ராகு - கேது பெயர்ச்சி ; மீன ராசி அன்பர்களே! ஒன்றுக்கு பத்து லாபம்; தொழிலில் வெற்றி; வீடு கிரகப்பிரவேசம்; களங்கம் தரும் நட்பு! 

ராகு - கேது பெயர்ச்சி ; மீன ராசி அன்பர்களே! ஒன்றுக்கு பத்து லாபம்; தொழிலில் வெற்றி; வீடு கிரகப்பிரவேசம்; களங்கம் தரும் நட்பு! 
Updated on
3 min read

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

மீன ராசி அன்பர்களே வணக்கம்.

இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு வழங்க இருக்கும் பலன்கள் என்னென்ன என்பதையெல்லாம் பார்ப்போமா?

இதுவரை உங்கள் ராசிக்கு 4ம் இடத்தில் ராகுவும், 10ம் இடத்தில் கேதுவும் அமர்ந்து பலன்களைத் தந்தார்கள். இப்போது ராகு உங்கள் ராசிக்கு 3ம் இடத்திற்கு வருகிறார்; கேது 9ம் இடத்துக்கு வருகிறார்.

இந்த ராகு கேது பெயர்ச்சி மற்ற எல்லா ராசியினரையும்விட வெகு நிச்சயமாக உங்களை நிம்மதிப் பெருமூச்சு விடவைக்கும் என்பதில் ஐயமில்லை. ஏகப்பட்ட மருத்துவச் செலவுகளைத் தந்திருப்பார் ராகுபகவான்.

அதுமட்டுமா? கோடிகளில் லாபம் கிடைக்கும் என்று சொத்துபத்தெல்லாம் அடகு வைத்து முதலீடுகள் செய்ய வைத்திருப்பார். அனைத்தையும் முடக்கி வைத்திருப்பார். இப்போது அதற்கெல்லாம் விடிவுகாலம் ஏற்படப் போகிறது. தைரியம் வீரியம் எல்லாம் வெளிப்படும்.நேரடி எதிரிகளும், மறைமுக எதிரிகளும் காணாமல் போவார்கள்.

சூரியனுக்கு 8ல் பலம், குரு பகவானுக்கு 9ல் பலம், சனிக்கு 10ல் பலம், புதனுக்கு 6ல் பலம், செவ்வாய்க்கு 7ல் பலம் சுக்கிரனுக்கு 12ல் பலம். அதுபோல ராகு பகவானுக்கு 3ல் பலம். இப்போது ராகு உங்கள் ராசிக்கு 3ல் வருகிறார்.

நீங்கள் இழந்ததை ஒன்றுக்கு பத்தாக, நூறாக திருப்பிப் தரப்போகிறார். வாரம் தவறாமல் டாக்டரைப் பார்த்து, மருத்துவச் செலவு செய்த நீங்கள் இனி, மருத்துவரின் விலாசத்தையே மறக்கப்போகிறீர்கள். அந்தளவுக்கு ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். நோய் பயம் முழுவதுமாக நீங்கும். கவலை தந்த தாயாரின் உடல்நலம் முழுமையாக குணமாகும்.

தாய் வழி உறவுகளிடம் ஏற்பட்ட வருத்தங்கள் மறையும். ஒற்றுமை ஏற்படும். அதேசமயம் இளைய சகோதரரிடம் பகை ஏற்படாமல் பார்த்துக்கொள்ளுங்கள். இப்போது அவரின் அவசர முடிவுகள் அவருக்கு பாதிப்பை உண்டுபண்ணும். அவரை எச்சரிக்கைப்படுத்துங்கள்.

சொத்துகள் தொடர்பான பிரச்சினைகள், வழக்குகள் முடிவுக்கு வரும். தடைபட்ட வீடு கட்டும் பணி இப்போது முடிவடைந்து புதுமனை புகு விழா நடத்துவீர்கள். தொடர்ந்து பழுது ஏற்பட்டுக் கொண்டே இருந்த வாகனத்தை மாற்றி புதிய வாகனம் வாங்குவீர்கள்.

தொழில் வளர்ச்சி மிகச் சிறப்பாக இருக்கும். இனி எந்த இடர்பாடும் இல்லாமல் தொழில் சீரான வளர்ச்சிப் பாதைக்குத் திரும்பும். புதிய தொழில் தொடங்கவும் வாய்ப்பு உண்டு. பூமி தொடர்பான தொழில் செய்பவர்களுக்கு இது அதிர்ஷ்டமான காலகட்டம். பயணம் தொடர்பான தொழில் செய்பவர்கள் இனி செலவே இல்லாமல் லாபம் பார்ப்பார்கள்.

எந்த வகையான தொழில் செய்தாலும் சிறப்பான பலன்களை காண்பார்கள். தொழில் போட்டியாளர்கள் விலகிச் செல்வார்கள். போட்டி நிறுவனத்திலிருந்து முக்கியப் பணியாளர் உங்கள் நிறுவனத்தில் வந்து சேர்வார். இனி உங்களுக்கு நிகர் நீங்களே என்பதை இந்த உலகத்திற்கு காட்டுவீர்கள்.

வியாபாரிகளுக்கு அதிகம் சொல்லத்தேவையில்லை. லாபம் லாபம் என இனி லாபம் மட்டுமே பார்க்கப் போகிறீர்கள். ஆடம்பர, நூதனப் பொருட்கள் வியாபாரம் செய்பவர்களுக்கு வியாபாரம் உச்சத்தைத் தொடும். ஆடை ஆபரணம், கவரிங் நகை தொழில், வெள்ளி ஆபரண தொழில், பிரிண்டிங் தொழில் என அனைத்துத் தொழில் மற்றும் வியாபாரம் நல்ல வளர்ச்சியும் லாபத்தையும் தரும். வியாபாரப் போட்டியில் முதலிடம் பிடிப்பீர்கள்.

விவசாயிகளுக்கு நிலப்பிரச்சினைகள் முடிவுக்கு வரும். பாகப்பிரிவினைகள் சுமுகமாக தீரும். பூச்சி பிடித்த, நோய் தாக்கிய பணப்பயிர்களுக்கு மாற்று மருந்து கிடைத்து நல்ல பலன் கிடைக்கும். தண்ணீர் பற்றாக்குறை தீரும். மின்சார வசதி கிடைக்கும். விளைபொருட்கள் அறுவடைக்கு முன்னரே நல்ல விலைக்கு போகும். வர இருக்கும் தீபாவளி, பொங்கல் உங்களுக்காகவே காத்திருக்கிறது.

அரசியல் தொடர்பானவர்களுக்கு இனி எதிலும் வெற்றிதான். கட்சிப் பதவி, அரசியல் பதவி என அனைத்தும் தேடிவரும். அசைக்க முடியாத சக்தியாக உருவெடுப்பீர்கள்.

பெண்களுக்கு மகிழ்ச்சிக்கு அளவே்இருக்காது. விரும்பிய அனைத்தும் தங்குதடை இல்லாமல் கிடைக்கும். சொந்த வீடு, குழந்தை பாக்கியம், நல்ல வேலை, பதவி உயர்வு என அனைத்தும் கிடைக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். உங்கள் மீது சுமத்தப்பட்ட வீண்பழி, அவதூறுகள் நிர்மூலமாகும். தவறு செய்தவர்கள் உங்களிடம் மன்னிப்பு கேட்பார்கள். குடும்ப ஒற்றுமை பலப்படும். சுய தொழில் தொடங்கும் வாய்ப்பு உள்ளது.

மாணவர்கள் கல்வியில் சாதனை படைப்பார்கள். அயல்நாட்டில் கல்வி கற்கும் யோகம் உண்டு. விரும்பிய கல்வி தடையில்லாமல் கிடைக்கும்.

கலைஞர்களுக்கு இதுவரை வாய்ப்புக்காக காத்திருந்தீர்கள். காத்திருப்புக்கு ஏற்ற இரட்டிப்புப் பலன்களைப் பெறுவீர்கள். இப்போது சிறப்பான ஊதியத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படுவீர்கள். உங்களைப் பற்றிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். மறைமுக எதிரிகள் காணாமல் போவார்கள். நல்லகாலம் பிறந்தாச்சு என்பதை நீங்களே உணர்வீர்கள்.


கேது பகவான் தரும் பலன்கள் -

இதுவரை உங்கள் ராசிக்கு 10ல் இருந்த கேது பகவான், பல தொழில் வாய்ப்புகளை தந்திருப்பார். ஆனால் எதையும் செயல்படுத்த முடிந்திருக்காது. உண்மையில் பத்தில் அமர்ந்த கேது பல தொழில் தரவேண்டும். சனிபகவான் கேது பிடியில் இருந்ததால் வாய்ப்புகள் வந்திருக்கும், ஆனால் செயலில் இறங்க விடாமல் தடைகள் ஏற்பட்டிருக்கும். இனி எந்தத் தடையும் இல்லை.

கேது 9ம் இடம் செல்வதாலும், சனி மகரத்தில் இருப்பதாலும், இனி எந்த இடர்பாடும் இல்லாமல் தொழில் வளர்ச்சியைக் காண்பீர்கள். சேமிப்பை உயர்த்துவீர்கள். புதிய தொழில் தொடங்கலாம். சொத்துகள் வாங்கிப் போடலாம்.

அதேசமயம், ஒன்பதாம் இடத்து கேது பூர்வீகச் சொத்துக்களில் வில்லங்கம் ஏற்படுத்துவார் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். எனவே சொத்து விஷயத்தில் அமைதி காப்பது நல்லது. தந்தையின் உடல்நலத்தில் கவனம் செலுத்த வேண்டும். மூத்த சகோதர வகையில் இணக்கமாக இருக்க வேண்டும். தேவையற்ற நட்பு களங்கம் ஏற்படுத்தும். விலகி இருப்பதே நல்லது. குலதெய்வ வழிபாடு செய்வதும், மகான்களின் ஜீவசமாதிக்கு சென்று தரிசித்து வருவதும் மனதில் சலனம் ஏற்படாமல் உங்களைக் காப்பாற்றும்.

பொதுவாக கோயில் தெப்பகுளங்களில் இருக்கும் மீன்களுக்கு உணவளிப்பதும், காது கேளாதோருக்கு செவித்திறன் கருவி வாங்கித் தருவதும் சிறப்பான நன்மைகளைத் தரும்.

வணங்க வேண்டிய தெய்வம் - காலபைரவர்

**********************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in