

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
எந்த பிரச்சினையையும் எளிதாகக் கையாளும் விருச்சிக ராசி வாசகர்களே.
இந்த குருபெயர்ச்சியில் உங்களுக்கு எப்படிப்பட்டப் பலன்கள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போம்.
இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாம் இடத்தில் இருந்த குரு பகவான், பெரிய அளவிலான நன்மைகளையும், முன்னேற்றத்தையும் கொடுத்திருப்பார். அதேசமயம் அதே இரண்டாம் இடத்தில் கேதுவும் இருந்ததால் குரு பகவான் கொடுத்த எதையும் முழுமையாக அனுபவிக்க முடியாமல் போயிருந்திருக்கும். ஆனாலும் ஓரளவுக்கு மனநிறைவை தரும்படியாக சுபவிசேஷங்கள் இல்லத்தில் நடந்திருக்கும். புதிய உறுப்பினர் உங்கள் இல்லத்திற்கு வந்திருப்பார். அது திருமணம் நடந்ததாகவும் இருக்கலாம். குழந்தை பாக்கியம் கிடைத்ததாகவும் இருக்கலாம்! முழுமையான பொருளாதார பிரச்சினைகள் தீராவிட்டாலும் தேவைகள்பூர்த்தியாகும் அளவுக்கு பணவரவு இருந்திருக்கும்.
உத்தியோகத்தில் நெருக்கடிகள் இருந்தாலும் உத்தியோகம் இழக்காமல் காப்பாற்றப்பட்டு இருப்பீர்கள். இது அனைத்தும் குருவின் துணையோடு நடந்தது. இப்படி பல நன்மைகளைத் தந்த குருபகவான், தற்போது மூன்றாம் இடத்துக்குச் செல்கிறார். இப்படி மூன்றாம் இடம் செல்லும் குரு பகவான் என்ன பலன்களைத் தருவார்? அதை எப்படி தருவார்?
மூன்றாம் இடம் செல்லும் குரு பகவான், ஒரு சில சோதனைகளைத் தருவார். மன தைரியத்தோடும், நம்பிக்கையோடும் செயல்பட்டால் எடுத்துக் கொண்ட காரியங்களில் வெற்றியைக் காண முடியும். சோதனைகள் வரும்போது துவண்டு விடாமல் துணிந்து நிற்பதுதான் மனோ தைரியத்தின் வெளிப்பாடாக இருக்கும். அப்படிப்பட்ட மனோ தைரியம் தரக்கூடிய மூன்றாம் இடத்திற்கு குரு வருவதால் மனதில் நம்பிக்கை பிறக்கும். சறுக்கல்களை சந்தித்தாலும் அதிலிருந்து மீண்டு சாதனைகளைச் செய்ய வைப்பார்.
உங்கள் ராசியிலேயே இப்போது கேது பகவான் இருப்பதும், ஏழாமிடத்தில் ராகு பகவான் இருப்பதும் மனச்சோர்வைக் கொடுத்தாலும், குருபகவான் அந்த மனச்சோர்வு குறையை நீக்கி மீண்டும் மீண்டும் முயற்சி செய்ய வைப்பார். அந்த முயற்சிகளில் வெற்றியையும் காணச் செய்வார்.
குடும்பத்தில் அமைதி நிலவும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். குழந்தைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். பெற்றோர்களின் உடல்நலம் சிறப்பாக இருக்கும். அவர்களின் உடல் நல பாதிப்புகள் நீங்கும். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் மட்டும் கவனம் செலுத்த வேண்டியது வரும். சிறிய அளவிலான மருத்துவச் செலவுகள் ஏற்படும். சகோதரர்களிடம் ஒற்றுமை குறைவு ஏற்படும். சொத்து தொடர்பான விஷயங்கள் மனதில் பாரத்தைத் தருவதாக இருக்கும். நிதானம் காப்பது நல்லது.
அலுவலகப் பணிகளில் எவ்வளவு கடினமாக உழைத்தாலும் உரிய அங்கீகாரம் கிடைக்காது. பதவி உயர்வு உள்ளிட்ட விஷயங்கள் தாமதப்படும். வேறு நிறுவனங்களுக்கு மாறும் முயற்சி சிறப்பாக இருந்தாலும், அப்படி மாறுவதற்கான சூழ்நிலை உங்களுக்கு, இந்தக் காலகட்டத்தில் இருக்காது. உள்ளூரத் தேவையற்ற கலக்கம் இருக்கும். மன தைரியத்தோடு வேறு அலுவலகத்திற்கு அல்லது வேறு நிறுவனத்திற்கு மாறும் முயற்சிகளை எடுத்தால் நிச்சயமாக நல்ல மாற்றங்கள் கிடைக்கும்.
சொந்தத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு கடினமாக உழைக்க வேண்டியது வரும். அலைச்சல் அதிகரிக்கும். எந்தவொரு விஷயத்திற்கும் இரண்டு மூன்று முறை முயற்சி செய்த பின்பே நிறைவேறும். கூட்டுத் தொழில் செய்து கொண்டிருப்பவர்கள் இப்போது தனித்தனியாக தொழில் செய்யவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும். கூட்டாளிகளுக்குள் ஒற்றுமை குறையும். உற்பத்தியாகும் பொருட்களில் சில குறைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளன. எனவே உற்பத்தி செய்வதற்கு முன்பே சரியாக திட்டமிட்டுக் கொள்ளுங்கள்.
தொழில் வளர்ச்சிக்குத் தேவையான வங்கிக் கடன் கிடைக்கும். புதிய தொழில்நுட்பங்களை தொழிலகத்தில் பயன்படுத்த முற்படுவீர்கள். அந்த முயற்சி நல்ல பலனைத் தரும்.
வியாபார விஷயங்கள் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி அமோகமாக இருக்கும். அதிகப்படியான லாபம் கிடைக்கக்கூடிய வியாபாரப் பொருட்களை வாங்கி விற்பனை செய்தால் நிறைந்த லாபத்தைக் காணலாம்.
ரியல் எஸ்டேட் தொழில் செய்பவர்களும் பங்கு வர்த்தகத் துறையில் இருப்பவர்களும் அளவான முதலீடுகளைச் செய்யுங்கள். மிகப்பெரிய அளவிலான முதலீடுகளைச் செய்யாமலிருப்பது நல்லது. உணவகத் தொழில் செய்பவர்கள் தங்களுடைய தயாரிப்புகளை சுகாதார விதிமுறைகளை பின்பற்றித் தயாரித்தால் பல பிரச்சினைகளில் இருந்து தப்பிக்கலாம்.
வாகனம் தொடர்பான பயணத் தொழில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு நல்ல வளர்ச்சி, முன்னேற்றம் இருக்கும். எதிர்பார்த்த ஒப்பந்தங்கள் கிடைக்கும். வருமானம் இருமடங்காக இருக்கும். ஆனாலும் செலவுகளும் தொடர்ந்துகொண்டிருக்கும்.
அரசியலில் இருப்பவர்கள் அதிகப்படியான ஆசைகளுக்கு ஆட்படாமல் இருக்க வேண்டும். பதவியைத் தேடும் முயற்சிகளைச் செய்ய வேண்டாம். உங்களுக்குக் கிடைக்க வேண்டிய பதவி தானாகக் கிடைக்கும். பதவியைத் தேடிச் சென்றால் ஏமாற்றத்தைச் சந்திக்க வேண்டியது வரும். அருகில் இருக்கும் நபர்களிடம் விழிப்புடன் இருக்கவேண்டும். அரசியல் சார்ந்த ரகசியங்களை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளாமல் இருக்க வேண்டும்.
பெண்களுக்கு சிறப்பான பலன்கள் நடக்கும். குடும்பத்தில் அமைதி நிலவும். திருமண முயற்சிகள் சாதகமாக இருக்கும். சகோதரர்களிடம் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். எனவே சகோதரர்களை அனுசரித்துச் செல்லுங்கள். கணவரின் உடல்நலத்தில் சிறிய அளவிலான பாதிப்புகள் ஏற்படும். எனவே அவருடைய உடல்நலத்தில் கவனம் செலுத்துங்கள். மனதில் இனம்புரியாத கவலை, பயம் ஏற்படும். ஆலய வழிபாடு செய்வது மன அமைதியைத் தரும். பணிபுரியும் இடத்தில் பணிச்சுமை அதிகரிக்கும். முகம் சுளிக்காமல் பணிகளைச் செய்து வந்தால் விரைவில் உங்களுக்கான அங்கீகாரம் கிடைக்கும். பதவி உயர்வு, ஊதிய உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும்.
மாணவர்களுக்கு கல்வியில் நல்ல முன்னேற்றம் இருந்தாலும், ஞாபக சக்தி குறைவாக இருக்கும். பாடங்களைப் புரிந்து கொள்வதில் குழப்பமான மனநிலை ஏற்படும். தகுந்த பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். மனதை ஒருநிலைப்படுத்தும் யோகாசனம், தியானம் போன்றவற்றைச் செய்ய வேண்டும்.
கலைஞர்களுக்கு ஒரு சில வாய்ப்புகள் நிச்சயமாகக் கிடைக்கும். பொருளாதாரத் தேவைகள் பூர்த்தி ஆகும். நண்பர்களால் புதிய வாய்ப்புகளும் ஒப்பந்தங்களும் கிடைக்கும்.
பொதுவாக விருச்சிக ராசிக்காரர்களுக்கு ஆரோக்கிய பிரச்சினைகள் மட்டுமல்லாமல், அலைச்சல்களும் அலைச்சலால் உடல் சோர்வும், அதன் காரணமாக மூட்டுவலி போன்ற பிரச்சினைகளும் ஏற்படும்.
வணங்க வேண்டிய தெய்வம் - மேல்மலையனூர் அங்காளம்மன்
ஆதரவற்றோர் இல்லங்களுக்குச் சென்று முடிந்தவரை தேவையான உதவிகளைச் செய்து தாருங்கள். உங்களால் முடிந்த அளவுக்கு அன்னதானம் செய்யுங்கள். மன நிம்மதியும் மனநிறைவும் உண்டாகும். முயற்சிகளில் வெற்றி கிடைக்கும்.
*********************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |