

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசக நண்பர்களே!
ரேவதி நட்சத்திரம் குறித்து பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
ரேவதி நட்சத்திரக்காரர்களின் குணங்கள், தனிப்பட்ட கேரக்டர்கள் என்னென்ன என்பதையெல்லாம் பார்ப்போம்.
ரேவதி நட்சத்திரமானது ஸ்ரீரங்கம் ரங்கநாதரின் பாதங்களைக் குறிப்பிடுவதையும், அபிமன்யு பிறந்த நட்சத்திரம் என்பதையும், ஸ்ரீசனீஸ்வர பகவான் பிறந்த நட்சத்திரம் என்பதையும் சென்ற பதிவில் சொல்லியிருந்தேன்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அறிவுஜீவிகள். புத்திசாலித்தனம் மிக்கவர்கள். ஞானம் அதிகம் உடையவர்கள். புரியாத புதிர்களுக்கு விடை காண்பவர்கள். மறைபொருள் ரகசியங்களை அறிந்தவர்கள். முக்காலத்தையும் உணரக்கூடிய சக்தி வாய்ந்தவர்கள். சரியான பயிற்சியும் முயற்சியும் இருந்தால் எதிர்காலத்தை கணித்துச் சொல்வதில் இவர்களுக்கு நிகர் இவர்களே!
அந்த அளவிற்கு ஞானத்தைப் பெற்றவர்கள். செல்வ வளம் மிக்கவர்கள். செலவுக்கு அஞ்சாதவர்கள். வீண் செலவுகள் செய்வதில் தயக்கம் காட்டாதவர்கள். ஆடம்பரச் செலவும் அதிகம் இருக்கும். அறிவார்ந்த செலவும் அதிகம் இருக்கும். புத்தகங்களை வாங்கிக் குவிப்பார்கள், அறிவை விசாலப்படுத்திக்கொண்டே இருப்பார்கள். தேடிக் கொண்டே இருப்பார்கள்.
முகப்பொலிவும், முகத்தில் தேஜஸும், குளிர்ச்சியான கண்களும், அகன்ற நெற்றியும் கொண்டவர்கள். சராசரி உயரம் உடையவர்கள். பயணங்கள் செய்வதில் அதிக ஆர்வம் உடையவர்கள். தன்னுடைய தொழிலை அல்லது வேலையைப் பயணத்தோடு தொடர்பு உடையதாக வைத்திருப்பார்கள்.
இப்படி பயணம் மட்டுமல்லாமல், புதிது புதிதாக விஷயங்களை அறிந்துகொள்வது இதுபோன்ற குணத்தால் அறிவு விசாலத்தை விரிவுபடுத்திக் கொண்டே இருப்பவர்கள். பயணம் தொடர்பான தொழில், அந்நிய நாட்டில் வாசம் செய்தல், வெளிநாட்டு நிறுவனங்களில் பணியாற்றுதல், வெளிநாட்டு தொடர்பு உடைய தொழில்களைச் செய்தல் போன்றவை ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு இருக்கும்.
சேவை சார்ந்த தொழில், பராமரிப்புப் பணிகள், புதிதாக உருவாக்கும் திறமை, புத்தகங்கள் எழுதுதல், ஆசிரியராக இருப்பது, பேச்சைத் தொழிலாகக் கொண்டிருப்பது, அரசியல் தொடர்பு உடைய பணிகள், சேவைத் தொழில்கள், நிதி நிறுவனம், ஆடை ஆபரண வியாபாரம், பல்நோக்கு வணிக வளாகம், மருத்துவமனை, தங்கும் விடுதிகள், ஆன்மிக உபாஸகர், ஆன்மிகத் தொடர்பு உடைய அனைத்துப் பணிகள், கோயில் கட்டுதல், கும்பாபிஷேகப் பணிகளில் பங்கெடுத்துக் கொள்ளுதல், உணவுத் தொழில், உணவகம் நடத்துதல், காய்கறி வியாபாரம், பால் தயிர் வியாபாரம், வனவிலங்கு ஆர்வலர், இயற்கை வள ஆர்வலர், கல்வி நிலையங்கள் நடத்துதல், குழந்தைகள் காப்பகம், ஆதரவற்றோர் இல்லம் நடத்துதல், இலவச மருத்துவச் சேவை, கப்பல் பணி, கப்பல் கட்டுமானப் பணி, மீன்பிடித் தொழில், மீன் வியாபாரம் போன்ற பணிகளிலும், தொழிலிலும் இருப்பார்கள்.
ரேவதி நட்சத்திரக்காரர்கள், பொருளாதாரத்தைத் தேடி எப்போதும் அதிகமாக ஆர்வம் காட்டமாட்டார்கள். தேவையான பொருளாதாரம் இவர்களைத் தேடிவரும்படியாக தங்கள் வாழ்வின் கட்டமைப்பை அமைத்துக் கொள்வார்கள். வசதி இல்லாவிட்டாலும், வசதி படைத்தவர் போன்ற தோற்றத்தைக் கொண்டவர்கள். எனவே எந்த இடத்திலும் தன்னுடைய கௌரவத்திற்கு இழுக்கு வராமல் பார்த்துக் கொள்வார்கள். ஆடம்பர ஆர்வம் இல்லாவிட்டாலும் ஆடம்பரத்திற்குத் தேவையான அனைத்து வாய்ப்புகளும் தாமாகவே தேடி வரும்.
நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ளும் இவர்கள், ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் சபலத்திற்கு இடம் கொடுத்து சிக்கலில் சிக்கிக் கொள்வதும் நடக்கும். இந்த ஒரு விஷயத்தில் மட்டும் கவனமாக இருந்தால் வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். பொதுவாகவே ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் வாழ்க்கைத் துணையிடம் பெரிய அளவிலான எதிர்பார்ப்புகளை வைத்துக்கொண்டால் ஏமாற்றம்தான் மிஞ்சும். இவர்களின் எதிர்பார்ப்புக்கு எதிராகவே வாழ்க்கைத் துணை அமையும். வாழ்க்கைத் துணையிடம் விட்டுக்கொடுத்துச் செல்வதும், அனுசரித்துச் செல்வதும் குடும்ப வாழ்க்கையை எளிமையாகவும் இனிமையானதாகவும் தரும். இதை நன்கு புரிந்து கொண்டால் வாழ்க்கை சிறப்பாகவே இருக்கும்.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மோட்ச ராசியில் பிறந்தவர்களாக இருப்பதும், மோட்ச நட்சத்திரத்தில் பிறந்ததாலும், இவர்களுக்கு பெண் வாரிசுகளே அதிகமாக இருப்பார்கள், ஆண்வாரிசு குறைவாகவே இருக்கு என்பது பொது விதி.
ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருக்க வேண்டியது அவசியம். உணவுக் கட்டுப்பாடு இல்லை என்றால் உடல் நல பாதிப்புகள் அதிகமாக இருக்கும். பொதுவாகவே, இவர்களுக்கு ஜீரணக் கோளாறு, நரம்புத் தளர்ச்சி, தோல் நமைச்சல், தோல் படை, தேமல் போன்ற பிரச்சினைகள், முடி உதிர்தல் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
இவர்களுக்கான தேவதை -- சனி பகவான் (தேனி மாவட்டம் குச்சனூர் சனிபகவான்)
அதிதேவதை - ஸ்ரீரங்கநாதர், ஸ்ரீரங்கம்
மிருகம் - பெண் யானை
விருட்சம் - இலுப்பை மரம்
பறவை - வல்லூறு
மலர் - வெண்காந்தள்
தானியம் - பச்சைப்பயறு
ரேவதி நட்சத்திரம் குறித்து மேலும் சில தகவல்கள்...
கப்பல், படகு, கால் பாதங்கள், மீன், தூண்டில் மீன், தொட்டி, காலணிகள், தோல் பொருட்கள் பூங்காக்கள், நந்தவனம், பாதாள அறைகள், பெட்டகம், வங்கி லாக்கர், அணைக்கட்டு, மயானம், அகால நேரம் அதாவது மாலைப் பொழுதும் இரவுப் பொழுதும் சந்திக்கின்ற நேரம், அதேபோல இரவுப் பொழுதும் காலைப் பொழுதும் சந்திக்கின்ற அருணோதய காலம் என்பவையெல்லாம் ரேவதி நட்சத்திரத்தைக் குறிக்கும்.
ஞானிகள், துறவிகள், குடும்பத்தை விட்டுப் பிரிந்து செல்லும் நிலை, திடீரென ஏற்படும் செலவுகள் மருத்துவச் செலவுகள், மருத்துவமனையிலிருந்து வீடு திரும்புதல், சொத்துகளை மறைத்து வைத்தும் இடம், உயில் எழுதி வைத்தல், தானியக் களஞ்சியம், பயணங்கள் தொடர்பான அனைத்து வாகனங்கள், வாகனங்களில் உபயோகப்படுத்தப்படும் பிரேக், எதிர்பாராத விபத்துகள், தண்ணீரால் ஏற்படும் கண்டங்கள் என இவை அனைத்தும் ரேவதி நட்சத்திரத்தின் அடையாளங்கள்!
மேலும் பல தகவல்களை அடுத்த பதிவில் சொல்கிறேன்.
ரேவதி நட்சத்திரக்காரர்களுக்கு வாழ்க்கைத் துணையாக வரக்கூடியவர்கள் யார்? அவர்களுடைய குணநலன்கள் என்ன? நண்பர்களாக இருப்பவர்கள் யார்? இதுபோன்ற விஷயங்களைத்தான் அடுத்த அத்தியாயத்தில் சொல்லப் போகிறேன்.
- வளரும்
*******************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |