

’சொல்வாக்கு ஜோதிடர்’ ஜெயம் சரவணன்
வணக்கம் வாசகர்களே.
திருவாதிரை நட்சத்திரத்தைப் பற்றி பார்த்து வருகிறோம். இப்போது திருவாதிரையின் ஒவ்வொரு பாதத்திற்குமான தன்மைகளைப் பார்ப்போம்.
திருவாதிரை 1ம் பாதம்-
திருவாதிரை 1ம் பாதத்தில் பிறந்தவர்கள், சிறந்த பக்திமான்களாக, நேர்மையானவராக இருப்பார்கள். சிறு வயதில் கடவுள் நம்பிக்கை இல்லாதவராக இருந்திருப்பார். ஆனால் பின்னர், ஒரு காலகட்டத்தில் தீவிர இறை நம்பிக்கை உடையவராக மாறியிருப்பார். அதேபோலத்தான் சிறு வயதில் கூடா நட்பால் தவறுகள் செய்திருப்பார். பிறகொரு காலகட்டத்தில் ஒழுக்கமானவராக மாறியிருப்பார்.
இப்போதும் சிறிய தப்புகள் செய்வார். ஆனால் அது வெளி உலகத்திற்கு தெரியாதபடி பார்த்துக்கொள்வார்.
இவர்களில் அதிகமானோர் ஆசிரியராக, கல்லூரி விரிவுரையாளராக இருப்பார்கள், அல்லது தகவல் தொழில் நுட்ப நிறுவனங்களில் பயிற்சியாளராக, ஆலோசகராக இருப்பார்கள். மேலும் பத்திரிகையாளராக, ஊடகவியலாளராகப் பணியில் இருப்பார். விழிப்பு உணர்வு எழுத்துக்களை எழுதுபவராக, நம்பிக்கைத் தொடர்களை எழுதுபவராக இருப்பார்கள். நகைச்சுவை கலந்து எழுதுபவராகவும் இருப்பார்கள்.
திருவாதிரை 1ம் பாதத்தில் பிறந்தவர்கள் பெரும்பாலும் உடல் உழைப்பு அதிகம் இல்லாதவர்களாக, மூளை உழைப்பைப் பயன்படுத்துபவராக இருப்பார்கள்.
பத்திரம் எழுதுபவர், நூலகர், வங்கி காசாளர், மேலாளர், இன்சூரன்ஸ் முகவர், சீட்டு நிறுவனம் நடத்துபவர் என இருப்பார்கள். அடகுக்கடை, வட்டித்தொழில், (குதிரை)பந்தயங்கள் ஈடுபாடு, சீட்டாட்டம், பெட்டிங், உயர் ரக ரியல் எஸ்டேட் தரகு தொழில், மொத்த ஏஜென்சி போன்ற தொழில்கள் சிறப்பாக இருக்கும்.
தொழில் என வரும்போது ஒருசில நெளிவுசுளிவுகள் இருக்கத்தான் செய்யும். ஆனால் இவர்கள் மிக நேர்மையாக, வெளிப்படையான மனதுடன் தங்கள் தொழிலைச் செய்வார்கள். ஆனால், நேர்மை தவறினால் ஏமாற்றமே மிஞ்சும் என்பதை இவர்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.
உணவுக் கட்டுப்பாட்டுடன் இருப்பார்கள். ஆகையால் உணவால் பெரிய பாதிப்புகள் ஏதும் வராது. இனிப்பு வகைகளில் ஆர்வம் அதிகமாக இருக்கும்.
ஒரு உண்மையை சொல்லித்தான் ஆகவேண்டும்...!
பெண்களாக இருந்தால் மார்பக புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு அதிகம். எனவே அவ்வப்போது மருத்துவ ஆலோசனை பெற வேண்டும். ஆண்களாக இருந்தால் கல்லீரல் புற்றுநோய் வரும் சாத்தியக் கூறுகள் உள்ளன, எனவே மதுப்பழக்கம், புகைப் பழக்கம் அறவே இருக்கக்கூடாது.
மேலும் வயிறு தொடர்பான உபாதைகள் வருவதற்கும் வாய்ப்பு உள்ளது, எனவே இரவு நேரத்தில் எளிதில் செரிமானம் ஆகக்கூடிய உணவுகளை உண்பது நல்லது.
இறைவன்- சிவன் (திருவண்ணாமலை)
விருட்சம்- செங்காலி மரம்(செங்கருங்காலி) தோட்டங்களில், ஏரி மற்றும் குளக்கரைகள், பூங்காக்கள், பள்ளி வளாகங்கள், சாலை ஓரங்கள் போன்ற இடங்களில் நட்டு வளர்த்து வாருங்கள்.
வண்ணம்- கரும் பச்சை, அடர் மஞ்சள்
திசை- கிழக்கு மற்றும் மேற்கு
**************************************
திருவாதிரை 2ம் பாதம்-
திருவாதிரை 2ம் பாதத்தில் பிறந்தவர்கள், மிகச்சிறந்த காரியவாதிகள். எந்த ஒரு காரியத்திலும் ஆதாயம் இருந்தால் மட்டுமே இறங்குவார்கள். இலவச சர்வீஸ் என்பது இவர்கள் அகராதியில் இல்லை.
எப்படியும் போராடி முதலிடத்தைப் பிடிப்பவர்கள் இவர்கள். காசு பண்ணும் வித்தை அறிந்தவர்கள். எந்த வேலையை எப்படி முடிக்க வேண்டும் என்பது இவர்களுக்கு அத்துப்படி. அறிமுகமே இல்லாத நபர்களிடமும், எளிதாக தங்களை இணைத்துக்கொள்வார்கள். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களிடம் மட்டுமே நெருங்கிப் பழகுவார்கள்.
வெறும் கையாலேயே முழம் போடும் நுட்பம் அறிந்தவர்கள். அதற்காக இவர்களை எளிதாக எண்ணிவிட வேண்டாம். மனதில் அனைத்துத் திட்டங்களையும் வகுத்து வைத்துவிட்டே செயல்பட ஆரம்பிப்பார்கள்.
உத்தியோகத்திலும் தன் தனித்திறமையால் முன்னேறுபவர்கள். ஆனால் மறந்தும் தான் கையாளும் சூட்சும ரகசியத்தை யாருக்கும் கற்றுத்தர மாட்டார்கள். இவர்களின் பலமும் இதுதான், பலவீனமும் இதுதான். “நல்ல திறமைசாலியான ஆளுதான், ஆனால் தலைக்கனம் பிடிச்சவர்” என்று நாம் குறிப்பிடும் ஆட்கள் இந்த திருவாதிரை 2ம் பாதக்காரர்கள் தான். இரவு நேர வேலைகளே இவர்களுக்குப் பிடிக்கும். இரவுப் பறவைகள் என்பார்களே... இவர்கள்தான்.
அதிகபட்சம் பேர் சொந்தத் தொழில்தான் செய்வார்கள். இன்ன தொழில்தான் என சொல்ல முடியாத அளவுக்கு, எந்தத் தொழிலும் செய்யத் தயங்காதவர்கள்.
குறிப்பாகச் சொல்ல வேண்டும் என்றால், இயந்திரங்களைக் கொண்டு செய்யப்படும் இரும்பு தொடர்பான தொழில், பாத்திரங்கள் தயாரித்தல், லாரி போன்ற போக்குவரத்து தொழில், பூமியைத் தோண்டும் தொழில், போர்வெல் சர்வீஸ், சுரங்கத்தொழில், அழகுநிலையம், முடிதிருத்தகம், சலவைத்தொழில், சமையல் காண்ட்ராக்ட், விழாக்களில் A toZ கான்ட்ராக்ட் தொழில், வைரம் பட்டை தீட்டுதல், உள்ளிட்ட தொழில்கள் அமையும்.
உணவு விஷயத்தில் புதிய உணவு, பழைய உணவு என எந்த பாகுபாடும் இல்லாமல் எந்த உணவையும் மறுப்பில்லாமல் உண்பவர். உணவை வீணாக்காதவர்கள்.
உடல்நலம் என்று பார்த்தால், அலர்ஜி என்னும் தோல் வியாதிகள், சொரியாஸிஸ், தேமல், மூச்சிரைப்பு, வெரிகோஸிஸ் என்னும் நரம்பு சுருட்டல் பிரச்சினை, தொண்டை அடைப்பான் போன்ற பிரச்சினைகள் வரும் வாய்ப்புகள் உள்ளன.
இறைவன்- சிவன் , நடராஜர்
விருட்சம்- வெள்ளெருக்கு, வெள்ளெருக்கு வேரில் செய்த விநாயகர் சிலையை வீடு மற்றும் பணியிடத்தில் வைத்து வணங்கிவர நற்பலன்கள் நடக்கும்.
வண்ணம்- கருநீலம்
திசை- தென்மேற்கு
**************************************************
திருவாதிரை 3ம் பாதம்-
திருவாதிரை 3ம் பாதத்தில் பிறந்தவர்கள், மிகுந்த மரியாதை, கௌரவம் உடையவர்கள். மதியாதார் தலைவாசல் மிதிக்காதவர்கள். தன் சுய மரியாதைக்கு பங்கம் ஏற்பட்டால் வெகுண்டெழுபவர்கள். சமூகத்தில் இவர்கள் மீது மிகுந்த மரியாதை இருக்கும்.
தவறான பழக்கவழக்கங்கள் இருக்கும். ஆனால் யாருக்கும் பாதிப்பை தராத வகையில் இருக்கும்.
தான் எடுத்துக்கொண்ட வேலைகளில் எந்தக் குறையும் இல்லாத அளவுக்கு மிகச்சரியாக செய்து முடிப்பவர்கள். குழுவாக பணியாற்றுபவர்கள். அந்தக் குழுவுக்கு தலைமையாக இருந்து வழி நடத்துபவர்களாக இருப்பார்கள். இவர்களும் இரவு நேரப் பணியில் இருப்பவர்களாக இருப்பார்கள். இரவு வேலை என்பது இவர்களுக்கு பிடித்தமானதாகும்.
இவர்களும் சொந்தத் தொழில் செய்பவர்களாக இருப்பார்கள். அலுவலகப் பணியில் இருந்தாலும் ஒருகட்டத்தில் சொந்தமாகத் தொழில் செய்வார்கள்.
தொழிலில் இவர்களுக்கு தெரிந்த ஒரே மந்திரம்.... லாபம்.... லாபம்.... லாபம் மட்டுமே.
இவர்களுக்கு பூமி தொடர்பான தொழில், அதாவது நிலத்தை ஆழப்படுத்துதல், போர்வெல் தொழில், நிலஅளவை, ரியல் எஸ்டேட் தொழில், மனை பிரித்து விற்பனை, நிலக்கரி மற்றும் இரும்புத்தாது, பெட்ரோலியம் தொடர்பான தொழில்,எரிவாயு தொடர்பான தொழில், சுரங்கத்தொழில், சூதாட்ட கிளப், சைபர் குற்றங்கள், மோசடி நிறுவனங்கள், டிரஸ்ட் சேவைகள், மது ஆலைகள், மது வியாபாரம், மாமிச வியாபாரம், ஆட்டு மந்தை போன்ற தொழில் அமையும்.
தரமான உணவுகளை மட்டுமே உண்பார்கள், அசைவப் பிரியர்கள்.
ஆரோக்கியம் என்று பார்த்தால், மூட்டுவலி, நரம்புத் தளர்ச்சி, கால் கைகளில் ஆறாவது விரல், போலியோ பாதிப்பு போன்ற பிரச்சினைகள் வரும்.
இறைவன்- சிவன் (ஶ்ரீகாளஹஸ்தி)
விருட்சம்- வெள்ளெருக்கு
வண்ணம்- இளநீலம்
திசை- மேற்கு
*************************************************************
திருவாதிரை 4ம் பாதம்-
திருவாதிரை 4ம் பாதத்தில் பிறந்தவர்கள், எதையும் எளிதில் நம்புபவர்கள். ஏமாற்றங்கள் இவர்களுக்கு சகஜமான ஒன்று. மற்றவர்கள் முன்னேற இவர்கள் கடுமையாக பிரயத்தனப்படுவார்கள். வாழ்க்கையின் யதார்த்தத்தை உணர்ந்தவர்கள். சேவைக்கென்றே பிறந்தவர்கள்.
வாழ்க்கையில் அனைத்து விதமான தவறுகளை செய்து, அதிலிருந்து ஞானம் பெறுபவர்கள். கவியரசர் கண்ணதாசன் சொன்னதுதான் இவர்களுக்கான கருத்தும் கூட! அதாவது, ‘எப்படியெல்லாம் வாழக்கூடாதோ அப்படியெல்லாம் வாழ்ந்து பார்த்தவன் நான். எனவே, இப்படித்தான் வாழவேண்டும் என்று உன்னைச் சொல்லும் அதிகாரமும் அருகதையும் எனக்கு உண்டு’ எனும் கவியரசரின் வாசகம், திருவாதிரை 4ம் பாதக்காரர்களுக்கும் பொருந்தும்.
வேலை செய்யும் இடத்தில், தான் உண்டு தன் வேலை உண்டு என இருப்பார்கள். இவர்களின் கருத்து அறிந்தே நிர்வாகம் நடந்து கொள்ளும் அளவிற்கு தகுந்த ஆலோசனைகளைத் தருவார்கள். இவர்களில் அதிகம் பேர் மரைன் இன்ஜினியரிங் என்னும் கப்பல் தொடர்பான பணி, விண்வெளி ஆராய்ச்சி, ஜோதிடம், வானியல் ஆய்வு, மத குருமார்கள் என இருப்பார்கள்.
தொழில் என பார்த்தால், கடல் ஆராய்ச்சி, புதை பொருள் ஆராய்ச்சி, பழமையான மொழி ஆராய்ச்சி, பயணம் தொடர்பான தொழில், சுற்றுலா அமைப்பாளர், பிரசங்கம், ஏற்றுமதி இறக்குமதி தொழில், வெளிநாட்டுக்கு வேலைக்கு ஆள்அனுப்புதல் (IATA), பண பரிமாற்றம் (Forex) போன்ற தொழில் செய்வது சிறப்பாக இருக்கும்.
உணவு விஷயத்தில் எந்த உணவாக இருந்தாலும் பரவாயில்லை என்பார்கள். அசைவ உணவுப் பிரியர்களாக இருந்து, பிறகு அசைவத்தை வெகுவாக குறைத்துக்கொள்வார்கள்.
ஆரோக்கியம்- மூட்டுவலிகள், கால் பாதத்தில் பிரச்சினைகள், முதுகு இடுப்பு போன்ற பகுதிகளில் பாதிப்பு, மர்ம உறுப்பில் பிரச்சினைகள் போன்ற பாதிப்புகள் வரும்.
இறைவன் - சிவன் (திருவானைக்கா)
விருட்சம்- செங்காலி மரம்
வண்ணம்- இள நீலம், கருப்பு நிறம் கலந்த உடைகள்
திசை - வடமேற்கு
அடுத்த பதிவில், புனர்பூச நட்சத்திரம் குறித்துப் பார்ப்போம்.
ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியின் ஜென்ம நட்சத்திரம் புனர்பூசம்என்பது தெரியும்தானே!
பற்றிய தகவல்களை பார்ப்போம்!
- வளரும்
*****************************************************************
| ராசி பலன், ஜோதிடத்தில் குறிப்பிடப்படும் பலன்கள் அனைத்தும் ஜோதிடரின் கணிப்புகளே. அவை 'இந்து தமிழ் திசை'யின் கருத்துகள் அல்ல. |