

‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
இந்தப் பதிவில் நாம் பார்க்க இருக்கும் நட்சத்திரம் திருவோணம் நட்சத்திரம். மொத்தம் 27 நட்சத்திரங்கள் இருந்தாலும் ‘திரு’ எனும் மரியாதை அடைமொழியுடன் இருப்பது இரண்டே இரண்டு நட்சத்திரங்கள்தான்.
ஆதிரை. இது ஶ்ரீநடராஜ பெருமான் அவதரித்த நட்சத்திரம். எனவே திருவாதிரை என்றானது. து. சிவபெருமானுக்கு ஒரு நட்சத்திரம் உண்டென்றால் மகாவிஷ்ணுவுக்கும் இருக்கும் அல்லவா?! அது.. ஓணம். ஶ்ரீமகாவிஷ்ணுவின் திருநட்சத்திரம். இதனாலேயே இந்த நட்சத்திரமும் “திரு” இணைத்து திருவோணம் என்றானது.
திருவோணம் நட்சத்திரம் சந்திரனின் மூன்று நட்சத்திரங்களில் ஒன்றாகும். நட்சத்திர வரிசையில் 22 வது நட்சத்திரம். இந்த திருவோணம் நட்சத்திரம் மகர ராசியில் இடம் பெற்றிருக்கும்.
அபிஜித் எனும் அதி அற்புத சூட்சும நட்சத்திரம் 28வது நட்சத்திரமாக உள்ளது என்று உத்திராடம் நட்சத்திர பதிவில் தெரிவித்திருந்தேன் அல்லவா! அந்த அபிஜித் நட்சத்திரம் திருவோணத்திலும் இருக்கிறது என்பது ஆச்சரியமான உண்மை.
ஆமாம்...
உத்திராடம் 3,4 பாதங்களிலும், திருவோணம் 1,2 ஆகிய பாதங்களிலும் இந்த அபிஜித் நட்சத்திரம் இருக்கிறது. இந்த அபிஜித் நட்சத்திரமானது எல்லையில்லா நற்பலன்களைக் கொண்டது. நமக்கு சகல பலன்களையும் கொடுக்கக் கூடியது. அப்பேர்ப்பட்ட இந்த நட்சத்திரம் பற்றி பிறகொரு பதிவில் விரிவாகப் பார்க்கலாம்.
இப்போது திருவோணம் நட்சத்திரத்தைத் தொடருவோம்.
சந்திரனுக்கு உரிய மூன்று நட்சத்திரம் என்று சொன்னேன் அல்லவா! அவை... ரோகிணி, அஸ்தம் மற்றும் திருவோணம்.
ரோகிணியில் பகவான் கிருஷ்ணர் பிறந்தார். அஸ்தம் நட்சத்திரத்தில் ஆதிசேஷனுக்கு மேலே சயனித்திருக்கும் அரங்கன் ஜனித்தார். திருவோணத்தில் திருமலை திருப்பதி வெங்கடசே பெருமாள் அவதரித்தார்.
இப்படி மகாவிஷ்ணுவின் அம்சங்களாக இருப்பவர்கள் இந்த சந்திரனின் நட்சத்திரங்களில் மட்டுமே அவதரித்துள்ளார்கள்... நரசிம்மரைத் தவிர! நரசிம்மர் சுவாதி நட்சத்திரத்தில் தோன்றினார். அது ஏன் என்பது தனிக்கதை.
ஆக, இந்த நட்சத்திரம் கொண்டவர்கள், சந்திரனின் ரோகிணி, அஸ்தம், திருவோணம் இந்த நட்சத்திரங்களில் பிறந்தவர்களும், சந்திர திசை நடப்பவர்களும் திருப்பதி சென்று வரவேண்டும் என்பது ஜோதிடர்களால் வலியுறுத்தப்படுகிறது.
மேலும் திருமலை ஏழுமலையானின் அம்சமாகவே இருக்கிறார் சந்திர பகவான். பெருமாளின் சிலாஸ்வரூபம் சந்திரகாந்தக் கல்லால் ஆனது என்பது எல்லோருக்கும் தெரியும்தானே. எனவே இது சந்திர ஸ்தலம் என்று போற்றப்படுகிறது.
இன்னொரு விஷயம்...
திருப்பதி செல்பவர்கள் எப்போதும் இரவு அங்கே தங்கி தரிசித்துவிட்டு வரவேண்டும். சந்திரனின் குளிர்ச்சியான ஒளி நமது மேனியில் படும்படியாக இருப்பது மிகப்பெரிய மாற்றத்தை நமக்கு வழங்கும்.
மனதளவில் பிரச்சினை உள்ளவர்கள், பிரச்சினைக்கு தீர்வு எட்டமுடியாதவர்கள். மனக்குழப்பத்தில் தவிப்பவர்கள், அடுத்தது என்ன செய்யவேண்டும் என்று முடிவெடுக்க முடியாமல் கைபிசைந்து கலங்குபவர்கள், இப்படியான குழப்ப நேரத்தில் திருப்பதி சென்றுவந்தால், தெளிவாக முடிவெடுக்க முடியும். காரணம் சந்திரன் மனோகாரகன், சந்திர ஸ்தலத்தில் மனம் சாந்தி பெறும். அமைதி அடையும். அமைதி இருக்கும் இடத்தில் தெளிவும் பிறக்கும். அப்படியொரு தெளிவுடன் சிந்திக்கத் தொடங்கினால், எடுக்கிற முடிவுகளும் செய்கிற காரியங்களும் மிகச் சிறப்பாக இருக்கும். இதனால் தான் திருப்பதி சென்றுவந்தால் திருப்பம் ஏற்படும் என்பது ஐதீகம்!
மூன்றடி மண் கேட்டு மூவலகையும் தன் பிஞ்சுப் பாதத்தால் அளந்த வாமனன் தோன்றியது இந்த திருவோணத்தில்தான். ராமாயண கதாபாத்திரத்தில் மிக முக்கியமானவரான, நீதியின் பக்கம் நின்ற இராவணனின் சகோதரன் விபீஷணன் பிறந்தும் திருவோணத்தில்தான்.
நவகிரகங்களில் ஒருவரான அங்காரகன் எனும் செவ்வாய் பகவான் பிறந்ததும் திருவோண நட்சத்திரத்தில் தான்.
இந்தத் தகவல்களில் இருந்து நீங்கள் ஒன்றைப் புரிந்துகொள்ள வேண்டும். அனைவரும் பெரிதாக எதையும் அலட்டிக்கொள்ளாமல் மனதில் நினைத்த ஒன்றை மிக எளிதாக தர்மத்தின் வழியில் பெற்றவர்கள் என்பது புரிகிறதுதானே.
வாமனன் மிக எளிதாக மூன்றடி மண் கேட்டு மூவுலகையும் பெற்றார். விபீஷணன் தன் அண்ணனுக்கு தர்மத்தை அறிவுறுத்தினார். அதை அண்ணன் செவி மடுக்காததால் ஶ்ரீராமனோடு இணைந்து செயல்பட்டார். இதன் பலன்... கேட்கமாலயே இலங்கையை அரசாளும் யோகம் கிடைக்கப்பெற்றார்.
அங்காரக பகவானோ அரக்கர்களை அழிக்கும் பணியைச் செய்தார். அவருக்கும் நவகிரக அந்தஸ்து கிடைத்தது. இப்படி திருவோணத்தில் பிறந்தவர்கள் மனதில் ஒன்றை நினைத்தாலே போதும். விரும்பியது தானாகக் கிடைக்கும் அல்லது விரும்பாத உயர்ந்த விஷயமும் தேடிவரும். அப்படி தேடிவருவது மிகப்பெரிய நன்மையாகவும் உயரிய கவுரமாகவும் இருக்கும் என்பது திண்ணம்.
வேங்கடவன் யாரிடமும் பணம் கேட்கவில்லை. குபேரனே முன்வந்து கடன் கொடுத்தான். அந்த கடனை அடைக்க பகவான், யாரிடமும் கேட்கவில்லை. பக்தர்களே கொட்டிக் கொடுக்கிறார்கள். அள்ளி அள்ளிக் கொடுக்கிறார்கள். இவை எல்லாமே திருவோணத்தின் மகிமை! எனவே திருவோணத்தில் பிறந்தவர்கள் மனதுக்குள் விருப்பங்களை நினைத்தால் போதும்... அந்த விருப்பங்கள் தானாகவே நிறைவேறும்.
இதில் ஆச்சரியமான விஷயம்... திருவோணம் நட்சத்திரம் வானில் ஆறு நட்சத்திரக் கூட்டாக காட்சியளிக்கும். இது பார்ப்பதற்கு நாராயணனின் திருநாமம் போன்று காட்சியளிப்பது வியப்பும் விந்தையுமான ஒன்றுதான்.
எனவே மீண்டும் மீண்டும் சொல்கிறேன்... திருவோணம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அதிக மெனக்கெடல் இல்லாமலேயே அனைத்தும் உங்கள் வசமாகும். ஆனால் அதற்கு பொறுமையும் நிதானமும் மிக மிக அவசியம்.
அதேசமயம் மறந்தும் நல்வழி விட்டு தீய வழியில் சென்றால் எந்த நன்மையும் திருவோணம் நட்சத்திரக்காரர்களுக்குக் கிடைக்காது என்பதையும் நினைவில் கொள்ளுங்கள். மறந்தும் அடுத்தவருக்கு கெடுதலோ அல்லது துரோகம் செய்வதோ இருந்தால், உங்களுக்கே அது திரும்ப வரும் என்பதை மறந்துவிடாதீர்கள்.
இறை பக்தியும், இரக்க குணமும் உங்களை உயர்த்தும் என்பதை ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
திருவோணத்தின் வடிவங்கள் இன்னும் என்னென்ன என பார்க்கலாம்..!
விஷ்ணு பாதம், மச்சாவதாரம், புல்லாங்குழல், இடது உள்ளங்கை (வலது உள்ளங்கை அஸ்தம் நட்சத்திரம் என பார்த்தோம், நினைவிருக்கும் என நம்புகிறேன்) என இவை அனைத்தும் திருவோணம் நட்சத்திர அடையாளங்கள்.
துணி துவைக்கும் இடம், ஆற்றங்கரை, நீர்நிலைகள், மனிதனின் இறுதி இடம், நினைவிடம், தாம்பூலம், பாக்கு மரம், பொதுஇடம், தங்கும் விடுதி, யோக நித்திரை, கலையரங்கம், குளிர்காற்று, குடை, நிழற்குடை என இவையும் திருவோணத்தின் அடையாளங்களே!
இன்னும் பல தகவல்கள் இருக்கின்றன... அடுத்த பதிவில் பார்ப்போம்.
- வளரும்