

மேஷம்: வெள்ளை மனமும் பிள்ளை குணமும் கொண்ட நீங்கள் எடுத்த காரியத்தை முடிக்காமல் உறங்க மாட்டீர்கள். எல்லோரையும் எளிதில் நம்பும் நீங்கள் எதிலும் அமைதியை விரும்புவீர்கள். இதுவரை உங்கள் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்த சனிபகவான் இப்போது திருக்கணிதப் பஞ்சாங்கப்படி 29.03.2025 முதல் 03.06.2027 வரை உள்ள காலகட்டங்களில் விரயச் சனியாக அதாவது ஏழரைச் சனியின் தொடக்கமாக வருகிறார். ஏழரைச் சனியாக இருந்தாலும் நல்ல பலன்களையே தருவார். இப்போது ராசிக்கு 12-ல் சென்று மறைவதால் தடைபட்டுக் கொண்டிருந்த பல காரியங்களை இனி விரைந்து முடித்துக் காட்டுவீர்கள்.
ஏழரைச் சனி தொடங்குகிறதே என்று பதற வேண்டாம். தற்சமயம் விரய வீட்டில் வந்து அமரும் சனி நிச்சயம் உங்களுக்கு யோக பலனையே தருவார். தம்பதிக்குள் நெருக்கம் அதிகமாகும். பிள்ளைகளின் விருப்பங்களை கேட்டறிந்து பூர்த்தி செய்வீர்கள். திருமணம், சீமந்தம், காதுகுத்து போன்ற சுபச் செலவுகள் அதிகரிக்கும். ஆன்மிகவாதிகள். மகான்கள், சித்தர்களின் ஆசி கிட்டும்.
சனிபகவானின் பார்வைப் பலன்கள்: சனிபகவான் 6-ம் வீட்டை பார்ப்பதால் வட்டிக்கு வாங்கிய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்வீர்கள். உடன்பிறந்தவர்களால் ஆதாயமுண்டு. மறைமுக எதிரிகளை இனங்கண்டறிவீர்கள். வழக்கில் திருப்பம் ஏற்படும். தாய்வழியில் சொத்து வந்து சேரும். சனிபகவான் உங்களின் 2-ம் வீட்டை பார்ப்பதால் பணப்புழக்கம் திருப்திகரமாக இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற போராட வேண்டியது வரும். வீண் பேச்சை குறைத்துக் கொள்ளுங்கள். பார்வைக் கோளாறு வரக்கூடும். உறவினர்கள் மதிப்பார்கள். சனிபகவான் உங்களின் 9-ம் வீட்டை பார்ப்பதால் தந்தையாரின் உடல் நலத்தில் கவனம் செலுத்துங்கள்.
சனி பகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் யோகாதிபதியான குருபகவான் பூரட்டாதி சாரத்தில் 29.03.2025 முதல் 28.04.2025 வரையும், 03.10.2025 முதல் 20.01.2026 வரையும் செல்கிறார். இந்தக் காலகட்டத்தில் வேலை கிடைக்கும். பணவரவு அதிகரிக்கும். பெரிய பதவிகள் தேடி வரும். திருமணத் தடை நீங்கும். 28.04.2025 முதல் 03.10.2025 வரை, 20.01.2026 முதல் 17.05.2026 வரை, 09.10.2026 முதல் 07.02.2027 வரை உங்களின் பாதகாதிபதி சனிபகவான் தன் நட்சத்திரமான உத்திரட்டாதியில் செல்வதால் எதிர்ப்புகள் அதிகரிக்கும். யாருக்காகவும் ஜாமீன் போட வேண்டாம். அரசு காரியங்களில் தாமதம் உண்டு. சிறு சிறு விபத்துகள் ஏற்படலாம்.
17.05.2026 முதல் 09.10.2026 வரை, 07.02.2027 முதல் 03.06.2027 வரை உங்களின் தைரியத்துக்கும், அலைச்சலுக்கும் உரியவரான புதனின் நட்சத்திரமான ரேவதியில் செல்வதால் மனைவிக்கு வேலை கிடைக்கும். பூமி சேர்க்கை உண்டு.
இல்லத்தரசிகளே! குடும்பத்தில் சந்தோஷம் உண்டு. அடகில் இருந்த நகைகளை மீட்பீர்கள். அலுவலகம் செல்லும் பெண்களே! புதிய பொறுப்புகள் தேடிவரும். ஆரோக்கியத்திலும் அக்கறை காட்டுவீர்கள். கன்னிப்பெண்களே! உங்கள் காதலின் உண்மையான ஆழத்தை இப்போது உணர்ந்து கொள்வீர்கள். மாணவ-மாணவிகளே! அதிகம் உழைத்து தேர்வில் வெற்றி அடையப் பாருங்கள். நேரத்தை வீணடிக்காமல் படிப்பில் கவனம் செலுத்துங்கள்.
வியாபாரத்தில் சந்தை நிலவரத்தை அறிந்து முதலீடு செய்யுங்கள். போட்டி களையும் மீறி ஓரளவு சம்பாதிப்பீர்கள். மற்றவர்களை நம்பி பொறுப்புகளை ஒப்படைக்க வேண்டாம். மருந்து, கமிஷன், மரவகைகளால் ஆதாயமுண்டு. கூட்டுத் தொழிலில் பங்குதாரர்களுடன் அவ்வப்போது மோதல்கள் வரும்.
உத்தியோகஸ்தர்களே. சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். வேலைச்சுமை அதிகமாகத்தான் இருக்கும். வேறு சில நல்ல வாய்ப்புகளும் உங்கள் இருக்கையைத் தேடி வரும். சக ஊழியர்களுடன் சலசலப்பு உண்டு. கணினி துறையினரே, பதவி உயர்வு, சம்பள உயர்வு தடைபட்டாலும் போராடி பெறுவீர்கள்.
இந்த சனி மாற்றம் பழைய பிரச்சினைகளிலிருந்து விடுபட வைப்பதாகவும், அலைச்சலுடன் ஆதாயத்தை தருவதாகவும் அமையும்.
பரிகாரம்: பிள்ளையார்பட்டி ஸ்ரீகற்பக விநாயகரை அருகம்புல் மாலை அணிவித்து சதுர்த்தி நாளில் சென்று வணங்குங்கள். விநாயகர் அகவலைப் படியுங்கள். புலம்பெயர்ந்து வந்த தமிழர்களுக்கு உதவுங்கள். வசதி பெருகும்.
- ஜோதிஷபூஷண் வேங்கடசுப்பிரமணியன்