

- ’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே. நட்சத்திரங்களிலேயே மிக உன்னதமான நட்சத்திரம் எனும் பெருமை கொண்ட மூலம் நட்சத்திரம் பற்றிய தகவல்களைப் பார்த்து வருகிறோம்.
இன்னும் பல விஷயங்களைப் பார்ப்போம்.
ராம பக்த அனுமனின் நட்சத்திரம் மூலம் என்று பார்த்தோம். ஶ்ரீராமனின் எதிரியான ராவணனை முதலில் சந்தித்தது அனுமனே. ராவணன் அனைத்துக் கலைகளிலும் முதன்மையானவன். வீணை மீட்டுவதில் அவனை மிஞ்சியவர்கள் யாரும் கிடையாது. இது மட்டுமல்ல நவகிரகங்களையும் தனது சிம்மாசனத்தின் படிகளாக வைத்து அவர்களின் மேல் நடந்து சென்று, சிம்மாசனத்தில் அமர்ந்தவன். ஆட்சி செய்தவன்.
அதாவது நவகோள்களும் ராவணனுக்கு அடிமையாக இருந்தது. அதாவது, கிரகங்களே ராவணனை ஒன்றும் செய்யமுடியாமல் கையறு நிலையில் இருந்தது.
இது ஏன்? எதனால்?
காரணம், ராவணனும் மூலம் நட்சத்திரமே!
ஆமாம்... ராவணனும் மூலம் நட்சத்திரம். அனுமனும் மூலம் நட்சத்திரம்.
ராவணனை, ஶ்ரீராமன் சார்பில் சந்தித்த முதல் நபர் அனுமன் என பார்த்தோம் அல்லவா! இதற்கும் காரணம் உண்டு. மூலம் நட்சத்திரக்காரரான அனுமனைத் தவிர, வேறு எந்த நட்சத்திரக்காரர்கள் ராவணனை சந்தித்திருந்தாலும் உயிரோடு திரும்பியிருக்க மாட்டார்கள். மூலத்தின் மகிமை அப்படி!
எனவே அதே மூலம் நட்சத்திரக்காரரான அனுமன், ராவணனைச் சந்திக்கச் சென்றதால்தான் இலங்கையையே அதகளம் செய்து திரும்பினான் அனுமன். ராவணனை அனுமன் சந்தித்தபோது, தனக்கு ஆசனம் தராமல் நிற்கச் செய்து அவமானப்படுத்தினான். உடனே தன் வாலையே சுருட்டி உயர்ந்த ஆசனமாகக் கொண்டு சரியாசனம் செய்து அமர்ந்தான் அனுமன்.
இதிலிருந்து நாம் அறிய வேண்டியது இதுதான்.. மூலம் நட்சத்திரத்திற்கு மூலமே சரிநிகர் சமமான பொருத்தம் என்பதுதான்..!
அனுமனும் சரி.. ராவணனும் சரி.. அனைத்து விதமான கலைகளிலும் தேர்ந்தவர்கள். அனுமன் சொல்லின் செல்வர் என்றால், ராவணன் கலைகளின் செல்வர். மூல நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் எந்தவிதமான கல்வியையும் கலைகளையும் எளிதில் கற்றுக்கொள்ளும் பாக்கியம் பெற்றவர்கள்.
இந்த மூல நட்சத்திரத்தினர், பூரம் நட்சத்திரத்தில் பிறந்தவரை சேர்க்கக்கூடாது. காரணம்..! பூரம் ஏர் வடிவம். நிலத்தை ஏர்கொண்டு உழும்போது கிடைத்தவர் சீதை. ராமயண காவியமே, மூலம் நட்சத்திர ராவணன்... பூரம் நட்சத்திர சீதையை கவர்ந்ததால்தான் உருவானது. இதன் காரணமாகவே மூலம் பூரம் இணையக்கூடாது என்பது பொது விதி. (அதேசமயம் மூலம் - அனுமன் ... சீதையை தாயாகவே பார்த்தான்).
மனித உடலில் இந்த மூல நட்சத்திரம் குறிப்பிடும் பகுதி எது தெரியுமா? முதுகு தண்டுவடமும் இடுப்புப் பகுதியும் இணையும் இடம் தான் மூல நட்சத்திரம்.
ஆமாம்... நீங்கள் நினைத்தது மிகசும் சரி. அந்த இடம் “மூலாதாரம்” என்னும் மனித உடலின் ஏழு சக்கரங்களில் முதன்மையானது. இந்த மூலாதாரம் வேலை செய்யத் தொடங்கினால்தான் மற்ற ஆறு சக்கரங்களை நோக்கி பயணிக்க முடியும். இப்போது புரிந்திருக்கும்... மூலம்தான் அனைத்துக்கும் மூலம் என்பது!
சரி, மூலம் நட்சத்திரத்தின் ஜோதிடம் தொடர்பான விபரங்களைப் பார்ப்போம்.
மூலம் நட்சத்திரக்காரர்கள், நிதானமாகவும் பொறுமையாகவும் செயல்படுபவர்கள். எடுத்தோம் கவிழ்த்தோம் என்பதே இருக்காது. எதையும் திட்டமிட்டுச் செய்பவர்கள். வீண் செலவு செய்யமாட்டார்கள். சேமிக்கும் குணம் உடையவர்கள்.
குடும்பத்தின் மீது பாசம் அதிகம் இருக்கும். குடும்பத்தில் இவர்களின் முடிவே எல்லோராலும் ஏற்கப்படும். மிகத் தெளிவாக முடிவை எடுப்பவர்கள். தாய் தந்தையிடம் அன்புக்கும் அதிகமாக... பக்தியைக் கொண்டிருப்பவர்கள். சகோதரப் பாசத்தில் இவர்களை மிஞ்சியவர்கள் எவருமில்லை.
மூலம் நட்சத்திரக்காரர்கள், கல்வியில் சிறந்தவர்கள். நிச்சயமாக ஏதாவதொரு உயர்கல்வி கற்றிருப்பார்கள். கற்ற கல்வியால் மற்றவர்களுக்குப் பயன்படும்படியாக வாழ்வார்கள். ஆன்மிகத்தின் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டவர்கள். மகான்கள், சித்தர்கள், ஞானிகள் என்று தன் குருவாக ஏற்று அவர்கள் சொற்படியும் அவர்களின் வழிகாட்டுதல்படியும் வாழ்பவர்கள்.
இவர்களில் பெரும்பாலோர் உத்தியோகத்தில்தான் இருப்பார்கள். சொந்தத் தொழில் செய்பவர்கள் மிகமிகக் குறைவு. தொழில் செய்தாலும் குறிப்பிட்ட உயரத்தை தாண்ட முடியாத நிலையே இருக்கும். தொழிலில் மிகமிக நேர்மையும் உண்மையும் கொண்டு உழைப்பார்கள். இப்படி மிக அதிகமான நேர்மை குணம் இருப்பவர்கள் தொழிலில் உச்சத்தைத் தொடமுடியாது என்பது அறிந்ததுதானே.
அதாவது, தொழில் என்பது இரக்கத்திற்கோ, தர்ம குணத்திற்கோ ஏற்றதல்ல. தொழிலில் கண்டிப்பும், எதற்கும் வளைந்து கொடுக்காத தைரியமும் மிக மிக முக்கியம். மூலம் நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் அநியாயத்திற்கு நியாயமானவர்கள். அதாவது நியாயத்தின் உதாரணபுருஷர்கள். நேர்மையாகவும், இரக்க மனப்பான்மையும் கொண்டவர்கள். எனவேதான் இவர்கள் தொழிலில் இருப்பதைவிட உத்தியோகத்தில், அதிலும் உயர் பதவிகளில் இருப்பவர்களாகவே இருப்பார்கள்.
ஆசிரியர், பேராசிரியர், மருத்துவர், வழக்கறிஞர், நீதிபதி, மனிதவள மேம்பாடு அதிகாரி, வங்கிப் பணி, பணம் புழங்கும் பணி, இன்சூரன்ஸ் துறை, அடகுத் தொழில், தங்க நகை உற்பத்தி, நவரத்தினம் விற்பனை, தர்மஸ்தாபனம், சேவை சார்ந்த தொழில், மர வியாபாரம், பர்னிச்சர் விற்பனை, சித்த மருத்துவம், மூலிகை வைத்தியம், நிதி தொடர்பான பணிகள் அதாவது வருமான வரித்துறை, கணக்காளர், கேஷியர் போன்ற பணிகள், ஆடிட்டிங் தணிக்கை, திரைப்பட தணிக்கை, எழுத்தாளர், பத்திரிகைத் துறை, தங்கும் விடுதி, திருமண மண்டபம், திருமணத் தரகர், திருமண தகவல் மையம், இடைத்தரகர், உழைப்பில்லாத வருமானம் வரக்கூடிய தொழில், ஆன்மிகப் பயணம் தொடர்பான தொழில் மற்றும் வேலை என்றே அமையும்.
மேலே குறிப்பிட்ட தொழில்கள் அமைந்தாலும், குறிப்பிட்ட லாபத்திற்கு மேல் எதிர்பார்க்க மாட்டார்கள் இவர்கள். அந்தளவிற்கு தொழில் தர்மம் உடையவர்கள். யாரையும் எப்போதும் எந்தவகையிலும் எள்முனையளவும் காயப்படுத்திவிடக்கூடாது என்பதில் கவனமாக இருப்பார்கள். தவறிப்போய் தவறே இழைத்தாலும் தயங்காமல் மன்னிப்பும் கேட்பார்கள்.
இப்படி எல்லோராலும் போற்றப்படக்கூடிய குணம் இருந்தாலும், இவர்களின் வாழ்க்கைத்துணைக்கு இவர்களின் அருமை பெருமை எதுவும் தெரியாது. அவர்களை பொறுத்தவரை தன் கணவன்/ தன் மனைவி எனும் அளவுக்கு மட்டுமே அறிந்து வைத்திருப்பார்கள். இவர்களும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளமாட்டார்கள்.
“மூலம்” மாமனாருக்கு ஆகாது என்கிறார்களே? உண்மையைச் சொல்லுங்கள்... உண்மையா? என்று பல நண்பர்களும் அன்பர்களும் கேட்டுக்கொண்டே இருக்கிறார்கள்.
விளக்கம் இதோ..!
மூலம் நட்சத்திரம் முதல் பாதம் நவாம்சத்தில் மேஷ ராசியில் இடம்பெறும். மேஷ ராசி சூரியன் உச்சம் அடையும் ராசி. ஒரு பெண்ணுக்கு திருமணத்திற்குப் பின் சூரியன் என்பது மாமனாரைக் குறிக்கும். புகுந்த வீடு செல்லும் மூலம் நட்சத்திரப் பெண், அந்த வீட்டின் நிர்வாகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு அவளுக்கு இயல்பாக ... தானாக... வந்தடையும், இப்படி நிர்வாகத் தலைமை வெளியிலிருந்து வந்த பெண்ணுக்கு கிடைப்பதா என்கிற உள்ளக்குமுறலின் வெளிப்பாடுதான் மூல நட்சத்திரப் பெண்களை விலக்கவைத்தது. இதையே மூலம் மாமனாருக்கு ஆகாது என்று சொல்லப்பட்டது.
“மருமகளும் தனது மகளே” என நினைத்தால் இந்த பிரச்சினையே இருக்காது என்பது உண்மைதானே!
மேற்கண்ட கருத்துக்கள் மூல நட்சத்திர ஆண்களுக்கு கிடையாது என்பதை மீண்டும் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்னும் இருக்கிறது.... ! அடுத்த பதிவில் பார்க்கலாம்.
- வளரும்