Published : 14 Jan 2023 05:40 PM
Last Updated : 14 Jan 2023 05:40 PM

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 - கும்பம் ராசியினருக்கு எப்படி?

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

கும்பம் (அவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள்) குப்பை, கூவம், ஓடை, ஆறு எல்லாம் வந்து கலந்தாலும் கொஞ்சமும் உவர்ப்புத்தன்மை மாறாத கடலைப் போல இழப்பு, ஏமாற்றம், தோல்வி, துக்கம் வந்தாலும் ஏற்றுக் கொள்பவர்களே. சொன்னது யாரென்று பார்க்காமல், சொல்லப்பட்டதை பற்றி யோசிப்பவர்களே. கொடுத்துச் சிவந்தவர்களே!

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் ராசிக்குள்ளேயே ஜென்மச் சனியாக அமர்கிறார். கவலை வேண்டாம். நல்லதையே செய்வார். ஆட்சிப் பெற்று சுபத்தன்மை அடைவதால் சனிபகவான் பணவரவையும் அதிகரிப்பார். இனி நிம்மதி பிறக்கும். சந்தேகத்தால் பிரிந்திருந்த கணவன்-மனைவி ஒன்று சேர்வீர்கள். தினந்தோறும் எதிர்பார்த்து ஏமாந்த பணமெல்லாம் வந்து சேரும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள்.

ஜென்மச்சனி என்பதால் உடல் ஆரோக்கியத்தில் மட்டும் கொஞ்சம் கவனம் செலுத்துங்கள். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை பரிசோதித்துக் கொள்ளுங்கள். தோலில் நமைச்சல், எரிச்சல், கட்டி வந்து போகும். உறவினர்கள், நண்பர்கள் சிலர் பணம் கேட்டுத் தொந்தரவு தருவார்கள். திடீர் பயணங்களால் வீண் அலைச்சல், டென்ஷன் ஏற்படும். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை குடும்பத்தினருடன் சென்று நிறைவேற்றுவீர்கள். வழக்கறிஞரின் ஆலோசனையின்றி எந்த முடிவுகளும் எடுக்காதீர்கள். வி.ஐ.பிகளின் நட்பால் சில காரியங்களை சாதிப்பீர்கள். பிள்ளைகளிடம் இருக்கும் தாழ்வு மனப்பான்மை, அலட்சியப் போக்கு மாறும். மகளுக்கு விரைவில் கல்யாணம் நடக்கும். மகனின் கூடா நட்பு விலகும். புது வீடு, மனை வாங்குவீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் மூன்றாம் வீட்டை பார்ப்பதால் கவுரவப் பதவி வரும். விலை உயர்ந்த ஆபரணம் வாங்குவீர்கள். சவால்களில் வெற்றி பெறுவீர்கள். இளைய சகோதர வகையில் செலவுகள் இருக்கும். சனிபகவான் உங்களின் ஏழாம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கால் வலி, கழுத்து வலி வந்து நீங்கும். வீண் சந்தேகத்தை குறையுங்கள். சனிபகவான் உங்களின் பத்தாம் வீட்டை பார்ப்பதால் உத்தியோகத்தில் மரியாதை கூடும். சிலர் சுய தொழில் தொடங்க வாய்ப்பு உண்டாகும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் திருதியாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் கம்பீரமாகப் பேசி காரியம் முடிப்பீர்கள். சகோதரர்களால் ஆதாயமடைவீர்கள். புது பொறுப்புகளும், பதவிகளும் தேடி வரும். சொத்து வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் நவீன மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். பழுதாகிக் கிடந்த வாகனத்தை மாற்றுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். திருமணத் தடை நீங்கும்.

07.04.2024 முதல் 29.03.2025 வரை உங்கள் தனாதிபதியும் - லாபாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டங்களில் இழுபறி நிலை மாறும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளில் உங்களுக்கு முன்னுரிமை தருவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை பிறக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். ஷேர் மூலம் லாபமடைவீர்கள். ஆன்மிக ஈடுபாடு அதிகரிக்கும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

இல்லத்தரசிகளே! அடுப்படி அலமாரிகளில் சிறிது சிறிதாக சேர்த்து வைத்த பணத்தைக் கொண்டு தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! இனி வேலைச்சுமை குறையும். கன்னிப் பெண்களே! முடிவெடுப்பதில் அவசரம் வேண்டாம். பெற்றோரின் ஆலோசனைக்கு செவி சாயுங்கள். விடுபட்ட பாடத்தை மீண்டும் எழுதி தேர்ச்சி பெறுவீர்கள்.

வியாபாரிகளே, தடாலடியாக சில மாற்றங்கள் செய்வீர்கள். பெரிய முதலைப் போட்டு மாட்டிக் கொள்ளாமல் சந்தை நிலவரங்களை அறிந்து செயல்படுவது நல்லது. இனி கணிசமாக லாபம் உயரும். ஹோட்டல், கணினி உதிரி பாகங்கள், துணி வகைகளால் லாபமடைவீர்கள். பழைய பாக்கிகளை கனிவாகப் பேசி வசூலியுங்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களிடம் வளைந்து கொடுத்து போங்கள்.

உத்தியோகஸ்தர்களே, வேலைச்சுமைகள் அதிகரித்துக் கொண்டே போகும். சக ஊழியர்களின் பணிகளையும் சேர்த்து பார்க்க வேண்டி வரும். தடைப்பட்ட சம்பள உயர்வு, பதவி உயர்வு எல்லாம் இனி தாமதம் இல்லாமல் கிடைக்கும். கணினி துறையினர்களே! கூடுதல் நேரம் வேலை பார்க்க வேண்டி வரும்.

இந்த சனி மாற்றம் இழப்பு, எதிர்ப்பு, ஏமாற்றங்களிலிருந்து விடுவிப்பதுடன், ஓரளவு வருமானம், வசதிகளையும் தரும்.

பரிகாரம்: திருவாரூர் - திருத்துறைப்பூண்டி பாதையிலுள்ள திருக்கொள்ளிக்காடு எனும் ஊரில் அருள்பாலிக்கும் ஸ்ரீபொங்கு சனீஸ்வரரை திருவோணம் நட்சத்திர நாளில் சென்று வணங்குங்கள். புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். முயற்சிகள் வெற்றியடையும்.

மற்ற ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023: மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனசு | மகரம் | கும்பம் | மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x