

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
முதலில் வாசக அன்பர்களுக்கு நன்றிகள் பல. ‘இந்து தமிழ் திசை’ இணையதளத்தில், கடந்த மூன்று தினங்களாக நான் எழுதிய ‘குருப்பெயர்ச்சி பலன்கள்’ முழுவதையும் படித்துவிட்டு, ஏராளமான அன்பர்கள் பாராட்டியுள்ளனர். தங்களின் மேலான விமர்சனங்களையும் பதிவிட்டுள்ளனர். அத்தனை பேருக்கும் நன்றி.
சரி... ரேவதி நட்சத்திரம் குறித்தும் ரேவதி நட்சத்திரக்காரர்களின் குணங்கள் குறித்தும் பார்த்து வருகிறோம். இந்த அத்தியாயத்தில், ரேவதி நட்சத்திரத்தின் நான்கு பாதங்களுக்கும் விரிவான பலன்களைப் பார்ப்போம்.
ரேவதி நட்சத்திரம் 1ம் பாதம் :-
ரேவதி 1ம் பாதத்தில் பிறந்தவர்கள், இளகிய மனம் படைத்தவர்கள். நேர்மையானவர்கள். தர்ம குணம் படைத்தவர்கள். படிப்பாளிகள். தெளிந்த ஞானம் கொண்டவர்கள். பலவிதமான விஷயங்களில் ஞானம் பெற்றவர்கள். எந்தப் பிரச்சினைக்கும் எளிதாகத் தீர்வு காண்பவர்கள்.
உள்ளம் சுத்தம் போல, உடையிலும் சுத்தம் பேணுபவர்கள். குடும்ப ஒற்றுமை காப்பவர்கள். எவர் மனதையும் புண்படுத்தாமல் இருக்க வேண்டும் என்பதில் கவனமாக இருப்பவர்கள். பெற்றோர் மீது அளவு கடந்த பாசம் வைத்திருப்பவர்கள். உடன் பிறந்தவர்களிடம் சகோதரன் போல் இல்லாமல் நண்பர்களைப் போல் பழகுபவர்கள்.
பழகுகிற எல்லோரிடமும் உண்மையாக இருப்பவர்கள். அவர்களுடைய கஷ்டத்தில் கைதூக்கி விடுபவர்கள். பிரதிபலன் பாராத உதவிகளைச் செய்து தருபவர்கள். வாழ்க்கைத் துணையிடம் தன்னை முழுமையாக ஒப்படைப்பவர்கள். பிள்ளைகளின் கல்வியில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள். அவர்களுடைய விருப்பத்தை நிறைவேற்றித் தருபவர்கள். தான் கற்றதை எல்லோருக்கும் பகிர்வார்கள்.
நல்ல உத்தியோகத்தில் உயர்ந்த பதவியில் இருப்பார்கள். ஆசிரியராக, பேராசிரியராக, நூலகர், மருத்துவர், வழக்கறிஞர், நீதிபதி, விளையாட்டு, ஆசிரியர், கைத்தொழில் பயிற்றுநர், உடற்பயிற்சி ஆசிரியர், ஆன்மிகப் பயண ஏற்பாட்டாளர், பேச்சைத் தொழிலாக செய்தல், பிரசங்கம், வரலாற்று ஆராய்ச்சியாளர் மொழி ஆய்வு என்கிற பணிகளில் இருப்பவர்கள்.
அரசியல் பதவி, அரசியல் தலைவர்கள், அரசுப் பணி, தூதரகப் பணி, டிராவல்ஸ், டிரான்ஸ்போர்ட் போன்ற தொழில், விவசாயம் சார்ந்த தொழில், பத்திரிகை மற்றும் ஊடகத் தொழில், எழுத்தாளர், கவிதை எழுதுதல், கலைத்துறை, சினிமா, நாடகம், நாட்டியம், இசை போன்ற வல்லுநர்கள் என இப்படி தொழில் அல்லது வேலை வாய்ப்பு அமையும்.
ஆரோக்கியத்தில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதும் இருக்காது. ஆனாலும் உடலில் அதிகமாக கொழுப்பு சேர்வது, தொப்பை, தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் இருக்கும். ஒரு சிலருக்கு வயிற்றுக் கோளாறு பிரச்சினைகள் இருக்கும். அதிகமான இனிப்பு உணவுகளை உண்பதும், சூடான உணவுகளை உண்பதாலும் பல் தொடர்பான பிரச்சினைகளும் வரும்.
இறைவன் - மகாகாளேஸ்வரர், விழுப்புரம்
விருட்சம் - பனைமரம்
வண்ணம் - இளமஞ்சள்
திசை - கிழக்கு
*********************
ரேவதி நட்சத்திரம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள் :-
ரேவதி நட்சத்திரம் 2ம் பாதத்தில் பிறந்தவர்கள், கடும் உழைப்பாளிகள்.
நேரம் காலம் பார்க்காமல் உழைப்பதில் மற்றவர்களுக்கு முன்னோடியாக இருப்பவர்கள். எடுத்துக்கொண்ட வேலையை முடிக்கும் வரை வேறு எந்த சிந்தனையும் இருக்காது. செய்கின்ற தொழிலை உயிராக நினைப்பவர்கள். குடும்பமா? வேலையா? என்ற கேள்வி வரும்போது நிச்சயமாக வேலைதான் என்ற முடிவை எடுப்பவர்கள்.
அந்த அளவிற்கு தான் செய்கின்ற தொழிலை தெய்வமாக நினைப்பவர்கள். தொழில் பலமாக இருந்தால்தான் குடும்பத்தைக் காப்பாற்ற முடியும் என்பதில் உறுதியாக இருப்பவர்கள். தொழில் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடக்கும்போது, மிக நேர்த்தியான உடை அணிபவர்கள். சாதாரணமாக இருக்கும்போது உடை பற்றிய பெரிய அக்கறையை எடுத்துக் கொள்ளாதவர்கள். குடும்ப உறுப்பினர்கள் மீது அளவுகடந்த பற்று பாசம் வைப்பார்கள். பெற்றோரின் அன்பும், அரவணைப்பும், ஆதரவும் ஒருங்கே கிடைக்கப் பெற்றவர்கள்.
வாழ்க்கைத்துணையுடன் சண்டை சச்சரவுகளில் ஈடுபட்டுக் கொண்டே இருப்பார்கள். ஆனாலும் அன்புக்கு குறைவிருக்காது. பிள்ளைகளின் மேல் மிகப்பெரிய நம்பிக்கையை வளர்த்துக் கொள்பவர்கள். பிள்ளைகளும் தன் தந்தையின் பேச்சைத் தட்டாதவர்களாக இருப்பார்கள். தன் குடும்பத்திற்குத் தேவையான செல்வத்தைச் சேர்ப்பது மட்டுமல்லாமல், தலைமுறைகளைத் தாண்டிய செல்வங்களைக் குவிப்பவர்கள்.
இவர்களுக்கு இன்ன தொழில்தான் என்று நிர்ணயம் செய்யவே முடியாது. எந்தத் தொழிலையும் தைரியமாக ஏற்று செய்பவர்கள். கட்டுமானத் தொழில் முதல் கட்டுமானத் தொழிலுக்குத் தேவையான பொருட்களை சப்ளை செய்வது வரை கட்டுமானத் தொழிலில் அத்தனை அம்சங்களிலும் இருப்பார்கள்.
அரசுப் பணியாளர்களாகவும் இருப்பார்கள். அரசுப் பணியாளர்களில் நல்ல பதவியில் இருப்பார்கள். அதிகாரமிக்க பதவியில் இருப்பார்கள். அதேசமயம் பணியில் இருக்கும்போது அதிகப்படியான குழப்பங்களையும் சிக்கல்களையும் சந்திப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் தொழில் செய்யும்போது இந்தக் குழப்பம் இருக்காது. இது ஒரு வித்தியாசமான பார்வையாகத்தான் இருக்கும். இதை அனுபவரீதியாக நான் அறிந்து சொல்கிறேன்.
எந்த வியாபாரமும் செய்யத் தயங்காதவர்கள். சாதாரண சாலையோரக் கடை வியாபாரிகள் முதல் மிகப் பெரிய வியாபார நிறுவனங்கள் வரை எதுவும் இவர்களுக்கு கைவசமாகும். சிறிய அளவிலான வியாபாரத்தைத் தொடங்கி மிகப் பெரிய ஜாம்பவான்களாக மாறுவார்கள். இவர்களுடைய எண்ண ஓட்டத்தை மற்றவர்கள் புரிந்து கொள்வது கடினம். அனைவரும் ஒரு சிந்தனையில் இருக்கும்போது இவர் வித்தியாசமாக, சிந்தித்துக் கொண்டிருப்பார், அப்படி பலவித கோணங்கள் இருந்தாலும், மாற்றுக் கோணத்தில் சிந்தித்து செயல்பட்டு வெற்றிகளைக் காண்பவராகவும் இருப்பார்.
உணவு விருப்பம் என பெரிதாக ஏதும் இருக்காது. எந்த உணவு கிடைத்தாலும் முகம் சுளிக்காமல் சாப்பிடுவார்கள். நண்பர்களோடு சேர்ந்து சாப்பிடுவதில் ஆர்வம் அதிகமாக இருக்கும். ஆனால் சாப்பிடுவதற்காக மற்றவர்களுக்கெல்லாம் அரை மணி முதல் ஒரு மணி வரை காலம் ஆகிறது என்றால் இவர்கள் பத்து நிமிடத்தில் சாப்பிட்டுவிட்டு அடுத்த வேலையைப் பார்க்க தொடங்கிவிடுவார்கள்.
ஆரோக்கிய பாதிப்புகள் என பெரிதாக ஏதும் இருக்காது. ஆனாலும் நரம்புத் தளர்ச்சி, இளமையிலேயே முதுமைத் தோற்றம், ஒட்டிய கன்னங்கள், சீராக இல்லாத பல்வரிசை, கை கால் நடுக்கம், கால் பாதத்தில் பிரச்சினைகள் போன்றவை இருக்கும்.
இறைவன் - கயிலாசநாதர் கோயில் ( சேலம் அருகே தாரமங்கலம்)
விருட்சம் - தங்க அரளி
வண்ணம் - இளநீலம்
திசை - வட மேற்கு
********************
ரேவதி நட்சத்திரம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் :-
ரேவதி நட்சத்திரம் 3ம் பாதத்தில் பிறந்தவர்கள் குறுகிய காலத்தில் மிக உயரத்தை அடைய வேண்டும் என்பதை இலக்காக வைத்து செயல்படுபவர்கள்.
அந்த இலக்கை நிச்சயமாக அடையவும் செய்வார்கள். உண்ண உணவு இல்லை என்றாலும் உடையில் நேர்த்தி இருக்க வேண்டும் என்பதைக் கொள்கையாகக் கொண்டவர்கள். தோற்றப்பொலிவுதான் மற்றவர்களை கவர்ந்திழுக்கும் என்பதை முழுமையாக நம்புவார்கள்.
சொல்லைச் செயலாக்கிக் காட்டும் வல்லவர்கள். எந்த முயற்சி செய்தாலும் அந்த முயற்சியை வெற்றிகரமாக முடித்து விட்டு, அடுத்த வேலையைப் பார்ப்பார்கள். எனவே இவர்கள் செயல்வீரர்கள். நிதானமாக கவனித்து செயல்படுபவர்கள். அடுத்தவர்களுடைய பலவீனத்தை தன் பலமாக மாற்றிக் கொள்பவர்கள்.
குடும்ப அமைப்பு மிகப் பலம் வாய்ந்ததாக இருக்கும். தந்தையின் வழிகாட்டுதலாலும், தந்தையின் ஆதரவாலும் முன்னேற்றத்தைக் காண்பவர்கள். தாயாரின் அன்பும் அரவணைப்பும் இருக்கும். வாழ்க்கைத் துணையின் மீது மிகுந்த அன்பும் மரியாதையும் பாசமும் வைத்திருப்பார்கள். வாழ்க்கைத்துணையின் பேச்சை மீறவே மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் வாழ்க்கைத்துணை எடுக்கும் முடிவுக்கு முழுமையாக கட்டுப்படுவார்கள்.
பிள்ளைகளின் மீது அளவற்ற பாசம் கொண்டவர்கள். அவர்களை சிறந்த படிப்பாளிகளாக, பலவித திறமை வாய்ந்தவர்களாக வளர்ப்பார்கள். சகோதர சகோதரிகளிடம் நல்ல நெருக்கத்தையும் பிரியத்தையும் வைத்திருப்பார்கள். அதேசமயம் உறவினர்களிடம் சற்று தள்ளியே இருப்பார்கள். இயல்பாக சொத்து சேர்க்கையில் ஈடுபடுவார்கள். அதிக முயற்சி இல்லாமலேயே அனைத்து விதமான நன்மைகளும் கிடைக்கப்பெறுவார்கள்.
எந்தப் பணியில் இருந்தாலும் ஒரு கட்டத்தில் அந்த வேலையை விட்டுவிட்டு சொந்தமாக தொழில் தொடங்குவதில் மட்டுமே ஆர்வம் காட்டுவார்கள். இவர்களுக்கு அடிமை வேலை பார்ப்பது பிடிக்காது. சொந்தமாக தொழில் செய்து பலருக்கும் வேலை வழங்குவதில்தான் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
இவர்களுக்கு என்ன தொழில்? இந்த மாதிரியான பணி என்றெல்லாம் நிர்ணயம் செய்யவே முடியாது! கிடைக்கின்ற வேலை எதுவாக இருந்தாலும் அதில் தன்னுடைய சிறப்புத் திறமைகளை வெளிப்படுத்தி குறுகிய காலத்தில் உச்ச பதவியை அடைவார்கள். ஆசிரியர், பேராசிரியர், வழக்கறிஞர், நீதிபதி, அரசியலில் மிக உயர்ந்த பதவி, அரசுப் பணிகளில் அதிகாரமுள்ள பதவி, அயல்நாட்டு தூதரகப் பணி, ராணுவப் பணி, மருத்துவர் என அனைத்து விதமான தொழில் மற்றும் வியாபார ஈடுபாடு இருக்கும். இவை அனைத்தும் ரேவதி 3ம் பாதத்தில் பிறந்தவர்களுக்கு அமையும்.
ஆரோக்கியத்தில் பெரிய அளவில் பாதிப்புகள் இல்லாவிட்டாலும், கால் நரம்பு தொடர்பான பிரச்சினைகளும், வெரிகோஸ் என்னும் நரம்புச் சுருட்டல் பிரச்சினைகளும் இருக்கும். ஒவ்வாமையையும் அலர்ஜி பிரச்சினைகளும் இருக்கும்.
இறைவன் - அர்த்தநாரீஸ்வரர் - திருச்செங்கோடு
விருட்சம் - சந்தன மரம்
வண்ணம் - இளம் பச்சை
திசை - வட மேற்கு
**********************
ரேவதி நட்சத்திரம் 4ம் பாதத்தில் பிறந்தவர்கள் :-
ரேவதி நட்சத்திரம் 4ம்பாதத்தில் பிறந்தவர்கள் இயல்பாகவே இரக்க குணம் உடையவர்கள்.
எளிதில் மற்றவர்களால் ஏமாறுபவர்கள். யார் எதைச் சொன்னாலும் அப்படியே முழுமையாக நம்புபவர்கள். வெள்ளந்தி மனம் படைத்தவர்கள். நல்ல படிப்பாளிகள், படித்த படிப்பு எந்த வகையிலும் உதவாமல் போய்விடும் நிலையும் ஏற்படும்.
படித்த படிப்பிற்கும் செய்கின்ற பணிக்கும் சம்பந்தம் இருக்காது. பயணங்களில் அதிக ஆர்வம் உடையவர்கள். அனைத்து விதமான புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவதில் ஆர்வம் காட்டுபவர்கள். இளமையிலேயே முக்கியமான ஆலயங்கள் அனைத்தையும் தரிசித்து விடுவார்கள்.
எளிமையான தோற்றமும், பக்திமயமான முக தேஜஸும் இருக்கும். எல்லாம் இறைவன் செயல் என்பதில் அதிக நம்பிக்கை உடையவர்கள். அதற்காக முயற்சியை எடுக்காதவர்கள் என்று எண்ண வேண்டாம்! கடுமையான முயற்சிகளை எடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
குடும்ப அமைப்பு இவர்களுக்கு மிகச்சிறப்பாக இருக்கும். குடும்பத்தினருக்காக அதிகம் உழைப்பவர்கள். பெற்றோர்கள் நல்ல வசதி வாய்ப்புகளுடன் இருப்பதால் பெரிய அளவில் பொருளாதாரப் பிரச்சினைகள் இருக்காது. சகோதரர்கள் இவர்களை விட அதிகம் சம்பாதிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் சகோதரப் பாசம் இவர்களுக்கு அதிகமாகவே இருக்கும்.
வாழ்க்கைத்துணை இவருடைய எதிர்பார்ப்புக்கு மாறாக இருக்கும். ஆனாலும் அனுசரித்துச் செல்வார்கள். பிள்ளைகள் மீது அளவற்ற பாசம் வைத்திருப்பார்கள். வெறுமனே பாசம் என்று சொல்வதைவிட கண்மூடித்தனமான பாசம் என்று சொல்வது தான் சரியாக இருக்கும்.
இவர்களில் பலரும் வேலை பார்ப்பவர்களாகத்தான் இருப்பார்கள். கடல்கடந்து அயல்நாடுகளில் வேலை செய்பவர்களாகவும் இருப்பார்கள். அரசுப்பணியில் நல்ல அதிகாரப் பதவியில் இருப்பார்கள். அரசியல் ஆர்வமும் இருக்கும். சமுதாய நலன் சார்ந்த சேவைகள் செய்வார்கள்.
சேவை நிறுவனங்கள், ஆஸ்ரமங்களில் பணி, ஆலயப் பணி, பயணம் தொடர்பான தொழில், வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம் நடத்துதல், ஏற்றுமதி இறக்குமதி தொழில், ஆடம்பரப் பொருட்கள் விற்பனை, அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை, புத்தக விற்பனை, ஆசிரியர் தொழில், உபந்யாசம், கதாகாலட்சேபம், ஆன்மிகச் சொற்பொழிவு, பட்டிமன்றப் பேச்சாளர், பத்திரிகை மற்றும் ஊடகப் பணி, கலைத்துறை சார்ந்த நடிப்பு, நடனம் நாட்டியம், இசை போன்ற துறைகளில் ஈடுபாடு. சமூக சேவை நிறுவனங்கள் நடத்துதல், கப்பல் பணி, கப்பல் படை, கட்டுமான நிறுவனங்கள் இதுபோன்ற தொழில் மற்றும் வேலை வாய்ப்புகள் அமையும்.
புதிய வகை உணவுகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும். சூடான சுவையான உணவின் மீது விருப்பம் இருக்கும். இதன் காரணமாகவே நீரிழிவு நோய், தைராய்டு, மூலநோய் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
இறைவன் - பத்மநாப சுவாமி, திருவனந்தபுரம்
விருட்சம் - பலா மரம்
வண்ணம் - மஞ்சள் மற்றும் பச்சை
திசை - வடக்கு
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த அன்பர்கள், அவ்வப்போது பள்ளிக் குழந்தைகளுக்குத் தேவையான கல்வி உதவிகளை செய்து தருவது மிகவும் பயனுள்ளதாக்கும். அவர்களுக்கு சீருடை முதல் பாட புத்தகங்கள் வழங்குவது வரை, பேனா பென்சில் போன்ற உபகரணங்கள் வாங்கித் தருவதிலும், காலணிகள் வாங்கித் தருவது என்று வழங்கி வாருங்கள். இவற்றையெல்லாம் செய்து வந்தால் மேலும் பலவித நன்மைகளையும் யோகங்களையும் பெற முடியும்.
அன்பார்ந்த வாசகர்களே!
இதுவரை 27 நட்சத்திரங்களுக்குமான முழுமையான தகவல்களை உங்களுக்கு வழங்கியிருக்கிறேன். இது நிச்சயம் உங்களுக்கு பயனுள்ளதாக இருந்திருக்கும். தான் என்ன மாதிரியான தொழில் செய்யலாம்? என்ன வேலைக்குப் போகலாம்? என்ன வியாபாரம் செய்யலாம்? எவரை வாழ்க்கைத் துணையாகக் கொள்ளலாம், யாரெல்லாம் நண்பர்கள் என்பவற்றை முழுமையாகவும் விரிவாகவும் தெளிவாகவும் தெரிந்துகொண்டிருப்பீர்கள்.
இதுவரை அனைத்து பதிவுகளுக்கும் மிகச்சிறந்த ஆதரவையும், உற்சாகத்தையும் தந்த உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றி!
இந்தத் தொடர், இத்தோடு முடியவில்லை. 27 நட்சத்திரங்களுக்கும் அதாவது அஸ்வினி தொடங்கி ரேவதி வரையிலான 27 நட்சத்திரங்களுக்குமான இன்னும் இன்னுமாக உள்ள சிறப்புத் தகவல்களை அடுத்தடுத்துச் சொல்ல இருக்கிறேன்.
உங்கள் நண்பர்கள், உறவினர்கள் முதலானோருக்கும் பகிருங்கள்.
அடுத்த பதிவில் சந்திப்போம்.
- வளரும்
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |