

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
இந்தப் பதிவில் நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் சதயம் நட்சத்திரம். இந்த சதயம் நட்சத்திரம் கும்ப ராசியில் இடம்பெற்றிருக்கும். நட்சத்திர வரிசையில் 24வது நட்சத்திரம். இதில் ராகுவின் நட்சத்திரங்களில் ஒன்றாகும். பரிபூரண சுப நட்சத்திரங்களில் இதுவும் ஒன்று.
சதயம் வானில் மலர்க் கொத்து போல, பந்து வடிவில் எண்ணற்ற நட்சத்திரக் கூட்டமாகவும், வட்ட வடிவமுமாகவும் இருக்கும். மற்ற எல்லா நட்சத்திரங்களும் ஒருசில நட்சத்திரக் கூட்டமாக இருக்கும்போது சதயம் மட்டுமே நூற்றுக்கணக்கான நட்சத்திரக் கூட்டத்தை தன்னகத்தே கொண்டுள்ளது.
ஏன் இவ்வளவு நட்சத்திரங்களை தன்னுள் வைத்துள்ளது? அதற்கும் காரணம் இருக்கிறது.
மேஷம் முதல் மீனம் வரை உள்ள ராசிகள் வரிசையில் கும்ப ராசி 11வது ராசி. 11ம் இடம் லாப ஸ்தானமாகும். அதாவது சேமிப்பு பலத்தைக் கொண்டது. சதயம் நட்சத்திரமும் பல நட்சத்திரங்களை தன்னுடன் இணைத்து தன்னை பலமாக காட்டிக்கொள்ளும்.
இரண்டாமிடம் தன ஸ்தானம் அதாவது தனவரவைக் குறிக்கும். 11ம் இடம் சேமிப்பைக் குறிக்கும். வரவு குறைவாக இருந்தாலும், சேமிப்பு பலமாக இருந்தால் செல்வாக்கோடு வாழலாம். அந்த செல்வாக்கைத் தருவது கும்பம். கும்பத்தில் இருக்கும் சதயம் இதில் மிக முக்கியப் பங்கு வகிக்கும்.
இந்த உலக உயிர் சமநிலையைப் பேணிக் காத்து, பிறப்பு இறப்புகளை சரிப்படுத்தியும், தர்ம நியதிகளின்படியும், எந்த சமரசத்திற்கும் இடம் கொடுக்காத தர்மவான் “எமதர்மராஜா” சதயம் நட்சத்திரத்தில் தான் பிறந்தார்.
என்னதான் தர்மத்தின் அடையாளமாக இருந்தாலும், இவரை வணங்குவதில் சில நெருடல் இருக்கத்தான் செய்யும். இவர் படத்தைகூட யாரும் வைத்துக்கொள்ள மாட்டார்கள்.
மேலே நான் சொன்ன வட்ட வடிவம் பற்றிய விளக்கத்தை இப்போது சொல்கிறேன்.
மனிதகுல வரலாற்றில் ஆதிமனிதனின் கண்டுபிடிப்பான சக்கரம்தான் மனிதகுலத்தையே முன்னேற்றியது என்பதில் ஐயமில்லை. உலகின் அனைத்து இயக்கமும் சக்கரம்தான். கடிகாரம் முதல் ராக்கெட் வரை அனைத்தும் சக்கரம்தான்.
வட்டம் என்பது ஒரு சுழல். அது ஒரு மாயை. வட்டத்திற்குள் சிக்காதீர்கள் என்று சொல்கிறார்களே அது இந்த சுழல் என்னும் மாயையைக் கொண்டுதான் சொல்லப்பட்டிருக்கிறது. நட்பு வட்டம், அரசியல் வட்டம், உறவு வட்டம்... இதில் அனைத்திலுமே நன்மை தீமை இரண்டுமே கலந்தே இருக்கும்.
சரி விஷயத்திற்கு வருவோம்.
இப்படி எல்லாமே வட்டமாக இருக்கும்போது, வீடு மட்டும் ஏன் வட்டமாக கட்டுவதில்லை. அரை வட்டமாக கூட கட்டமாட்டார்கள். காரணம்.. இப்படியான வீடு கட்டினால் மரணபயம் இருந்து கொண்டே இருக்கும். மருத்துவச் செலவுகள் இருக்கும்.
ஆனால், வீட்டிற்குள் இரு அறைகளுக்கு இடையே கதவு தேவைப்படாத இடத்தில் அரைவட்ட வாயில் (ஆர்ச்) வைத்து கட்டியிருப்பார்கள். ஜன்னல் வெளிப்புறத்தில் சன்ஷேட் கூட அரை வட்டத்தில் வைத்திருப்பார்கள். இந்த வீடுகளில் ஏதோ ஒரு கவலை ஓடிக்கொண்டிருக்கும். மன அமைதி இருக்காது.
ஒன்று... இந்த அரை வட்டத்தை மாற்ற வேண்டும். அல்லது நியாய தர்மங்களை கைவிட வேண்டும். இதில் எது உங்கள் விருப்பமோ அதை தேர்ந்தெடுத்துக் கொள்வோம் என்றெல்லாம் சொல்லிவிட முடியாது. நியாயத்தின் பக்கமும் தர்மத்தின் பக்கமும்தானே நிற்கவேண்டும். அப்படித்தானே வாழவேண்டும். .
மீண்டும் சதயம் நட்சத்திரத்துக்கு வருவோம்.
சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எப்பாடுபட்டாவது தன்னை நிலை நிறுத்திக்கொள்வார்கள். வருமானம் வரக்கூடிய தொழிலை சரியாகத் தேர்ந்தெடுப்பார்கள். எல்லோரும் பத்து சதம் லாபம் கிடைத்தால் போதும் என்று நினைக்க.. இவர்கள் முப்பது சதம் லாபம் ஈட்ட நினைப்பார்கள். சம்பாதிக்க உலகம் முழுவதும் சுற்றி வருவார்கள்.
சதயம் நட்சத்திரக்காரர்கள், குடும்ப அமைப்பில் சிறந்தவர்கள். ஆனால் தந்தையிடம் விலகியிருப்பார்கள். தாயாரிடம் அளவுகடந்த பாசம் வைத்திருப்பார்கள். சகோதரர்களுடனான ஒற்றுமை குறைவாகவே இருக்கும். சற்றே சுயநலம் அதிகமிருக்கும். உற்ற நண்பனாக இருந்தாலும் காசு விஷயத்தில் கறாராக இருப்பார்கள்.
ஆள் பாதி ஆடை பாதி என்பதை அறிந்தவர்கள் இவர்களே! உடைதான் ஒரு மனிதனின் அந்தஸ்தை வெளிகாட்டும் என்பதை அறிந்தவர்கள். உடை விஷயத்தில் அவ்வளவு நேர்த்தி இருக்கும். தோற்றப்பொலிவே பாதி காரியத்தை முடித்து விடும் என்பதை நன்கு உணர்ந்தவர்கள். உடை.... கம்பீரத்தை, நம்பிக்கையை, உற்சாகத்தை தரக்கூடியது என்பது இவர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. ஒருவகையில் உண்மையும் கூட!
இவர்கள், மாத சம்பளமோ, தினக்கூலியோ, வியாபாரியோ, தொழிலதிபரோ என்னவாக இருந்தாலும், சம்பாத்தியத்தில் ஒரு பங்கு சேமிப்பாக வைத்திருப்பார்கள். இந்த சேமிப்பையும் ஏதாவதொரு தொழில் முதலீடாக செய்து மேலும் சம்பாதிக்கவே பார்ப்பார்கள். வியாபார ராசிக்காரர்கள், இவர்கள் தொடங்கி வைக்கும் எதுவும் சோடை போகாது. முக்கியமான காரியங்களுக்கு இந்த சதய நட்சத்திரத்தில் பிறந்தவர்களை, உடன் அழைத்துச் சென்றாலே அந்த காரியம் தடையின்றி முடியும்.
மனதில் எந்த ஒளிவுமறைவும் சதய நட்சத்திரக்காரர்களுக்கு இருக்காது. எதையும் தைரியத்தோடு அணுகும் குணம், சமூகத்தில் உயர்ந்த மனிதர்களோடு நெருக்கம், அந்நிய தேசத்தில் கூட நட்பு வட்டம், எதிர்பாலின நட்பு வட்டம் என கலந்து கட்டிய பெரிய நட்பு வட்டத்தைக் கொண்டவர்கள்.
சதயம் நட்சத்திரக்காரர்கள், தர்மகாரியங்களில் ஈடுபடுபவர்கள். ஆலயப் பணிகளில் தன்னை ஆட்படுத்திக்கொள்பவர்கள். அன்னதானம், நீர்மோர் பந்தல், திருமண உதவிகள், ஏழை எளியோருக்கு நல உதவிகள் என பலவித தானதர்மங்களைச் செய்பவர்களாக இருப்பார்கள்.
அதேசமயம்.... ஆச்சரியப்படும்படியான, அப்படியா... என கேட்கக்கூடிய மறுபக்கமும் சதய நட்சத்திரக்கார்களுக்கு இருக்கிறது.
அடுத்த பதிவில் விவரிக்கிறேன்.
-வளரும்