

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
பூரட்டாதி நட்சத்திரக்காரர்களின் குணங்களை, கேரக்டர்களை, தகவல்களைப் பார்த்து வருகிறோம்.
தொடர்ந்து பார்ப்போம்.
சென்ற பதிவில் கர்ணனின் கொடை பற்றி பார்த்தோம் அல்லவா! அந்த கர்ணனின் தர்ம சிந்தனை அப்படியே கொண்டிருப்பவர்கள் இந்த பூரட்டாதியினர், வாக்கு கொடுக்க மாட்டார்கள். கொடுத்துவிட்டால் தலையை அடகு வைத்தாவது நிறைவேற்றுவார்கள். அந்த காரியம் முடியும் வரை வேறு எதையும் சிந்திக்க மாட்டார்கள். காரியம் நிறைவேறியவுடன்தான் சாப்பாடு தூக்கம் எல்லாம் என வாழ்பவர்கள்.
விமர்சனங்களைப் பற்றி துளியும் கவலைப்படாதவர்கள். யார் விமர்சனம் செய்தார்களோ அவர்களிடமே சென்று அவர்களின் தேவைகளையும் பூர்த்தி செய்து தரும் வெள்ளை உள்ளம் கொண்டவர்கள்.
பூரட்டாதி நட்சத்திரம் என்பது குருவின் நட்சத்திரம் என்பதால் கல்வி, திருமணம் போன்ற எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் அவற்றுக்கு உதவிகளைச் செய்ய தயங்காதவர்கள். மொத்தத்தில் நல்ல குணவான்கள், பூரட்டாதி நட்சத்திரக்காரர்கள்.
பூரட்டாதி கும்ப ராசியிலும் இருக்கும் என பார்த்தோம் அல்லவா.
கோபுர கலசம், உயர்ந்த பகுதிகள், பூஜை கலசம், கஜானா, தானியக் கிடங்கு, லாக்கர், வங்கியில் பணம் வைத்திருக்கும் பகுதி, தங்ககட்டிகள்,(மீனத்தில் இருக்கும் பூரட்டாதி ஆபரணத் தங்கம்), புதையல், ஆழ்கடல் பொக்கிஷம், விஷய ஞானம், மறைபொருள் ரகசியம், சங்கேத வார்த்தைகளை இனம் காணுதல், இசை ஞானம், நவரச முக பாவனை, விஷயங்களைக் கிரகித்துக் கொள்ளும் அறிவு என இவையனைத்தும் பூரட்டாதியின் அம்சமே!
மேலும், குறுக்கு வழியில் பணம் சேர்த்தல், சட்ட விரோத செயல்கள், வட்டித்தொழில், அயல்நாட்டு நிறுவனங்களோடு இணைந்து தொழில் செய்தல், ஆடம்பரச் சுற்றுலா, பயணத்தொழில், உணவகத் தொழில், சாலைப் பணிகள், அரசு சார்ந்த கான்டிராக்ட், சூதாட்ட விடுதிகள், மது விடுதிகள், அழகு நிலையம், மசாஜ் சென்டர், மருந்துக் கடை, மயக்க மருந்து மருத்துவர், கால்நடை மருத்துவர், யோகா பயிற்சியாளர், ஆன்மிகப் பேச்சாளர், உரைநடை எழுத்தாளர், ஊடகம் மற்றும் பத்திரிகைத் துறை போன்ற பணிகளில் அல்லது தொழிலில் இருப்பார்கள்.
இன்னும் பல தகவல்கள் இருக்கின்றன. வெளிப்படையாகவும் விரிவாகவும் சொல்லாமல் கொஞ்சம் சூசகமாகச் சொல்கிறேன், புரிந்துகொள்ளுங்கள்.
சட்ட விரோத பணம் ஈட்டல், விபத்துகள், ஊனமாகுதல், காவல்துறையால் தண்டிக்கப்படுதல், பாலியல் குற்றங்கள் என இதுவும் பூரட்டாதிக்கு பொருந்தும்.
இவை அனைத்தும் பொதுத்தகவல்களே!
இதற்காக போர்க்கொடி தூக்கிக்கொண்டு சண்டைக்கு வராதீர்கள். உங்கள் சுய ஜாதகத்தில் கிரகங்கள் நிலையின் பலத்தைக் கொண்டு பலன்கள் மாறுபடும். அதேசமயம் மேற்கண்ட தகவல்களில் கடுகளவேனும் உண்மை என்பது உண்மையான விஷயம். பூரட்டாதி நட்சத்திரத்துக்கான குணங்கள் இவை!
பூரட்டாதி நட்சத்திரத்தின் இன்னும் பல முக்கியமான விஷயங்களைப் பார்ப்போம்.
இறைவன் - குபேரன்
அதிதேவதை - ஏகபாதர் - திருவொற்றியூர், திருவாரூர் ஆலயங்கள்.
மிருகம் - ஆண் சிங்கம்
விருட்சம் - தேமா (மாமரம்)
பறவை - உள்ளான்
மலர் - முல்லை
பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு உடல் குளிர்ச்சியாக இருக்கும். வாதம் - பித்தம் - கபம் என்னும் மூவகை நாடியில் கபம் என்னும் குளிர்ச்சியான உடல்வாகு கொண்டவர்கள். எனவே இவர்கள் தங்கள் உணவுகளில் மிளகு முதலான உஷ்ண வகை உணவுகளைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். தீராத சளித்தொல்லை, இருமல், காய்ச்சல், நரம்புத் தளர்ச்சி, வயிற்றுக்கோளாறுகள் போன்ற பிரச்சினைகள் இருக்கும்.
திருமணத்திற்கு பொருத்தும் நட்சத்திரங்கள் :-
மகம் - மூலம் :-
இந்த நட்சத்திரத் துணை பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு அற்புதமான இணையாக இருக்கும். வாழ்க்கை சிறக்கும். நிம்மதி உண்டாகும். தலைமுறை தழைக்கும். 95%
பூசம் - அனுஷம் :-
இந்த நட்சத்திரத் துணை அமைவது நன்மைகளை அதிகப்படுத்தும். துன்பங்களை அணுகாமல் பார்த்துக்கொள்ளும். தேவைகள் நிறைவாகும். 90%
ரோகிணி - அஸ்தம் - திருவோணம் :-
இந்த நட்சத்திர துணை அமைவது பூரட்டாதி நட்சத்திரக்கார்களுக்கு நன்மை தரக்கூடியதாக இருக்கும். கடன் இல்லா வாழ்க்கை, சொத்து சேர்க்கை, மனநிறைவைத் தரும்படியான புத்திர பாக்கியம் கிடைக்கும். 90%
மிருகசீரிடம் - சித்திரை - அவிட்டம் :-
இந்த நட்சத்திர துணை அமைவது பூரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு இறைவன் கொடுத்த வரம் என்றுதான் சொல்ல வேண்டும். இறைவன் திருப்பார்வை பட்டவர்களே இணைய முடியும் என்பதே உண்மை. அற்புதமான ஜோடியாகத் திகழ்வீர்கள். 95%
திருவாதிரை - சுவாதி - சதயம் :-
இந்த நட்சத்திர இணைவும் மிகச் சிறப்பாக இருக்கும். அநேக நன்மைகள் நடக்கும்.நிறைவான நிம்மதி உண்டாகும். 80%
இணையக் கூடாத நட்சத்திரங்கள் :-
கார்த்திகை , உத்திரம், உத்திராடம், புனர்பூசம், விசாகம், பூரட்டாதி, அஸ்வினி, உத்திரட்டாதி :- இந்த நட்சத்திர வரன்களைத் தவிர்க்க வேண்டும். மீறி இணைவது புத்திர தோஷம் முதல் பல்வேறு இடர்பாடுகளையும் விரக்தியும் தரும்.
ஆயில்யம் - கேட்டை - ரேவதி :-
இந்த நட்சத்திரங்கள் கடும் துயரத்தையும், வேதனையையும் தரும். இந்த நட்சத்திரக்காரர்களைத் தவிர்க்க வேண்டும்.
பரணி - பூரம் - பூராடம் :-
இந்த நட்சத்திரங்களை வாழ்க்கைத் துணையாக இணைத்துக் கொள்ள நன்கு ஆலோசித்து முடிவெடுக்க வேண்டும். தவிர்ப்பதே நல்லது.
இதில் இடம்பெறாத நட்சத்திரங்களை ஜோதிடர் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளுங்கள்.
மேலும் சில தகவல்களுடனும், நல்ல நண்பர்கள் யார்? பூரட்டாதியின் நான்கு பாதங்களுக்கும் தனித்தனியான பலன்கள் என்னென்ன...
அடுத்த பதிவில் பார்ப்போம்.
- வளரும்