

- பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர்
நிகழும் மங்கலகரமான ஸ்வஸ்திஸ்ரீ ப்லவ வருஷம் - தக்ஷிணாயனம் - சரத் ரிது - ஐப்பசி மாதம் 27ம் தேதி (ஆங்கிலம்: 13.11.2021) அன்றைய தினம் சுக்லப்க்ஷ தசமி - சதய நக்ஷத்திரம் - வ்யாகாத நாமயோகம் - பாலவ கரணம் - சித்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் உதயாதி நாழிகை 30:24க்கு (மாலை மணி 6.21க்கு) ரிஷப லக்னத்தில் குரு பகவான் மகர ராசியிலிருந்து கும்ப ராசிக்கு மாறுகிறார்.
பொதுவாக கும்ப ராசி என்பது தன்னம்பிக்கை மற்றும் உழைப்பு சம்பந்தப்பட்ட ராசி. ஆயுதம் - லாபம் ஆகியவற்றை குறிக்கக்கூடிய ராசியாகும். இதன் அதிபதி ஆயுள் காரகனாகிய சனி ஆவார். வேகம் - தன்னம்பிக்கை - உழைப்பு - உண்மை - உயர்வு - சமாதானம் - ராணுவம் - காவல் ஆகிய விஷயங்களுக்கு சனியே அதிபதியாவார். அதே போல் சொந்தத் தொழில் சிறப்பாக நடைபெறுவதற்கும் சனி முக்கியமானவர் ஆவார்.
பொது பலன்கள்:
நாடு மற்றும் பொருளாதாரம்:
சனி வீட்டிற்கு குரு மாறுவதால் பொருளாதார நிலைமை சீரடையும். அதிக அளவில் விரயங்கள் ஏற்பட்டாலும் மீண்டும் பொருளாதார நிலைமை எழுச்சியடையும். அரசாங்கம் புதுப்புது வரிகளை விதிக்கும். அதேபோன்று தனிநபர் மற்றும் அரசாங்கத்தின் பொருளாதார நிலைமை கொஞ்சம்கொஞ்சமாக உயரும்.
கடன் உருவாகும். நல்ல மழையும் பசுமையும் உண்டாகும். விவசாயம், கால்நடைகள் வளர்ச்சி பெறும். இதர துறைகளிலும் நாடு வளர்ச்சிப் பாதையை நோக்கி முன்னேறும். குருவிற்கு கும்பம் நட்பு வீடு. நாட்டையும் வீட்டையும் பலவிதங்களில் முன்னேற்றம் அடையச் செய்யும். சமூக சீர்கேட்டாளார்கள் அழிக்கப்படுவர். உலக வங்கி மற்றும் வெளிநாடுகள் மூலம் மத்திய அரசு அதிகளவில் கடன்கள் வாங்குவது அதிகரிக்கும்.
குரு நீசத்தில் இருந்து மாறுவதால் மங்கல காரியங்கள் மிக அதிக அளவில் நடைபெறும். மக்களிடம் தட்டுப்பாடு நீங்கி அதிக அளவில் பணப்புழக்கம் ஏற்படும். பொன் பொருள் விலை மிகவும் அதிகரிக்கும். அரசாங்கத்திற்கு எதிராக கடத்தல்கள் அதிகரிக்கும். அரசாங்கம் அவற்றை பறிமுதல்களும் செய்யலாம். எதிரிகள் தொல்லை, அண்டை நாடு, பகை நாடுகளால் ஏற்படும் அச்சுறுத்தல்களும் கட்டுப்படுத்தப்படும். வாகனங்கள் வாங்குவோரது எண்ணிக்கை உயரும்.
வானிலை:
இடி மின்னல் அதிகம் உண்டு. இயற்கையின் சீற்றத்தால் சேதங்கள் அதிகரிக்கும். தனியார் உடைமைகளுக்கும் சேதம் ஏற்படலாம். அதற்கு நிதியுதவி செய்யும் வகையில் பெருமளவில் மத்திய அரசுக்கும், மாநில அரசுகளுக்கும் செலவுகள் ஏற்படலாம். மலைவாச ஸ்தலங்களில் பனிமூட்டம் அதிகமாக இருக்கும். அடிக்கடி முக்கிய கடல்களில் நீர்மட்டங்களில் மாற்றம் இருந்து கொண்டே இருக்கும். அதனால் முக்கிய துறைமுகங்கள் பெரிய அளவில் பாதிக்கப்படலாம்.
ஆன்மிகம் மற்றும் கோயில்கள்:
புராதன ஆலயங்கள் மற்றும் கட்டிடங்களில் சேதமும் நஷ்டமும் உண்டாகும். அதே வேளையில் புராதன ஆலயங்களுக்கு அரசாங்கம் கும்பாபிஷேகம் செய்து வைப்பதும் நடைபெறும். மடாதிபதிகள் மற்றும் சந்நியாசிகளுக்கு புதிய விதிமுறைகளை அரசாங்கம் உருவாக்கும். ஆலயங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெறும். முக்கிய தேவாலயங்களுக்கு ஏற்பட்ட பிரச்சினைகளில் சமாதானம் ஏற்படும். புண்ணிய க்ஷேத்திரங்களில் விபத்துகள் ஏற்படலாம்.
வெள்ளிக்கிழமைகளில் நல்ல காரியங்களை ஆரம்பிப்பதும் செய்வதும் நன்மையைத் தரும்.
ஆரோக்கியம்:
மருந்து உட்கொள்வதன் மூலம் நோய்கள் சரியாகும். நாட்பட்ட நோய்களுக்கு புதிய மருந்துகள் கண்டுபிடிக்கப்படும்.
குடும்பம்:
கணவன், மனைவிக்கிடையே சண்டை சச்சரவு தோன்றினாலும் அவை கட்டுப்படுத்தப்படும். சண்டை, சமாதானத்தில் முடியும். விவாகரத்துகள் குறையும். காதல் திருமணங்கள் அதிகரிக்கும். காதல் பிரச்சினைகளும் தலை தூக்கும்.
அரசியல்:
அரசியலில் திடீர் மாற்றங்கள் உண்டாகலாம். புதிய நபர்களுக்கு அரசியலில் வரவேற்பு இருக்கும். அரசாங்கத்தின் திட்டங்கள் மக்களுக்கு நன்மை செய்பவையாக இருந்தாலும் ஒருசாரார் அதனை குறை கூறுவார்கள். அரசியல்வாதிகள் விமர்சனத்துக்கு உள்ளாவார்கள்.
கலைத்துறை:
கலைத்துறையில் சில பேருக்கு கண்டங்கள் ஏற்படலாம். புதிய விபத்துக்கள் நேரலாம்.
**************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |