Published : 14 Jan 2023 03:22 PM
Last Updated : 14 Jan 2023 03:22 PM

சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023 - துலாம் ராசியினருக்கு எப்படி?

ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்

துலாம் (சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3ம் பாதங்கள்) விழுவதெல்லாம் எழுவதற்கே என்று நம்பும் நீங்கள், எதிர்நீச்சல் போட்டு பழகியவர்கள். அருவி நீர்போல அதிர்ந்து பேசாமல் பனிநீர் போல பாசமாய் பேசுவீர்கள். தர்மம், நியாயத்தின் பக்கம் நிற்கும் நீங்கள், பாதிக்கப்பட்டவர்களின் துன்பத்தில் பங்கெடுத்துக் கொள்வீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 4-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான், இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 5-ம் வீட்டில் அமர்வதால் நல்லதே நடக்கும். யோக பலன்கள் அதிகரிக்கும். சனி பகவான் இப்போது உங்களின் ராசிக்கு 5-ம் வீட்டில் அமர்வதால் குடும்பத்தினருடன் அமர்ந்து சிரித்து பேசி மகிழக் கூடிய இனிய நிலை உருவாகும். பூர்வீக சொத்துப் பிரச்சினை முடிவுக்கு வரும். இனி பணவரவு அதிகரிக்கும். வீட்டை கட்டி முடித்து கிரகப் பிரவேசத்தை கோலாகலமாக செய்வீர்கள். உங்களை கண்டும் காணாமல் சென்ற உறவினர்கள், நண்பர்கள் இனி வலிய வந்து பேசுவார்கள். 5-ம் இடத்தில் சனி அமர்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். பிள்ளைகளிடம் கண்டிப்புக் காட்டாமல் தோழமையாக பழகுங்கள். சில நேரங்களில் உங்கள் உள்மனதில் எதிர்மறை எண்ணங்கள் உருவாகும். யோகா, தியானம் மூலம் சரிசெய்து கொள்ளுங்கள். இனி வலி நீங்கி வலிமை கூடும். தாய்மாமன், அத்தை வகையில் அலைச்சல் இருக்கும். புதிய சொத்து வாங்குவீர்கள். வாகன வசதி பெருகும்.

சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்களின் இரண்டாம் வீட்டை பார்ப்பதால் இடம் பொருள் ஏவல் அறிந்து பேசுவது நல்லது. சில நேரங்களில் உங்களையும் அறியாமல் உணர்ச்சி வசப்பட்டு பேசுவீர்கள். கண்ணை பரிசோதித்துக் கொள்வது நல்லது. அக்கம்-பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். அநாவசியமாக யாருக்கும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். சனிபகவான் உங்களின் 7-ம் வீட்டை பார்ப்பதால் மனைவிக்கு கை,கால் வலி, மரத்துப் போகுதல், மறதி வரக்கூடும். மனைவியுடன் வீண் விவாதங்கள் வந்து போகும். சனிபகவான் உங்களின் லாப வீட்டை பார்ப்பதால் ஷேர் மூலம் பணம் வரும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் தனாதிபதியும்-சப்தமாதிபதியும் செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் திடீர் பணவரவு உண்டு. அரசு அதிகாரிகள் உதவுவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் இக்காலகட்டத்தில் திடீர் திருப்பம் உண்டாகும். சொத்து வாங்குவது, விற்பதில் இருந்த தடைகள் நீங்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு\ களைகட்டும். வெளிநாட்டிலிருப்பவர்களால், ஹிந்தி, தெலுங்கு பேசுபவர்களால் ஆதாயமடைவீர்கள். நல்ல நிறுவனத்திலிருந்து வேலைக்கு அழைப்பு வரும்.

உங்கள் 3 மற்றும் 6-ம் வீட்டதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 07.04.2024 முதல் 29.03.2025 வரை உள்ளக் காலகட்டங்களில் முயற்சிகள் பலிதமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிட்டும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மூத்த சகோதர வகையில் நன்மை உண்டு. புது வீடு கட்டி குடிப்புகுவீர்கள். பழைய கடன் பிரச்சினை கட்டுக்குள் வரும். என்றாலும் விபத்து, வீண் சந்தேகம், இனந்தெரியாத கவலைகள், மறைமுக எதிர்ப்புகள், வீண் பழி வந்து செல்லும்.

இல்லத்தரசிகளே! குடும்பத்தில் உங்கள் கை ஓங்கும். கணவர் உங்களின் வேலைகளை பகிர்ந்து கொள்வார். மாமியார், மாமனார் உங்களை பெருமை பேசுவார்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! வேலைச்சுமை, மன உளைச்சலிலிருந்து விடுபடுவீர்கள். கல்யாணப் பேச்சு வார்த்தைகள் முன்னேற்றம் தரும். கனவுத்தொல்லை, தூக்கமின்மை வரக்கூடும். நாட்டமில்லாமல் இருந்து வந்த உயர்கல்வியில் இனி ஆர்வம் பிறக்கும். நீங்கள் எதிர்பார்த்தபடி வேலை கிடைக்கும்.

வியாபாரிகளே, பற்று வரவு உயரும். பழைய சரக்குகள் விற்றுத் தீரும். அடிக்கடி விடுப்பில் சென்ற வேலையாட்கள் இனி உங்களுக்கு முழு ஒத்துழைப்பு தருவார்கள். வாடிக்கையாளர்களின் ரசனைகளைப் புரிந்துக் கொண்டு கொள்முதல் செய்யப் பாருங்கள். கூட்டுத் தொழிலில் புதிய பங்குதாரர்கள் அறிமுகமாவார்கள். விளம்பர சாதனங்களை சரியாகப் பயன்படுத்தி விற்பனையை அதிகப்படுத்துவீர்கள். ஏற்றுமதி-இறக்குமதி, கடல் வாழ் உயிரினங்களால் ஆதாயம் உண்டு. ஏஜென்ஸி, புரோக்கரேஜ் மற்றும் கல்வி நிறுவனங்களால் லாபமடைவீர்கள். நீண்ட நாட்களாக எதிர்பார்த்த புது ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்.

உத்தியோகஸ்தர்களே, அதிகாரிகளே ஆச்சரியப்படும்படி சில கடினமான வேலைகளையும் எளிதாக முடித்துக் காட்டுவீர்கள். கேட்ட இடத்துக்கே மாற்றம் கிடைக்கும். சம்பளம் அதிகரிக்கும். கணினி துறையினர்களுக்கு வெளிநாட்டிலிருந்து ஒப்பந்த அடிப்படையில் பணிகள் கிடைக்கும்.

இந்தச் சனிப்பெயர்ச்சி குழப்பங்கள், தடுமாற்றங்களில் இருந்து விடுவிப்பதுடன் வெளிவட்டாரத்தில் செல்வாக்கையும் தருவதாக அமையும்.

பரிகாரம்: பாண்டிச்சேரிக்கு முன்புள்ள பஞ்சவடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீஆஞ்சநேயரை அனுஷம் நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். உயர்கல்விக்கு கல்விக் கட்டணம் செலுத்த முடியாமல் தவிக்கும் மாணவ - மாணவியரின் படிப்புக்கு உதவுங்கள். நினைத்ததை முடிப்பீர்கள்.

மற்ற ராசிகளுக்கான சனிப்பெயர்ச்சி பலன்கள் 2023: மேஷம் | ரிஷபம் | மிதுனம் | கடகம் | சிம்மம் | கன்னி | துலாம் | விருச்சிகம் | தனசு | மகரம் | கும்பம் | மீனம்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x