சித்திரை நட்சத்திரம்; ஸ்வஸ்திக், சித்ரகுப்தர், நரசிம்ம வழிபாடு! உங்கள் நட்சத்திரங்கள்...வரம் அருளும் தெய்வங்கள் – 20
- ஜோதிடர் மணிகண்டன் பாரதிதாசன்
சென்ற வாரம் ஹஸ்தம் நட்சத்திரம் பற்றி விரிவாகப் பார்த்தோம். இந்த வாரம் சித்திரை நட்சத்திரம் பற்றியும், அதற்கான சுப தாரை வடிவம் பற்றிய தகவல்களையும் தெளிவாகவும் விரிவாகவும் பார்ப்போம்!
சித்திரை
சித்திரை என்பது வான மண்டலத்தில் கன்னி மற்றும் துலாம் ராசி மண்டலத்தில் ஸ்வஸ்திக் போலவும் அல்லது முத்து போலவும் காணப்படும் நட்சத்திரம். இது கன்னி ராசியில் இரண்டு பாதங்களும் மற்றும் துலாம் ராசியில் இரண்டு பாதங்களும் கொண்டு அமைத்திருக்கும் நட்சத்திரம்.
இது சிவப்பு நிறத்தில் மேல்வானத்தில் பிரகாசமாகக் காணப்படும் நட்சத்திரம். இதன் அதிபதி செவ்வாய் கிரகம். இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு செவ்வாய் திசையே முதலில் தொடங்கும். இது சுக்கிரன் மற்றும் சூரியன் நீச்சம் பெறும் ராசியில் அமைத்திருக்கும் நட்சத்திரம் என்பதால் இந்த நட்சத்திரத்தில் பிறந்த நபர்களுக்கு சுக்கிரன் மற்றும் சூரியன் நீச்சம் அல்லது பலம் இழப்பது நன்மையானது அல்ல. எனவே இவர்கள் எந்தமாதிரியான தெய்வங்களை வணங்கவேண்டும் என்று இந்தத் தொடரில் பார்க்கலாம்.
ஹிட்லர் பயன்படுத்திய தாரை
ஹிட்லர் நட்சத்திரம் பூராடம். இது ஆயுதம் குறிக்கும் நட்சத்திரம். இதுவே கதாயுதமாக புராணங்களில் பாவிக்கப்படுகிறது. பூராடத்தின் க்ஷேமத் தாரை என்பது அவிட்டம், மிருகசீரிடம் மற்றும் சித்திரை.
சித்திரை நட்சத்திரம் சுவாதியின் ஆரம்பநிலை நட்சத்திரம் என்பதால் இது ஸ்வஸ்திகா குறியீடு கொண்டது. ஆக பூராடத்திற்கு காரிய சித்தி நல்கும் திறனை கொண்டிருக்கிறது. ஹிட்லர் ஸ்வஸ்திக் குறியீட்டை தவறாக பயன்படுத்தினார். அதனால் இந்தக் குறியீடு வெற்றியைக் கொடுத்தது. அதேசமயம் அவருக்கு அதீத வீழ்ச்சியையும் கொடுத்தது.
ஸ்வஸ்திகா என்பது நேர்கடிகார சுழற்சியில் சுழலும் சக்கரம். அதை சாய்வாக உபயோகித்து முழுமையான பலனைப் பெறத் தவறினார் ஹிட்லர்.
சித்ர குப்தனின் உருவ ரகசியம்
சித்திரகுப்தனின் ஜென்ம நட்சத்திரம் சித்திரை. அதன் பரம மித்ர தாரை அஸ்தம். அதன் வடிவம் ஒற்றை மயில் பீலி. அதை எழுதுகோலாக உபயோகிக்கிறார் சித்ரகுப்தன். மேலும் அவரது நட்சத்திரமான சித்திரையின் அனுஜென்ம சம்பத்து தாரை சதயம் ஆகும். அதன் வடிவம் ஒன்றாக இருக்கும் பல ஓலைச் சுவடிகள்.
சித்திரை, அவிட்டம் மற்றும் மிருகசீரிடம் நட்சத்திர நபர்கள் ஒற்றை மயில்பீலி பயன்படுத்தி நற்பலன்களைப் பெறலாம்.
நரசிம்மர் தூணிலிருந்து வர காரணம்
சித்திரையில் அவதரித்த பிரகலாதனின் சம்பத்து தாரை சுவாதி. சதயம், திருவாதிரை. ஆகவே தன் பக்தனைக் காக்க அவரது சம்பத்து தாரை சுவாதியில் நரசிம்மர் அவதரித்தார். உயர்ந்த மலைகள் அல்லது குகைகள் அல்லது தூண்கள் சதய வடிவானவை. ஆகவே நரசிம்மர், தான் அவதரிப்பதற்காக உயர்ந்த ஆளுயர தூண்களை தேர்வு செய்தார்.
இன்றளவும் உயர்ந்த மலைகளில் அல்லது குகைகளில் அல்லது தூண்களில் மட்டுமே நாம் நரசிம்மரைத் தரிசிக்க முடியும். மிருகசீரிடத்தில் அவதரித்த குரு ராகவேந்திர சுவாமிகளின் முற்பிறவியே பிரகலாதன் அவதாரம் என்கிறது புராணம்.
ஆகவே தனது பிருந்தாவன பிரவேசத்திற்கு முன் தன் ஜீவசமாதி மீது நரசிம்மரை பிரதிஷ்டை செய்யச் சொன்னார் குரு ராகவேந்திர சுவாமிகள். இன்றும் அவரது ஜீவசமாதியின் மேல் நரசிம்ம ரூபத்தைத் தரிசிக்கலாம்!
ஆகவே சித்திரை, மிருகசீரிடம், அவிட்டம் ஆகிய நட்சத்திர நபர்கள் நரசிம்ம வழிபாடு செய்வது செல்வ வளம் தரும்.
சுவாதி, திருவாதிரை, சதயம் ஆகிய நட்சத்திர நபர்கள் நரசிம்ம வழிபாடு செய்வது உடல்நலம் காக்கும்.
விசாகம், புனர்பூசம், பூரட்டாதி ஆகிய நட்சத்திர நபர்கள் நரசிம்ம வழிபாடு செய்வது நல்வழி காட்டும்.
உத்திரம், உத்திராடம், கார்த்திகை ஆகிய நட்சத்திர நபர்கள் நரசிம்ம வழிபாடு செய்வது காரிய ஸித்தி தரும்.
மூலம், மகம், அஸ்வினி ஆகிய நட்சத்திர நபர்கள் நரசிம்ம வழிபாடு செய்வது தோஷங்களைப் போக்கும்.
தாரை வடிவங்கள் சநாதன தர்மத்தின் ஆணிவேர் என்பதையறிந்து ஸ்ரத்தையாக வழிபாடு செய்வோம்.
இதுவரை சித்திரை நட்சத்திரம் பற்றி அறிந்தோம். அடுத்த அத்தியாயத்தில் ஸ்வாதி நட்சத்திரம் பற்றி அறியலாம்.
- வளரும்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |
