ராகு - கேது பெயர்ச்சி ; கும்ப  ராசி அன்பர்களே! எதிர்பாராத லாபம், வியாபாரத்தில் செம லாபம்; நகை சேரும்; நிலத்தில் முதலீடு! 

ராகு - கேது பெயர்ச்சி ; கும்ப  ராசி அன்பர்களே! எதிர்பாராத லாபம், வியாபாரத்தில் செம லாபம்; நகை சேரும்; நிலத்தில் முதலீடு! 
Updated on
3 min read

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

கும்ப ராசி அன்பர்களுக்கு வணக்கம்.

இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு வழங்க இருக்கும் பலன்களையெல்லாம் பார்ப்போமா?

இதுவரை உங்கள் ராசிக்கு 5ல் ராகுவும், 11ல் கேதுவும் அமர்ந்து லாபகரமான பலன்களைத் தந்தார்கள். குறிப்பாக தொழில் வளர்ச்சி, எதிர்பாராத வருமானம், முக்கியமாக திருமணம், புத்திர பாக்கியம் என பலவித யோகங்களைத் தந்தார்கள்.

இப்போது ராகு பகவான் வீடு, வாகனம், தாயார் மற்றும் சுகஸ்தானம் என்னும் 4ம் இடத்திற்கும், கேது பகவான் தொழில் மற்றும் கர்ம ஸ்தானம் எனும் 10ம் இடத்திற்கும் பெயர்ச்சியாகிறார்கள்.

இதுவரை அதிக உழைப்பில்லாமல் வருமானம் தந்த ராகு பகவான், இனி உங்களை ஓடிஓடி உழைக்க வைப்பார். பசி தூக்கம் பற்றி கவலைப்படாமல் உழைக்க வேண்டியது வரும். இப்படி உழைப்பதால் என்னாகும்? உடல் சோர்வு உண்டாகும்! உடல் சோர்வு ஏற்பட்டால்...? உடல் நலிவு உண்டாகும். இதுதான் ராகு பகவான் இப்போது செய்யப்போகிறார்.

ஓய்வில்லாத அலைச்சல், சம்பாதிக்க வேண்டும் என்கிற உச்சபட்ச வேகம்... உடல்நலனில் கவனம் செலுத்த வைக்காது. எனவே உடல்நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள். இரவு அதிக நேரம் விழித்திருப்பதைத் தவிர்த்து நல்ல உறக்கம் உறங்குங்கள்.

ஆரோக்கிய உணவை உண்ணுங்கள். சிறிய உடல்நல பாதிப்பு என்றாலும் சுயமாக மருந்தெடுக்காமல் மருத்துவர் ஆலோசனையைப் பெறுங்கள். எந்த பாதிப்பும் வரவே வராது. இதே நிலைதான் உங்கள் தாயாருக்கும் ஏற்படும் என்பதை நினைவில் கொண்டு செயல்படுங்கள். அவரின் உடல் நலத்தில் கவனமாக இருக்க வேண்டும். மருந்துகளை தவறாமல் எடுத்துக்கொள்கிறாரா என்பதை கண்காணிக்க வேண்டும்.

சொத்துப் பிரச்சினைகளில் விட்டுக்கொடுத்துச் செல்லவேண்டும், வீண் பிடிவாதம் பிடிக்க வேண்டாம். அக்கம்பக்கத்தினருடன் பொது சுவர், காம்பவுண்டு சுவர் போன்ற பிரச்சினைகளில் நிதானமாகச் செயல்பட்டு பிரச்சினையைத் தீர்க்க வேண்டும். வீம்பாக பிரச்சினை செய்தால் உங்களுக்கு வீண் செலவுகளை உண்டாக்கும். உங்கள் வீட்டுக்கு, நிலத்திற்கு பட்டா மாற்றம், நிலவரி, வீட்டுவரி போன்றவற்றை சரியாகப் பராமரியுங்கள்.

நிலத்தரகர் தொழில் செய்பவர்கள், மனை பிரித்து வியாபாரம் செய்பவர்கள், மூலப் பத்திரங்களை நன்றாக ஆய்வு செய்த பின் வியாபாரம் செய்யுங்கள். போலி பத்திரங்களில் உஷாராக இருங்கள்.

பயணம் தொடர்பான தொழில் செய்பவர்கள் நிறைவான வருமானம், அதிகப்படியான லாபம் கிடைக்கும். ஆனாலும் வாகனங்களை சரிவர பராமரிக்க வேண்டும். யாரை நம்பியும் வாகனங்களைத் தரவேண்டாம். வாடிக்கையாளர்கள் உண்மையானவர்களா? என ஆய்வு செய்யுங்கள். எரிவாயுவால் இயங்கும் வாகனங்களை சரிவர பராமரிக்க வேண்டும்.

தங்கத்தில் முதலீடு செய்யாமல் நிலத்தில் முதலீடு செய்தால் பலமடங்கு ஆதாயம் கிடைக்கும். (தங்கம் சரிவை சந்திக்க இருக்கிறது).

பணியில் இடமாற்றம், வீடு மாற்றம் போன்றவை ஏற்படும். எந்த மாற்றம் வந்தாலும் தயங்காமல் ஏற்றுக்கொள்ளுங்கள். உத்திதியோகத்தில் பதவி உயர்வு, ஊதிய உயர்வு கிடைக்கும். வேலைக்கு முயற்சி செய்பவர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். குழுவுக்கு தலைமை ஏற்கவேண்டியது வரும். அதில் சிறப்பாகப் பணியாற்றி நல்ல பெயர் வாங்குவீர்கள்.

தொழில் வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய தொழில் வாய்ப்புகள் கிடைக்கும். ஊழியர்கள் ஒத்துழைப்பு சிறப்பாக இருக்கும். முடங்கிய தொழில் இப்போது சிறப்பாக வளர்ச்சி அடையும். உற்பத்தித் தொழில், ஆடை தயாரிக்கும் தொழில், நகை உற்பத்தித் தொழில், அலங்காரப் பொருள் உற்பத்தி, ஏற்றுமதித் தொழில், அழகுநிலையம், பிசியோதெரபி பணி, உடற்பயிற்சிக் கூடம், பரிசோதனை மையம் போன்ற தொழில் செய்பவர்கள் நல்ல வளர்ச்சியைக் காண்பார்கள்.

சிறிய வியாபாரிகள் முதல் பெரிய வியாபாரிகள் வரை அதிக அளவு ஆதாயம் பெறுவார்கள். புதிய வியாபார கிளைகள் துவங்குவார்கள். உணவுத்தொழில் செய்பவர்கள் அதிக ஆர்டர் கிடைக்கப்பெறுவார்கள். வியாபாரத்தில் நம்பிக்கையின் பேரில் கடன் கொடுப்பதை விட ஆதாரங்களோடு கடன் கொடுப்பது நல்லது.

விவசாயப் பணிகள் செய்பவர்களுக்கு இது ஒரு அற்புதமான காலகட்டம். ஆதாயம் தரக்கூடிய விளைபொருட்களாக பயிரிட்டு ஆதாயம் அடைவீர்கள். கால்நடை வளர்ப்பு அதிகப்படியான ஆதாயம் தரும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள். பால் உற்பத்தியும் லாபம் தரும்.

பெண்களுக்கு சொத்து சேர்க்கை, ஆபரணச் சேர்க்கை, திருமண வாய்ப்புகள் என அனைத்தும் கைகூடும். சுய தொழில், வியாபார வாய்ப்புகள், அரசுப் பணி, தற்போதைய பணியில் அதிகாரப் பதவி என அனைத்தும் கிடைக்கும்.

அதேசமயம் அறிமுகமில்லாதவர் நட்பு, சமூக வலைதள நட்பு போன்றவை ஆபத்தானவற்றை ஏற்படுத்தும். உங்களின் வேறுபாடு பார்க்காத பழகும் குணத்தால், ஒழுக்கம் தொடர்பான அவதூறுகளைச் சந்திக்க நேரிடலாம்.

எனவே நண்பர்களைக் கவனமாக தேர்ந்தெடுக்க வேண்டும். மனக்குறைகளை இறக்கி வைக்கிறேன் என்று பல விஷயங்களை பிறரிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். இதனால் இக்கட்டான நிலைக்கு ஆளாவீர்கள்.

மாணவர்கள் கல்வி சிறக்கும். உயர் கல்வி மாணவர்கள் கவனம் சிதறாமல் படிக்க வேண்டும். புற ஆசைகளைத் தூண்டும் விதமாக பழகும் நண்பர்களிடமிருந்து விலகி இருங்கள்.

அரசியலில் இருப்பவர்கள் ஆதாயம் தரக்கூடிய பதவிகள் கிடைக்கும். கட்சி தொடர்பாக பொறுப்புகள் கிடைக்கும். நிர்வாக வேலைகளை உங்களை நம்பி ஒப்படைப்பார்கள். நீங்களும் சிறப்பாகப் பணியாற்றுவீர்கள். சுயநலமாக நடந்தால் பிரச்சினைகளும் வரும். எதிர்பாலினத்தவரிடம் எட்டடி தள்ளியே இருங்கள். தேவையற்ற விமர்சனங்களுக்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

கேது பகவான் தரும் பலன்கள் -

இதுவரை கேது பகவான் 11ம் இடத்தில் இருந்து நிறைய நன்மைகளைச் செய்தார். இப்போது அவர் பத்தாமிடம் செல்வது சிறப்போ சிறப்பு. ஆமாம்... பத்தில் ஒரு பாவியாவது இருக்க வேண்டும் என்பது ஜோதிட விதி. அப்படி இருக்கப்பெற்றவர்கள் பெரிய சாதனையாளர்களாக ஜொலிக்கிறார்கள். அதிலும் பத்தில் கேது இருந்தால் பல தொழில் செய்பவராக இருப்பார்கள். இதுவும் ஜோதிட மொழிதான்.

இப்போது உங்கள் ராசிக்கு பத்தில் கேது வருகிறார். துணிந்து தொழில் தொடங்குங்கள் கேது அபார வளர்ச்சியைத் தருவார். ஏற்கெனவே தொழில் மற்றும் வியாபாரம் செய்பவர்கள் கூடுதலாக ஏதாவது தொழில் தொடங்கும் வாய்ப்பை கேதுவே வழங்குவார். அதை முழுமையாக ஏற்றுக்கொள்ளுங்கள்.

சிறந்த தொழிலதிபராக சமுதாயத்தில் நிலைத்து நிற்பீர்கள். அசைவ உணவகம் நடத்துபவர்கள் கிளைகளை துவக்கும் சிந்தனைக்கு கேது பக்கபலமாக இருப்பார். அதேசமயம் பெற்றோர் உடல்நலத்தில் அக்கறை காட்டவேண்டிய நேரமும் இதுதான். ஒருசிலருக்கு கர்மகாரியங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை வரலாம்.

பொதுவாக நீங்கள் செய்ய வேண்டியது, ஆலயத் திருப்பணிகளில் பங்கெடுப்பது, ஏழை பெண்களின் திருமணத்திற்கு உதவி செய்வது இது போன்ற செயல்கள் மன நிறைவை தருவது மட்டுமல்லாமல் ஆரோக்கிய நலனை தரும்.

வணங்க வேண்டிய தெய்வம் - ஶ்ரீவைத்தீஸ்வரன்
****************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in