

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே, வருகிற செப்டம்பர் 1ம் தேதியன்று வாக்கிய பஞ்சாங்கப்படியும், செப்டம்பர் 23 ம் தேதியன்று திருக்கணித பஞ்சாங்கப்படியும் ராகு கேது பெயர்ச்சி நடைபெறுகிறது. இப்போது மிதுன ராசியில் இருக்கும் ராகு ரிஷப ராசிக்கும், கேதுவானது தனுசு ராசியில் இருந்து விருச்சிக ராசிக்கும் பெயர்ச்சி ஆகிறார்கள்.
இந்த ராகு - கேது பெயர்ச்சி , 12 ராசிகளுக்கும் என்ன மாதிரியான பலன்களை தரப்போகிறார்கள்? இந்தப் பெயர்ச்சி, வாழ்வாதாரத்தை உயர்த்தித் தருமா? நல்ல வேலை கிடைக்குமா? தொழில் வளர்ச்சி எப்படி இருக்கும்? திருமணம் எப்போது? புத்திர பாக்கியம் ஏற்படுமா? ஆரோக்கியம் எப்போது சீராகும்? இதுபோன்ற எதிர்பார்ப்பு நிறைந்த கேள்விகளுக்கு ராகு கேதுக்கள் தரும் விடை என்ன என்பதைப் பார்க்கலாம்!
ராகு எந்த ஒரு விஷயத்தையும் பிரமாண்டமாக, 100 மடங்கு அதிகப்படுத்தித் தருவார். பணம், பொருள், சுகபோகங்கள், ஆடம்பரம், அதிர்ஷ்டம், இன்பத்தின் உச்சம் என எதையும் பலமடங்காக தரவல்லவர் ராகு பகவான்.
கேது பகவான் எந்தவொரு விஷயத்தையும் அனுபவிக்க விடாமல் தடுத்து தடை போடக்கூடியவர். செல்வம், பணம், பொருளாதாரத் தடைகள், விரக்தி, வேதனை, ஏமாற்றம், சுயபச்சாதாபம் போன்றவைகளை வழங்கக்கூடியவர். அதேசமயம் எதையும் எதிர்பார்க்காத தன்மையோடு ஒரு ஞானியாக, துறவு மனப்பான்மையோடு நாம் இருந்தால், நம் தேவை எதுவோ அதை கேது பகவான் சப்தமில்லாமல் தருவார். அப்படித் தருவதை எந்த சலனமும் இல்லாமல் ஏற்றுக்கொள்வது மட்டுமே மிகவும் உன்னதமானது. மாறாக இவ்வளவு குறைவாக இருக்கிறதே என அழுது ஆர்ப்பாட்டம் செய்தால் உள்ளதையும் பிடுங்கிக் கொண்டு ஒன்றுமில்லாமல் செய்து விடுவார்.
எனவே ராகுவோ கேதுவோ எதைக் கொடுத்தாலும் அமைதியாக ஏற்றுக்கொள்ளுங்கள். நன்மைகள் பெருகும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.
ஒவ்வொரு கிரகமும் நகர்ந்து கொண்டேதான் இருக்கின்றன. அப்படி நகரும் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசிக்கு மாறும்போது தன் பலத்தை வித்தியாசப்படுத்தியே தருகின்றன என்பது உண்மை. இப்படி ஒரு ராசியைவிட்டு அடுத்த ராசிக்கு மாறும் கிரகப் பெயர்ச்சிகளில் அதிக முக்கியத்துவம் பெறுவது குருப் பெயர்ச்சி, சனிப் பெயர்ச்சி, ராகு கேது பெயர்ச்சி .
இதில் குரு பகவான், மங்கல காரியங்கள் நடத்தித் தருகிறார். சனி பகவான் கர்மவினை எனும் விதியை அனுபவிக்க வைக்கிறார். ராகு கேது அனைத்துவிதமான இன்பதுன்பங்களையும் கலந்து தருகிறார்கள். அதாவது, ராகு யோகத்தையும் கேது அவயோகத்தையும் தரவல்லவர்கள்.
திருமணம் நடக்க குரு பலம் எவ்வளவு முக்கியமோ அதே பலம் ராகுவுக்கும் உண்டு, இன்னும் சொல்லப்போனால் ராகு துணையில்லாமல் ஒரு திருமணமோ, புத்திர பாக்கியமோ உண்டாகாது. சொந்த வீடு அமைய சுக்கிரனின் உதவி எவ்வளவு தேவையோ அதைவிட பலமடங்கு ராகுவின் உதவி தேவை. கடல் கடந்து பயணம் செய்ய சந்திரன் உதவி எப்படித் தேவையோ அதைவிட பலமடங்கு ராகுவின் உதவி தேவை. அரசியல் பதவிகள் பெற சூரியன் உதவி எவ்வளவு தேவையோ அதைவிட ராகுவின் உதவி மிக அவசியம், எதிரிகளை வீழ்த்த செவ்வாயின் உதவி எவ்வளவு தேவையோ அதைவிட பல மடங்கு ராகுவின் உதவி அவசியம், ஆராய்ச்சிகள், புதிய கண்டுபிடிப்புகளுக்கு புதன் எவ்வளவு தேவையோ அதைவிட ராகுவின் உதவியும் பெரும்பங்கு வகிக்கும். ஆயுளைக் காப்பாற்ற சனி பெரும்பங்கு வகிக்கும். அந்த ஆயுளை முடித்துத் தர ராகுவால் மட்டுமே முடியும்.
கேது அன்பையும், ஞானத்தையும், மன அமைதியையும், இருப்பதைக்கொண்டு திருப்தி படுகிற மனதையும் தரும்.
இந்த ராகு - கேது பெயர்ச்சியால், முதலில் உலகளாவிய பலன்களைப் பார்ப்போம். உலக அளவில் என்னென்ன நிகழும் என்பதைப் பார்ப்போம்.
உலகளவில் கடும் பாதிப்பை தந்து கொண்டிருக்கிற கரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து மீண்டும் இரண்டாவது அலை ஏற்படும். அந்த காலகட்டத்தில் தடுப்பு மருந்தும் பயன்பாட்டுக்கு வரும். தறிகெட்டு பறந்துகொண்டிருக்கும் தங்கத்தின் விலை வெகுவாகக் குறையும். வேலை வாய்ப்புகள் பெருகும், பொருளாதாரம் எதிர்பார்த்ததைவிட கணிசமாக உயரும். மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும். விவசாய விளைபொருட்கள் லாபம் தர்க்கூடியதாக இருக்கும்.
பல நாடுகளில் ஆட்சியாளர்கள் வீழ்த்தப்பட்டு எதிர்கட்சியினர் ஆட்சியைப் பிடிப்பார்கள், இன்னும் ஒரு சில நாடுகளில் மக்கள் புரட்சி ஏற்பட்டு ஆட்சியாளர்களுக்கு அச்சத்தையும் அவஸ்தையையும் உண்டாக்கும்.
எண்ணெய் நிறுவனங்கள், ரசாயனக் கழிவுகள், வெடி பொருட்கள், ஆயுதங்களால் கடும் விளைவுகள் என்று ஏற்படும். கடல் நீர் மேலும் மாசுபடும். கடல் போக்குவர்த்தில் எதிர்பாராத விபத்துகள் ஏற்படும்.
நமது நாட்டுக்கு நன்மைகளை தரக்கூடியதாகவும், சர்ச்சைக்கு உண்டான பிரச்சினைகளில் சமரசமும் ஏற்படும். ரியல்எஸ்டேட் தொழில் சூடு பிடிக்கும். கட்டுமானத் தொழில் அரசு சலுகைகளால் மீண்டும் வளர்ச்சி பெறும். பணப்புழக்கம் அதிகரிக்கும்.
மிக முக்கியமான அரசியல் தலைவரின் இழப்பு அதிர்ச்சி தரக்கூடியதாக இருக்கும். நாட்டில் ஒரு குழப்பம் ஏற்பட்டு பின்னர் தெளிவான தீர்வு கிடைக்கும்.
பொதுவாக, இந்த ராகு - கேது பெயர்ச்சியானது, நன்மைகள் 75 சதவீதமும் தீமைகள் 25 சதவீதமும் தரக்கூடியதாக இருக்கும் என்பதை நம்பலாம்.
ராகு பகவான், காளி மற்றும் துர்கைக்கு கட்டுப்பட்டவர். எனவே உக்கிர காளி வழிபாடும், துர்கை வழிபாடும் ராகுவின் காரகத் தன்மையை வலிமையாக்கும்.
கேது, விநாயகருக்கும், அனுமனுக்கும் கட்டுப்பட்டவர். எனவே விநாயகர் வழிபாடும், அனுமன் வழிபாடும் தீமைகளைத் தடுத்து நன்மைகள் கிடைக்கச்செய்வார்கள்.
திருகாளஹஸ்தி, திருபாம்புரம், திருநாகேஸ்வரம், கீழ்பெரும்பள்ளம், காஞ்சி சித்ரகுப்தன் போன்ற ஆலயங்களுக்குச் சென்று சுவாமி தரிசனம் செய்வது பல நன்மைகளைத் தரும்.
தமிழகத்தை பொறுத்தவரை பொருளாதார மேன்மை பலப்படும், கட்டுமானத் தொழில் புதிய உத்வேகம் பெறும். உற்பத்தித் திறன் அதிகரிக்கும், விவசாய கொள்கைகள் மீண்டும் உயிர் பெறும். விவசாயத்திற்கு முன்னுரிமையும், தேவையான உதவிகளும் கிடைக்கும், விவசாயிகளுக்கு லாபம் இரட்டிப்பாகும். மழை தேவைக்கு அதிமாகவே பொழியும். மழையால் மகிழ்ச்சியும், சில இடர்பாடுகளும் நேரிடும். கால்நடை வளர்ப்பு அதிகரிக்கும்.
பெண்கள் சுய தொழில் தொடங்குவது அதிகரிக்கும். பெண்களின் கல்வி, வேலைவாய்ப்புகளில் ஆதிக்கம் அதிகரிக்கும், அப்படியான ஆதிக்கமும் வளர்ச்சியும் நல்லதுதானே! பெண்கள் மகிழ்ச்சியாக இருந்தால் வீடும் நாடும் நலம் பெறும் என்பது உண்மைதானே! மாணவர்கள் கல்வியில் சுதாரித்து மீண்டும் எழுச்சி பெறுவார்கள். விலைவாசி உயர்ந்தாலும் மக்களின் வாங்கும் சக்தி அதிகரிக்கும்.
அரசியல் நிகழ்வுகள் பரபரப்பாக இருக்கும். அரசியல் தலைவர்கள் ஏமாற்றங்களைச் சந்திப்பார்கள். மக்கள் ஒற்றுமையின் முன் அரசியல் சித்து விளையாட்டுக்கள் கேலிப்பொருளாகும். அரசியல் நிகழ்வுகளே ஒரு பெண்ணை முன்னிறுத்தி நடத்தப்படும். அதன் விளைவுகள் எதிர்பாராத மாற்றங்களுக்கு காரணமாகும்.
ராகுவின் தானியம் கருப்பு உளுந்து. எனவே கருப்பு உளுந்தால் செய்யப்பட்ட உணவுகளை செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் ராகுவுக்கு நிவேதனம் செய்து தானம் தருவதும், கேதுவின் தானியமான கொள்ளு தானியம் கொண்டு உணவுகள் செய்து கேதுவைக்கு நிவேதனம் செய்து சனிக்கிழமையில் தானம் தருவதும் அதிகப்படியான நன்மைகளை வழங்கும். பெரிய அளவிலான சிரமங்களைக் குறைக்கும்.
அனைவரும் ராகு கேதுவின் துணை கொண்டு சிறப்பான வாழ்வு பெற வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன்.
அடுத்தடுத்து, 12 ராசிகளுக்குமான ராகு - கேது பெயர்ச்சிப் பலன்களைப் பார்ப்போம்.
***************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |