Published : 14 Jan 2023 04:59 PM
Last Updated : 14 Jan 2023 04:59 PM

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 - மகரம் ராசியினருக்கு எப்படி?

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

மகரம் (உத்திராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள்) செடி, கொடியில் பூத்துக் குலுங்கும் பூவைக் கூட சேதப்படுத்தாமல் ரசிக்கும் மனிதாபிமானிகளே! தோல்வி தீயில் சாம்பலாகாமல் பீனீக்ஸ் பறவை போல உயிர்த்தெழுபவர்களே. அனாவசியப் பேச்சை குறைத்து ஆக்கப்பூர்வமான செயல்களில் ஆர்வம் காட்டுபவர்களே. கலா ரசிகர்களே!

இதுவரை உங்கள் ராசிக்குள் ஜென்மச் சனியாக அமர்ந்து நாலாபுறத்திலும் குழப்பங்களையும், தடுமாற்றங்களையும் கொடுத்தாரே, எந்த வேலையையும் முழுமையாக செய்யவிடாமல் உங்களை பைத்தியம் பிடிக்க வைத்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் உங்கள் ராசியை விட்டு விலகி பாதச்சனியாக அமர்ந்து பலன் தரப்போகிறார் உங்களின் ராசிநாதனாகிய சனிபகவான் ஆட்சிப் பெற்று வலுவாக அமர்வதால் வற்றிய பணப்பை நிரம்பும். அலைபாய்ந்த மனசு இனி அமைதியாகும். உங்களை கண்டும் காணாமல் போனவர்களெல்லாம் இனி வலிய வந்து பேசுவார்கள். மனதில் இருந்த பயம் நீங்கும். உடல் நிலை சீராகும். ஆழ்ந்த உறக்கமும் வரும். இருந்தாலும் எளிய உடற்பயிற்சிகள், உணவுக் கட்டுப்பாடுகளும் உங்களுக்குத் தேவைப்படுகிறது. பெரிய நோய் இருப்பதைப் போன்ற பிரமை வந்து நீங்கும். சர்க்கரை, ரத்த அழுத்தத்தை அவ்வப்போது பரிசோதித்துக் கொள்வது நல்லது.

உங்களைச் சுற்றியிருப்பவர்களில் நல்லவர்கள் யார் என்பதை உணர்வீர்கள். குடும்பத்தில் இனி மகிழ்ச்சி தங்கும். வெளிப்படையாக பேசுவதாக நினைத்து யாரையும் எடுத்தெறிந்து பேசாதீர்கள். முடிந்த வரை அடுத்தவர்கள் விவகாரங்களில் தலையிடாமல் இருப்பது நல்லது. யாருக்காகவும் சாட்சி கையெழுத்திட வேண்டாம். பார்வைக் கோளாறு, பல் வலி வந்து நீங்கும். காலில் சிறுசிறு காயங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நெருங்கிய உறவினர்கள், நண்பர்களானாலும் சரி அதிகம் உரிமையுடன் பேசி பெயரை கெடுத்துக் கொள்ளாதீர்கள். வழக்குகளில் அலட்சியப் போக்கு வேண்டாம். தேவைப்பட்டால் வழக்கறிஞரை மாற்றுங்கள். அரசு சம்பந்தப்பட்ட காரியங்கள் பெரும் அலைச்சலுக்குப் பிறகு முடியும். சாலை விபத்து ஏற்படலாம். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் உண்டாகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் 4-ம் வீட்டை பார்ப்பதால் வேலைச்சுமை அதிகரித்துக் கொண்டேயிருக்கும். சில காரியங்களை போராடி முடிக்க வேண்டி வரும். திடீர் பயணங்கள் அதிகரிக்கும். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால் உடல்நலத்தில் கவனம் தேவை. உறவினர்கள், நண்பர்களின் அன்புத்தொல்லை அதிகமாகும். பழைய கடனை நினைத்து அவ்வப்போது புலம்புவீர்கள். உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் திடீர் பணவரவு உண்டு. ஷேர் மூலம் பணம் வரும். வீடு, மனை, வாகனம் வாங்கும் யோகம் உண்டு. நீங்கள் சரியாக மதிப்பதில்லை என்று மூத்த சகோதரர்கள் நினைப்பார்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் சுகாதிபதியும்-லாபாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் பணவரவு அதிகரிக்கும். மகளின் திருமணத்தை ஊரே மெச்சும்படி நடத்தி முடிப்பீர்கள். புது வேலை கிடைக்கும். ஆனால் செவ்வாய் பாதகாதிபதியாக வருவதால் அடி வயிற்றில் வலி, முதுகுத் தண்டு மற்றும் முழங்கால் வலி வந்து நீங்கும். அசைவ, கார உணவுகளை தவிர்ப்பது நல்லது. வாகனத்தில் அதிக வேகம் வேண்டாம்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் பழைய கடன் பிரச்சினைகள் ஓயும். நாடாளுபவர்களால் உதவியுண்டு. சிலர் இடவசதியுடன், காற்றோட்டமுள்ள குடிநீர் வசதியுள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். வழக்கால் இருந்த நெருக்கடி நீங்கும். நவீன மின்னணு, மின்சார சாதனங்கள் வாங்குவீர்கள். அயல்நாட்டு பயணம் ஏற்படும்.

07.04.2024 முதல் 29.03.2025 வரை உங்கள் திருதியாதிபதியும் - விரயாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டங்களில் தைரியம் கூடும். கல்வியாளர்கள், அறிஞர்களின் நட்பு கிடைக்கும். புது முயற்சிகள் யாவும் வெற்றியில் முடியும். கோயில் கும்பாபிஷேகத்தை சொன்னபடி நடத்தி முடிப்பீர்கள். மூத்த சகோதர வகையில் உதவிகள் உண்டு. சொத்து சேர்க்கை உண்டு. விலையுயர்ந்த ஆபரணங்கள், ரத்தினங்கள் வாங்குவீர்கள். உறவினர்கள் வீட்டு விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். திடீர் பயணங்களால் அலைச்சல், செலவுகள் வந்து போகும். யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் ஈடுபட வேண்டாம்.

இல்லத்தரசிகளே! எப்போதும் அலுத்துக் கொண்ட கணவர் இனி அன்பாகப் பேசுவார். என்றாலும் கோபப்படத்தான் செய்வார். அவரின் வருமானம் உயரும். அலுவலகம் செல்லும் பெண்களே! வேலைச் சுமை குறையும். சம்பளம் உயரும். பிள்ளைகளுடன் பேச நேரம் கிடைக்கும். கன்னிப் பெண்களே! கல்வி, காதல், வேலை என அனைத்திலும் வெற்றி கிட்டும். உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் அனுசரித்துப் போகக் கூடிய நபர் அறிமுகமாவார். மாதவிடாய்க் கோளாறிலிருந்து விடுபடுவீர்கள்.

வியாபாரிகளே, தொடர்ந்து வந்த போட்டியாளர்களை சமாளிக்க முடியாமல் திணறினீர்களே! இனி அவர்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் உங்கள் அணுகுமுறையை மாற்றுவீர்கள். புதிய முதலீடுகள் செய்வீர்கள். தொலைக்காட்சி-வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். கொடுக்கல்-வாங்கலில் நிம்மதி ஏற்படும். பழைய வாடிக்கையாளர்கள் தேடி வருவார்கள். வேலையாட்கள் இனி அடிக்கடி விடுப்பு எடுக்கமாட்டார்கள். கடையை விரிவாக்கி நவீனமயமாக்குவீர்கள். தள்ளிப் போன பெரிய நிறுவனங்களின் ஒப்பந்தங்களும் கையெழுத்தாகும். ஹோட்டல், இரும்பு, ஸ்பெகுலேஷன் வகைகளால் ஆதாயம் உண்டு. கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் பணிந்து வருவார்கள்.

உத்தியோகஸ்தர்களே, நிலையற்ற சூழல் நிலவியதே! இனி அதிக சம்பளத்துடன் புது வேலை கிடைக்கும். உங்களை கசக்கிப் பிழிந்த அதிகாரி வேறு இடத்துக்கு மாறுவார். உங்களை ஆதரிக்கும் புதிய அதிகாரி வந்து சேர்வார். நீதி மன்றத் தீர்ப்பும் சாதகமாகும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடி வரும். அலுவலகத்தில் வீண் பேச்சை குறையுங்கள். சக ஊழியர்களிடம் கொஞ்சம் கவனமாகப் பழகுங்கள். இழந்த சலுகைகள், பதவிகளை மீண்டும் பெறுவீர்கள். கணினி துறையினர்களுக்கு, வெளிமாநிலம், வெளிநாடுகளில் கான்ட்ராக்ட் முறையில் பணி புரிய வாய்ப்புகள் வரும்.

இந்த சனி மாற்றம் கொஞ்சம் அலைச்சலையும், செலவினங்களையும் தந்தாலும், உங்களை முன்னேற்றப் பாதைக்கும் அழைத்துச் செல்லும்.

பரிகாரம்: சென்னை பல்லாவரம் அருகிலுள்ள பொழிச்சலூரில் அருள்பாலிக்கும் வட திருநள்ளாறு ஸ்ரீசனீஸ்வர பகவானை கேட்டை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுங்கள். நினைத்தது நிறைவேறும்.

மற்ற ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023: மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனசு | மகரம் | கும்பம் | மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x