

கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்) மிரட்டல் உருட்டல்களுக் கெல்லாம் அஞ்சாதவர்களே, யானையின் தும்பிக்கை பலமோ இல்லையோ உங்களின் நம்பிக்கை அசுர பலம் கொண்டது. சமையல் முதல் விஞ்ஞானம் வரை அனைத்தையும் ஆர்வமாய் அறிந்து கொள்வீர்கள்.
இதுவரை உங்கள் ராசிக்கு 7-ம் வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 17.01.2023 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் 8-ம் வீட்டில் அஷ்டமத்துச் சனியாக அமர்வதால் நீங்கள் இனி எதிலும் முன்னெச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது நல்லது. குடும்ப விஷயங்களை வெளியில் சொல்ல வேண்டாம். எதிர்மறை எண்ணங்களை தவிர்க்கப் பாருங்கள். முக்கிய பத்திரங்களில் கையெழுத்திடும்போது சட்ட ஆலோசகரை கலந்து முடிவெடுப்பது நல்லது. மகனின் உயர்கல்வி, உத்தியோகத்தின் பொருட்டு சிலரின் சிபாரிசை நாடுவீர்கள். மகளின் திருமணத்துக்காக வெளியில் கடன் வாங்க வேண்டி வரும். வர வேண்டிய பூர்விக சொத்துப் பங்கை போராடிப் பெறுவீர்கள். கட்டுப்படுத்த முடியாதபடி செலவினங்கள் அதிகரிக்கும். மனைவியுடன் மனஸ்தாபங்கள் வரும். வெளிவட்டாரத்தில் அலைச்சல் இருக்கும். ரத்த அழுத்தம் அதிகரிக்கும். சர்க்கரை நோய்க்கான அறிகுறிகள் தெரியும். மெடிக்ளைம் எடுத்துக் கொள்ளுங்கள்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசிக்கு 2-ம் வீட்டை பார்ப்பதால் சாதுர்யமாகப் பேசுவீர்கள். ஆனால் சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி சிக்கிக் கொள்வீர்கள். எதிர்பார்த்த பணம் வரும். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் தன்னைச் சுற்றி ஏதோ சதி நடப்பதாக சிலரை சந்தேகப்படுவீர்கள். பிள்ளைகளை அளவுடன் கண்டியுங்கள். பூர்விக சொத்தில் பிரச்சினைகள் வந்து சரியாகும்.
சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்கள் பூர்வ புண்யாதிபதியும்-ஜீவனாதிபதியுமான செவ்வாய் பகவானின் அவிட்டம் நட்சத்திரத்தில் 17.01.2023 முதல் 14.03.2023 வரை மற்றும் 13.10.2023 முதல் 24.11.2023 வரை சனி பகவான் செல்வதால் இக்காலக் கட்டத்தில் எதிர்பார்த்திருந்த பணம் கைக்கு வரும். சொத்துப் பிரச்சினைக்கு நல்ல தீர்வு காண்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்களை சரியாகப் புரிந்துக் கொள்வார்கள். அரசு காரியங்கள் தடையில்லாமல் முடியும். மனைவிவழியில் நல்ல செய்தி வரும்.
15.03.2023 முதல் 7.04.2024 வரை மற்றும் 03.09.2024 முதல் 27.12.2024 வரை ராகுபகவானின் சதயம் நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் திடீர் பயணங்கள் அதிகரிக்கும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உங்கள் சஷ்டமாதிபதியும்-பாக்யாதிபதியுமான குருபகவானின் பூரட்டாதி நட்சத்திரத்தில் சனிபகவான் செல்வதால் 07.04.2024 முதல் 29.03.2025 வரை உள்ள காலகட்டங்களில் திருமணம், சீமந்தம் போன்ற சுப நிகழ்ச்சிகள் ஏற்பாடாகும். வாடகை வீட்டிலிருந்து சிலர் சொந்த வீட்டுக்கு குடி புகுவீர்கள்.
இல்லத்தரசிகளே! குடும்பத்தில் பெரிய முடிவெல்லாம் இனி நீங்கள்தான் எடுக்க வேண்டி வரும். பிள்ளைகளின் உயர்கல்வி, திருமணம் குறித்து கவலைகள் தலைதூக்கும். அலுவலகம் செல்லும் பெண்களே! விளையாட்டாகப் பேசி வம்பில் சிக்க வேண்டாம். சம்பளம் உயரும். கன்னிப் பெண்களே! விரைவில் திருமணம் முடியும்.
வியாபாரிகளே, போட்டிகள் அதிகரிக்கும். பழைய சரக்குகளை போராடி விற்பீர்கள். இரும்பு, கடல் உணவு வகைகள், ரசாயன வகைகள், கட்டிட உதிரி பாகங்கள் மூலம் லாபம் வரும். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களால் மறைமுகப் பிரச்சினைகளும், எதிர்ப்புகளும் வந்து நீங்கும்.
உத்தியோகஸ்தர்களே, நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்த பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். சக ஊழியர்களிடம் கவனமாகப் பழகுங்கள்.
இந்த சனி மாற்றம் செலவுகளிலும், பிரச்சினை களிலும் சிக்க வைத்தாலும் கடின உழைப்பாலும் சமயோஜித புத்தியாலும் இலக்கை எட்டி பிடிக்க வைக்கும்.
பரிகாரம்: விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகிலுள்ள மொரப்பாண்டி எனும் ஊரில் அபய முத்திரையுடன் அருள்பாலிக்கும் ஸ்ரீபஞ்சலோக சனீஸ்வரரை பரணி நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். திருநங்கைகளுக்கு உதவுங்கள். வாழ்வில் திருப்பம் உண்டாகும்.
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |