

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
கடக ராசி அன்பர்களே வணக்கம்.
இந்த ராகு கேது பெயர்ச்சி உங்கள் கடக ராசிக்கு என்ன பலன்களையெல்லாம் தரப்போகிறது என்பதைப் பார்ப்போமா?
இதுவரை உங்கள் ராசிக்கு 12ல் ராகுவும், 6ல் கேதுவும் இருந்தார்கள். இதனால் பலவித நன்மைகளையும், யோகங்களையும் வழங்கினார்கள். புதிய தொழில் மற்றும் வேலைவாய்ப்புகளை வழங்கினார்கள். முக்கியமான கடன் பிரச்சினைகளைத் தீர்த்தார்கள். திருமணம், புத்திர பாக்கியம் போன்ற பல யோகங்களைக் கொடுத்தார்கள்.
இப்போது உங்கள் ராசிக்கு 11ம் இடத்திற்கு ராகுவும், 5ம் இடத்திற்கு கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள்.
11ம் இடத்து ராகு என்ன பலன்களையெல்லாம் தருவார்?
இதுவரை நல்ல பலன்களையும், எதிரிகளே இல்லாத நிலையையும் தந்தவர், இனி என்ன பலன் தருவார் என்ற கேள்வி உங்களுக்குள் எழும். கவலை வேண்டாம்! ராகு உபஜெய ஸ்தானம் என்னும் உன்னதமான இடத்திற்குத்தான் வருகிறார். இதுவரை தந்த பலன்களை விட பலமடங்கு பலன்களை உங்களுக்கு வாரி வழங்கப் போகிறார்.
லாபம்...லாபம்...லாபம்... இதை மட்டுமே இனி பார்க்கப் போகிறீர்கள். இதுவரை சேமிப்புப் பழக்கம் இல்லாதவர்கள் கூட இனி சேமிக்கத் தொடங்குவீர்கள். சேமிப்பு என்றால் ஏதோ ஐந்து பத்து என எண்ண வேண்டாம். லட்சங்களில் உங்கள் சேமிப்பு இருக்கப் போகிறது. சேமிப்பே லட்சங்களில் என்றால்.. பணப்புழக்கம் எவ்வளவு இருக்கும் என்பதை நீங்களே நினைத்து கணக்குப் போட்டுக்கொள்ளுங்கள். இனி தொட்டதெல்லாம் லாபம் தரக்கூடியதாக இருக்கும். மிகப்பெரிய வாய்ப்புகள் உங்கள் வாசல் தேடி வந்து காத்திருக்கும். இவற்றையெல்லாம் சரியாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
தாமதப்பட்ட திருமணம் இப்போது நடக்கும். விவாகரத்தானவர்களுக்கும், துணையை இழந்தவர்களுக்கும் இப்போது திருமணம் நடக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி பொங்கும். ஆடை ஆபரணச் சேர்க்கை நிகழும். சொத்துகள் சேரும். பூர்வீகச் சொத்தில் ஆதாயம் தரக்கூடிய பங்கு கிடைக்கும். இதனால் மூத்த சகோதரப் பகையும் ஏற்படும் என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். எனவே மூத்த சகோதர வகையில் விட்டுக்கொடுத்துச் செல்லுங்கள். வாழ்க்கைத்துணையின் ஆரோக்கியத்தில் ஆச்சரியப்படும்படியான முன்னேற்றம் ஏற்படும்.
வேலையில் இருப்பவர்களுக்கு இரட்டைப் பதவி உயர்வு, அல்லது வேறு நிறுவனங்களில் சிறப்பான சலுகைகளோடு கூடிய உயர்பதவியில் வேலை என்பதெல்லாம் கிடைக்கும். தொழில் துறையினருக்கு புதிய தொழில் தொடங்குதல், பெரிய அளவிலான ஒப்பந்தங்கள் கிடைத்தல், ஊழியர்களின் உண்மையான உழைப்பு என எல்லாவித நன்மைகளும் கிடைக்கும்.
உணவுத்தொழில், பயணம் தொடர்பான தொழில், விளம்பர நிறுவனத் தொழில் என அனைவருக்கும் நற்பலன்கள் கிடைக்கும். வியாபாரிகள் வியாபாரத்திற்காக வைத்திருக்கும் பொருட்களின் திடீர் விலை உயர்வால் அளப்பரிய லாபம் கிடைக்கப்பெறுவார்கள். புதிய வியாபாரம் தொடங்குவார்கள். கட்டுமானத் தொழில், உற்பத்தி சார்ந்த தொழில், ஏற்றுமதி தொழில் என எல்லாவகை தொழில் செய்பவர்களுக்கும் சிறப்பான பலன்களை ராகு பகவான் தருவார் என்பது நிச்சயம்.
விவசாயத் தொழில் செய்பவர்களுக்கு இதுவரை இருந்ததைக் காட்டிலும் விளைச்சல் அமோகமாக இருக்கும். விவசாய இயந்திரங்கள் வாங்குதல், விவசாயத்தில் புதிய தொழில்நுட்பத்தைச் செயல்படுத்துதல், மாற்று பயிர் சாகுபடியில் சாதனை செய்தல் என எல்லாவித முயற்சிகளும் ஆதாயம் தருவதாக இருக்கும்.
அரசியல்வாதிகளுக்கு பெரிய முயற்சி இல்லாமலேயே, அதிக மெனக்கெடல் இல்லாமலேயே அதிகாரப் பதவிகள் கிடைக்கும். எதிர்ப்பு காட்டியவர்கள் கூட இப்போது ஆதரவு காட்டுவார்கள். செலவே இல்லாமல் தேர்தல் வெற்றி கிடைக்கும்.
பெண்களுக்கு மனம் மகிழும் சம்பவங்கள் நடக்கும். சொத்து சேர்க்கை, ஆடை ஆபரண சேர்க்கை, பதவி உயர்வு, சுய தொழில் தொடங்குதல், திருமணம் உறுதியாகுதல் என எல்லாவித நன்மைகளும் கிடைக்கும்.
மாணவர்கள் கல்வியில் அற்புதமான முன்னேற்றத்தைக் காண்பார்கள், கடல் கடந்து கல்வி பயிலும் வாய்ப்பு கிடைக்கும். உயர் கல்வி வாய்ப்புகள் எளிதாகக் கிடைக்கும். கல்வியில் இறுதி நிலையில் இருப்பவர்களுக்கு சிறந்த வேலைவாய்ப்பு தேடி வரும்.
கலைஞர்களுக்கு மிக உயர்ந்த ஊதியத்துடன் கூடிய ஒப்பந்தம் கிடைக்கும். உங்கள் திறமை வெளிப்படும் காலம் இது. சாதித்துக் காட்டுவீர்கள்.
பொதுவாக எதிர்பாலினத்தவரிடம் விலகியே இருங்கள். ஆசை காட்டி மோசம் செய்யக் காத்திருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள். தேன் தடவிய பேச்சில் மயங்கிவிட வேண்டாம். இருப்பதை பறித்துக் கொண்டு ஏமாற்றிவிடுவார்கள், கவனம் தேவை!
கேது பகவான் தரும் பலன்கள் -
கேது பகவான் இதுவரை ஆறாமிடத்தில் இருந்து நற்பலன்களை வாரித் தந்தார். இப்போது ஐந்தாமிடத்திற்கு வர இருக்கிறார். இப்போது என்ன பலன்களையெல்லம் தருவார்?
ஐந்தில் கேது வருவது ஒருவகையில் நன்மையே! ஆன்மிக ஞானம் அதிகரிக்கும். இதுவரை தரிசிக்காத ஆலயங்களுக்கு சென்று வருவீர்கள். தடைப்பட்டுப் போன குலதெய்வ வழிபாடு இனி தடையில்லாமல் தொடரும். இதுவரை குலதெய்வம் தெரியாதவர்களுக்கு இப்போது குலதெய்வம் தெரியவரும்.
மனதில் அர்த்தமற்ற சிந்தனைகள் தோன்றும். எதிர்மறை எண்ணங்கள் தலைதூக்கும். இதன் காரணமாகவே ஆலய தரிசனங்கள் கிடைக்கும். குழந்தைகளின் ஆரோக்கியத்தில் சிற்சில பாதிப்புகள் உண்டாகும். அதன் தொடர்பாக மருத்துவச் செலவு ஏற்படும்.
தாய்மாமன் உறவில் விரிசல் ஏற்படும். தாய்மாமனுக்கு உடல்நல பாதிப்பு ஏற்படும். இதை அனைத்தையும் தவிர்க்க வேண்டுமென்றால் மனதில் எந்தவித சஞ்சலத்திற்கும் இடம் கொடுக்காதீர்கள். மனதை வெளிப்படையாக, சலனமில்லாமல் வைத்துக்கொள்ளுங்கள்.
வெள்ளிக்கிழமைகளில் துர்கை அம்மனுக்கு சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் செய்து தானம் தாருங்கள். நன்மைகள் அதிகமாகும்.
வணங்க வேண்டிய தெய்வம் - ஐந்து கரத்தனை ஆனை முகத்தனை, பிள்ளையாரப்பனை நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வழிபடுங்கள். எல்லா நன்மைகளும் கிடைக்கப் பெறுவீர்கள்.
***********************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |