Published : 28 Aug 2020 08:34 PM
Last Updated : 28 Aug 2020 08:34 PM

ராகு - கேது பெயர்ச்சி; சிம்ம  ராசி அன்பர்களே!  தொழிலில் முன்னேற்றம், வேலையில் பதவி உயர்வு, ஆரோக்கியத்தில் கவனம், சர்க்கரை நோயாளிகள் உஷார்! 

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

சிம்ம ராசி அன்பர்களே வணக்கம்.

இந்த ராகு - கேது பெயர்ச்சி உங்களுக்கு என்ன மாதிரியான பலன்களையெல்லாம் தர இருக்கிறது என்று பார்ப்போமா?

இதுவரை உங்கள் ராசிக்கு 11 ம் இடத்தில் இருந்த ராகு பகவான் தற்போது பத்தாமிடத்துக்கு வருகிறார். 5ம் இடத்தில் இருந்த கேது தற்போது நான்காமிடத்திற்கு வருகிறார்.

11ம் இடத்தில் ராகு இருந்தவரை தாராள பணப்புழக்கம், எடுத்த காரியத்தில் வெற்றி, வீடு வாகன வாய்ப்பு, சேமிப்பு என சொகுசு வாழ்க்கையைத் தந்தார். 10ம் இடத்து ராகு அசைக்க முடியாத தொழில் பலத்தைத் தர இருக்கிறார். இதுவரை தொழில் செய்யத் தயங்கியவர்களைக் கூட தைரியமாக தொழில் தொடங்க வைப்பார் ராகு பகவான்.
ஏற்கெனவே தொழில் செய்து வந்தவர்களை மேலும் பல தொழில்களை செய்ய வைப்பார். ஆமாம்... ஒன்றுக்கும் மேற்பட்ட தொழில் செய்ய வேண்டும் என்பது ஜோதிட விதி. இதை நீங்களே நினைத்தாலும் கூட மாற்ற முடியாது.

ராகு பகவானின் அருளால், குடும்ப ஒற்றுமை பலமாகவே இருக்கும். சகோதரர்கள் கருத்து வேறுபாடுகளை மறந்து ஒன்றிணைவார்கள். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். கவலை தந்த பிள்ளைகளின் ஆரோக்கியம் வியக்கத்தக்க வகையில் சீராகும். அவர்களின் மந்த நிலை மாறி இயல்பான சுறுசுறுப்புக்கு மாறுவார்கள். பின் தங்கிய கல்வி நிலை மாறி கல்வியில் அதிக ஈடுபாடு காட்டுவார்கள். அதேசமயம் உங்கள் ஆரோக்கியத்திலும் அதிக கவனம் செலுத்த வேண்டும். சர்க்கரை நோயாளிகள், டயாலிஸிஸ் செய்பவர்கள் மிகுந்த கவனத்தோடு இருக்க வேண்டிய காலகட்டம் இது.

அலுவலகப் பணியை விட்டுவிட்டு சுய தொழில் தொடங்கும் நிலையைத் தருவார் ராகு பகவான். பணியில் பதவி உயர்வு உள்ளிட்டவை கிடைக்கும். தகவல் தொடர்பு துறையினருக்கு புதிய நிறுவனங்களிலிருந்து அழைப்புகள் வரும். நல்ல நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் தாராளமாய் ஏற்றுக்கொள்ளுங்கள். வெளிநாடுகளில் வசிப்பவர்கள் குடியுரிமை தொடர்பான முயற்சிகளில் இப்போது ஈடுபட தடையில்லாமல் கிடைக்கும்.

சுய தொழில் செய்பவர்கள், பெரிய நிறுவனங்கள் நடத்துபவர்கள் வரை அனைவருக்கும் இதுவரை இருந்த தடைகள் அகன்று தொழில் சூடு பிடிக்கும். எதிர்பாராத அளவுக்கு முதலீடுகள் கிடைக்கும். இதுவரை கடன் கேட்டு வங்கியை நோக்கி படையெடுத்து வந்த நீங்கள் இனி, வங்கி உங்களைத் தேடி வந்து கடன் கொடுக்க முன் வரும். தகவல் தொழில் நுட்பத் துறையினருக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். வியாபார வளர்ச்சி சிறப்பாக இருக்கும். புதிய வியாபார வாய்ப்புகள் கிடைக்கப் பெறுவீர்கள். புதுமையாக சிந்தித்து வியாபாரத்தை வளர்ச்சிக்குக் கொண்டு செல்வீர்கள்.

விவசாயிகளுக்கு விவசாயத்தால் இதுவரை இருந்த பிரச்சினைகள் அகலும். தண்ணீர்த் தேவைகள் பூர்த்தியாகும். விவசாய விளைபொருட்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விவசாய பூமியை மேலும் விஸ்தீரணம் செய்வீர்கள் அல்லது குத்தகைக்கு எடுத்து விவசாயத்தை விரிவுபடுத்துவீர்கள்.

பெண்களுக்கு சுப காரிய விசேஷங்கள் நடக்கும். புத்திர பாக்கியம் உண்டாகும். தொழில் தொடங்கத் தேவையான உதவிகள் கிடைக்கும். உத்தியோகத்தில் யாரும் எதிர்பாராத வண்ணம் முதலிடம் பெற்று பதவி உயர்வு பெறுவீர்கள்.

அசையா சொத்து வாங்கும் யோகம் உண்டு. ஆரோக்கியத்தில் மட்டும் அதிக கவனம் செலுத்துங்கள். ஆரோக்கியத்தில் அலட்சியம் என்பது கூடாது. உடல்நலனில் அக்கறை செலுத்துங்கள். குறிப்பாக மாதவிடாய் பிரச்சினைகள், கர்ப்பப்பை பிரச்சினைகள் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று சிகிச்சைகள் மேற்கொள்ளுங்கள்.

மாணவர்கள் கல்வியில் சிறப்பாக இருப்பார்கள். உயர் கல்வி, பட்டப்படிப்பு, பட்டயப் படிப்பு படித்துக்கொண்டு இருப்பவர்கள் முதலானோர் சாதனைகள் புரிவார்கள்.

கலைஞர்களுக்கு சிறந்த வாய்ப்புகள் கிடைக்கும். அயல்நாட்டு நண்பர்கள் மூலமாக வாய்ப்புகள் உருவாகும். உங்கள் முழு திறமையும் வெளிப்படும் காலம் இது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

கேது பகவான் தரும் பலன்கள் -

கேது பகவான் இப்போது உங்கள் ராசிக்கு 4ம் இடத்துக்கு வருகிறார். நான்காம் இடம் என்பது சுக ஸ்தானம். இந்த சுக ஸ்தானத்திற்கு கேது வரும்போது ஆரோக்கிய பாதிப்புகள், சொத்து பிரச்சினைகள், வாகனப் பழுது, வீட்டுப் பராமரிப்புச் செலவுகள் என செலவுகளை வரிசையாகத் தந்துகொண்டே இருப்பார். எனவே எப்போதும், எதிலும் சிக்கனம் தேவை.

ஆரோக்கியத்தில் அக்கறை காட்ட வேண்டும். புகை - மது போன்ற பழக்கங்களை அறவே விட வேண்டும். சொத்து பிரச்சினைகளில் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும், பிடிவாதம் பிடித்தால் இருப்பதும் இல்லாமல் போகும். கிடைப்பதும் கிடைக்காமல் போகும்.

தாயாரின் உடல்நலத்தில் அதிக அக்கறை காட்டவேண்டிய காலம் இது. அதேபோல தந்தையின் உடல்நலத்திலும் கவனமாக இருக்க வேண்டும். சிறிய பாதிப்புதானே என்ற அலட்சியம் கூடவே கூடாது. ஒருசிலருக்கு கர்மகாரியம் செய்ய நேரிடும். குலதெய்வ வழிபாடு செய்யுங்கள். சிறிய பாதிப்புகளோடு கடந்து போக குலதெய்வ வழிபாடு துணை செய்யும்.

ஆதரவற்றவர்களுக்கு உணவு அளிப்பதும், அடிப்படைத் தேவைகளை அவர்களுக்குச் செய்து கொடுப்பதும் நன்மைகளைத் தரும். மகான்கள், ஞானிகள், குருமார்கள் என தரிசனம் செய்யுங்கள். மன நிம்மதி உண்டாகும்.

வணங்க வேண்டிய தெய்வம் - திருபைஞ்ஞீலி ஞீலிவனேஸ்வரர்
******************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x