Published : 01 Sep 2020 05:36 PM
Last Updated : 01 Sep 2020 05:36 PM

27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் - 70; தனித்தன்மை, எந்தத் தொழில் செய்தாலும் லாபம்; வேலை செய்யும் வியாபாரம் செழிக்கும்; அவிட்டத்தின் பெருமைகள்! 

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.

அவிட்டம் நட்சத்திரம் குறித்தும் அவிட்ட நட்சத்திரக்காரர்களின் குணங்கள் குறித்தும் அவர்களுக்கான பலன்கள் குறித்தும் பார்த்து வருகிறோம். இன்னும் பார்ப்போம்.
அவிட்ட நட்சத்திரம், ஆதாயம் தரக்கூடிய நட்சத்திரம். ஆதாயம் தரக்கூடிய காரியங்களை மட்டுமே அவிட்ட நட்சத்திரக்காரர்கள் செய்வார்கள். எப்படியும் வெற்றியை அடைந்தே தீருவார்கள் என்றெல்லாம் பார்த்தோம்.

அவிட்ட நட்சத்திரக்காரர்களின் மிக முக்கியமான, ஸ்பெஷலான விஷயம்...

இனி நடத்தவே முடியாது என முடிவு செய்து இழுத்து மூடும் நிறுவனங்களைக் கூட, அவிட்ட நட்சத்திரக்காரர்கள் தூக்கி நிறுத்திவிடுவார்கள். மிகப்பெரிய லாபம் தரும் நிறுவனமாக, கம்பெனியாக மாற்றிவிடுவார்கள். அந்த நிறுவனத்தை குறைந்த விலைக்கு வாங்கி வெற்றிகரமான நிறுவனங்களாக மாற்றிக் காட்டுவார்கள். அதனால்தான் இவர்களை ’தவிட்டு பானையையும் பொன்னாக்கும் கைராசிக்காரர்கள்’ என புகழ்கிறது ஜோதிட சாஸ்திரம்.

இவர்களுக்கு மட்டுமே தெரிந்த தொழில் ரகசியம் ஒன்றும் உள்ளது..

அது... சிக்கனம்.

ஆமாம்... சிக்கனம்தான் ஒரு தொழிலை வெற்றியாக்கும், வெற்று ஆடம்பர ஆர்ப்பாட்டங்கள் பேசு பொருளாக பார்க்கப்படுமே தவிர, வெற்றிகரமான தொழிலாக கொண்டு செல்லாது. இந்த சூட்சும ரகசியம் அறிந்தவர்கள் அவிட்ட நட்சத்திரக்காரர்கள்!

இப்படி, காணாமல் போன நிறுவனங்களை நீங்களே நினைத்து பார்த்துக்கொள்ளலாம். அவர்களின் ஆர்ப்பாட்ட ஆடம்பரத்தால் வீழ்ந்த கதையெல்லாம் உங்கள் நினைவில் நிழலாடும்.

இந்த ஆடம்பரங்களைத் தவிர்த்து, ஆக்கபூர்வ நடவடிக்கைகள் மேற்கொண்டு தொழில், வியாபாரம் என எதிலும் வெற்றி காணக்கூடியவர்கள் இந்த அவிட்டம் நட்சத்திரக்காரர்கள்.

இவர்களுக்கான உத்தியோகம், தொழில், வியாபாரம் எவை... என்று கேட்கிறீர்களா? எதைச் சொல்வது? எதை விடுவது? ஒரே வரியில் சொல்லவேண்டும் என்றால்... இவர்களால் முடியாத காரியம் என்று இந்த உலகில் எதுவுமே இல்லை. செய்ய முடியாத தொழில் என்று எதுவும் கிடையாது. செய்ய முடியாத வியாபாரம் என்பதெல்லாம் இவர்களுக்குக் கிடையாது. தெரியாத வேலையை செய்யக்கொடுத்தாலும், அதை குறுகிய காலத்தில் அறிந்து, புரிந்து சிறப்பாக செய்வார்கள். அதனால்தான் அவிட்ட நட்சத்திரக்காரர்களை ஒரு வட்டத்திற்குள் அடைக்க முடியாது என்று சொல்கிறேன்.

இருந்தாலும், இவர்களில் பெரும்பாலும் வியாபாரத் துறையில் இருப்பவர்களாகவும், சுய தொழில் செய்பவர்களாகவும் இருப்பார்கள். உத்தியோகத்தில் அரசுப் பணியாகவும், தனியார் நிறுவனங்களில் உயர் பதவிகளிலும் இருப்பார்கள்.

குறுகிய காலத்தில் பெரும் வளர்ச்சியடையக் கூடிய வியாபார வாய்ப்பு எது என்பதைத் தேர்ந்தெடுத்து அதைச் செய்வார்கள். அதற்காக எவ்வளவு தூரமானாலும் பயணம் செய்வார்கள். அயல்நாடுகளில் இருந்து இயந்திரங்கள், வாகனங்கள் வாங்கி விற்பது, மதிப்பு வாய்ந்த பொருட்களை இறக்குமதி செய்து விற்பது என்று வியாபாரத்தில் ஈடுபடுவார்கள். உலகில் அறிமுகப்படுத்தப்படும் எந்தப் பொருளானாலும் முதலில் வாங்குபவர்களும் இவர்களே! அதை லாபத்திற்கு மற்றவர்களுக்கு விற்பவர்களும் இவர்கள்தான்!

இரு சக்கரம், நான்கு சக்கரம் என எந்த வாகனம் வந்தாலும் அதை எப்படியும் முதல் ஆளாக வாங்கிவிடுவார்கள். அவிட்ட நட்சத்திரக்காரர்களை வாகனப் பைத்தியம் என்றே சொல்லலாம். ஆனால் நாகரீகம் கருதி வாகனக் காதலர்கள் என்றும் சொல்லலாம்.

இந்தக் காலத்தில் எந்தப் பொருளும் உலகம் முழுக்க ஒரே நேரத்தில் அறிமுகமாகி நமக்கு கிடைத்து விடுகிறது. ஆனால் முப்பது வருடங்களுக்கு முன்னால் பேனா முதல் கைக்கடிகாரம் வரை “டியூட்டிபெய்டு ஷாப்” என்ற கடைகளில்தான் கிடைக்கும், அதுமாதிரியான வியாபாரக் கடைகளை பெரும்பாலும் நடத்தியவர்கள் அவிட்ட நட்சத்திரக்காரர்களாகத்தான் இருந்தார்கள்.

பெரிய அளவிலான வியாபாரங்களில் இடைத்தரகராக, வாங்கி விற்கும் கமிஷன் வியாபாரிகளாக அவிட்ட நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள். ஆடை அணிகலன் விற்பனை, டிபார்ட்மெண்ட் ஸ்டோர், காய் கனி மொத்த வியாபாரம், மரக்கடை, காபி - ஏலக்காய் எஸ்டேட், தூதரகத்தில் பணி, மதுபானக் கூடங்கள், சூதாட்ட விடுதி, ரகசியத் தொழில், உளவுத்துறை, பயணம் தொடர்பான தொழில்கள், கணினி மென்பொருள் தயாரிப்பு, ஆயுதங்கள் உற்பத்தி நிறுவனங்களில் பணி, கனரக இயந்திரங்கள் தொடர்பான பணி, இரவு நேரப் பணி முதலான தொழில், வியாபார, வேலையில் அவிட்ட நட்சத்திரக்காரர்கள் இருப்பார்கள்.

மீண்டும் சொல்கிறேன்...

அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இன்ன தொழில், வேலை என நிர்ணயம் செய்ய முடியாது. இவர்களால் எதையும் செய்ய முடியும், அதில் சாதிக்கவும் முடியும். ஆனால், தொழிலோ வியாபாரமோ எதையும் நிரந்தரமாக செய்ய மாட்டார்கள். அதிகப்படியான லாபம் எதில் கிடைக்குமோ அதைத் தேர்ந்தெடுத்து தொழிலையும் வியாபாரத்தையும் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். அங்கே சென்று விடுவார்கள். இவர்களைப் பொறுத்தவரை ஆதாயம் மட்டுமே குறிக்கோள். லாபம் மட்டுமே இலக்கு!

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கான வாழ்க்கைத்துணையாக எந்த நட்சத்திரம் சிறந்தது என பார்ப்போம்..!

இந்த அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு திருமணத்திற்கு பொருந்தும் நட்சத்திரங்கள் என்பது குறைவுதான். மற்ற நட்சத்திரங்களைப் போல எளிதில் இவர்களுக்கு இந்த நட்சத்திரம்தான் என்றெல்லாம் வரையறுக்க முடியாது. காரணம்... கடந்த அத்தியாயத்தில் (அத்தியாயம் 69) சொன்னது போல் அவிட்டம் அவ்வளவு சீக்கிரத்தில் தன் குபேர யோகத்தை மற்றவர்களுக்கு தந்துவிடாது. அவிட்ட நட்சத்திரக்காரர்களைத் திருமணம் செய்வதற்கு கொடுப்பினை இருந்தால் மட்டுமே முடியும்.

எனவே பொருந்தக்கூடிய நட்சத்திரங்களையும், பொருந்தாத நட்சத்திரங்களையும் இரண்டே அட்டவணையாக தருகிறேன்.

அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு பொருந்தும் நட்சத்திரங்கள் :-

மூலம் நட்சத்திரம் மற்றும் திருவோணம் நட்சத்திரம் இந்த இரண்டு நட்சத்திரங்கள் மட்டுமே 100% நன்மைகளைத் தரும். சிறு குறையும் இல்லாத பரிபூரணமாகப் பொருந்தும் நட்சத்திரங்கள்.


அடுத்து பொருந்தக்கூடியவை :-

ரோகிணி, திருவாதிரை, புனர்பூசம், பூசம், ஆயில்யம், மகம், அஸ்தம், சுவாதி, விசாகம், பூராடம். இந்த நட்சத்திரங்கள் ஜோதிட ஆலோசனையும் பெற்றே வாழ்க்கைத் துணையாக இணைக்க வேண்டும், 65% மதிப்பெண் தரலாம்.


பொருந்தாத நட்சத்திரங்கள் :-

மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் இணையவே கூடாது. மேலும், அஸ்வினி, பரணி, கார்த்திகை, பூரம், உத்திரம், அனுஷம், கேட்டை, உத்திராடம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் பொருந்தாது.


நண்பர்களாக இருக்க வேண்டிய நட்சத்திரங்கள் :-

உண்மையில் இவர்களுக்கு நிரந்தர நண்பர்கள் என்று எவரும் கிடையாது. ஆதாயம் இருந்தால் நண்பர், ஆதாயம் இல்லை என்றால் வெறும் ’ஹாய்’ அவ்வளவுதான்.

அவிட்ட நட்சத்திரக்காரர்கள், நண்பர்களோடு வீண் அரட்டை, கும்மாளம் போன்ற செயல்களில் ஈடுபடமாட்டார்கள். சிக்கனமும் சேமிப்பும் இவர்களுக்கு இரண்டு கண்கள். அதில் எந்த பாதிப்பும் வராதபடி பார்த்துக்கொள்வார்கள்.

இருந்தாலும் மனம் விட்டுப் பேச உண்மையான நண்பர்கள் இல்லாமலா போவார்கள்? இருப்பார்கள். அவிட்டம் நட்சத்திரக்காரர்களுக்கு மூலம் மற்றும் திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் மட்டுமே நட்பாக இருக்க முடியும், இவர்கள் மட்டுமே உண்மையான நண்பர்களாக இருப்பார்கள்.

இப்போது ஒரு கேள்வி உங்கள் மனதில் எழலாம்.

இதுவரை எழுதிய நட்சத்திரங்களுக்கு நிறைய நட்சத்திரங்களை வாழ்க்கைத் துணைக்கும், நண்பர்களாகவும் பரிந்துரைத்திருந்தேன். ஆனால் இந்த அவிட்டம் நட்சத்திரத்திற்கு மிகக் குறைந்த அளவிலே திருமண நட்சத்திரங்களும், நட்பு நட்சத்திரங்களும் இருப்பது உங்களுக்கு ஆச்சரியத்தைத் தரலாம்! இதற்கு காரணம் இருக்கத்தான் செய்கிறது.

பொதுவாக ரத்த வகையில் O வகை ரத்தம் பரவலாக எல்லோருக்கும் இருக்கும், எல்லோருக்கும் ஏற்கக்கூடியதாக இருக்கும், இது எல்லா நட்சத்திரங்களை போல. ஆனால் அரியவகை ரத்தம் ஒன்று உள்ளது. அது... பம்பாய் ரத்தம் என்பார்கள். இது அரிதினும் அரிது. இதுபோல அவிட்டம் நட்சத்திரம் அரிதினும் அரிதான நட்சத்திரம். எனவேதான் திருமணப் பொருத்த நட்சத்திரம் கூட குறைந்த அளவிலே உள்ளது. அவிட்ட நட்சத்திர வாழ்க்கைத்துணை அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைத்துவிடாது என்பதே உண்மை.

அதேபோல அவிட்ட நட்சத்திரக்காரர்களுக்கு நண்பர்களும் வெகு குறைவுதான். அதாவது அவிட்டத்தினருக்கு நட்பு குறைவு என்றாலும், மற்ற நட்சத்தினர் அவிட்டத்தில் பிறந்தவரை நட்பாக்கி கொள்வதில் தவறில்லையே! எனவே மற்ற நட்சத்திரத்தினர் அவிட்டத்தை நட்பாக்கி கொள்வது அதிர்ஷ்ட வாய்ப்பு என்றுதான் சொல்ல வேண்டும். ஆகவே மற்ற நட்சத்திரக்காரர்கள், அவிட்ட நட்சத்திரக்காரர்களை நட்பாக்கி கொண்டால், பல அதிர்ஷ்டங்களைப் பெறலாம்.

மேலும், நஷ்டத்தில் இயங்கும் கடையோ, நிறுவனமோ, தொழிற்சாலையோ அவிட்டத்தில் பிறந்தவர்களை பணிக்கு அமர்த்திப் பாருங்கள்... நிச்சயமாக அந்தத் தொழில்,அந்த நிறுவனம் லாபத்தை நோக்கிச் செல்வீர்கள்.

அதேசமயம், நல்ல லாபத்தில் இயங்கும் நிறுவனம், திடீரென சரிவைச் சந்திக்க நேர்ந்தால் அவிட்டத்தில் பிறந்தவர் பணியிலிருந்து விலகிவிட்டார் என்பது கூட காரணமாக இருக்கலாம்.

அப்படியானால் சுய ஜாதகம் வேலை செய்யாதா?

தொழிலைச் செய்பவர்களின் ஜாதகம் பலமாக இருந்தால் அவிட்டமா இருந்தா என்ன சுவாதியா இருந்தா என்ன என கேட்கலாம்.

எந்த ஒரு மனிதனுக்கும் ஏற்றம் இறக்கம் என்பது நடந்து கொண்டேதான் இருக்கும். அப்படி ஏற்றம் வரும்போது அவிட்டம் நட்சத்திரம் வந்து இணைவதும், இறக்கம் வரும்போது அவிட்டம் நட்சத்திரம் விலகுவதும் நடக்கும்.சுய ஜாதகம் பலமாக இருப்பின் சற்று தடுமாற்றம் வந்து சரியாகும் என்பதுதான் சுய ஜாதக பலம். இதைச் சரியாக புரிந்து கொண்டால் குழப்பம் இருக்காது.

அவிட்ட நட்சத்திரங்களுக்கான தேவதை - அஷ்டவசுக்கள்

அதிதேவதை - இந்திராணி

மிருகம் - பெண் சிங்கம்

பறவை - பொன்வண்டு

விருட்சம் - வன்னி மரம்

மலர் - செண்பகம்

பொதுவாக அவிட்டத்தில் பிறந்தவர்கள், வன்னி மரத்தை தல விருட்சமாகக் கொண்ட சிவாலயங்கள் சென்று வணங்கிவருவதும், வன்னி மரங்களை நட்டு வளர்த்து வருவதும் நல்ல பலன்களைத் தரும்.

அடுத்த பதிவில் அவிட்டம் நான்கு பாதங்களுக்கும் பலன்களைப் பார்ப்போம்.

- வளரும்

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x