Published : 12 Nov 2021 08:52 AM
Last Updated : 12 Nov 2021 08:52 AM

கடகம், சிம்மம், கன்னி ராசி அன்பர்களே! இந்த வாரம் உங்களுக்கு இப்படித்தான்! நவம்பர் 11 முதல் 17ம் தேதி வரை

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்


கடகம் (புனர் பூசம் 4ம் பாதம், பூசம், ஆயில்யம்)


கிரகநிலை:
சுக ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - பஞ்சம ஸ்தானத்தில் கேது - ரண ருண ரோக ஸ்தானத்தில் சுக்ரன் - களத்திர ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் - லாப ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.

13-11-2021 அன்று குரு பகவான் களத்திர ஸ்தானத்தில் இருந்து அஷ்டம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


17-11-2021 அன்று புதன் பகவான் சுக ஸ்தானத்தில் இருந்து பஞ்சம ஸ்தானத்திற்கு மாறுகிறார்.

பலன்கள்:


இனிமையான பேச்சும், குளுமையான பார்வையும் உடைய கடக ராசியினரே!

உங்களுக்கு அவ்வப்போது செய்வது சரிதானா என்ற தயக்கம் ஏற்படும். இந்த வாரம் எந்த ஒரு காரியத்தையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். பணவரத்து அதிகரிக்கும். அடுத்தவர்களிடம் பொறுப்புகளை ஒப்படைக்காமல் நேரடியாக செய்வது நன்மை தரும்.

தொழில் வியாபாரம் தொடர்பாக அதிகம் உழைக்க வேண்டி இருக்கும். அதற்கேற்ற பலனும் கிடைக்கப் பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பாக்கிகள் வசூலாகும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களின் நிர்வாக திறமை பளிச்சிடும். எதிர்ப்புகள் குறையும். காரியத்தடை அகலும். எந்திரங்கள் மற்றும் தீ ஆகியவற்றைக் கையாளும்போது கவனம் தேவை. ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சார்ந்த விஷயங்களில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.

குடும்பத்தில் திடீர் குழப்பங்கள் தலை தூக்கும். அமைதியாக இருக்க முயன்றாலும் கூட மற்றவர்கள் வலுக்கட்டாயமாக பேசுவார்கள். கணவன், மனைவி ஒருவருக்கொருவர் அனுசரித்துச் செல்வது நல்லது. பிள்ளைகள் நலனில் அக்கறை தேவை. அக்கம்பக்கத்தினரிடம் சில்லறை சண்டைகள் ஏற்படலாம்.
பெண்களுக்கு எந்த ஒரு வேலையையும் அடுத்தவரை நம்பி ஒப்படைக்காமல் நேரடியாக கவனிப்பது நன்மை தரும். பணவரத்து எதிர்பார்த்தபடி இருக்கும்.
மாணவர்களுக்கு முயற்சிகள் சாதகமான பலன் தரும். கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும். திறமை வெளிப்படும்.

பரிகாரம்: துர்கை அம்மனை வணங்கி வழிபட எல்லா பிரச்சினைகளும் தீரும். தடைகள் நீங்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: ஞாயிறு, செவ்வாய்;
**********************************************************


சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1ம் பாதம்)


கிரகநிலை:


தைரிய ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - சுக ஸ்தானத்தில் கேது - பஞ்சம ஸ்தானத்தில் சுக்ரன் - ரண் ருண ரோக ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் - தொழில் ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.

13-11-2021 அன்று குரு பகவான் ரண ருண ரோக ஸ்தானத்தில் இருந்து களத்திர ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


17-11-2021 அன்று புதன் பகவான் தைரிய வீரிய ஸ்தானத்தில் இருந்து சுக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள் :


எதைக்கண்டும் அஞ்சாமல் நிமிர்ந்து நிற்கும் சிம்ம ராசியினரே!


தைரியமே உங்கள் பலம். இந்த வாரம் முயற்களுக்குப் பிறகு வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியம் பெறும். மற்றவர்களுடன் இருந்த விரோதம் மறைந்து நட்பு ஏற்படும். வீண்செலவு குறையும்.

தொழில் வியாபாரத்தில் இருந்த மந்தநிலை மாறி வேகம் பிடிக்கும். வியாபாரம் தொடர்பான முயற்சிகளில் சாதகமான பலன் உண்டாகும். தொழில் தொடர்பான பயணம் செல்ல நேரலாம்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு புத்தி சாதுர்யம் அதிகரிக்கும். பொருளாதார நிலை உயரும். பணி உயர்வு சம்பந்தமான தேர்வுகளில் தேர்ச்சி பெறுவீர்கள். மேலிடத்தின் கனிவான பார்வை உங்கள் மீது விழும்.

குடும்பத்தில் இருந்த சிக்கல்கள் தீரும். திருமண முயற்சிகள் கைகூடும். வாழ்க்கைத் துணையால் பணவரத்து இருக்கும். கணவன், மனைவிக்கிடையே இருந்த மனவருத்தம் நீங்கும். பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக பொழுதைக் கழிப்பீர்கள். உறவினர்களுடன் இருந்த மன வருத்தம் நீங்கும். குடும்பத்தில் பொன்னான தருணங்கள் நிகழும்.

பெண்களுக்கு மற்றவர்களுடன் இருந்த மனவருத்தம் நீங்கி நட்பு உண்டாகும். எந்தஒரு வேலையிலும் வேகத்தை காண்பீர்கள். செலவு குறையும்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான பயணம் செல்ல நேரலாம். திறமை வெளிப்படும். சாமர்த்தியமான பேச்சு இருக்கும்.

பரிகாரம்: திருவண்ணாமலை ஸ்ரீஅருணாச்சலேஸ்வரரையும் அருகில் உள்ள சிவாலயத்துக்கும் சென்று வணங்க எல்லா நன்மைகளும் உண்டாகும். எதிலும் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: திங்கள், புதன், வெள்ளி;
*****************************************************************


கன்னி (உத்திரம் 2, 3, 4 பாதம், அஸ்தம், சித்திரை 1, 2, பாதம்)


கிரகநிலை:
தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் செவ்வாய், சூர்யன், புதன் - தைரிய வீரிய ஸ்தானத்தில் கேது - சுக ஸ்தானத்தில் சுக்ரன் - பஞ்சம ஸ்தானத்தில் குரு, சனி, சந்திரன் - பாக்கிய ஸ்தானத்தில் ராகு என கிரக நிலவரம் உள்ளது.

13-11-2021 அன்று குரு பகவான் பஞ்சம ஸ்தானத்தில் இருந்து ரண ருண ரோக ஸ்தானத்திற்கு மாறுகிறார்.
17-11-2021 அன்று புதன் பகவான் தன வாக்கு குடும்ப ஸ்தானத்தில் இருந்து தைரிய வீரிய ஸ்தானத்திற்கு மாறுகிறார்.


பலன்கள்:

வெளிப்படையாகப் பேசுவது போல் உங்கள் பேச்சு இருந்தாலும் மறைக்க வேண்டிய விஷயங்களை மறைத்து விடும் கன்னி ராசியினரே!

இந்த வாரம் பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்த்த பண வரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் சமூகத்தில் அந்தஸ்தும், மரியாதையும் கிடைக்கப் பெறுவீர்கள். தூர தேச பிரயாணங்களுக்கான சூழ்நிலை ஏற்படும். சுப நிகழ்ச்சிகள் தங்கு தடையின்றி நடைபெறும். வழக்குகள் உங்களுக்கு சாதகமான நிலையில் இருக்கும். ஆரோக்கியக் குறைபாடு நீங்கும்.

வியாபாரம் லாபகரமாக நடக்கும். தொழில் விரிவுபடுத்துவது பற்றிய ஆலோசனை மேற்கொள்வீர்கள். அனுபவபூர்வமான அறிவுத் திறன் கைகொடுக்கும்.
உத்தியோகத்தில் இருப்பவர்களின் செயல்திறமை அதிகரிக்கும். பங்கு மார்க்கெட்டில் முன்னேற்றம் காணப்படும். எடுத்த காரியம் நல்லபடியாக நடந்து முடியும். பதவி உயர்வு கிடைக்கலாம். தொழில் நிமித்தமாக அடிக்கடி வெளியூர் செல்ல வேண்டி வரலாம்.

குடும்பத்தில் பிள்ளைகளால் நன்மை உண்டாகும். அவர்களால் சந்தோஷம் கிடைக்கும். கணவன், மனைவி ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு திறம்பட செயல்படுவீர்கள். உறவினர்கள் வருகை இருக்கும். வீடு, வாகனம் வாங்கும் முயற்சி சாதகமான பலன் தரும். நண்பர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். வாகன சேர்க்கை இருக்கும்.
பெண்கள் உங்களது செயல்களுக்கு மற்றவர்களது ஆதரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு உதவி செய்து அதன் மூலம் நன்மதிப்பை பெறுவீர்கள்.

மாணவர்களுக்கு கல்வி தொடர்பான காரியங்கள் நல்லபடியாக நடக்கும். எதிர்பாராத அனுபவங்களை பெறுவீர்கள்.

பரிகாரம்: விஷ்ணு சகஸ்ர நாமம் பாராயணம் செய்து பெருமாளை பூஜிக்க எல்லா தடைகளும் நீங்கும். குடும்பத்தில் அமைதி உண்டாகும்.
அதிர்ஷ்ட கிழமைகள்: சந்திரன், சுக்கிரன்;
**************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x