Published : 26 May 2020 14:06 pm

Updated : 26 May 2020 14:06 pm

 

Published : 26 May 2020 02:06 PM
Last Updated : 26 May 2020 02:06 PM

உழைப்பாளிகள், ஏமாளிகள், தெரியாமல் தப்பு செய்பவர்கள், உதவுபவர்கள், அன்பானவர்கள்! 

27-natchatirangal-a-to-z-42

27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் 42 ;


- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

வணக்கம் வாசகர்களே.
சித்திரை நட்சத்திரத்தின் குணங்களை, தன்மைகளை, சிறப்புகளை, அந்த நட்சத்திரக்காரர்களின் கேரக்டர்களைப் பார்த்து வருகிறோம். இப்போது சித்திரை நட்சத்திரத்தின் 4 பாதங்களுக்கும் தனித்தனியான குணாதிசயங்களைப் பார்ப்போம்.

முன்னதாக, இன்னும் சில தகவல்கள்...


வயல்வெளியைக் குறிப்பிடுவது சித்திரை. பனைமரம் சித்திரை. பனை ஓலையும் சித்திரைதான். மாங்கல்யம் சித்திரை. ஆதியில் தமிழர்கள் ’தாலம்’ என்னும் கயிற்றைக் கட்டிக் கொண்டு மணம்புரிந்தார்கள். அதுதான் தாலியானது. இந்த பனை ஓலையை அடுத்து, பிற்காலத்தில் தங்கத்தில் தாலி செய்து அணிந்து கொண்டனர்.

வயல்வெளியும் அதில் இருக்கும் வரப்புகளும் சித்திரையைக் குறிக்கும். அடர்த்தியான தோப்பு, காடு, மருத்துவக் கருவிகள் ஆகியவையும் சித்திரையே.


இனி சித்திரையின் ஒவ்வொரு பாதங்களையும் பார்ப்போம்.

சித்திரை 1ம் பாதம் -

சித்திரை 1ம் பாதத்தில் பிறந்தவர்கள், முன் கோபக்காரர்கள்.

ஒழுக்கம் தவறாதவர்கள். நேர்மை நிறைந்தவர்கள். தவறுகளை மன்னிப்பவர்கள். தப்புசெய்பவர்களுக்கு தண்டனை தருபவர்கள். குடும்பத்தின் மீது பாசம் மிகுந்தவர்கள்.
எடுத்துக்கொண்ட வேலைகளில் சிறு குறையும் இல்லாமல் முடிப்பவர்கள். முடிந்த மட்டும் பொறுமை காப்பவர்கள். பொறுமை எல்லை மீறும்போது கை நீட்டவும் தயங்காதவர்கள். உடை சுத்தம் உள்ளம் சுத்தம் எண்ணம் சுத்தம் என்றிருப்பவர்கள். மறைத்துப் பேசுதல் என்பதே இவர்களிடம் கிடையாது, எதையும் வெளிப்படையாக ஒளிவு மறைவின்றிப் பேசுபவர்கள்.

அரசுப்பணி, அதிகாரப் பதவி, காவல்துறை, மருத்துவர், அரசியல் பதவி, கட்சிப் பதவி, கௌரவத் தலைவர், சேவை நிறுவனங்கள், பத்திர விற்பனை மற்றும் எழுத்தர், இன்சூரன்ஸ் ஏஜென்ட், மளிகை வியாபாரம், பல்பொருள் அங்காடி, மருந்துக் கடை, பரம்பரை வைத்தியம், மகப்பேறு மருத்துவம், முடநீக்கு சிகிச்சை முதலான துறைகளில் இருப்பார்கள்.

கார உணவு உண்பதில்விருப்பமுள்ளவர்கள். காரமென்றால்... கண்ணீரை வரவழைக்கும் அளவுக்கு காரம். இதன் காரணமாகவே உயர் ரத்த அழுத்தம், வயிற்றுப்புண், சீதபேதி, கண் கோளாறுகள், வயிற்றுப் பொருமல், அசிடிட்டி உள்ளிட்ட பிரச்சினைகள் இவர்களுக்கு வரும்.

சித்திரை 1ம் பாதத்தின் இறைவன்- அண்ணாமலையார் மற்றும் பைரவர்

விருட்சம் - வில்வம்

வண்ணம் - மெரூன் என்னும் அடர் சிவப்பு

திசை - தென் கிழக்கு
**************************************

சித்திரை 2ம் பாதம் -

சித்திரை 2ம் பாதத்தில் பிறந்தவர்கள், பிறவி மேதைகள்.

படிப்பில் சுட்டியாக இருந்தாலும் உலக ஞானத்தில் அபாரமானவர்கள். கற்றல் அறிவும், கேட்டல் அறிவும், காணும் அறிவும் ஒருங்கே பெற்றவர்கள். எந்தத் துறையில் இருந்தாலும் சாதனைகளைப் படைப்பவர்கள்.
புதிய சிந்தனைகளுக்கு வித்திடுபவர்கள். கணிதம் மற்றும் அறிவியலில் அசாத்தியத் திறமை மிக்கவர்கள். திறந்த மனதுடன் இருப்பவர்கள். எல்லோரிடமும் அன்பு செலுத்துபவர்கள். எவரையும் அலட்சியப்படுத்தாத மனம் கொண்டவர்கள். அளவற்ற நட்பு கொண்டவர்கள்.

“துன்பம் வரும் வேளையிலே சிரிங்க” என்பது நம்மில் பலருக்கும் வரவே வராது. ஆனால் சித்திரை 2ம் பாத அன்பர்கள் துன்பத்தையும் சிரித்துக்கொண்டே கடந்து செல்பவர்கள். இதற்கு காரணம்... மகிழ்ச்சியைப் பலரிடமும் பகிர்ந்து கொள்ளும் இவர்கள்... துயரத்தை எக்காரணம் கொண்டும் வெளிக்காட்டமாட்டார்கள். மற்றவர்கள் இரக்கம் காட்டுவதை துளியும் விரும்பமாட்டார்கள்.

2-ம் பாதக்காரர்கள், கணக்காளர்கள், பட்டய கணக்கர், வங்கித்துறை, கணித ஆராய்ச்சி, உயிரியல் ஆராய்ச்சி, விண்வெளித்துறை, அணு ஆயுதங்கள், தூதரகப்பணி, பன்மொழி புலமை, தொல்பொருள் ஆராய்ச்சி, மொழி ஆய்வு, திரைத்துறை, பத்திரிகைத்துறை, நுணுக்கமான கலைத்திறன், ஓவியம், சிற்பக் கலையில் புதுமை படைத்தல், அச்சு வார்த்தது போல எழுதும் திறமை, வர்மக் கலை, தொடு சிகிச்சை, ஏற்றுமதி தொழில். அரிசி, மிளகு, மிளகாய், மஞ்சள் விற்பனை முதலான தொழில் வேலை அமையும்.

1-ம் பாதக்காரர்கள் போல் 2-ம் பாதக்காரர்கள் மிதமான கார உணவு விருப்பம் இருக்கும். புளிப்புச் சுவை விருப்பமும் இருக்கும். வாயுத்தொல்லை, வாதம், நரம்புப் பிரச்சினை, உடலில் அதிகமான மருக்கள், கால் மற்றும் கைகள் மரத்துப் போதல் முதலான பிரச்சினைகள் இருக்கும். முகத்தில் மற்றும் அடிவயிற்றில் மச்சம் அல்லது அடிபட்ட தழும்புகள் அல்லது அறுவை சிகிச்சை அடையாளம் நிச்சயம் இருக்கும்.

இறைவன் - வராக மூர்த்தி (ஶ்ரீமுஷ்ணம்)

விருட்சம் - புரசை மரம்

வண்ணம் - பச்சை

திசை - தெற்கு
********************


சித்திரை 3ம் பாதம் -

சித்திரை 3ம் பாதத்தில் பிறந்தவர்கள், கலகலப்பானவர்கள்.

ஆயிரம் கவலைகள் இருந்தாலும் முகத்தில் காட்டாதவர்கள். தாயன்பு அதிகம், தந்தையிடம் விலகி இருத்தல். மிகப்பெரிய நட்பு வட்டம் கொண்டவர்கள். உடலில் பல இடங்களில் முடி கற்றையாக இருக்கும். முகக் கவர்ச்சி கொண்டவர்கள். ஆனால் முகத்தில் ஏதாவதொரு தழும்பு போன்ற அடையாளம் இருக்கும். அந்தத் தழும்பே அவர்களுக்குக் கூடுதல் கவர்ச்சியைத் தரும்.

உடையில் நேர்த்தி, பேச்சில் கவர்ச்சி, உடல் மொழியில் ஒருவித நளினம். ஆனால் காரியத்தில் குறியாக இருப்பார்கள். பணம் சம்பாதிப்பதில் மற்றவர்களைவிட கூடுதல் திறமை கொண்டவர்கள். புதுமையான விஷயங்களில் ஆர்வம் காட்டுவார்கள். ஆடம்பர ஆடை,ஆபரணம், வாகனங்களின் மீது ஆர்வம். எப்படியும் சொந்தமாக வீடு வாங்கிவிடுவார்கள். மிக எளிதாக வங்கிக் கடன் பெற்று தொழில் அல்லது வியாபாரம் செய்வார்கள்.

கணவன் மனைவி சதா சண்டை போட்டுக்கொண்டே இருப்பார்கள். ஆனால் வருடம் தவறாமல் குழந்தை பெற்றுக்கொள்வார்கள். இதுபோன்ற சண்டைகளே இவர்களின் மன ஒற்றுமைக்கும் காரணமாக இருக்கும். இவர்களுக்குள்ளேதான் சச்சரவு இருக்குமே தவிர சண்டையில் அடுத்த நபர் தலையிட ஒருபோதும் அனுமதிக்க மாட்டார்கள். அவ்வளவு புரிதல் பரஸ்பரம் இருக்கும். மனைவி சொல்லே மந்திரம் என இருப்பார்கள். மனைவியை மகிழ்ச்சியாக வைத்துக்கொள்ள எவ்வளவு செலவுகளையும், எந்த விஷயத்தையும் செய்யத் தயங்க மாட்டார்கள்.

குழந்தை பாக்கியம் தாமதமாகத்தான் இருக்கும். ஒன்று இயற்கையாகவே தாமதமாகும் அல்லது திட்டமிட்டு இவர்களாகவே தாமதப்படுத்திக் கொள்வார்கள். காதல் மட்டுமல்ல காமமும் இவர்களுக்கு கை வந்த கலை. காதலில் ரசனைக்காரர்கள். காமத்தில்... சொல்லவே வேண்டாம்.

இவர்கள், வியாபார ஆர்வம் உள்ளவர்கள். எனவே அதிகம்பேர் வியாபாரக் கடைகள் வைத்திருப்பார்கள். குறிப்பாக பெண்கள் விரும்பும் ஆடை ஆபரண அழகு சாதனப் பொருட்கள் வியாபாரமாக இருக்கும். ஏற்றுமதி இறக்குமதித் தொழில், கட்டுமானத் தொழில், ஆடை உற்பத்தி, வழக்கறிஞர், நீதித்துறை, தீயணைப்புத் துறை முதலான துறைகளில் இருப்பார்கள்.

சுவையான உணவின் மீது விருப்பம் உடையவர்கள். இனிப்புச் சுவையின் மீதும் துவர்ப்புச் சுவையின் மீதும் விருப்பம் கொண்டிருப்பார்கள்.

கண் பிரச்சினைகள், இளவயதில் கண்ணாடி அணிதல், முதுகுத் தண்டுவட பிரச்சினை, தீராத சளி இருமல், ஒற்றைத் தலைவலி முதலான பிரச்சினைகள் இருக்கும்.

இறைவன் - சூரியநாராயணர்

விருட்சம் - கொடுக்காபுளி மரம்

வண்ணம் - வெண்மை மற்றும் சில்வர் கிரே

திசை - தென் கிழக்கு
********************************


சித்திரை 4ம் பாதம் -

சித்திரை 4ம் பாதத்தில் பிறந்தவர்கள், உணர்ச்சிப் பிழம்பானவர்கள்.
எந்த ஒரு விஷயத்திற்கும் உடனடியாக ரியாக்ட் செய்பவர்கள். எதையும் மறைக்கத்தெரியாத அப்பாவிகள். தப்பு செய்வதைக் கூட வெளிப்படையாகச் செய்பவர்கள். இயன்ற வரை அதிகம் உதவுபவர்கள். செய்த உதவியை சொல்லியும் காட்டுவார்கள். தேவையில்லாத பொய்களைப் பேசுவார்கள்.
சந்தர்ப்பம் கிடைக்காதவரை நல்லவர்கள், சந்தர்ப்பம் கிடைத்தால் எந்தத் தவறையும் துணிந்து செய்பவர்கள். வித்தியாசமான உடை அலங்காரம் செய்பவர்கள். அதாவது பொருத்தமில்லாத உடையைக் கூட அணிபவர்கள்.

கடுமையான உழைப்பாளிகள். எளிதில் ஏமாறுபவர்கள். யார் நல்லவர்? யார் கெட்டவர்? என பிரித்துப் பார்க்கத் தெரியாதவர்கள். இதனாலேயே நிறைய இழப்புகளைச் சந்திப்பவர்கள்.
பயணங்களில் குழந்தையாக மாறுபவர்கள். ஒவ்வொரு விஷயத்திலும் ஆழமாக ஆராய்ந்து தெரிந்து கொள்பவர்கள்.

மருத்துவர், ரசாயனம் தொடர்பான தொழில், பட்டாசு உற்பத்தி, உரம் விற்பனை, மருந்து விற்பனை, உலர் சலவையகம், தண்ணீர் சுத்திகரிப்பு, மாசுக் கட்டுப்பாடு, காய்கறித் தோட்டம், பயணம் தொடர்பான தொழில், நிலத்தரகர், அசலாக இருப்பதை நகல் எடுத்தல். செங்கல் சூளை, கிரானைட் கல் விற்பனை. கட்டிடத் தொழிலாளி, அருங்காட்சியக ஊழியர். முதலான துறைகளில் இருப்பார்கள்.

உணவு விருப்பம் என பெரிதாக ஏதும் இருக்காது. கிடைப்பதைச் சாப்பிட்டு திருப்திபட்டுக் கொள்வார்கள்.

மனநலப் பிரச்சினை, கற்பனை உலகில் சஞ்சரித்தல், கர்ப்பப்பை பிரச்சினை, மாதவிடாய் கோளாறு, எலும்பு தேய்மானம், மூட்டுவலிகள், பலவீனமான எலும்பு உள்ளிட்ட பிரச்சினைகள் இருக்கும்.

இறைவன் - உக்கிர காளி

விருட்சம் - தங்க அரளி

வண்ணம் - சிவப்பு

திசை - வடக்கு

பொதுவாக, சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்கள், பச்சரிசி நெய் பொங்கல் தானம் தருவதும். பனைமரங்கள் வளர்ப்பதும் நன்மைகளை தரும்.

உலக இயக்கத்திற்கும், சந்ததிகள் தொடரவும் காரணமாக விளங்கும் சுவாதி என்னும் அதி அற்புத நட்சத்திரத்தைப் பார்ப்போம்.


- வளரும்
*************************************

ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல.


அன்பு வாசகர்களே....


இந்த ஊரடங்கு காலத்தில் வீட்டை விட்டு வெளியே வராமல் நமக்கு நாமே சமூக விலகல் ( Social Distancing) செய்து கொள்வோம். செய்தி ஊடகங்களின் வழியே உலகுடன் தொடர்பில் இருப்போம். பொதுவெளியில் இருந்து தனிமைப்படுத்திக் கொண்டு கரோனா பரவலைத் தடுப்பதில் நம் பங்கை முழுமையாக இந்த சமூகத்துக்கு அளிப்போம்.


CoVid-19 கரோனா தடுப்பு / விழிப்புணர்வு கையேடு - இலவசமாக டவுன்லோடு செய்து பயன்பெறுங்கள்!


- வாசகர்கள் நலனில் அக்கறையுடன் இந்து தமிழ் திசை

தவறவிடாதீர்!

27 நட்சத்திரங்கள் ; ஏ டூ இஸட் தகவல்கள் 42 ;உழைப்பாளிகள் ஏமாளிகள் தெரியாமல் தப்பு செய்பவர்கள் உதவுபவர்கள் அன்பானவர்கள்!- ‘சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்

Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author