சதயம், பெரிய லிங்கம், மூலிகைக் கொத்து, மலை, தோரணம்!   உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 30

சதயம், பெரிய லிங்கம், மூலிகைக் கொத்து, மலை, தோரணம்!   உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 30
Updated on
3 min read

- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்


சென்ற வாரம் அவிட்டம் நட்சத்திரம் பற்றி விரிவாகக் கண்டோம். இந்த வாரம் நாம் சதயம் எனும் சதாபிஷா நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாக மற்றும் விரிவாகக் காணலாம்.


சதயம் எனும் சதாபிஷா


சதயம் எனும் சதாபிஷா என்பது வானத்தில் கும்ப ராசி மண்டலத்தில் இருக்கும் நட்சத்திரம் ஆகும். நாம் காணும் போது மூலிகைக் கொத்து போலவும், தோரணம் போலவும், செக்கு போலவும், உயர்ந்த மலை போலவும் காட்சி அளிக்கும். ஆகவே இதன் வடிவமாக மூலிகைக் கொத்து, தோரணம், செக்கு, உயர்ந்த மலை ஆகியவற்றைக் கூறலாம்.

இதன் அதிபதி ராகு கிரகம் ஆகும். இது பழுப்பு நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாக காணப்படும் நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு ராகு திசையே முதலில் தொடங்கும். இந்த ராசியில் சனி இடம்பெறுகிறது. ஆகவே இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சனி பலம் இழப்பது நன்மையானது அல்ல. எனவே இவர்கள் எந்த மாதிரியான தெய்வங்களை வணங்கவேண்டும் என்று இந்தக் கட்டுரையில் காணலாம்.


சதயம் தாரை ரகசியம்


சதயம் என்றால் மூலிகைக் கொத்து என்று பொருள். நாம் இறைவனுக்கு சில மூலிகைகளை கொத்தாக அல்லது கொத்தாகச் சேர்த்து மாலையாகக் கோர்த்து படைத்து வழிபடுவது உண்டு. அதில் முக்கியமானவை சில கீழே கொடுக்கப்பட்டு இருக்கிறது.
1. அருகம்புல் மாலை
2. வெற்றிலை மாலை
3. துளசி மாலை
4. மாவிலை தோரணம்
5. தர்ப்பைப்புல் கொத்து
6. வெட்டிவேர் மாலை (குஞ்சித பாதம்)
7. எலுமிச்சை மாலை
8. வேப்பிலை மாலை
9. வில்வ மாலை


இவை அனைத்தும் சதய நட்சத்திர வடிவங்கள். மேற்கண்ட மூலிகை வடிவங்களை கீழ்கண்ட நட்சத்திர நபர்கள் இறைவனுக்கு படைத்து நற்பலன்களைப் பெறலாம்.


• அவிட்டம், சித்திரை, மிருகசீரிடம்
• திருவாதிரை, சதயம், ஸ்வாதி
• பூரட்டாதி, விசாகம், புனர்பூசம்
• உத்திராடம், உத்திரம், கார்த்திகை
• மூலம், அஸ்வினி, மகம்
• உத்திரட்டாதி, பூசம், அனுஷம்


குமரனுக்கு குன்றிலே ஸ்தலம் ஏன்
முருகனின் ஜென்ம நட்சத்திரம் விசாகம் ஆகும். விசாகத்தின் பரம மித்ர தாரை சுவாதி, சதயம், திருவாதிரை ஆகும்.
மலைக்குன்றை குறிப்பது சதயம் நட்சத்திரம் ஆகும். இதை மையமாக வைத்தே விசாகத்தின் பரம மித்ர தாரை வடிவமான சதய நட்சத்திரம் குறிக்கும் மலைக்குன்றில் முருகப் பெருமானின் திருத்தலங்களை அமைத்தனர்.

எனவே சுவாதி, சதயம், திருவாதிரை நட்சத்திர நபர்கள் காவடி தூக்கி கால்நடையாக மலையேறி முருக வழிபாடு செய்து வந்தால், சர்வ சம்பத்துகளையும் பெற்று வாழலாம்.

எனவே அனுஷம், உத்திரட்டாதி, பூசம் நட்சத்திர நண்பர்கள் நட்சத்திர நபர்கள் மலையேறி முருக வழிபாடு செய்தல் குழப்பமான பிரச்சினைகளுக்கு வழிபிறக்கும்.

ராஜராஜ சோழன் பயன்படுத்திய தாரை


ராஜராஜசோழனின் ஜென்ம நட்சத்திரம் சதயம் ஆகும். சதயத்தின் வடிவம் உயர்ந்த மலை அல்லது பெரிய செக்கு. இதை பெரிய சிவலிங்க வடிவமாகவும் கருதலாம்.

கருவூரார் சித்தர் அறிவுரைப்படி தனது ஜென்ம தாரை வடிவான பெரிய லிங்கத்தை நிறுவி தனது பலத்தை பெருக்கிக் கொண்டார் ராஜராஜ சோழன்.

சதயம், சுவாதி, திருவாதிரை நட்சத்திர நண்பர்கள் பெரிய சிவலிங்க வழிபாடுகளைச் செய்ய உறுதி கிட்டும்.

அவிட்டம், மிருகசீரிடம், சித்திரை நட்சத்திர நண்பர்கள் பெரிய சிவலிங்க வழிபாடு செய்ய சர்வ சம்பத்துகளும் கிட்டும்.

பூரட்டாதி, விசாகம், புனர்பூசம் நட்சத்திர நண்பர்கள் பெரிய சிவலிங்க வழிபாடு செய்ய வழிகாட்டுதல் கிட்டும்.

உத்திரம், உத்திராடம், கார்த்திகை நட்சத்திர நண்பர்கள் பெரிய சிவலிங்க வழிபாடு செய்ய காரியத்தில் வெற்றி கிடைக்கப் பெறலாம்.

மூலம், அஸ்வினி, மகம் நட்சத்திர நண்பர்கள் பெரிய சிவலிங்க வழிபாடு செய்ய தோஷங்களைப் போக்கும்.

இதுவரை சதயம் நட்சத்திரம் பற்றி அறிந்தோம். இனி வரும் கட்டுரையில் இன்னொரு நட்சத்திரம் பற்றி தெளிவாக அறியலாம்.


• வளரும்
***************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in