்ட நாட்களில் எதிலும் கவனமாக இருக்க வேண்டும். குறிப்பாக பண இழப்பு, ஏமாற்றம், வி.ஐ.பிகளுடன் கருத்து மோதல், குடும்பத்தில் எதிர்ப்புகள் வந்து நீங்கும்.

ஜூன் 06, 2023 முதல் நவ.22, 2023 வரை மற்றும் பிப்.06, 2024 முதல் ஏப்.17, 2024 வரை குருபகவான் பரணி நட்சத்திரத்தில் செல்வதால் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு மறைமுக எதிர்ப்புகள், மரியாதைக் குறைவான சம்பவங்கள் நிகழக்கூடும்.

ஏப்.17, 2024 முதல் மே 01, 2024 வரை குருபகவான் கார்த்திகை 1-ம் பாதத்தில் செல்வதால் அந்த பாதத்தில் பிறந்தவர்களுக்கு அசதி, சோர்வு, மன இறுக்கம், ஏமாற்றம் வந்து போகும்.

செப்.11, 2023 முதல் டிச.20, 2023 வரை குருபகவான் வக்ர கதியில் செல்வதால் பழுதாகிக் கிடந்த மின்னணு, மின்சார சாதனங்கள் புதிதாக வாங்குவீர்கள். சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். பிதுர்வழி சொத்து கைக்கு வரும்.

வியாபாரத்தில் சந்தை நுணுக்கங்களை தெரிந்து கொண்டு முதலீடு செய்யுங்கள். சிலரின் தவறான அறிவுரையால் நஷ்டப்படுவீர்கள். கடைக்கு வரும் வாடிக்கையாளர்களை அன்பாக நடத்துங்கள். ஜூன், பிப்ரவரி மாதங்களில் லாபம் அதிகரிக்கும். ஸ்டேஷனரி, உணவு, கெமிக்கல், ஏற்றுமதி - இறக்குமதி வகைகளால் ஆதாயம் அதிகரிக்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்களிடம் அவ்வப்போது சலசலப்புகள் இருந்தாலும் பெரிய அளவில் பாதிப்புகள் இருக்காது.

உத்தியோகத்தில் போராட்டங்கள் ஓயும். சவால்களை சமாளிக்க சக்தி கிடைக்கும். கவுரவப் பதவிகளால் ஓய்வெடுக்க முடியாத நிலை உருவாகும். மேலதிகாரிகள் மதிப்பார்கள். தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் பதவி உயரும். சம்பளமும் கூடும். ஆனால் அவ்வப்போது மறைமுக எதிர்ப்புகளையும் சந்திக்க வேண்டி வரும். ஜூன், பிப்ரவரி மாதங்களில் புதிய நிறுவனங்களிலிருந்து வாய்ப்புகள் வரும். கணினி துறையினருக்கு சம்பளம் உயரும்.

மொத்தத்தில் இந்த குரு மாற்றம் உங்கள் உடலையும், மனதையும் உரப்படுத்துவதுடன், பிரச்சினைகளை எதிர்கொள்ளும் மனப்பக்குவத்தையும் ஓரளவு பணவரவையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் - உத்திரமேரூருக்கு அருகிலுள்ள திருப்புலிவனம் எனும் ஊரில் அருள்பாலிக்கும் சிம்ம தட்சிணாமூர்த்தியை தரிசியுங்கள். பழைய கல்வி நிறுவனத்தை புதுப்பிக்க உதவுங்கள். நிம்மதி கிட்டும்.

- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x