

- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
துலாம் ராசி அன்பர்களே வணக்கம்.
இந்த ராகு கேது பெயர்ச்சி உங்களுக்கு எப்படியான பலன்களையெல்லாம் தரப்போகிறது என்பதைப் பார்ப்போமா?
இதுவரை உங்கள் ராசிக்கு 9ம் இடத்தில் இருந்த ராகு இப்போது 8ம் இடத்துக்கு வருகிறார். மூன்றாம் இடத்தில் இருந்த கேது இரண்டாமிடத்துக்கு வருகிறார்.
இதுவரை 9ம் இடத்தில் இருந்த ராகு பகவான், நற்பலன்களை அதிகமாகவும் ஒருசில இடைஞ்சல்களையும் தந்திருப்பார். ஆதாயம் அதிகமிருந்தாலும், ராகு இடம் பெயரும் முன் பேராசை விஷயங்களையெல்லாம் தூண்டிவிட்டு, பெரிய அளவில் முதலீடுகளைச் செய்ய வைத்திருப்பார். இப்போது உங்கள் கவலையெல்லாம் போட்ட முதலை எப்படி எடுப்பது என்பதுதான்.!
உங்கள் ராசி அதிபதி சுக்கிரன், ராகு பகவானின் நண்பர்தான். அந்த சுக்கிரனின் மற்றொரு வீடான ரிஷபத்திற்கு ராகு வருவதும் நல்லதுதான். ஆனால், ரிஷபம் அஷ்டம ஸ்தானம் எனும் எட்டாம் வீடாக இருப்பதை மறந்துவிடக்கூடாது.
எனவே, அஷ்டம ராகுவின் காலத்தில் போட்ட முதலீடுகளைத் திரும்ப எடுக்க முடியுமா என்பது கேள்விக்குறிதான். முடிந்தவரை வந்த விலைக்கு விற்றுவிடுவதே புத்திசாலித்தனம். நட்டத்திற்கு விற்க முடியுமா? என கேள்வி கேட்டுக்கொண்டிருந்தால் உள்ளதையும் இழக்க வேண்டியது வரும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.
இப்படியான ஏமாற்றங்களால் விரக்தியில் தவறான பழக்கவழக்கங்கள் மிகைப்படும். ஏற்கெனவே சுக ஸ்தானத்தில் சனி பகவான் இருக்கிறார். மேலும் குரு எனவே தவறான பழக்கத்தை விட்டு ஒழிப்பதே இந்த நேரத்தில் நீங்கள் செய்ய வேண்டிய முக்கியமான விஷயம். மீறி தொடர்ந்தால் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்படும் என்பதை உணர்ந்து கொள்ளுங்கள். எச்சரிக்கையுடன் செயல்படும் தருணம் இது.
அவசர முடிவுகள், மிக தாமதமான முடிவுகள் இரண்டுமே எதிர்வினைகளைத் தரும். பொறுமையாகவும் நிதானத்துடனும் சிந்தித்து எடுக்கும் முடிவுகள் சாதகமாக இருக்கும். இனி ராகுவின் ஆதிக்கம் இருக்கிற ஒன்றரை ஆண்டுகளும் நிதானமான போக்கை கடைப்பிடித்தால் பிரச்சினைகளே இல்லாமல் நிம்மதியாக இருக்கலாம்.
தொழில் வளர்ச்சி சீராக இருக்கும். தொழில் தொடர்பான ஒப்பந்தங்கள் கையெழுத்திடும் போது முழுமையாக படித்து பார்த்து கையெழுத்திடுங்கள். காசோலைகளை கவனமாக பயன்படுத்த வேண்டும். வழக்குகள் ஏதும் இருந்தால் சமாதானமாகச் செல்வதே நல்லது. அரசு தொடர்பான ஆவணங்களை சரிவரப் பராமரிக்க வேண்டும். வங்கிக் கடன்களில் நிலுவை இல்லாமல் பார்த்துக்கொள்ளுங்கள். புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுங்கள்.
நெருப்பு தொடர்பான தொழில், வாயு மற்றும் ரசாயனம் தொடர்பான தொழில் செய்பவர்கள் தங்கள் தொழிற்சாலையில் பாதுகாப்பு உபகரணங்களின் செயல்பாடுகளை சரிவர பராமரிக்க வேண்டும்.
வியாபாரிகள் தங்கள் வியாபார விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்துங்கள். சக வியாபாரிகளிடம் போட்டி போடுவதை தவிர்த்துவிடுங்கள். வியாபாரப் பொருட்களுக்கான காலாவதி நாட்களில் கவனமாக இருங்கள். உணவுத் தொழில் செய்பவர்களும் சுகாதார நடவடிக்கைகளில் கவனம் செலுத்துங்கள்.
அரசியலில் இருப்பவர்கள் பேசுகின்ற பேச்சிலும், நடவடிக்கைகளிலும் கவனமாக இருங்கள். சிறிய தவறும் ஊதி பெரிதாக்கப்படும். செவி வழி செய்திகளின் நம்பகத்தன்மையை ஆராய்ந்து பார்த்து செயல்படுங்கள். அரசுப் பணியில் இருப்பவர்கள் வாய்மொழி உத்தரவுகளை ஏற்காதீர்கள். அதிகாரபூர்வ உத்தரவுகளை மட்டும் ஏற்கவேண்டும்.
விவசாயப் பணிகளில் இருப்பவர்கள் புதிய விவசாய முயற்சிகளில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஆழ்குழாய் கிணறு தோண்டும் முன் புவியியல் வல்லுநரின் ஆலோசனைகளை அறிந்து கொள்ளுங்கள். நிலத் தகராறு, பாகப்பிரிவினை முதலானவற்றில் அனுசரித்துச் செல்லவேண்டும்.
பெண்களுக்கு எங்கும் எதிலும் எச்சரிக்கை உணர்வு வேண்டும். அதிகப்படியான ஆசைகளை வளர்த்துக் கொள்ளவேண்டாம். புதிய நட்புக்களைத் தவிர்க்க வேண்டும்.
மாணவர்கள் கல்வியில் சிறப்பான கவனம் செலுத்துவார்கள். கூடா நட்புகளை தவிர்க்கவேண்டும்.
கலைஞர்கள் இருப்பதைக் கொண்டு திருப்தி அடைய வேண்டும். தொழிலில் அதிக கவனம் செலுத்த வேண்டும்.
ஒருசிலருக்கு அதிர்ஷ்ட வாய்ப்பாக அநாமதேய பணம், சொத்துகள் கிடைக்கும். தாமதமான இன்சூரன்ஸ் பணம் கிடைக்கும். வாரிசு இல்லாத உறவினரின் சொத்துகள் கிடைக்கும். அயல்நாட்டில் வசிப்பவர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும்.
கேது தரும் பலன்கள் -
இதுவரை மூன்றாமிடத்து கேது பலவித நன்மைகளைத் தந்திருப்பார். ஆனால் இப்போது தன,வாக்கு, குடும்ப ஸ்தானத்துக்கு வருகிறார். எனவே குடும்ப ஒற்றுமைக்கு பங்கம் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். தனவரவு முன்பு போல் இல்லாமல் வெகுவாகக் குறையும். எனவே சிக்கன நடவடிக்கை மிக மிக அவசியம்.
எவருக்கும் வாக்குறுதி தராதீர்கள். வாழ்க்கைத் துணையிடம் வீண் கர்வம் வேண்டாம். வார்த்தைப் போர் மிகப்பெரிய பிரச்சினையில் கொண்டுபோய்விடும். முடிந்த வரை மௌன விரதம் கடைபிடியுங்கள்.இந்த ஒன்றரை ஆண்டுகள், அமைதியாகவும் பொறுமையாகவும் இருப்பதே நல்லது.
ஞாயிற்றுக்கிழமைகளில் ராகு காலத்தில் துர்கை அம்மனுக்கு எலுமிச்சை மாலை சாற்றி விளக்கேற்றி வழிபடுங்கள். நன்மைகள் நடக்கும். பிரச்சினைகள் விலகும்.
வணங்க வேண்டிய தெய்வம் - நிசும்பசூதினி அம்மன், தஞ்சாவூர்
********************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |