

ரிஷபம்: எங்கும் எதிலும் முதலிடத்தைப் பிடிக்க நினைக்கும் நீங்கள் தானுண்டு தன் வேலையுண்டு என்றிருப்பீர்கள். உங்களை சீண்டினால், எரிமலையாய் பொங்கி எழுவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு 10-ம் வீட்டில் அமர்ந்து உத்தியோகத்தில் பிரச்சினைகளையும், புதிய முயற்சிகளில் முட்டுக்கட்டைகளையும் கொடுத்து வந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் லாப வீட்டில் ஆட்சிப் பெற்று அமர்வதால் திடீர் அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். சோர்ந்திருந்த நீங்கள் இனி சுறுசுறுப்பாவீர்கள்.
உங்கள் பேச்சில் தெளிவு பிறக்கும். குடும்பத்தில் நிம்மதி கிட்டும். இனி எதிலும் உங்கள் கை ஓங்கும். குழந்தை வரம் கிட்டும். மகளுக்கு ஊரே மெச்சும்படி திருமணம் முடிப்பீர்கள். சகோதரர்களுடன் இருந்து வந்த கசப்புணர்வு நீங்கும். சகோதரிக்கு நல்ல விதத்தில் திருமணம் முடியும். அரசாங்க அதிகாரிகளால் உதவிகள் உண்டு.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் வீண் கோபம், அலைச்சல், டென்ஷன் வந்து போகும். தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். சனிபகவான் உங்களின் 5-ம் வீட்டை பார்ப்பதால் பிள்ளைகளின் நடவடிக்கைகளை அவ்வப்போது கவனித்துக் கொள்ளுங்கள். அவர்களின் படிப்பு, உத்தியோகத்தின் பொருட்டு பிரிய வேண்டி வரும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். சனிபகவான் உங்களின் 8-ம் வீட்டை பார்ப்பதால் வெளிநாட்டுப் பயணம் சாதகமாக அமையும். பூர்வீகச் சொத்துப் பிரச்சினைகளை கவனமாக கையாளுங்கள். வாகனத்தை கவனமாக இயக்குங்கள்.
சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: 29.03.2025 முதல் 28.04.2025 வரை, 03.10.2025 முதல் 20,01.2026 வரை உங்களின் அஷ்டம, லாபாதிபதியான குருவின் பூரட்டாதி நட்சத்திர சாரத்தில் சனி பகவான் செல்கிறார். இந்தக் காலகட்டத்தில் தந்தையுடன் கருத்துமோதல், வீண் செலவுகள் வந்து நீங்கும். 28.04.2025 முதல் 03.10.2025 வரை, 20.01.2026 முதல் 17.05.2026 வரை, 09.10.2026 முதல் 07.02.2027 வரை உங்களின் பிரபல யோகாதிபதியான சனிபகவான் தன் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் செல்வதால் பொன்-பொருள் சேரும். புது வேலை அமையும். 17.05.2026 முதல் 09.10.2026 வரை, 07.02.2027 முதல் 03.06.2027 வரை தன, பூர்வபுண்யாதிபதியான புதனுக்குரிய கிரகமான ரேவதியில் செல்வதால் திருமணம் கூடிவரும். சிலருக்கு புது வீடு அமையும்.
இல்லத்தரசிகளே! விலையுயர்ந்த ஆடை அணிகலன்கள் சேரும். கணவர் உங்களின் புதிய முயற்சிகளுக்கு ஆதரவளிப்பார். அலுவலகம் செல்லும் பெண்களே! தேங்கிக் கிடந்த பணிகளை உற்சாகத்துடன் செய்து முடிப்பீர்கள். சம்பளம் உயரும். கன்னிப்பெண்களே! நீண்ட நாள் கனவுகள் நனவாகும். உங்கள் தகுதிக்கேற்ப நல்ல வேலை கிடைக்கும். மாணவ-மாணவிகளே! பெற்றோரின் விருப்பங்களை பூர்த்தி செய்வீர்கள்.
வியாபாரிகளே, தேங்கிக் கிடந்த சரக்குகளை சாமர்த்தியமாக விற்றுத் தீர்ப்பீர்கள். பணியாளர்களை அரவணைத்து வேலை வாங்குங்கள். வாடிக்கையாளர்களின் தேவையறிந்து செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும். வெளிநாட்டுத் தொடர்புடைய நிறுவனங்களுடன் புது ஒப்பந்தங்கள் செய்வதன் மூலம் உங்கள் நிறுவனத்தின் புகழ் கூடும். ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளால் லாபம் அடைவீர்கள். கூட்டுத் தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் கோரிக்கையை ஏற்பர்.
உத்தியோகஸ்தர்களே, உங்களின் நிர்வாகத் திறமைக் கூடும். புது வாய்ப்புகள், பொறுப்புகள் தேடி வரும். மூத்த அதிகாரிகள் உங்களின் ஆலோசனைக்கு முக்கியத்துவம் அளிப்பார்கள். சம்பளம் உயரும். மறுக்கப்பட்ட உரிமைகள் கிடைக்கும். கணினி துறையினரே! பணிசெய்யும் நிறுவனத்திலிருந்து விலகி, சம்பளம், சலுகைகள் அதிகமுள்ள வேலைக்கு மாறுவீர்கள்.
இந்தச் சனிப்பெயர்ச்சி திக்குத் திசையறியாது தவித்துக் கொண்டிருந்த உங்கள் வாழ்வில் திடீர் திருப்பத்தையும், புதிய அத்தியாயத்தையும் தொடங்கி வைப்பதாக அமையும்.
பரிகாரம்: போகர் குடிகொண்டிருக்கும் பழநி மலை சென்று அங்கு கோயில் கொண்டுள்ள தண்டாயுதபாணி சுவாமியை வணங்குங்கள். முடிந்தால் பால்குடம் எடுங்கள். மகிழ்ச்சியும், மனநிம்மதியும் தங்கும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்